என் மலர்
செங்கல்பட்டு
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒன்றாக மது குடித்த சுகுமாருக்கும், அவரது நண்பர் ஹரிலாலுக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சுகுமாரும், ஹரிலாலும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது27). செங்கல்பட்டில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா (25) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
சுகுமாரும், அவர் வேலைபார்த்து வரும் பக்கத்து கடையில் பணி செய்துவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஹரிலால் (45) என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். ஹரிலால் செங்கல்பட்டு அருகே உள்ள புக்கத்துறையில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கவிதாவுக்கும், அவருடன் பணி செய்யும் வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சுகுமார் மனைவியை கண்டித்து வந்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒன்றாக மது குடித்த சுகுமாருக்கும், அவரது நண்பர் ஹரிலாலுக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுகுமாரும், ஹரிலாலும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர்கள் குடித்த மதுவில் விஷம் கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுகுமாரின் மனைவி கவிதாவிடம் படாளம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது கணவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்தது. மேலும் மதுவில் விஷம் கலக்கப்பட்டு இருப்பது தெரியாமல் சுகுமார் தனது நண்பரான ஹரிலாலுக்கும் கொடுத்து உள்ளார். இதனால் அதனை குடித்த ஹரிலாலும் பரிதாபமாக இறந்து விட்டார்.
கணவரை கொலை செய்தது ஏன்? இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என்று கவிதாவிடம் போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் தெரியவந்து உள்ளது.
கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததும் சுகுமார் அடிக்கடி மனைவி கவிதாவிடம் பிரச்சினையில் ஈடுபட்டார். இதனால் கணவரை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய கவிதா திட்டமிட்டு உள்ளார். சம்பவத்தன்று கவிதா தனது உறவினர் ஒருவரிடம் ரூ.400 கொடுத்து இரண்டு மதுபாட்டில்களை வாங்கி வரசெய்தார். பின்னர் ஒரு மதுபாட்டிலை வாங்கி வந்தவரிடம் கொடுத்து விட்டு ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டார்.
இதற்கிடையே பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண் மூலம் வீட்டில் உள்ள கோழி நோய்வாய் பட்டு இருப்பதாக கூறி மருந்தும், நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் சிறிய ஊசியும் வாங்கி வைத்தார்.
அந்த கோழி மருந்தை ஊசிமூலம் மதுபாட்டிலில் கலந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் கணவரிடம் கவிதா கொடுத்து உள்ளார். ஆனால் அன்று முழு போதையில் இருந்த சுகுமார் உடனடியாக அந்த மதுவை குடிக்காமல் மறுநாள் குடித்து கொள்ளலாம் என்று எடுத்து தனியாக வைத்துக்கொண்டார்.
மறுநாள், திங்கட்கிழமை காலையில், அவர் வேலைக்கு செல்லும்போது விஷம் கலக்கப்பட்ட மதுபாட்டிலையும் எடுத்துச் சென்றார். மதியம் உணவு நேரத்தின் போது, மதுவை குடித்த போது அங்கு வந்த அவரது நண்பரான ஹரிலாலும் தனக்கு மதுவில் பங்கு வேண்டும் என்று கூறி கேட்டு உள்ளார்.
இதனால் நண்பர்கள் இருவரும் விஷம் கலந்த மதுவை பங்கு போட்டு குடித்தனர். இதில் அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கவிதா தனியாக இந்த கொலையை செய்து இருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொலை திட்டத்தில் அவரது கள்ளக்காதலனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் கவிதா போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக தொடர்ந்து தகவல்களை கூறி வருகிறார். இதையடுத்து கவிதாவின் செல்போனை கைப்பற்றி அவரிடம் கடைசியாக பேசிய நபர்கள் யார்? யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். கவிதாவின் கள்ளக்காதலனிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் மேலும் பல தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் ஒட்டேரி போலீசார் சங்கரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் வரும்படி அழைத்தனர்.
- ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கம் அழகேசன் நகர், மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 49). பெயிண்டர். கொளப்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இவருக்கும், கோவில் நிர்வாகிகளுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் ஒட்டேரி போலீசார் சங்கரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் வரும்படி அழைத்தனர்.
இதற்காக சங்கர் குடிபோதையில் ஓட்டேரி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அவர், "என் மீது கோவில் நிர்வாகிகள் பொய்யான புகார் தெரிவித்து உள்ளனர். இதனால் நான் விஷம் குடித்து விட்டேன்" என்று போலீசாரிடம் கூறிவிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக ஒட்டேரி போலீசார் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்கர் போலீஸ் நிலைய வாசலில் வந்து விஷம் குடித்து இறந்தாரா? என்று போலீசாரிடம் கேட்டதற்கு, "அவர் போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடிக்கவில்லை, வேறு எங்கேயோ குடித்து விட்டு போலீஸ் நிலையம் வந்து நான் விஷம் குடித்து விட்டேன் என்று கூறியதால் அவரை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தோம்" என்றனர்.
- பாலாற்றில் முதியவரின் பிணம் மிதப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 71). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் இரும்புலிச்சேரி எடையாத்தூர் பாலாற்றில் முதியவரின் பிணம் மிதப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர் மாயமான சந்திரன் என்பது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருட முயன்ற வட மாநில வாலிபர் கிராம மக்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலையுண்ட வடமாநில வாலிபர் கேசட்ரா மோகன் பர்மன் குறித்தும், அவரது பின்னணி மற்றும் குற்ற வழக்குகள் குறித்தும் போலீசார் விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
திருப்போரூர்:
திருப்போரூர் அடுத்த தாழம்பூர் பகுதியில் பிரபல கட்டுமான நிறுவனங்களின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கேசட்ரா மோகன்பர்மன் (43) என்பவர் தங்கி தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
அதிகாலை கேசட்ரா மோகன்பர்மன் அருகே உள்ள காரணை நேரு தெருவில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் புகுந்து திருட முயன்றார். இதற்குள் சத்தம் கேடு எழுந்த வீடுகளில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர்.
அவர்கள் கேசட்ராவை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் கேசட்ரா தப்பி ஓடினார். மேலும் பிடிக்க வந்தவர்கள் மீதும் கற்களை வீசி தாக்கினார்.
இதைத்தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் கேசட்ராவை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவரை கட்டி வைத்து இரும்பு கம்பி கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
இதில் தலை, முகம், மார்பில் பலத்த காயம் அடைந்த கேசட்ரா ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதுகுறித்து தாழம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
அவர்கள் ஆபத்தான நிலையில் இருந்த கேசட்ராவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கேசட்ரா பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். இது தொடர்பாக காரணை பகுதியை சேர்ந்த ஆனந்த், ராஜா, உதயசங்கர், விக்னேஷ், பாலமுருகன், ரமேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொலையுண்ட வடமாநில வாலிபர் கேசட்ரா மோகன் பர்மன் குறித்தும், அவரது பின்னணி மற்றும் குற்ற வழக்குகள் குறித்தும் போலீசார் விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
கேசட்ரா மட்டும் தனியாக திருட சென்றாரா? அல்லது அவருடன் கூட்டாளிகள் வேறு யாராவது சென்றனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக கட்டுமான நிறுவனத்தில் தங்கி இருந்து வேலைபார்த்து வரும் அனைத்து வடமாநில வாலிபர்கள் குறித்த விவரங்களையும் சேகரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். திருட முயன்ற வட மாநில வாலிபர் கிராம மக்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மேடையில் மணமகளுடன் நின்று கொண்டிருந்த மணமகன் மதுபோதையில் மணமகள் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- மணமகள் வீட்டார் தாழம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், மேலகோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன்தினம் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். மேடையில் மணமகளுடன் நின்று கொண்டிருந்த மணமகன் மதுபோதையில் மணமகள் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டாரிடம் மணமகள் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருமண மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மணமகள் வீட்டார் தாழம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணமகன் தான் செய்தது தவறுதான், மன்னித்து விடுங்கள் என்று கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட போதிலும் மணமகள் விடாப்பிடியாக திருமணத்தை நிறுத்திவிட்டு திருமணத்துக்காக செய்யப்பட்ட செலவு மற்றும் அணிவிக்கப்பட்ட நகைகளை திரும்ப கேட்டார்.
சமாதானம் செய்ய முடியாமல் திணறிய போலீசார், வேறுவழியின்றி மணமகனை திருமண மண்டபத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- மின்கம்பத்தை கூட மாற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருவது மிகவும் வேதனையளிக்கிறது.
- பல்வேறு கிராமப்புறங்களில் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்து மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.
மறைமலைநகர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் அமைந்துள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக நுழைவு வாயில் அருகே வலது பக்கத்தில் உள்ள உயர் அழுத்த மின்சார கம்பிகள் செல்லும் மின் கம்பம் மிகவும் மோசமான நிலையில் சேதம் அடைந்து மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் எலும்புக்கூடு போல் வெளியே தெரிகிறது. இந்த அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். திடீரென பலத்த காற்று வீசினால் இந்த மின்கம்பம் கீழே விழுந்து பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இதனை உடனடியாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பழுதடைந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை கூட மாற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருவது மிகவும் வேதனையளிக்கிறது. இதே போல மறைமலைநகர் மின்வாரிய உட்கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமப்புறங்களில் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்து மிக மோசமான நிலையில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- வீட்டின் மைய பகுதியில் உள்ள சுவரை இடிக்கும் போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்தது.
- சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம்:
சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான வீட்டை இடித்து மறுசீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தார். அப்போது வீட்டின் மைய பகுதியில் உள்ள சுவரை இடிக்கும் போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சேகர் சிக்கினார். உடன் இருந்த சக தொழிலாளர்கள் சேகரை மீட்டு ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் திம்மாவரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்
- சுந்தர்ராஜன் வீட்டில் உள்ள மாடியில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது45). திம்மாவரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள குற்றப்புலனாய்வு துறை போலீஸ் தலைமை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு சுந்தர்ராஜன் வீட்டில் உள்ள மாடியில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சுந்தர்ராஜனின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
- தம்பதி சுப்புராம்- காமாட்சி ஆகியோரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
- வீட்டில் இருந்த போது ஏற்பட்ட பிரச்சினையில் விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கூடுவாஞ்சேரி:
கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சுப்புராம் (வயது87). இவரது மனைவி காமாட்சி(84). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
வயதான தம்பதியான சுப்புராமும், காமாட்சியும், மகள் பாரதி வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை மகள் செய்து கொடுத்து இருந்தார்.
இந்தநிலையில் பாரதி, தனது குடும்பத்தினருடன் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தேவாலயத்துக்கு சென்றார். வீட்டில் அவரது பெற்றோர் சுப்புராம்- காமாட்சி மட்டும் இருந்தனர்.
இரவு அவர்கள் வீடு திரும்பியபோது, சுப்புராமும், காமாட்சியும் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை கண்டு பாரதி கதறி துடித்தார். தகவல் அறிந்ததும் மணிமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தம்பதியின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தம்பதி சுப்புராம்- காமாட்சி ஆகியோரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. அவர்கள் வீட்டில் இருந்த போது ஏற்பட்ட பிரச்சினையில் இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேலும் தம்பதியினர் இருவரும் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும், இதனால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை முடிவை எடுத்தனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மாமண்டூரில் உள்ள தனியார் கட்டிடத்தில், சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த செங்கல்பட்டை சேர்ந்த பவுல் ஸ்டாலின் ஜெபக்குமார், ராஜி உள்பட 30 பேரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மாமண்டூரில் உள்ள தனியார் கட்டிடத்தில், சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப், உத்தரவின் பேரில், செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு பரத் மேற்பார்வையில், படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி தலைமையில், தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள் அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த செங்கல்பட்டை சேர்ந்த பவுல் ஸ்டாலின் ஜெபக்குமார் (35) மற்றும் ராஜி (40) உள்பட 30 பேரை கைது செய்தனர், மேலும் சோதனையில் சூதாட்டத்திற்கு வைத்திருந்த ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
- கரையோரத்தில் சிற்பக்கூடங்கள், வீடுகள், பட்டறைகள், இறால் மீன் பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
- மழைக்காலத்தில் நீர்வரத்து பாதிக்கப்பட்டு குப்பைகள் ஒதுங்கி மாசடைந்து வருகிறது.
மாமல்லபுரம்:
கோவளம் அடுத்த முட்டுக்காடு முதல் மரக்காணம் வரையிலான பக்கிங்காம் கால்வாய் கரையோர பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
இதன் கரையோரத்தில் சிற்பக்கூடங்கள், வீடுகள், பட்டறைகள், இறால் மீன் பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மழைக்காலத்தில் நீர்வரத்து பாதிக்கப்பட்டு குப்பைகள் ஒதுங்கி மாசடைந்து வருகிறது.
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவிட்டு, மேலும் ஆக்கிரமிக்காத வகையில் எல்லை கற்களை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரி திலிப்குமார் தலைமையில் நில அளவினர் குழுவினர் பக்கிங்காம் கால்வாயை அளவிட்டு, எல்லை நிர்ணயம் செய்வதற்காக கல் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- வருகிற 13-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
- பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.
சென்னையில் வருகிற 13-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் வினியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் பகுதி: பெருங்களத்தூர் காந்திரோடு என்.ஜி.ஓ. காலனி, பாரதி நகர், சேகர் நகர், பாலாஜி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்,
அம்பத்தூர் பகுதி: பொன்னியம்மன் நகர், 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம் பகுதி: பல்லாவரம் பெரியார் நகர், அம்மன் நகர், அரண்மனைசாவடி, லட்சுமணன் நகர், சுபம்நகர் மற்றும் திரிசூலம்.
கிண்டி: தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் ஒரு பகுதி, பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், வானுவம் பேட், சாந்திநகர், புழுதிவாக்கம், ஏ.ஜி.எஸ். காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். அம்பத்தூர் தொழிற்பேட்டை மேட்டு தெரு, ரெட்டி தெரு, காவரை தெரு, நடேசன் நகர், முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஐ.ஓ.ஏ. காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளாகும்.






