என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    மாமல்லபுரம் கடற்கரையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் மணிமாறன் (வயது 25). மீனவர்.

    இவர் இன்று காலை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வடபகுதியில் உள்ள தனியார் ரிசார்ட் பின்புறம் இருக்கும் கடற்கரையில் இறந்து கிடந்தார்.

    முகம் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. முகத்தை சிதைத்து மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மீனவர்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    நேற்று இரவு கொலை நடந்த இடத்தில் 5-க்கும் மேற்பட்டோர் கும்பலாக இருந்து மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மணிமாறனுடன் சென்ற நண்பர்கள் யார், யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் இயங்கி வருகின்றன.

    செங்கல்பட்டு:

    மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் பார்வையாளர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் மாதிரி நடத்தை விதிகளைப் பின்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:-

    தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 703 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி மையத்தில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 731 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.

    செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிகளில் 108 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க 242 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு மையத்தில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 413 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.

    மேலும் அச்சரப்பாக்கம், இடைக்கழிநாடு, கருங்குழி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் ஆகிய பேரூராட்சிகளில் 99 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க 122 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு மையத்தில் 91 ஆயிரத்து 618 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.

    மாவட்டத்தில் மொத்தம் 277 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க 1,067 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்து 76 ஆயிரத்து 762 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளார்கள். போட்டியிடும் வேட்பாளர் மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளிலிருந்து அவருக்கு வழங்கப்படும் படிவத்தில் அவர் அன்றாடம் செலவு கணக்குகளை பராமரிக்க வேண்டும்.

    தேர்தல் முடிந்து அறிவிப்பு வெளியிட்ட 30 தினங்களுக்குள் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் மாநகராட்சி ஆணையரிடமும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் அந்தந்த நகராட்சி ஆணையர்களிடம், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலரிடம் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் இயங்கி வருகின்றன. தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்:1800 599 7625 மற்றும் 044-27427468 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், தாம்பரம் துணை கமி‌ஷனர் சிபி சக்கரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) நாராயணன், தாம்பரம் மாநகராட்சி கமி‌ஷனர் இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாலாஜி சுந்தர ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாமல்லபுரம், திருக்கழுகுன்றம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளின் பதற்றமான ஓட்டு சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு குறித்து, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுகுன்றம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளின் பதற்றமான ஓட்டு சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு குறித்து, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    போலீஸ் ஐ.ஜி., சந்தோஷ் குமார், டி.ஐ.ஜி., சத்தியபிரியா, செங்கல்பட்டு எஸ்.பி., அரவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி பகுதிகளை கணக்கெடுத்து அவைகளை கூடுதலாக கண்காணிப்பது, அப்பகுதியில் ஜாதி, மத மோதல்கள் நடந்துள்ளதா என ஆய்வு செய்வது, லைசென்ஸ் துப்பாக்கி வைத்திருப்போர் விபரங்களை சேகரிப்பது, வன்முறை நடந்தால் அதை பரவாமல் கட்டுப்படுத்துவது எப்படி, வன்முறை செய்வோர்கள் மீது கட்சி பாகுபாடு இன்றி வழக்கு பதிவு செய்வது போன்ற முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    கை, கால்களை கட்டி வாலிபரை கொடூரமாக கொன்று உடலை கொலைக் கும்பல் கால்வாயில் வீசி சென்ற சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்போரூர்:

    கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் பகுதியில் பக்கிங்காம் கால்வாயும் அதையொட்டி உப்பளமும் உள்ளது.

    இந்த உப்பளக் கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் மகுடேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    இறந்து கிடந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும். அவரது தலையில் கல்லால் தாக்கிய காயங்கள் காணப்பட்டன. மேலும் அவரது கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. மேலும் அவரது வலது கையில் பெரிய அளவில் சிலுவை பச்சை குத்தப்பட்டு இருந்தது.

    உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் இறந்து ஒரு வாரத்துக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது.

    மர்ம கும்பல் அவரை கடத்தி வந்து கை, கால்களை கட்டிப்போட்டு கொடூரமாக அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது. மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக உடலை உப்பளக்கால்வாயில் கொலையாளிகள் வீசி சென்று உள்ளனர்.

    கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம், கல்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த ஒரு வாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து போலீசார் கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் பின்னரே கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.

    கை, கால்களை கட்டி வாலிபரை கொடூரமாக கொன்று உடலை கொலைக் கும்பல் கால்வாயில் வீசி சென்ற சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    20 மற்றும் 24-வது வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 20-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளராக நகரத்தலைவர் பாஸ்கரின் மனைவி தேவகி பாஸ்கர் போட்டியிடுகிறார்.

    சென்னை:

    செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    20 மற்றும் 24-வது வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 20-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளராக நகரத்தலைவர் பாஸ்கரின் மனைவி தேவகி பாஸ்கர் போட்டியிடுகிறார்.

    ஏற்கனவே இந்த வார்டில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் யுவனேசன் தனது மனைவி மாலதிக்கு சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்தார். ஆனால் அந்த வார்டு காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இத னால் யுவனேசனின் மனைவி மாலதி இந்த வார்டில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    எனவே தனது வெற்றி பாதிக்கப்படுமோ என்று கருதிய காங்கிரஸ் வேட்பாளர் தேவகி பாஸ்கர் தி.மு.க., காங்கிரஸ் கட்சி ஒப்புதலை பெற்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதுபற்றி தேவகி பாஸ்கர் கூறுகையில், “காங்கிரஸ் சார்பில் 20-வது வார்டில் நான் போட்டியிடுகிறேன். அந்த வார்டில் தி.மு.க.வை சேர்ந்த யுவனேசனின் மனைவி சுயேட்சையாக போட்டியிடுகிறார். மனுவை வாபஸ் பெறும்படி தி.மு.க.வினர் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் அவர் ஏற்கவில்லை.

    எனவே கை சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு இருக்காது என்பதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன்” என்றார்.

    கடந்த சில மாதங்களாக முதலைப் பண்ணையில் இருந்து முதலைகளை பாதுகாப்பாக பெட்டியில் அடைத்து குஜராத்திற்கு லாரியில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
    மாமல்லபுரம்:

    வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை முதலை பண்ணை உள்ளது. இங்கு 17 வெவ்வேறு இனங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சதுப்பு நில முதலைகள் ஆகும்.

    கொரோனா கட்டுப்பாடு, ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த முதலைப்பண்ணை கடும் நிதி நெருக்கடியில் தவித்தது. முதலைகளை பராமரிக்க முடியாமல் நிர்வாகத்தினர் தவித்தனர்.

    இதையடுத்து இங்குள்ள முதலைகளை விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று முதலைப் பண்ணை நிர்வாகத்தினர் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    இதனை ஏற்று மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் தமிழ்நாடு வனவிலங்கு காப்பகத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பி இருந்தது. அதில் 350 ஆண் முதலைகள், 650 பெண் முதலைகள் என 1000 முதலைகளை இடமாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அவற்றை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட் டது.

    அதன்படி கடந்த சில மாதங்களாக முதலைப் பண்ணையில் இருந்து முதலைகளை பாதுகாப்பாக பெட்டியில் அடைத்து குஜராத்திற்கு லாரியில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    முதலைகளை பெட்டியில் அடைப்பதற்கு முன்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்த முதலைகள் சுமார் 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து தங்களது புதிய இல்லத்திற்கு செல்கின்றன. இதனால் சென்னை முதலைப் பண்ணை பரபரப்பாக காணப்படுகிறது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்த பண்ணையில் கூடுதல் முதலைகள் இருந்தன. கூடுதல் முதலை களை இயற்கையான வாழ் விடங்களில் மறுவாழ்வு செய்ய அதன் நிர்வாகத்தினர் வனத்துறைக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

    சுமார் 1000 முதலைகள் இங்கிருந்து குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு பாதுகாப்புடன் பெட்டியில் அடைத்து கொண்டு செல்லப்படுகின்றன. விலங்குகளின் ஆரோக்கியம், நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    சென்னை வனவிலங்கு காப்பாளர் முன்னிலையில் இந்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணத்திற்கு முன்னர் முதலைகள் கண்காணிக்கப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்ட பெட்டிகளில் மாற்றப்பட்டு அனுப்பப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையே சுமார் 50 ஆண் முதலைகள் ஏற்கனவே 2 பகுதிகளாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன. கடந்த மாதம் மேலும் 250 முதலைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    அ.தி.மு.க, பா.ம.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சரிவர வேட்பு மனு பூர்த்தி செய்யாததால் 3 பேரின் வேட்புமனுவும் தேர்தல் அலுவலரால் நிராகரிக்கப்பட்டது.

    செங்கல்பட்டு:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் தேர்தல் அலுவலர்களால் நேற்று வெளியிடப்பட்டது.

    கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் அலுவலரும் நகராட்சி ஆணையருமான பரிதி வெளியிட்டார். அதன்படி 12-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க.சார்பில் எம்.கே.டி. கார்த்திக்,அ.தி.மு.க.சார்பில் பாலாஜி, பா.ம.க.சார்பில் குமார்,சுயேச்சை வேட்பாளராக பாலமுருகன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    அ.தி.மு.க, பா.ம.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சரிவர வேட்பு மனு பூர்த்தி செய்யாததால் 3 பேரின் வேட்புமனுவும் தேர்தல் அலுவலரால் நிராகரிக்கப்பட்டது.

    இதையடுத்து தி.மு.க.வை சேர்ந்த கார்த்திக் மனு மட்டும் ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. 12-வது வார்டில் வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களும் போட்டியிட களத்தில் இல்லை என்பதால் 12-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு எம்.கே.டி.கார்த்திக் போட்டியின்றி தேர்வானதாக கூடுவாஞ்சேரி நகராட்சி தேர்தல் அலுவலர் பரிதி அறிவித்தார்.

    கூடுவாஞ்சேரி நகராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும நகரமன்ற கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் களத்தில் உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க உள்ளது.

    செங்கல்பட்டு:

    கூடுவாஞ்சேரி நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மாவட்ட துணை செயலாளர் டி.சீனிவாசன் 24 வது வார்டில் கவுன்சிலர் வேட்பாளராக களத்தில் உள்ளார்.

    இவரது மனைவி எஸ்.ச சிகலா 23-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க.சார்பில் போட்டியிடுகின்றார். இதேபோல் இவர்களது மகனும் கூடுவாஞ்சேரி அ.தி.மு.க நகர செயலாளருமான எஸ்.டி.பிரசாத் 25-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

    கணவன், மனைவி, மகன் என 3 பேரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும நகரமன்ற கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் களத்தில் உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க உள்ளது.

    மேல்மருவத்தூர் அருகே சோத்துபாக்கத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
    மதுராந்தகம்:

    பல்லாவரம் அருகே உள்ள கெருகம்பாக்கம் அன்னை இந்திரா நகரை சேர்ந்த 14 பேர் குடும்பத்துடன் உசிலம்பட்டி அடுத்த உச்சம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

    அனைவரும் சரக்கு வேனில் பயணம் செய்தனர். சாமி வழிபாடு முடிந்ததும் அனைவரும் சரக்கு வேனில் மீண்டும் சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் மேல்மருவத்தூர் அருகே சோத்துபாக்கத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் சரக்கு வேனின் முன் பகுதி நொறுங்கியது. அதில் பயணம் செய்த தங்கபாண்டி (வயது 30), வீரன் (60), சிறிமி யாழினி (3) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    மேலும், வேனை ஓட்டிய டிரைவர் பாண்டியன் மற்றும் பயணம் செய்த ரமேஷ், ராமு, சுரேஷ், திவ்யா, அமுதா, பஞ்சம்மாள், ஜோதி மற்றும் குழந்தைகள் ஹரிதா, ஆர்த்தி, பிரபாகரன் ஆகிய 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 11 பேரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சென்னை-திருச்சி மார்க்கமாக உள்ள பழைய பாலத்தில் இன்று முதல் பராமரிப்பு பணி தொடங்கி உள்ளது. இதையடுத்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் அருகே உள்ள பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த இருகுன்றபள்ளி அருகே பாலாற்றில் 1955-ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்டது.

    இதன் பின்னர் 1986-ம் ஆண்டு அதன் அருகிலேயே மற்றொரு பாலம் அமைக்கப்பட்டது. பழைய பாலத்தின் மீது சென்னை- திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்களும், புதிய பாலத்தில் திருச்சி-சென்னை மார்க்கமாக வரும் வாகனங்களும் வந்து செல்கின்றன.

    சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் அதிகளவு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் பழைய பாலத்தில் சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    மேலும் பாலத்தில் உள்ள 12 இணைப்பு பகுதிகளும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து இந்த பாலத்தை சரி செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று முதல் சென்னை-திருச்சி மார்க்கமாக உள்ள பழைய பாலத்தில் பராமரிப்பு பணி தொடங்கி உள்ளது. இதையடுத்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் அருகே உள்ள பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

    சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை என இரு மார்க்கமாக வரும் வாகனங்கள் ஒரே பாலத்தில் சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    பாலத்தை சீரமைக்கும் பணி 20 நாட்கள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சீரமைப்பு பணிகள் நடைபெறும் நாட்கள் முழுவதும் ஒரே பாலத்தில் இரு மார்க்கமாகவும் வாகனங்கள் சென்று வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம் பேரூராட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என நாம்தமிழர் கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்தார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சி சார்பில் மாமல்லபுரம் பேரூராட்சியில் 15 வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.

    1-வது வார்டில் வளர்மதி, 2-வது வார்டில் ராஜேந்திர குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். 4-வது வார்டில் செல்வி, 5-வது வார்டில் கேசவன், 6-வது வார்டில் தமிழரசன், 7-வது வார்டில் பிரேமா, 8-வது வார்டில் அமுதா, 9-வது வார்டில் மணிகண்டன், 10-வது வார்டில் ராணி, 11-வது வார்டில் வினோத், 12-வது வார்டில் இந்திரா, 13-வது வார்டில் நர்மதா, 14-வது வார்டில் கோமதி, 15-வார்டில் மொய்தின் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    இவர்கள் அனைவரும் மாமல்லபுரம் பேரூராட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் இந்த பிரசாரம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.
    மகளிர் சுய உதவி குழுவினரிடம் நூதனமுறையில் ரூ.13 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 33) இவர் சுயஉதவி குழுவை சேர்ந்த பெண்களின் ஆதார்எண் மற்றும் வங்கிக்கணக்கை பயன்படுத்தி அவர்களது பெயரில் தலா ரூ.40 ஆயிரம் வீதம் 33 பேரின் வங்கிகணக்கில் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பணபரிவர்த்தனை செய்துள்ளார்.

    அந்த நபர்களை நேரில் சந்தித்து வேறு ஒருவருக்கு கிடைக்க வேண்டிய கடன்தொகை உங்களது வங்கி கணக்கில் தவறாக டெபாசிட் ஆகிவிட்டது அந்த பணத்தை எடுத்து கொடுங்கள்.

    உங்களது கடன் தொகை விரைவில் வங்கிக்கணக்கில் டெபாசிட் ஆகிவிடும் என லாவகமாக பேசி அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளார். இவ்வாறு 33 பேரிடம் தலா ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்துள்ளார்.

    தனியார் நிதிநிறுவன ஊழியர் கடன் வாங்கியதற்கு மாத தவணை செலுத்த சொல்லி கேட்க சென்ற போது மகளிர் சுய உதவிக்குழுவினர், நாங்கள் கடன் வாங்கவில்லை எங்களது வங்கி கணக்கில் வந்த பணத்தை தவறாக வந்து விட்டதாக கூறி சதீஷ்குமார் வாங்கி கொண்டார் என்று 33 பேரும் ஒரே பதிலை கூறினர். இதையடுத்து தனியார் நிதி நிறுவனம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

    அதனடிப்படையில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ×