என் மலர்
செங்கல்பட்டு
- வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பொதுமக்களை தங்க வைக்க 290 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.
- முகாம்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
செங்கல்பட்டு:
மழை தீவிரம் அடைந்து உள்ளதை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:- செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 1148 ஏரிகள் உள்ளது. இதில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் 528 ஏரிகள் மற்றும் 2 தடுப்பணைகள் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மொத்த ஏரிகள் 620 ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் எந்தவித மனித உயிர் சேதமோ, ஆடு, மாடுகள் உயிர்சேதமோ ஏற்படவில்லை. 6 குடிசைகள் சேதமடைந்துள்ளது. இவற்றில் ஒரு குடிசை முழுவதுமாகவும், 5 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்து உள்ளது.
வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பொதுமக்களை தங்க வைக்க 290 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. முகாம்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து வருகின்ற புகார்களை உடனுக்குடன் கண்காணித்து அவற்றின் மீது தொடர்புடைய துறைகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொண்டு நிவர்த்தி செய்ய மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண்கள் மூலம் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
வாட்ஸ் அப் புகார் எண் -9444272345 கட்டணமில்லா தொலை பேசி எண்- 1077
இவ்வாறு அவர் கூறினார்.
- கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கம் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விவசாயிகளின் நேரடி விற்பனை பொருட்களை வாங்குவோர் வருகை குறைந்து வந்ததால் நாளடைவில் வியாபாரம் இன்றி உழவர் சந்தை வீணானது.
- திருக்கழுகுன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் சந்தை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மைத்துறை மற்றும் வணிகத்துறை சார்பில் உழவர் சந்தை துவங்கப்பட்டது. விவசாயிகளின் நேரடி விற்பனை பொருட்களை வாங்குவோர் வருகை குறைந்து வந்ததால் நாளடைவில் வியாபாரம் இன்றி உழவர் சந்தை வீணானது.
இந்நிலையில் மீண்டும் உழவர் சந்தையை ஊக்கப்படுத்தும் விதமாக 20 மகளிர் குழுவினரை ஒருங்கிணைத்து சந்தை வளாகத்தில் "உழவர் சந்தை மேளா" நடத்தப்பட்டது. திருக்கழுகுன்றம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்போர் பலர் கடை அமைத்து விற்பனை செய்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உழவர் சந்தையில் விவசாயிகள் கூடியதால் அப்பகுதி மக்கள் ஆர்வமாக வந்து காய்கறி, கீரைகள், மரச்செக்கு எண்ணெய், மாடிதோட்ட விதைகள், கிழங்குகள் உள்ளிட்டவைகளை வாங்கி சென்றனர்.
திருக்கழுகுன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சிறியதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் நாகராஜன், பொறுப்பு அலுவலர்கள் பரஞ்ஜோதி, விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பள்ளி வளாகம் முழுவதும் தற்போது செடி கொடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது.
- திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் பள்ளியை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டிகை:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பட்டிபுலம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைக்கால பேரிடர் கட்டிடத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இருளர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்து கண்டிகை அருகே உள்ள குமிழி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பில் இருளர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் சகல வசதிகளுடன் கட்டப்பட்டது.
பள்ளி வளாகம் முழுவதும் தற்போது செடி கொடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது. மேலும் பள்ளி வளாகத்தில் சாலை வசதிகள் இன்னும் அமைக்கப்படாமல் உள்ளது. திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் இந்த பள்ளியை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மோட்டார் சைக்கிள் திருடும் நபர்களை பிடிப்பதற்காக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
- கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடிக்கடி வீடுகளில் நிறுத்தி வைக்கப்படும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடும் நபர்களை பிடிப்பதற்காக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள் திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மறைமலைநகர் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 22), விஜய் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- தொழிலாளர்கள் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் இருந்து மாநாட்டு அரங்கம் வரை செங்கொடி ஏந்தி பேரணி நடத்தினர்.
- டெல்லியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று திரண்டு பிரமாண்ட பேரணி.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கத்தின் 23வது மாநாடு மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள சமூகநல கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
மாநாட்டை மாவட்ட தலைவர் சங்கையா தலைமையில், மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
முன்னதாக மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் தேவராஜன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் இருந்து மாநாட்டு அரங்கம் வரை செங்கொடி ஏந்தி பேரணி நடத்தினர். பேரணியின் போது தொழிலாளர் சட்ட தொகுப்பில் நீக்கப்பட்ட உரிமைகளை மீன்டும் பெறுதல், நிரந்தரம் இல்லாத அரசு தொழிலாளர்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்னயம் செய்தல், நகராட்சி, பேரூராட்சி ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்குதல், மின்சார திருத்த சட்டத்தை அரசு திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோசமிட்டனர்.
இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறினால் அடுத்து டெல்லியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று திரண்டு பிரமாண்ட பேரணி நடத்த போவதாக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பல்வேறு மீனவர் பாதுகாப்பு திட்டங்களை தங்களின் தலைமையிலான இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
- கடல் அரிப்பில் தங்கள் உயிருக்கும் உடமைக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.
விடுதலை சிறுத்தை கட்சியின் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தாங்கள் பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ச்சியாக சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் கண்டறிந்து அவ்வப்போது அதற்கான தீர்வை அளித்து வருகிறீர்கள் என்பதில் தமிழ்நாட்டு மக்கள் பெருமகிழ்ச்சியோடு, மிகுந்த நம்பிக்கையோடு உள்ளார்கள்.
அந்த வகையில் தான் மீனவ சமூகத்தின், மிக அடிப்படை தேவையான உரிய இடங்களில் கடலரிப்பு பாதிப்பை தடுத்திட கரை பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்துவது, என பல்வேறு மீனவர் பாதுகாப்பு திட்டங்களை தங்களின் தலைமையிலான இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொக்கிலமேடு, கரிக்கட்டுக் குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் நேர்கல் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதனையடுத்து கடலரிப் பினை தடுத்திட நேர்கல் சுவர் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப் பட்டு ஒப்பம் கோரப்பட்டு, உரிய ஒப்பந்தக்காரர்களுக்கு பணி ஆணையம் வழங்கப்பட்டுவிட்டது.
திருப்போரூர் ஒன்றியத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நெம்மேலி(குப்பம்)க்கு கரை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்த வழிவகை செய்யப்படவில்லை என்பதை உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
அதற்கு நெம்மேலி மீனவ கிராமத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு பரிந்து ரைத்து இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
ஒப்பம் அளிக்கப்பட்ட பணி துவங்கவில்லை என பலமுறை மீன்வளம் தலைமை பொறியாளர் மற்றும் அடுத்த நிலை பொறியாளர் மற்றும் உதவி இயக்குனர் ஆகியோரை தொடர்பு கொண்டு கடந்த 4, 5 மாதங்களாக கேட்டு வருகிறேன். அதோடு நெம்மேலி திட்டம் குறித்தும் கேட்டு வருகிறேன்.
திட்டம் வந்து விட்டது என்றும் விரைவில் வந்து விடும் என்றும் நம்பிக்கையோடு காத்திருக்கும் மக்கள், தற்போது கடல் அரிப்பில் தங்கள் உயிருக்கும் உடமைக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.
ஒப்பம் அளிக்கப்பட்ட கொக்கிலமேடு, கரிக்காட்டு குப்பம், செம்மஞ்சேரி குப்பம், கோவளம் ஆகிய இடங்களில் கரை பாதுகாப்பு பணிகளை உடனே தொடங்கிடவும், திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்ட நெம்மேலி மீனவ கிராமத்திற்கு ஒப்புதல் அளித்து பணியினை தொடங்கிடவும், கடலரிப்பு அதிகம் உள்ள மற்றொரு மீனவ கிராமமான தேவநேரிக்குப்பத்திற்கும் விரைவில் கரை பாதுகாப்பு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்நாட்டு, வெளிநாட்டு குங்பூ மற்றும் பல்வகை தற்காப்புக்கலை வீரர்கள் 12 பேருக்கு அமைச்சர் அன்பரசன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
- குங்பூ தற்காப்பு கலையை பள்ளி பாடத்தில் சேர்க்க, முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் இருவரிடமும் பரிந்துரை செய்கிறேன் என்றார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தில் மன்சூரியா குங்பூ தற்காப்பு கலையின் சர்வதேச தலைமையகம் உள்ளது. இதை நிறுவிய குங்பூ வீரர் சேகரின் 8வது நினைவஞ்சலி விழா நேற்று மதியம் பூஞ்சேரி கிங்ஸ் இன்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் உள்நாட்டு, வெளிநாட்டு குங்பூ மற்றும் பல்வகை தற்காப்புக்கலை வீரர்கள் 12 பேருக்கு அமைச்சர் அன்பரசன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர், தற்போது இளைஞர்கள் செல்போன், சோஷியல் மீடியா என அதில் முழு நேரமும் மூழ்கி உடலையும், மனதையும், முயற்சியையும் இழந்து வருகிறார்கள். குங்பூ தற்காப்புக்கலை, அவர்களை தீய செயல்களில் இருந்து மீட்டு வருவதை இங்குள்ள இளைஞர்களை பார்த்து உணர்கிறேன். இந்த கலையை பள்ளி பாடத்தில் சேர்க்க, முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் இருவரிடமும் பரிந்துரை செய்கிறேன் என்றார்.
விழாவில் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி பார்த்தீபன், ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, குங்பூ பயிற்சியக செயலாளர் அஷோக்குமார் மற்றும் பிறமாநில, வெளிமாவட்ட குங்பூ மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தாம்பரம்- பெருங்களத்தூர் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்கவர் மீது அவ்வழியாக வந்த விரைவு ரெயில் மோதியது.
- தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாம்பரம்:
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சோனியா (19). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார்.
நேற்று இவர் தோழிகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்றார். பின்னர் மாலை வீட்டிற்கு செல்வதற்காக தோழிகளுடன் வண்டலூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த விரைவு ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதேபோல் தாம்பரம்- பெருங்களத்தூர் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்கவர் மீது அவ்வழியாக வந்த விரைவு ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்மநபர்கள் 2 பேர் செல்போன் மற்றும் எந்திரங்களை திருடி செல்லும் சி.சி.டி.வி.காட்சிகள் வெளியானது.
- வழக்குப் பதிவு செய்த சேலையூர் போலீசார் கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
தாம்பரம்:
சென்னை சேலையூர் போலீஸ் நிலையம் எதிரில் தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமான அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவு சார் மையம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இரவில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்மநபர்கள் 2 பேர் செல்போன் மற்றும் எந்திரங்களை திருடி செல்லும் சி.சி.டி.வி.காட்சிகள் வெளியானது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த சேலையூர் போலீசார் கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் இரும்புலியூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (18), லோகேஷ் (19) என்பதும் தொழிலாளர்களிடம் இருந்து செல்போன்களை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடி சென்ற அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
- பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு:
காஞ்சிபுரம், அங்காளம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான் (வயது 25). கூலித்தொழிலாளி. கடந்த 2014 -ம் ஆண்டு பால் வாங்க கடைக்கு சென்ற 9 வயது சிறுமியை வழி மறித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடி சென்ற அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். முன்னதாக முஜிபூர் ரஹ்மானை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
- கல்பாக்கம், கூடங்குளம் பகுதியில், அணுசக்தி துறைகளின் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
- பூமியின் தட்பவெப்ப அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் ஒரு வருடம் பயிற்சி கொடுக்கப்படுகிறது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம், கூடங்குளம் பகுதியில், அணுசக்தி துறைகளின் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இத்துறைகளில் அணுசக்தி தொழில் நுட்ப பணிகளுக்கான உயர்கல்வி பயிற்சி கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இயங்கும் பாபா அணு உலை ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்படுகிறது.
இதில் பொறியியல், எந்திரவியல், ரசாயன பொறியியல், விண்கலன் தொழில் நுட்பம், எரிபொருள் சுழற்சி, பூமியின் தட்பவெப்ப அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் ஒரு வருடம் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இப்பிரிவுகளில் 16 ஆண்டுகளில் இதுவரை 570 பேர் பயிற்சி பெற்று அணுசக்தி துறைகளில் பணி செய்து வருகின்றனர்.
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டில் பயிற்சி பெற்றவர்களுக்கு பதக்கத்துடன் பட்டமளிக்கப் பட்டது.






