என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்- முதல்வருக்கு எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்- முதல்வருக்கு எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. கோரிக்கை

    • பல்வேறு மீனவர் பாதுகாப்பு திட்டங்களை தங்களின் தலைமையிலான இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
    • கடல் அரிப்பில் தங்கள் உயிருக்கும் உடமைக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

    விடுதலை சிறுத்தை கட்சியின் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தாங்கள் பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ச்சியாக சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் கண்டறிந்து அவ்வப்போது அதற்கான தீர்வை அளித்து வருகிறீர்கள் என்பதில் தமிழ்நாட்டு மக்கள் பெருமகிழ்ச்சியோடு, மிகுந்த நம்பிக்கையோடு உள்ளார்கள்.

    அந்த வகையில் தான் மீனவ சமூகத்தின், மிக அடிப்படை தேவையான உரிய இடங்களில் கடலரிப்பு பாதிப்பை தடுத்திட கரை பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்துவது, என பல்வேறு மீனவர் பாதுகாப்பு திட்டங்களை தங்களின் தலைமையிலான இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

    திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொக்கிலமேடு, கரிக்கட்டுக் குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் நேர்கல் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதனையடுத்து கடலரிப் பினை தடுத்திட நேர்கல் சுவர் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப் பட்டு ஒப்பம் கோரப்பட்டு, உரிய ஒப்பந்தக்காரர்களுக்கு பணி ஆணையம் வழங்கப்பட்டுவிட்டது.

    திருப்போரூர் ஒன்றியத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நெம்மேலி(குப்பம்)க்கு கரை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்த வழிவகை செய்யப்படவில்லை என்பதை உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

    அதற்கு நெம்மேலி மீனவ கிராமத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு பரிந்து ரைத்து இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    ஒப்பம் அளிக்கப்பட்ட பணி துவங்கவில்லை என பலமுறை மீன்வளம் தலைமை பொறியாளர் மற்றும் அடுத்த நிலை பொறியாளர் மற்றும் உதவி இயக்குனர் ஆகியோரை தொடர்பு கொண்டு கடந்த 4, 5 மாதங்களாக கேட்டு வருகிறேன். அதோடு நெம்மேலி திட்டம் குறித்தும் கேட்டு வருகிறேன்.

    திட்டம் வந்து விட்டது என்றும் விரைவில் வந்து விடும் என்றும் நம்பிக்கையோடு காத்திருக்கும் மக்கள், தற்போது கடல் அரிப்பில் தங்கள் உயிருக்கும் உடமைக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

    ஒப்பம் அளிக்கப்பட்ட கொக்கிலமேடு, கரிக்காட்டு குப்பம், செம்மஞ்சேரி குப்பம், கோவளம் ஆகிய இடங்களில் கரை பாதுகாப்பு பணிகளை உடனே தொடங்கிடவும், திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்ட நெம்மேலி மீனவ கிராமத்திற்கு ஒப்புதல் அளித்து பணியினை தொடங்கிடவும், கடலரிப்பு அதிகம் உள்ள மற்றொரு மீனவ கிராமமான தேவநேரிக்குப்பத்திற்கும் விரைவில் கரை பாதுகாப்பு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×