என் மலர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ராணி (வயது 72), ஆர்.எம்.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் துளசி (வயது 62), இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வண்டலூர் மேம்பாலம் கீழ் பகுதியில் சாலையை கடக்கும்போது அந்த வழியாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவர் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராணி, துளசி இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி பரிதாபமாக இறந்தார். துளசி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு கனடா நாட்டிலிருந்து இருந்து 3 பார்சல்கள் வந்திருந்தன. இந்த பார்சல்களை சந்தேகத்தின் பேரில், விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையில் உள்ள முகவரிகளுக்கு அனுப்புவதற்காக 3 பார்சல்களில் மூலிகை பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. இவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.
அதில், 3 பார்சல்களிலும் தலா 100 கிராம் என 3 பாக்கெட்டுகளில் 300 கிராம் காய்ந்த இலைகள் இருந்தன. இதையடுத்து, இவற்றை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில், பார்சலில் இருந்த இலைகள் உயர்ரக கஞ்சா என தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 300 கிராம் கஞ்சாவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பார்சல்களில் இருந்த முகவரிகளுக்கு சென்று விசாரித்த போது, அந்த முகவரியில் யாரும் இல்லாததால் அவை போலியானது என தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் கஞ்சாவை சென்னைக்கு அனுப்பி வைத்தது யார்? இந்த கடத்தல் சம்பவத்தில் யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் கிராமம் பழண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார், (வயது 50) இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து அவருடைய சைக்கிளில் ஒரகடம் வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜெயக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் இறந்து கிடந்த ஜெயகுமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ரெட்டப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 42). இவர் கிரைண்டர் பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள லட்சுமிக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் என்று கூறப்படும் சொத்தை அதே பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர் தன்னுடையது என கூறி லட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லட்சுமி மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் மருத்துவமனையில் இருந்து மருத்துவ சான்றிதழை பெற்று வருமாறு கூறி அனுப்பி உள்ளனர்.
அப்போது லட்சுமி மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவர் லட்சுமியிடம் ரூ.300-ஐ லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி லட்சுமியை தீக்குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றினர். அவரை மீட்ட செங்கல்பட்டு டவுன் போலீசார் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம், இரும்புலி காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். பழைய இரும்பு கடை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவா (வயது 35). மகள் பவித்ரா (18). இவர் உத்தரமேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
ஜீவாவின் நடத்தையில் கணவர் பார்த்திபனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் ஜீவா அடிக்கடி செல்போனில் பேசுவதையும் கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக நேற்று இரவும் அவர்களுக்கு இடையே மோதல் உருவானது. பின்னர் அவர்கள் வீட்டில் தூங்க சென்று விட்டனர். ஆனால் மனைவி மீது பார்த்திபன் கோபத்தில் இருந்தார். அவரை உயிரோடு எரித்து கொலை செய்ய முடிவு செய்தார்.
இந்தநிலையில் அதிகாலை 2.30 மணி அளவில் எழுந்த பார்த்திபன் வீட்டில் இருந்த மண்எண்ணையை தூங்கி கொண்டிருந்த மனைவி ஜீவா மீது ஊற்றி தீ வைத்தார். இதில் ஜீவா அலறி துடித்தார். சத்தம் கேட்டு எழுந்த அவரது மகள் பவித்ரா இதனை தடுக்க முயன்றார்.
ஆத்திரத்தில் இருந்த பார்த்திபன் மகள் பவித்ரா மீதும் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார். மேலும் தனது உடல் மீதும் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் இருவரும் உடல் கருகி அலறி துடித்தனர்.
சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது பார்த்திபன் குடும்பத்துடன் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக அச்சரப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜீவா சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்து கிடந்தார்.
பார்த்திபனும், அவரது மகள் பவித்ராவும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியபடிகிடந்தனர். அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜீவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
நடத்தையில் சந்தேகத்தில் மனைவியை உயிரோடு கணவர் எரித்து கொன்ற சம்பவம் அச்சுறுப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்தேகத் தீ ஒரு குடும்பத்தையே எரித்துள்ளது.
இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.






