என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்டிகளில் அடைக்கப்படும் முதலைகளை படத்தில் காணலாம்
    X
    பெட்டிகளில் அடைக்கப்படும் முதலைகளை படத்தில் காணலாம்

    வடநெம்மேலியில் உள்ள பண்ணையில் இருந்து 1,000 முதலைகள் குஜராத் பூங்காவுக்கு செல்கின்றன

    கடந்த சில மாதங்களாக முதலைப் பண்ணையில் இருந்து முதலைகளை பாதுகாப்பாக பெட்டியில் அடைத்து குஜராத்திற்கு லாரியில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
    மாமல்லபுரம்:

    வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை முதலை பண்ணை உள்ளது. இங்கு 17 வெவ்வேறு இனங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சதுப்பு நில முதலைகள் ஆகும்.

    கொரோனா கட்டுப்பாடு, ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த முதலைப்பண்ணை கடும் நிதி நெருக்கடியில் தவித்தது. முதலைகளை பராமரிக்க முடியாமல் நிர்வாகத்தினர் தவித்தனர்.

    இதையடுத்து இங்குள்ள முதலைகளை விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று முதலைப் பண்ணை நிர்வாகத்தினர் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    இதனை ஏற்று மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் தமிழ்நாடு வனவிலங்கு காப்பகத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பி இருந்தது. அதில் 350 ஆண் முதலைகள், 650 பெண் முதலைகள் என 1000 முதலைகளை இடமாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அவற்றை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட் டது.

    அதன்படி கடந்த சில மாதங்களாக முதலைப் பண்ணையில் இருந்து முதலைகளை பாதுகாப்பாக பெட்டியில் அடைத்து குஜராத்திற்கு லாரியில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    முதலைகளை பெட்டியில் அடைப்பதற்கு முன்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்த முதலைகள் சுமார் 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து தங்களது புதிய இல்லத்திற்கு செல்கின்றன. இதனால் சென்னை முதலைப் பண்ணை பரபரப்பாக காணப்படுகிறது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்த பண்ணையில் கூடுதல் முதலைகள் இருந்தன. கூடுதல் முதலை களை இயற்கையான வாழ் விடங்களில் மறுவாழ்வு செய்ய அதன் நிர்வாகத்தினர் வனத்துறைக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

    சுமார் 1000 முதலைகள் இங்கிருந்து குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு பாதுகாப்புடன் பெட்டியில் அடைத்து கொண்டு செல்லப்படுகின்றன. விலங்குகளின் ஆரோக்கியம், நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    சென்னை வனவிலங்கு காப்பாளர் முன்னிலையில் இந்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணத்திற்கு முன்னர் முதலைகள் கண்காணிக்கப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்ட பெட்டிகளில் மாற்றப்பட்டு அனுப்பப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையே சுமார் 50 ஆண் முதலைகள் ஏற்கனவே 2 பகுதிகளாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன. கடந்த மாதம் மேலும் 250 முதலைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×