என் மலர்
கோயம்புத்தூர்
- கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
- ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஆண்கள் பிரிவு மையம் அமைந்து உள்ளது.
அங்கு பொதுமக்கள் கை கழுவும் இடத்தில் ஒரு தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டு உள்ளது. இது கடந்த சிலநாட்களுக்கு பழுதடைந்து விட்டது.
எனவே அந்த பகுதியில் தற்போது குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது.
கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசு உற்பத்தியாகி பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் குளம்போல கழிவுநீர் தேங்கி நிற்பதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் மருத்துவமனையில் நோய் ஏற்படும் அவல நிலை உள்ளது.
எனவே வால்பாறை ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக தண்ணீர் குழாய் அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
- மாணவியை வாலிபர் பள்ளியில் விடாமல் ஈரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.
கோவை,
கோவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவிக்கு குடும்ப நண்பரான அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.
சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு செல்வதற்காக வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் வந்தார். அவர் மாணவியிடம் பள்ளியில் விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றினார். பின்னர் மாணவியை வாலிபர் பள்ளியில் விடாமல் ஈரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.
அங்கு சென்ற வாலிபர், மாணவியின் உறவினரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு நாங்கள் 2 பேரும் காதலிக்கிறோம். திருமணம் செய்ய போகிறோம். எங்களை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் விடுவதாக கூறி பிளஸ்-2 மாணவியை மோட்டார் சைக்கிளில் ஈரோட்டுக்கு கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
- குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
- 100 இடங்களில் நடக்கும் சம்பவங்களை பேரூராட்சி கண்காணிப்பு அறையின் பெரிய திரைகளில் பார்க்க முடியும்.
கருமத்தம்பட்டி,
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் சசிகுமார் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராக இருந்து வருகிறார்.
மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அந்த பகுதிகள் முழுவதும் சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
இதன்மூலம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுமார் 6 கி.மீ. சுற்றளவில் முக்கிய இடங்கள் மற்றும் தெருக்கள் உள்பட 100 இடங்களில் நடக்கும் சம்பவங்களை பேரூராட்சியில் உள்ள கண்காணிப்பு அறையின் பெரிய திரைகளில் பார்க்க முடியும். இதன்மூலம் அந்த பகுதியில் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்கள் நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. இதற்கான விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகமும் திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், அனைத்து கிராமங்களிலும் கண்கா ணிப்பு காமிராக்கள் பொரு த்த வேண்டும், மேலும் பொதுமக்கள் வீடுகளிலும் கண்காணிப்பு காமிரா பொருத்த முன்வர வேண்டும். சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் குற்றங்கள் குறைய வாய்ப்புகள் உண்டு என கூறினார்.
பின்னர் கிராந்திகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் தனியார் பங்களிப்போடு 100 சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் குற்றங்கள் நடை பெறுவதை எளிதாக கண்டறிய முடியும்.
கோவையில் ஒரு பேரூராட்சியில் முதன்முறையாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பேரூராட்சியில் கட்டணமில்லா இலவச சேவை மையம், நூலகம் என முன்னோடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன.
மேலும் செல்போன் செயலி மூலம் நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்புவது கண்காணிக்கப்பட்டு வருகிறது, கோவையில் உள்ள அனைத்து பகுதிகளும் திடக்கழிவு மேலாண்மை சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை தரப்பட்டு உள்ளது. தேவைப்படும் பட்சத்தில், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் இயக்குனர் துவகராநாத்சிங், கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நாய் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்த சிறுவன் மீது திடீரென ஆக்ரோஷம் அடைந்து பாய்ந்து கடித்தது.
- சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து காரமடை போலீசில் புகார் அளித்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் அபி கார்த்திக் (வயது 6). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களது வீட்டின் அருகில் கார்த்திக் லெனின், இவரது மனைவி திவ்யா ஆகியோர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டில் ஜெர்மன் நாட்டு இன ராட்வீலர் வகையை சேர்ந்த நாயை வளர்த்து வருகின்றனர்.
சம்பவத்தன்று சிறுவன் அபி கார்த்திக், தனது வீட்டு முன்பு சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்தான். அப்போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இன நாயை கட்டிப்போடாமல் அவிழ்த்து விட்டு இருந்தனர்.
நாய் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்த சிறுவன் மீது திடீரென ஆக்ரோஷம் அடைந்து பாய்ந்து கடித்தது. அதிர்ச்சியடைந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டான். அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று நாயிடம் இருந்து சிறுவனை மீட்டனர். நாய் கடித்ததில் சிறுவனின் கழுத்து, மார்பு, கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக சிறுவனின் பெற்றோர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பின்னர் சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து காரமடை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நாயின் உரிமையாளர்களான கார்த்திக் லெனின், அவரது மனைவி திவ்யா ஆகியோர் மீது கவனக்குறைவாக செயல்படுதல், தனி நபருக்கு காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 2 நாட்களாக ஓரளவு மழை குறைந்திருந்ததால் சீரமைப்பு பணிகள் வேகம் எடுத்தன.
- ஊட்டிக்கு சுற்றுலா செல்ல வந்து, ரெயிலில் பயணிக்க விரும்பிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி, கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனையொட்டி கடந்த சில தினங்களாகவே 2 மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 3-ந் தேதி இரவு நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் செல்லும் பாதையில், 5 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.
இதுதவிர 4-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு, தண்டவாளம் தெரியாத அளவுக்கு மூடியபடி இருந்தது.
தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது.
கடந்த 2 நாட்களாக ஓரளவு மழை குறைந்திருந்ததால் சீரமைப்பு பணிகள் வேகம் எடுத்தன. ஊழியர்கள் ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண் திட்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கடந்த 4-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனால் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல வந்து, ரெயிலில் பயணிக்க விரும்பிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நேற்றுடன் தண்டவாளத்தில் நடந்து வந்த சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்தது.
இதனை தொடர்ந்து இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை தொடங்கியது.
அதன்படி இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது.
ரெயிலில் 186 சுற்றுலா பயணிகள் பயணித்தனர். அவர்கள் ரெயிலில் பயணித்தபடி, வனத்தின் இயற்கை அழகினை ரசித்தபடி ரெயிலில் பயணித்தனர்
4 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மகிழ்ச்சி அடைந்தனர்.
- 2 இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
- கோவையில் 6 இடங்களில் நடந்த சோதனையில் 4 இடங்களில் சோதனை நிறைவு பெற்று விட்டது.
கோவை:
அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3-ந் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்து வரும் தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு பேரவை துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு, அவரது மகன் வீட்டிலும், கோவை சவுரிபாளையத்தில் உள்ள அவரது மகன் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
இதபோல் சிங்காநல்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி, சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம், கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமாரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
இதில் 2 இடங்களில் சோதனை ஒரே நாளில் நிறைவடைந்தது. மற்ற இடங்களில் 4 நாட்களை கடந்தும் சோதனை நடந்தது. நேற்று மீனா ஜெயக்குமார் வீடு உள்பட 3 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இன்று 6-வது நாளாக கோவையில் சோதனை நடைபெற்று வருகிறது. நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மீனா ஜெயக்குமாரின் வீடு மற்றும், சவுரிபாளையத்தில் உள்ள அவரது மகன் அலுவலகத்தில் இந்த சோதனையானது நடக்கிறது.
2 இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே அங்கு பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ள நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்து மேலும் சில ஆவணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் 6 இடங்களில் நடந்த சோதனையில் 4 இடங்களில் சோதனை நிறைவு பெற்று விட்டது. இந்த 4 இடங்களில் இருந்தும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
- போலீசார் விசாரணையில், முதலாம் ஆண்டு மாணவரை, 2-ம் ஆண்டு மாணவர்கள் தாக்கியது உறுதியானது.
- போலீசார் மாணவரை தாக்கி மொட்டையடித்து ராகிங் செய்து மிரட்டிய 2-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேரை கைது செய்தனர்.
கோவை:
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த 18 வயது மாணவர். இவர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரி முடிந்ததும் தனது அறைக்கு சென்றார். இரவில் இவரது அறைக்கு அதே கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவர்கள் வந்துள்ளனர்.
அவர்கள், மாணவரை தங்கள் அறைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்தார். இருந்தபோதிலும் சக மாணவர்கள், அவரை வலுக்கட்டாயமாக தங்கள் அறைக்கு இழுத்து சென்றனர்.
பின்னர் அறைக்குள் பிடித்து தள்ளிவிட்டு அறையை அடைத்தனர். தொடர்ந்து 2-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேரும் சேர்ந்து, முதலாம் ஆண்டு மாணவரிடம், எங்களுக்கு மது குடிக்க பணம் வேண்டும். நீ பணம் வைத்திருக்கிறாய். உடனே பணத்தை தா என்றனர்.
அவர் அதற்கு என்னிடம் பணம் இல்லை என கூறியதுடன், நான் எதற்கு தர வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 2-ம் ஆண்டு மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவரை சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கிருந்த கத்தியை எடுத்து வாலிபருக்கு மொட்டையடித்து, அவரது உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தினர்.
பின்னர் அதனை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டனர். தொடர்ந்து அதிகாலை வரை தங்கள் அறையில் அடைத்து வைத்து மாணவரை தகாத வார்த்தைகளால் பேசியும், தாக்கியும் உள்ளனர்.
அதிகாலைக்கு பிறகு அறையை திறந்து விட்டு, இங்கு நடந்தவற்றை வெளியில் சொல்லக்கூடாது. அப்படி கூறினால் உன்னை கொன்றுவிடுவோம் என மிரட்டலும் விடுத்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என மாணவர் அங்கிருந்து தனது அறைக்கு ஓடி வந்தார். பின்னர் தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் போனில் கூறி அழுதார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர்கள், உடனடியாக கல்லூரிக்கு விரைந்து வந்தனர். தங்கள் மகன் மொட்டை தலையுடன், காயத்துடன் இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் பீளமேடு போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முதலாம் ஆண்டு மாணவரை, 2-ம் ஆண்டு மாணவர்கள் தாக்கியது உறுதியானது. இதையடுத்து போலீசார் மாணவரை தாக்கி மொட்டையடித்து ராகிங் செய்து மிரட்டிய 2-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்கள் மீது ராக்கிங் சட்ட பிரிவுகள் உட்பட சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவையில் கல்லூரிகளில் ராகிங் என்பது பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 7 மாணவர்கள் சேர்ந்து முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்து தாக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இதில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
- உடற்தகுதி தேர்வு 2-வது நாளாக நாளையும் நடைபெற உள்ளது.
கோவை,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கோவையில் 427 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை கோவை பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடற்தகுதி தேர்வில் 1,500 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து, இதில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
இதனை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். இந்த உடற்தகுதி தேர்வு 2-வது நாளாக நாளையும் நடைபெற உள்ளது.
- ஜெயிலில் சக கைதிகளிடம் பழகி கொள்ளையனாக மாறிய வாலிபர்
- 15 பவுன் நகையுடன் போலீசில் சிக்கினார்
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் அன்னூர் ஏ.எம்.காலனி பகுதியை சேர்ந்தவர் மைதீன்பாய் (வயது 40). இவர் கைகாட்டி பகுதியில் சைக்கிள் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் கடந்த 26-ந் தேதி குடும்பத்துடன் சிறுமுகை பூலுவம்பாளையம் பகுதியில் உள்ள இன்னொரு வீட்டுக்கு சென்று தங்கினார். அடுத்த நாள் வீடு திரும்பியபோது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. எனவே அதிர்ச்சி அடைந்த மைதீன் வீட்டு க்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை கள் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுகுறித்து மைதீன் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜி, அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.
இதற்கிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, சப்இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் தலைமையில் 5 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.
இதில் மர்மநபர் ஒருவர் மைதீன்பாய் வீட்டில் இருந்து நைசாக வெளியே வந்து இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவை, அன்னூர், காந்திபுரம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதன்ஒருபகுதியாக அன்னூர் நகர பகுதியில் போலீஸார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார்.
எனவே போலீசார் சந்தேகத்தின்பேரில் அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியை சேர்ந்த தினேஸ்குமார் (வயது 30) என்பதும், மைதீன்பாய் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை அடித்ததையும் ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படு வதாவது:-
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலை சேர்ந்த தினேஸ்குமார் மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை மற்றும் 3 அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்காக அவரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
அங்கு தினேஸ்குமாருக்கு கொள்ளை வழக்குகளில் கைதாகி சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் சக கைதிகளிடம் கொள்ளை அடிப்பது எப்படி, போலீசாருக்கு கண்ணாமூச்சி காட்டிவிட்டு தப்பிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்களை அறிந்துகொண்டார்.
தொடர்ந்து அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் சொந்த ஊரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தார். அவருக்கு அந்த வேலை பிடிக்கவில்லை.
எனவே தினேஸ்குமார் வேலைதேடி கோவைக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவர் அன்னூரில் வீடு எடுத்து தங்கினார். பின்னர் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு அன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டார். தொடர்ந்து அவர் மைதீன்பாய் வீட்டில் முன்கதவு பூட்டை உடைத்து கொள்ளை அடித்து தப்பியது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 15 சவரன் நகைள் மீட்கப்பட்டன.
இதையடுத்து மைதீன்பாய் வீட்டில் கொள்ைள அடித்ததாக தினேஸ்குமாரை அன்னூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.அன்னூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் 10 நாட்களுக்கு பின் மீண்டும் திருட வந்தபோது போலீசார் வாகன சோதனையில் சிக்கி ஜெயிலுக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மொங்கம்பாளையம், சிறுமுகை வழியாக மறுகால் பாய்கிறது
- குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையம்,
கோவை, நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதிகளில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 1 வாரத்திற்கு மேலாக மழையின் தாக்கம் அதிக மாக இருந்து வருகிறது. இதனால் சாலையோரங்க ளில் மழைநீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
பல இடங்களில் விவசாய நிலங்கள் மழைநீரில் மிதந்து வருகின்றன.
இந்நிலையில் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட காரமடை பெ ள்ளாதி குளத்திற்கு கட்டான்ஜி மலை, மருதூர், திம்மம்பா ளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, பிளிச்சி உள்ளிட்ட பகுதிக ளில் இருந்து வரும் மழைநீர் வந்தடையும். தற்போது இந்த குளத்தின் கொள்ளளவு நிரம்பி இதன் உபரிநீர் நேற்று முதல் வெளியேறி வருகிறது.
தண்ணீர் குளத்தில் இருந்து வெளியேறி மொங்கம்பாளையம், குரும்பம்பாளையம், தேரம்பாளையம் சென்ன ம்பாளையம், பகத்தூர் மற்றும் சிறுமுகை வழியாக பவானி ஆற்றை அடையும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இந்த பெள்ளாதி குளம் ஓராண்டுக்கு பின் மீண்டும் நிரம்பி வழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருப்பதால் மக்கள் அச்சம்
- குடியிருப்பு அருகில் தீ மூட்டி பாதுகாப்பு பணி
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.காட்டு யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் சுற்றி வருகிறது, வால்பாறைக்கு அருகே உள்ள கருமலை எஸ்டேட், ஐயர்பாடி எஸ்டேட், பச்சமலை எஸ்டேட், அப்பர் பாரளை எஸ்டேட், ஆகிய இடங்களில் 22 காட்டு யானைகள் சுற்றி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் 22 காட்டு யானைகள் நேற்று இரவு வால்பாறை பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோவிலில் சுவரை இடித்து சேதப்படுத்தியது. வனத்துறையினர் யானைகளை நீண்ட போராட்டத்திற்கு பின்பு வனப்பகுதிக்குள் விரட்டினர். தற்போது காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறை வன சரக வேட்டை தடுப்பு காவலர்கள் குடியிருப்பு அருகில் தீ மூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையில் அதிகப்படியான பணியாளர்களை நியமித்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சூலூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
- எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார்.
சூலூர்,
சூலூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. சூலூர் எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி முன்னிலை வகித்தார். சூலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் கார்த்திகை வேலன் வரவேற்றார்.
அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாநில தலைவர் மற்றும் பூத் கமிட்டி மேலிட பார்வையாளர் சேதுராமன் கல்நது கொண்டார். கூட்டத்தில் பங்கேற்க வந்த எஸ்.பி.வேலுமணிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் 10 அடி உயரம் கொண்ட பிரமாண்ட மாலை கிரேன் மூலம் அணிவித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-
அமைச்சர் உதயநிதி, கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினர் பெண்களு க்கான இட ஒதுக்கீடு குறித்து இப்போது தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பெண்களுக்கு 50 சதவீதம் உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ஜெயல லிதா. அதன் மூலம் கோவை மாவட்ட ஊராட்சித் தலைவராக சாந்திமதி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது வரலாறு.
தற்போதைய தி.மு.க. ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு புதிதாக எந்த திட்டமும் கொண்டு வரப்பட வில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் அதிகமான திட்டங்கள் கோவை மாவட்டத்துக்கும், சூலூர் தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திறந்து வைத்து திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது.
நீட் பெயரை சொல்லி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவர் படிப்பில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக சாலைகள், பாலங்கள் கோவை மாவட்டத்துக்கு புதிதாக கொண்டுவரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டம் கொண்டு வரப்பட்டு 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது 5 சதவீத பணியை முடிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என விலை வாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. எனவே எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார். இவ்வாறு அவர் கூறினார்.
சூலூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் நன்றி கூறினார். கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் தோப்பு அசோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் கந்தவேல், வக்கீல் பிரிவு கந்தநாதன், சூலூர் நகர துணை செயலாளர் அங்கண்ணன், சூலூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அங்கமுத்து, கலங்கல் ஊராட்சி முன்னாள் தலைவர் நடராஜ், சண்முகம், மீனவரணி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், வக்கீல் பிரிவு பிரபு ராம், கண்ணம்பாளையம் வார்டு உறுப்பினர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






