என் மலர்
செங்கல்பட்டு
- கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு பதக்கத்துடன் பட்டமளிக்கப்பட்டது
- 16 ஆண்டுகளில் 570 பேர் பயிற்சி முடித்து அணுசக்தி துறைகளில் பணிசெய்து வருகின்றனர்.
கல்பாக்கம்:
தமிழ்நாட்டில் கல்பாக்கம், கூடங்குளம் பகுதியில், அணுசக்தி துறைகளின் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இத்துறைகளில் அணுசக்தி தொழில்நுட்ப பணிகளுக்கான உயர்கல்வி பயிற்சி 2006-ம் ஆண்டில் இருந்து கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் பாபா அணு உலை ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்படுகிறது.
இதில் பொறியியல், இயந்திரவியல், ரசாயன பொறியியல், விண்கலன் தொழில்நுட்பம், எரிபொருள் சுழற்சி, பூமியின் தட்பவெப்ப அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் ஒரு வருடம் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இப் பிரிவுகளில் 16 ஆண்டுகளில் இதுவரை 570 பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்கள் அணுசக்தி துறைகளில் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 16-ம் ஆண்டில் பயிற்சி முடித்த 20 பேருக்கு பதக்கத்துடன் பட்டமளிக்கப்பட்டது
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, அங்கேயே பணிபுரிந்து பல விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள அரங்கம் மற்றும் அணுசக்தி மைதானத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்டு படையினர் ஒத்திகை பயிற்சி அளித்தனர்.
- கால்நடைகளை அப்புறப்படுத்துவது, மருத்துவ குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டது.
மாமல்லபுரம்:
நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு நேற்றும், இன்றும் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள அரங்கம் மற்றும் அணுசக்தி மைதானத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்டு படையினர் ஒத்திகை பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சியில் கனமழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை உடனடியாக மீட்பது, கடலில் பூகம்பம் ஏற்பட்டு சுனாமி வந்தால் மீனவர்களை எப்படி காப்பாற்றுவது, கால்நடைகளை அப்புறப்படுத்துவது, மருத்துவ குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டது.
இதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நவீன கருவிகள், மீட்பு சாதனங்கள், பாதுகாப்பு உடைகள், தொலைதொடர்பு ராடர்கள் போன்றவைகளை கொண்டு வந்திருந்தனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகையால் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
- மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் கடல்நீரை குடிநீர் ஆக்கும் ஆலை அமைக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
சென்னை நகர மக்களின் குடிநீர்தேவை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் இருந்து நிறைவேற்றப்படுகிறது.
இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். எனினும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகையால் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் கடல்நீரை குடிநீர் ஆக்கும் ஆலை அமைக்கப்பட்டது.
இந்த இரண்டு இடங்களில் இருந்தும் தலா 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்து சென்னைக்கு குடிநீராக வழங்கப்படுகிறது.
நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அடையாறு, ஆலந்தூர், கண்ணகிநகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் குடிநீர் தேவை மேலும் அதிகரித்து வந்ததால் நெம்மேலியில் உள்ள ஆலை அருகே இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆள வந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் 2-வது கடல் நீரை குடிநீ ராக்கும் ஆலை தொடங்க அரசு முடிவு செய்தது.
அதன்படி ஜப்பான் நாட்டு தொழில் நுட்பத்துடன், ஜெர்மனி நாட்டின் ரூ.1,260 கோடி கடன் உதவியுடன் 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யக்கூடிய 2-வது புதிய ஆலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த பணி வேகமாக நடந்து வருகிறது. முக்கிய கட்டிடம் கட்டுதல், கடற்கரையில் இருந்து 1கி.மீ., தூரத்தில் உள்ள ஆழ்கடல் கடல்நீரை ஆலைக்குள் கொண்டு வர பாதை அமைத்தல், ராட்சத குழாய்கள் பதித்தல், சுத்திகரிப்பு எந்திரம் அமைத்தல், ஆலைக் கழிவுகளை வெளியேற்றுதல், குடிநீர் பரிசோதனை கூடம், கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன.
இதுவரை 85 சதவீதம் பணிகள் முடிந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடைசி கட்ட பணிகள் மட்டும் நடந்து வருகின்றன. விரைவில் இந்த பணி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கடல்நீரை குடிநீராக்கும் கட்டுமான குழுவினர் கூறும்போது, நெம்மேலியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 2-வது கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணியில் இதுவரை 85 சதவீதம் முடிந்து உள்ளன. இந்த ஆலையில் உற்பத்தி ஆகும் குடிநீரை பல்லாவரம், மேடவாக்கம் பகுதிகளுக்கு கொண்டு செல்ல இரும்பு குழாய்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. புதிய ஆலையில் குடிநீர் உற்பத்தியை தொடங்கி விட்டால், சென்னையின் குடிநீர் தேவையில் 50 சதவீதத்தை கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளே பூர்த்தி செய்யலாம் என்றனர்.
- 13 வயதான ஏஞ்சல் என்ற பெண் ஆசிய காட்டு கழுதை லேமினிடிஸ் கால்குளம்பு பாதிப்பு நோய் காரணமாக அவதிப்பட்டு வந்தது.
- பெண் காட்டு கழுதை சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.
வண்டலூர்:
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 வயதான ஏஞ்சல் என்ற பெண் ஆசிய காட்டு கழுதை லேமினிடிஸ் கால்குளம்பு பாதிப்பு நோய் காரணமாக அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து பூங்கா டாக்டர்கள் தொடர்ந்து ஆசிய காட்டு கழுதைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் பெண் காட்டு கழுதை சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.
பூங்காவில் காட்டு கழுதை இறந்ததை தொடர்ந்து பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாதவாறு பூங்கா நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- சித்தாமூர் போலீசார் மாணவி கிருத்திகா புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி பார்க்க முடிவு செய்தனர்.
- வருவாய்த்துறை மற்றும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் இடம் தோண்டப்பட்டது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே சித்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கிருத்திகா (வயது12) .அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 5-ந்தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது சாலையில் இருந்த மின் கம்பம் திடீரென முறிந்து மாணவி கிருத்திகா மீது விழுந்தது.
இதில் தலையில் விழுந்து பலத்த காயம் அடைந்த அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 14 -ந்தேதி மாணவி கிருத்திகா இறந்தார்.
இதையடுத்து கடந்த 15-ந்தேதி இறுதி சடங்குகள் செய்யப்பட்டு சித்திரவாடி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவி கிருத்திகாவின் உடல் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை சுடுகாட்டில் மணவி கிருத்திகா புதைக்கப்பட்டிருந்த இடம் தோண்டப்பட்டு இருந்தது. மேலும் அந்த இடத்தில் மஞ்சள், குங்குமம், எலுமிச்சம் பழம், ஒரு டார்ச்லைட், தலைமுடி, கையுறை ஆகியவை கிடந்தன.
இதனை கண்டு அதிர்ச்சிஅடைந்த அப்பகுதி மக்கள் கிருத்திகாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், இது தொடர்பாக சித்தாமூர் போலீசில் புகார் செய்தனர். அதில் தங்களது மகள் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு உள்ளது. உடல் அங்கு உள்ளதா? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து சித்தாமூர் போலீசார் மாணவி கிருத்திகா புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி பார்க்க முடிவு செய்தனர். அதன்படி வருவாய்த்துறை மற்றும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் அந்த இடம் தோண்டப்பட்டது.
அப்போது மாணவி கிருத்திகாவின் உடலில் இருந்த தலை மட்டும் மாயமாகி இருந்தது. அதனை மர்மநபர்கள் வெட்டிஎடுத்து சென்று இருந்தனர்.
இதையடுத்து உடல் சேதப்படுத்தப்பட்டு உள்ளதா? என்பதை கண்டறிய பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி கிருத்திகாவின் உடலில் இருந்த தலையை எடுத்து சென்று இருப்பது மந்திரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பூஜை பொருட்கள் கிடந்தது சந்தேகத்தை மேலும் அதிகரிக்க செய்து உள்ளது.
மாணவி கிருத்திகா அவரது விட்டில் முதல் மகள் ஆவார். எனவே தலைச்சன் பிள்ளை என்பதால் மாந்திரீகத்துக்காக தலையை எடுத்து சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
நேற்று முன்தினம் சூரியகிரகணம் ஆகும். அந்த நாளில் மந்திரவாதிகள் பூஜைகள் செய்ய இந்த செயலில் ஈடுபட்டு உள்னர்.
இது தொடர்பாக மாந்திரீகம் செய்பவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து சித்தாமூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெங்கடேசன் அச்சரப்பாக்கம் பெருக்கருணை சாலையில் இரும்பிலி கூட்ரோடு பகுதியில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
- தற்கொலை குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுராந்தகம்:
சித்தாமூரை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது49). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை வீட்டில் இருந்து சென்ற அவர் திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் வெங்கடேசன் அச்சரப்பாக்கம் பெருக்கருணை சாலையில் இரும்பிலி கூட்ரோடு பகுதியில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் திருக்கழுக்குன்றம் போலீசாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
- தொடர் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
திருக்கழுக்குன்றம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பாக்குமணி என்கிற மணிகண்டன் (வயது 29) மற்றும் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த லிங்கன் (23) ஆகியோர் போலீசாரால் தேடப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் திருக்கழுக்குன்றம் போலீசாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவர்களது தொடர் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின்பேரில், பாக்கு மணி என்கின்ற மணிகண்டன் மற்றும் லிங்கன் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
- திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.
- சுப்பிரமணியனிடம் இருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதே போல கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. ரோடு டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (22) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த 3 சம்பவங்கள் குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
- சேலையூர், சாந்தா நகர், 1-வது குருகு தெரு பகுதியில் வசிப்பவர் சங்கர்.ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த சேலையூர், சாந்தா நகர், 1-வது குருகு தெரு பகுதியில் வசிப்பவர் சங்கர்.ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் விட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதையில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சங்கரிடம் ரகளையில ஈடுபட்டு அரிவாளால் வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த மனைவி பேபி, மகள் ராஜராஜேஸ்வரி, தாய் குஞ்சரம் ஆகியோரையும் மர்ம நபர்கள் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் பலத்த காயம்அடைந்த சங்கர் மற்றும் அவரது தாய் குஞ்சரம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாரதி ஏரிக்கு சென்று தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து குளித்து விளையாடிக் கொண்டிருந்தான்.
- திடீரென நீரில் மூழ்கி தத்தளித்த பாரதி சிறிது நேரத்தில் மாயமானார்.
போரூர்:
மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி 7-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம். கார் டிரைவர். இவரது மகன் பாரதி (வயது 13) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
பாரதி நேற்று மாலை ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியில் உள்ள ஏரிக்கு சென்று தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து குளித்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்த பாரதி சிறிது நேரத்தில் மாயமானார். இதை கண்ட பாரதியின் நண்பர்கள் கூச்சலிட்டனர். அருகில் உள்ளவர்கள் தேடியும் பாரதியை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய பாரதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே சிறுவன் பாரதி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலியான இளம்பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
- இளம்பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது உடல் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த படாளம்-கருங்குழி இடையே உள்ள அரியவாக்கம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில் அந்த பெண் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலியான பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
பலியான இளம்பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது உடல் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
பலியான பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக மாயமானவர் பற்றிய விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.
- பஸ்சின் பின் பக்க சக்கரத்தில் சஞ்சய் சிக்கினார். உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் விரைந்து வந்து சஞ்சய்யின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வண்டலூர்:
சென்னையில் மாநகர பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்து வருவது தொடர் கதையாக உள்ளது.
போலீசார் மாணவர்கள் மீது நடவடிக்கை மற்றும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இது நீடிக்கிறது.
இந்த நிலையில் மாநகர பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் ஒருவர் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊரப்பாக்கம், மகாவீர் நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் சஞ்சய் (வயது 18). கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரிக்கு மாநகர பஸ்சில் செல்வது வழக்கம்.
தீபாவளி விடுமுறை முடிந்து இன்று காலை சஞ்சய் வழக்கம் போல தாம்பரத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்ற மாநகர பஸ்சில் (எண்.515) ஏறினார்.
பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார்.
வண்டலூர் பூங்கா 2-வது வாகன நிறுத்தம் இடம் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி சஞ்சய் தவறி கீழே விழுந்தார்.
இதில் பஸ்சின் பின் பக்க சக்கரத்தில் சஞ்சய் சிக்கினார். உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்டு பஸ்சில் இருந்த மற்ற மாணவர்கள், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து சஞ்சய்யின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கல்லூரி மாணவர் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் மாநகர பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டாம் என்று போலீசார் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






