என் மலர்
செங்கல்பட்டு
- சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் இனி குற்ற செயல்கள் குறையவும், குற்றவாளிகளை எளிதில் பிடிப்பதற்கும் சி.சி.டி.வி கேமராக்கள் வசதியாக உள்ளது.
- செங்கல்பட்டு மாவட்ட போலீசாரின் பணிகளை ஒதுக்குவதற்கு வசதியாக புதிய “இ பீட்” செயலி அறிமுகம் செய்து மாவட்ட போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல், மர்மநபர்கள் நடமாட்டத்தை கண்காணிப்பது போன்ற கூடுதல் பாதுகாப்பிற்காக கடற்கரை, முக்கிய சந்திப்பு, கூட்டம் கூடும் இடம், பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட நவீன சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டது.
அனைத்து கேமரா பதிவுகளையும் டி.எஸ்.பி அலுவலகத்தில் இருந்தும், செங்கல்பட்டு எஸ்.பி அலுவலக ஆன்லைன் இணைப்பு வழியாகவும், 24மணி நேரமும் போலீசார் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டு அவை அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்தது. இதனால் சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் இனி குற்ற செயல்கள் குறையவும், குற்றவாளிகளை எளிதில் பிடிப்பதற்கும் இந்த சி.சி.டி.வி கேமராக்கள் வசதியாக உள்ளது.
மேலும் செங்கல்பட்டு மாவட்ட போலீசாரின் பணிகளை ஒதுக்குவதற்கு வசதியாக புதிய "இ பீட்" செயலி அறிமுகம் செய்து மாவட்ட போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செயலி மூலம் குற்ற விசாரணை, சட்டம்-ஒழுங்கு, விபத்து மீட்பு, ரோந்து கண்காணிப்பு, போலீசாரின் பணியிடம், அவர்களின் நடவடிக்கை உள்ளிட்ட பணிகளை, உடனுக்குடன் செயலி வாயிலாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.
- விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக வந்த எருமை மாடுகள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.
- உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியை அடுத்துள்ள பெருமாட்டு நல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிவாக்கம் கிராமத்தில் காயரம்பேடு கிராமத்தை சேர்ந்த கண்ணையா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
நேற்று அங்கு மின் கம்பி அறுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
அப்போது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக வந்த 4 எருமை மாடுகள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் அப்பகுதிக்கு வந்து இறந்து கிடந்த மாடுகளை அப்புறப்படுத்தி விசாரித்து வருகின்றனர்.
- வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்திட படிவம்-6ல் பூர்த்தி செய்து வழங்கலாம்.
- இந்த மாதம் 12, 13, 26, 27 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பத்தை நேரில் வழங்கலாம்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் வரும் 2023 ஜனவரி 1-ந்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணி தற்போது நடந்து வருகிறது.
அன்றையதினம் 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம்-6, பெயர்நீக்கம் செய்ய படிவம்-7ல் பூர்த்தி செய்யவும். வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து பிழை மற்றும் முகவரி மாற்றம் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரே பாகத்தில் இருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய விரும்புவோர் படிவம்-8 போன்றவற்றை பூர்த்தி செய்து தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில், வரும் 9-ந்தேதி முதல் படிவம் வழங்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்திட படிவம்-6ல் பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும் இந்த மாதம் 12, 13, 26, 27 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பத்தை நேரில் வழங்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது பெய்த மழையால் வண்ணான்குட்டை குளம் நிரம்பி உபரிநீர் பக்கிங்காம் கால்வாய்க்கு செல்கிறது.
- வண்ணான்குட்டை குளம் தற்போது நீர் நிரம்பி அழகாக காட்சியளிப்பதை அப்பகுதி மக்கள் ரசித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பக்கிங்காம் கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. கால்வாயை ஒட்டி இருக்கும் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளது.
இதனால் உபரி நீர் செல்லும் தரைப்பாலங்களில் வெள்ளநீர் வெளியேறி வருகிறது. மாமல்லபுரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள வண்ணான்குட்டை குளம் சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது, தூர்வாரி, சீரமைக்கப்பட்டது.
தற்போது பெய்த மழையால் வண்ணான்குட்டை குளம் நிரம்பி உபரிநீர் பக்கிங்காம் கால்வாய்க்கு செல்கிறது. வண்ணான்குட்டை குளம் தற்போது நீர் நிரம்பி அழகாக காட்சியளிப்பதை அப்பகுதி மக்கள் ரசித்து வருகின்றனர்.
- தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது.
- குருவன்மேடு ஊராட்சி சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை வெள்ள நீர் அதிக அளவு வெளியேறுவதை கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வண்டலூர்:
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பு இடங்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆய்வு செய்தார்.
காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் விஞ்சியம்பாக்கம் ஏரியை இணைக்கும் கால்வாயை சீரமைக்கும் பணியினை அவர் பார்வையிட்டார்.
இதை தொடர்ந்து ரெட்டி பாளையம் ஊராட்சி சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட மற்றும் அங்கு பாலம் கட்டும் பணியை விரைந்து செயல் படுத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அந்த பகுதியில் பொதுமக்கள் செல்லாதவாறு எச்சரிக்கை பலகைகள் அமைத்திட அலுவலர்களுக்கு தெரிவித்தார்.
இதே போல் குருவன்மேடு ஊராட்சி சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை வெள்ள நீர் அதிக அளவு வெளியேறுவதை கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட உதயசூரியன் நகரில் மழை வெள்ள நீர் வெளியேறு வதையும், ஊரப்பாக்கம் ஊராட்சி ஜெகதீஷ் நகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட மழை வெள்ள நீர் வடிகால்வாய் வழியாக மழை வெள்ளநீர் வெளியேறுவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் ராகுல்நாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில், ஊரப்பாக்கம், காரணைப் புதுச்சேரி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் சுற்றியுள்ள ஏரிகளின் உபரி நீரானது அடையாறு ஆற்றில் கலக்கும் பகுதி. சென்ற ஆண்டு இந்த பகுதிகளில் மழை வெள்ளநீர் அதிக அளவு தேங்கி இருந்தது.
இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகளில் புதியதாக மழை வெள்ள நீர் வடிகால்வாய்கள் அமைத்து மழைநீர் தேங்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழை வெள்ள நீர் விரைந்து வெளியேறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலையில் சிறு பாலங்கள் அமைத்து மழை நீரை வெளியேற்ற திட்டம் தீட்டி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் இந்த பகுதிகளில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை .
அதே போன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளப்பட்டு மழை வெள்ள நீர் வடிகால்கள் தூர் வாரப்பட்டும், சீரமைக்கப்பட்டும் உள்ளதால் மழை வெள்ள நீர் வடிவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அதற்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு கலெக்டர் ராகுல்நாத் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வ குமார், காட்டாங் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் உதயா கருணாகரன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் எம். கே.டி. கார்த்திக், பொதுப் பணித்துறை நீர்வள ஆதாரங்கள் உதவி செயற் பொறியாளர் வெங்கடேஷ், உதவி பொறியாளர் குஜராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- மின்கசிவு காரணமாக வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறி இருந்தது.
- வீட்டில் ராஜ்குமார், அவரது மாமியார் கிரிஜா, இவரது தங்கை ராதா ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தனர்.
வண்டலூர்:
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள ஊரப்பாக்கம் கோதண்டராமன் ஜெயலட்சுமி தெருவில் ஆர்.ஆர். பிருந்தாவன் என்ற பெயரில் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் ராஜ் குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு பார்கவி என்ற மனைவியும், ஆத்ரேயா என்ற 7 வயது மகளும் உள்ளனர். இவர்களது வீட்டில் ராஜ்குமாரின் மாமியார் கிரிஜா (66), அவரது தங்கை ராதா (55) ஆகியோரும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் ராஜ்குமாரின் வீட்டில் இருந்து வெடி சத்தம் போன்று கேட்டது. உடனடி யாக அருகில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு ராஜ்குமாரின் வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டினுள் புகை மூட்டமாக காணப்பட்டது. மின்கசிவு காரணமாக வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறி இருந்தது.
வீட்டில் ராஜ்குமார், அவரது மாமியார் கிரிஜா, இவரது தங்கை ராதா ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் மூழ்கினர். பிரிட்ஜில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வெடித்து சிதறியதும் இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டம் மற்றும் கியாஸ் வெளியேறி மூச்சு திணறல் ஏற்பட்டு 3 பேரும் பரிதாபமாக பலியாகி இருப்பதும் தெரியவந்தது.
ராஜ்குமாரின் மனைவி பார்கவி, மகள் ஆத்ரேயா ஆகியோர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஊரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் நேரில் சென்று விசாரித்தார். உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
உயிரிழந்த ராஜ்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில் தான் அவர் ஊரப்பாக்கத்துக்கு திரும்பினார். மனைவி மகளுடன் சந்தோஷமாக இருந்த ராஜ்குமார் திடீரென பிரிட்ஜ் வெடித்து மாமியார்களுடன் உயிரிழந்து இருப்பது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜ்குமாரின் வீட்டில் வெடித்து சிதறிய பிரிட்ஜை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மின்கசிவு ஏற்பட்டு பிரிட்ஜ் வெடித்தது எப்படி? என்பது குறித்து தடயங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த ஆய்வு முடிவுக்கு பிறகே பிரிட்ஜ் வெடித்து சிதறியது எப்படி என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
வீட்டில் பயன்படுத்தி வந்த பிரிட்ஜ் உயிர் பலி வாங்கி இருப்பது குடியிருப்பு வாசிகளை மட்டுமின்றி வீடுகளில் பிரிட்ஜ் பயன் படுத்துவோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இதற்கிடையே செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இன்று 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் கண்ணீர் மல்க செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் காத்திருக்கிறார்கள். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பு அலுவலக சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலைய போலீசாருக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
- தற்காப்பு, பாதுகாப்பு, நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி அ.பிரதீப் அறிவுரைகள் வழங்கினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மூன்று நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. இதில் 24மணி நேரமும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் தனிமனித பாதுகாப்பு, புதிய காவலர் செயலிகளின் செயல்பாடு, காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளின் கண்காணிப்பு போன்ற முன் ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பு அலுவலக சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலைய போலீசாருக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
இதில் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி அ.பிரதீப் கலந்து கொண்டு போலீசாருக்கு தற்காப்பு, பாதுகாப்பு, நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். பின்னர் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் ஏற்பாட்டில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், போலீசார், போக்குவரத்து போலீசார், மகளிர் போலீசார் என 250 பேருக்கு "ரெயின்கோட்" வழங்கப்பட்டது. மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பூதத்தாழ்வார் அவதரித்த நாளை முன்னிட்டு நாலாயிர திவ்விய பிரபந்த சேவை சாற்றுமுறை பாசுரங்கள் பாடப்பட்டன
- பூதத்தாழ்வருக்கு திருமஞ்சனம், மங்களாசாசனம் என வைணவ ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டன.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயில், 108 வைணவ திவ்ய தலங்களில் 63வது கோயிலாகும். இந்த கோயிலில் பூதத்தாழ்வார் சன்னிதி உள்ளது. கோவிலில் திருப்பணிகள் நடந்து வருவதால், கோயில் பாலாலயத்தில் உள்ளது. இதனால் பூதத்தாழ்வார் அவதார உற்சவ நாளான நேற்று திருமஞ்சனம் வழிபாடு நடத்தவில்லை. இதனால் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வைணவ பக்தர்களுக்காக, மாமல்லபுரம் குலசேகர ஆழ்வார் மடத்தில் பூதத்தாழ்வார் அவதரித்த நாளை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், மழை வெள்ளம், பேரிடர் போன்றவற்றில் சிக்காமல் மக்களை காத்து அவர்கள் நலமுடன் வாழ வேண்டியும் வைணவ பாகவதர்கள் பங்கேற்ற பூதத்தாழ்வாரை போற்றி நாலாயிர திவ்விய பிரபந்த சேவை சாற்றுமுறை பாசுரங்கள் பாடும் நிகழ்ச்சி நெய்குப்பி கிருஷ்ண ராமானுஜ தாசர் தலைமையில் கடந்த 10 நாட்களாக நடைபெற்றது.
முன்னதாக மண்டபத்தில் உள்ள பூதத்தாழ்வருக்கு திருமஞ்சனம், மங்களாசாசனம் என வைணவ ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டன.
இதனால் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் திருமஞ்சன உற்சவம் பார்க்க வந்த பக்தர்கள், குலசேகர ஆழ்வார் மடத்தில் உற்சவம் பார்த்து பூதத்தாழ்வார் அருள் பெற்று சென்றனர்.
- மின்சார ரெயிலில் பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டது குறித்து செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- மீட்கப்பட்ட பெண் குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு:
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரெயில் வந்தது. அந்த ரெயில் 4-வது நடைமேடையில் நின்றதும் அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர்.
அப்போது பெண்கள் பயணம் செய்யும் ரெயில் பெட்டியில் ஒரு கட்டைப்பை கேட்பாரற்று கிடந்தது. சிறிது நேரத்தில் அந்த பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த கட்டைப்பையில் பார்த்தபோது பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பச்சிளம் குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர்.
குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை. பெண்கள் பெட்டியில் பயணம் செய்தபோது யாரோ குழந்தையை கட்டைப்பையில் வைத்து சென்று இருப்பது தெரிந்தது.
பெண் குழந்தை என்பதால் அவர் விட்டுச் சென்றாரா? அல்லது அந்த குழந்தை கடத்தி வரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குழந்தை இருந்த கட்டைப்பையுடன் வந்த பெண் பயணி குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே மின்சார ரெயிலில் பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டது குறித்து செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் நல பிரிவில் அனுமதித்தனர்.
குழந்தை பிறந்து 10 நாட்களே இருக்கும் என்பதால் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மீட்கப்பட்ட பெண் குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்திலும் நல்ல மழை பெய்து உள்ளது.
செங்கல்பட்டு:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதே போல் திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்திலும் நல்ல மழை பெய்து உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
செங்கல்பட்டு - 44.3
செய்யூர் - 38.7
கேளம்பாக்கம் - 39.6
மதுராந்தகம் - 65
திருக்கழுக்குன்றம் - 70.8
திருப்போரூர் - 56.6
தாம்பரம் - 30.4
- மழை வெள்ளத்தில் சிக்குவோரை மீட்கும் பணிகள் குறித்து டிஜிபி நேரில் பார்வையிட்டார்.
- தமிழ்நாடு கடலோர பகுதிகளில் 1234 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் டி.ஜி.பி பி.கே.ரவி கிழக்கு கடற்கரை சாலை கடலோர பகுதி மாவட்டங்களில் கனமழை பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அங்கு வைக்கப்பட்டிருந்த மீட்பு கருவிகளை இயக்கி சோதனை செய்தார்.
மழை வெள்ளத்தில் சிக்குவோருக்கு அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சைகள் என்ன? மேலும் அவர்களை மீட்கும் பணிகள் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டார்.
பின்னர் டி.ஜி.பி பேசுகையில், 'தமிழ்நாடு கடலோர பகுதிகளில் 1234 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை சேதமோ, உயிர்ப்பலியோ ஏற்படவில்லை' என தெரிவித்தார். பின்னர் இங்கிருந்து செய்யூர், கடலூர், நாகப்பட்டினம் பகுதிகளை பார்வையிட புறப்பட்டு சென்றார்.






