என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • நெடுஞ்சாலையோரம் வசிப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் போது தடதடவென ஒரு வித அதிர்வு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • செங்கல்பட்டில் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு சாலை பழுதடைந்து காணப்படுகிறது. சுமார் 10 அடிக்கு ஒரு பள்ளம் உள்ளதை காணமுடிகிறது.

    பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த பள்ளங்களில் விழுந்து செல்கின்றனர். 3 நாள் மழைக்கே ஜல்லி தனியாக மண் தனியாக தார் தனியாக பிரிந்து காணப்படுகிறது. அரைகுறையாக பணியை பாதியில் விட்டு விட்டதாக வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். இருங்குன்றம் பள்ளி, புலிப்பாக்கம். ரஜா குளிப்பேட்டை, பரனூர், பகத்சிங் நகர், சத்யாநகர், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம், சிங்கப்பெருமாள் கோவில் முதல் பெருங்களத்தூர் வரை தேசிய நெடுஞ்சாலையோரம் வசிப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் போது தடதடவென ஒரு வித அதிர்வு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அதிகாரிகள் ஆய்வு செய்து விரைவில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூட வேண்டும், மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செந்தில்குமார் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் குடியிருந்த போது தனியார் நிதி நிறுவனத்தில் விஜயலட்சுமி மூலம் அதன் உரிமையாளர் எழிலரசனிடம் ரூ.15 லட்சம் பணத்தை கட்டிஉள்ளார்.
    • செந்தில் குமார் அவர்கள் இருவரிடமும் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் நிதி நிறுவனம் குறித்து சமூகவலைதளத்தில் தகவல்களை பகிர்ந்தார்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூர் பகவதிபுரம், லட்சுமி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). அ.தி.மு.க.வில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக இருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி பெருமாட்டுநல்லூர் கூட்டு ரோட்டில் மர்மகும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    விசாரணையில் நிதி நிறுவனத்தில் கட்டிய ரூ.15 லட்சத்தை கேட்ட தகராறில் செந்தில் குமார் கூலிப்படையை ஏவி வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த நிதிநிறுவன மேலாளர் விஜயலட்சுமி, அதன் உரிமையாளர் ஈரோடு பகுதியை சேர்ந்த எழிலரசன் மற்றும் கூலிப்படையில் உள்ள அயனாவரத்தை சேர்ந்த பிரவீன், இவரது தம்பி பிரசாந்த், கிரண்லால், சுஜைகாந்தி, விக்கி என்ற விக்னேஸ்வரன், ராகுல், கொடுங்கையூரை சேர்ந்த ஆகாஷ், பெரம்பூரை சேர்ந்த முருகேசன் என்ற முகேஷ், அம்பத்துரை சேர்ந்த சரத் என்ற சண்முகம் உள்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட கூலிப்படையினரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    செந்தில்குமார் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் குடியிருந்த போது தனியார் நிதி நிறுவனத்தில் விஜயலட்சுமி மூலம் அதன் உரிமையாளர் எழிலரசனிடம் ரூ.15 லட்சம் பணத்தை கட்டிஉள்ளார். பின்னர் செந்தில் குமார் அவர்கள் இருவரிடமும் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் நிதி நிறுவனம் குறித்து சமூகவலைதளத்தில் தகவல்களை பகிர்ந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த விஜயலட்சுமியும், எழிலரசனும் பணத்தை திருப்பி கேட்டால் தீர்த்து கட்டி விடுவோம் என்று செந்தில் குமாருக்கு மிரட்டல் விடுத்து உள்ளனர். இதில் பயந்து போன செந்தில்குமார் காஞ்சிபுரத்தில் உள்ள வீட்டை காலி செய்து கொண்டு கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்டுநல்லூரில் வீடு கட்டி குடியேறி இருந்தார். இந்த நிலையில் விஜயலட்சுமியும், எழிலரசனும் கூலிப்படையை ஏவி செந்தில்குமாரை தீர்த்து கட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    கொலையாளிகளிடம் இருந்து 5 மோட்டார்சைக்கிள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சுதாமதியின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள கழனி பாக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது27). மதுராந்தகத்தில் உள்ள ஓட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதாமதி (25).இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 4-ந்தேதி காலை ரஞ்சித்குமார், தனது மனைவி சுதாமதி துணிகளை அயன் செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார். மேலும் மனைவியின் உடலை அடக்கம் செய்ய அவசர அவசரமாக இறுதி சடங்கு செய்தார்.

    இதற்கிடையே சுதாமதியின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சுதாமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சுதாமதியின் தலையில் பலமாக தாக்கப்பட்ட காயம் இருந்தது.மேலும் அவரது கழுத்து கயிறால் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.

    இதையடுத்து ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொன்று விட்டு மின்சாரம் தாக்கி இறந்ததாக நாடக மாடியது தெரிந்தது.

    இதுகுறித்து கைதான ரஞ்சித் குமார் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 4-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு வேலையை முடித்து வீட்டுக்கு வந்தேன். அப்போது மனைவி சுதாமதி செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு விசாரித்தேன்.இதில் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த கட்டையால் சுதாமதியின் தலையில் அடித்தேன்.இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அயன் பாக்ஸ் வயரால் சுதாமதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

    பின்னர் கொலையை மறைப்பதற்காக துணியை அயன் செய்தபோது மின்சாரம் தாக்கி மனைவி சுதாமதி இறந்து விட்டதாக நாடகமாடி உடலை அவசர அவசரமாக புதைக்க இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    நடத்தை சந்தேகத்தால் காதல் மனைவியை அடித்து கொன்று விட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர்களது 2 குழந்தைகளும் பெற்றோர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    • வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட தனபால் பரிதாபமாக இறந்தார். முட்புதரில் சிக்கி இருந்த அவரது உடலை போலீசார் மீட்டனர்.
    • கூவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூவத்தூர் அடுத்த கடலூரை சேர்ந்தவர் தனபால் (வயது76). கடந்த சிலநாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் செல்கிறது. இந்த நிலையில் தனபால் அப்பகுதி பாலாற்று கரையோரத்தில் மாடுகளை மேச்சலுக்கு கொண்டு சென்றார். அப்போது ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்த போது அவர் தண்ணீரில் விழுந்தார். இதில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட தனபால் பரிதாபமாக இறந்தார். முட்புதரில் சிக்கி இருந்த அவரது உடலை போலீசார் மீட்டனர். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 55). இவரது தங்கை ராஜேஸ்வரி.
    • உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் ஒன்றியம் நாஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 55). இவரது தங்கை ராஜேஸ்வரி ( 45). காஞ்சிபுரம் திருகாளிமேடு பகுதியில் வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் ராஜேஸ்வரி, வேளாங்கண்ணி மேரி என்பவருடன் தனது அக்காள் வீட்டுக்கு சென்றார். ராஜேஸ்வரி மற்றும் வேளாங்கண்ணி சாப்பிட்டு விட்டு புறப்பட்டனர். அவர்களின் நடத்தையில் சந்தேகப்பட்ட பச்சையம்மாள் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் 1¼ பவுன் தங்கச்சங்கிலி ஒன்றும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரியையும் வேளாங்கண்ணி மேரியையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது நகையை திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்த 6 பவுன் நகையை போலீசார் மீட்டனர். இது சம்பந்தமாக இருவரையும் கைது செய்த உத்திரமேரூர் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • செய்யூர் எம்.எல்.ஏ பனையூர் பாபு தலைமையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • கர்ப்பிணி பெண்களுக்கு சீதன பொருட்கள், பேறுகால நிதி உதவி வழங்கப்பட்டது

    மாமல்லபுரம்:

    கூவத்தூர் அடுத்த சித்தாமூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. செய்யூர் எம்.எல்.ஏ பனையூர் பாபு தலைமை தாங்கினார். உத்திரமேரூர் எம்.எல்.ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், சித்தாமூர் ஒன்றிய தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மொத்தம் 250 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அவர்களுக்கு சீதன பொருட்கள், பேறுகால நிதி உதவி, சத்துணவு பெட்டகங்கள் உள்ளிட்ட அரசு வழங்கும் நல உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் அனைவரும் அரசு திட்டத்திற்கு நன்றி கூறி மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    • நந்தகோபால், பாலாஜியை கத்தியால் மார்பில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
    • வாலிபர் கொலை வழக்கில் நந்தகோபாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 24). இவர் காரணைப்புதுச்சேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நந்தகோபால் என்ற வாலிபருக்கும் பாலாஜிக்கும் முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த நந்தகோபால், பாலாஜியை கத்தியால் மார்பில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த பாலாஜியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பாலாஜியை பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கத்தியால் குத்தி கொலை செய்த நந்தகோபாலை வலை வீசி தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று நந்தகோபாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேட்டரி திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க செம்மஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ரியாசுதீன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2 பேரிடம் செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடமிருந்து 20 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

    செம்மஞ்சேரி:

    சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரத்தில் மற்றும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து பேட்டரிகள் திருடப்படுவதாக செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார்க்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து பேட்டரி திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க செம்மஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ரியாசுதீன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சோழிங்கநல்லூர் கே.கே.சாலை வழியாக சந்தேகத்துக்கு இடமாக 2 பேர் கைப்பையுடன் சுற்றித்திரிந்ததை கண்டு அவர்கள் வைத்திருந்த கைபையை சோதனை செய்தனர். அதில் வாகனங்களின் பேட்டரிகள் இருந்தது.

    பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சோழிங்கநல்லூரை சேர்ந்த லோகேஷ் (வயது 20), காரப்பாக்கத்தையை சேர்ந்த மணிகண்டன் (20) ஆகிய இருவரும் இரவு நேரங்களில் வாகனங்களில் இருந்து பேட்டரி திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.

    பின்னர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடமிருந்து 20 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பொதுமக்கள் செல்லும் சிவவேங்கடபுரம் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
    • இரவு நேரங்களில் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குண்டு குழியுமாக உள்ள பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட குட்வில் நகர், சிலம்பொலி நகர், சஞ்சய் நகர், ராம் நகர் ஆகிய பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    இந்த குடியிருப்பு சேர்ந்த பொதுமக்கள் செல்லும் சிவவேங்கடபுரம் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வாகன ஓட்டிகள் உட்பட பலரும் தினந்தோறும் அவதிப்பட்டு செல்கின்றனர்.

    இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குண்டு குழியுமாக உள்ள பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே மிகவும் மோசமான உள்ள இந்த சாலையை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்வதற்கு காயரம்பேடு ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 2 தினங்களாக மழை பெய்தாலும் பெரிய அளவிலான ஏரிகள் நிரம்புவதற்கு தேவையான மழை இன்னும் பெய்யவில்லை.
    • விவசாயிகள் தங்களின் அடுத்த போக விவசாயத்திற்கு தேவையான நீருக்கு இனி பெய்யப்போகும் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    திருப்போரூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரிகளுள் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள தையூர், சிறு தாவூர், கொண்டங்கி ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த நிலையில் இப்பகுதியில் 2 நாட்கள் மட்டுமே மழை பெய்ததால் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் இதுவரை நிரம்பவில்லை.

    சிறிய அளவிலான, குளம், குட்டைகள் மட்டுமே நிரம்பி உள்ளது. அதேபோன்று, வயல் வெளிகளில் உள்ள தரை மட்டத்திலான கிணறுகள் நிரம்பி விட்டது. கடந்த 10 ஆண்டுகளாக ஏரி மதகுகளுக்கு நீர் வந்து சேரும் நீர்வரத்து கால்வாய்கள் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டது.

    இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் கடந்த ஆண்டு ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது. இந்நிலையில் தற்போது நீர்வளத்துறை சார்பாக பொதுப்பணித்துறை பராமரிக்கும் ஏரிகள் கரைகள் பலப்படுத்தப்பட்டு, நீர்வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    இதற்கிடையே கடந்த 2 தினங்களாக மழை பெய்தாலும் பெரிய அளவிலான ஏரிகள் நிரம்புவதற்கு தேவையான மழை இன்னும் பெய்யவில்லை. குறிப்பாக, அக்டோபர் மாதத்தில் நடுவில் பெய்ய வேண்டிய மழை 2 வாரம் காலதாமதமாகத் தான் பெய்தது என விவசாயிகள் தெரிவித்தனர்.

    குறிப்பாக, நேற்று ஒரு நாள் முழுவதும் மழை பெய்யாமல் பல இடங்களில் வெயில் கொளுத்தியது. மாலை 4 மணிக்கு மேல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. 2 நாட்கள் பெய்த மழையில் திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய பெரிய ஏரிகளான தையூர், சிறுதாவூர், கொண்டங்கி ஆகிய 3 ஏரிகளும் இதுவரை நிரம்பவில்லை. இந்த 3 ஏரிகளும் செங்கல்பட்டு மாவட்டத்திலேயே பெரிய ஏரிகளுள் முறையே 3, 4, 5வது பெரிய ஏரிகளாகும். முதல் இடத்தில் மதுராந்தகம் ஏரியும், 2-வது இடத்தில் பொன்விளைந்த களத்தூர் ஏரியும் உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களின் அடுத்த போக விவசாயத்திற்கு தேவையான நீருக்கு இனி பெய்யப்போகும் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • வருகிற 11 மற்றும் 25-ந் தேதிகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடப்பாண்டு இம்மாதத்தில் வருகிற 11 மற்றும் 25-ந் தேதிகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை வெண்பாக்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அதில் கூறப்பட்டிருந்தன.

    • கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ் சாலையில் வசிப்பவர் விக்னேஷ். கொத்தனாராக உள்ளார்.
    • குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ் சாலையில் வசிப்பவர் விக்னேஷ். கொத்தனாராக உள்ளார். இவருக்கு ஒன்றரை வயதில் பவித்திரன் என்ற குழந்தை உள்ளது. நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அங்கு இருந்த சிறிய எல் இ டி பல்பை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பல்பை விழுங்கி உள்ளான். இதைக் கண்ட தந்தை உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு வயிற்றில் இருந்து பல்பை எடுப்பதற்கான சிகிச்சை நடைபெற்று வருகிறது.

    ×