என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் கடலில் சூறாவளி போன்று பலத்த காற்று வீசியது.
    • பலத்த காற்று அதிகாலை வரை நீடித்து, மழையும் பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    மாமல்லபுரம்:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தமிழக கடலோர பகுதியான செங்கல்பட்டு மாவட்டத்திற்கு "மஞ்சள் அலெர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் கடலில் சூறாவளி போன்று பலத்த காற்று வீசியது. அது அதிகாலை வரை நீடித்து, மழையும் பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தங்களது மீன்பிடி வலைகள், மரைன் மிஷின் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வீடுகள் அருகே கொண்டு வந்து வைத்தனர். படகுகளையும் கடலோரப் பகுதியின் உயரமான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    • மின்விளக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குமார் கொண்டு சென்றார்.
    • தூக்கி வீசப்பட்ட குமார் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.

    தாம்பரம்:

    பல்லாவரம், குளத்து மேடு, வேம்புலியம்மன் கோயில் 7-வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். அதே பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அங்கு சிலுவை முத்து என்ற மேஸ்திரியும், குமார் (45) என்ற கொத்தனாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது மின்விளக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குமார் கொண்டு சென்றார். இதில் எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. தூக்கி வீசப்பட்ட குமார் அந்த இடத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்து இறந்தார்.

    இதுகுறித்து பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெட்ரோலில் தண்ணீர் உள்ளதாக மெக்கானிக் கூறியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்
    • விசாரணை நடத்திய கல்பாக்கம் போலீசார் பெட்ரோலை சோதனைக்கு எடுத்து சென்றனர்

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இன்று காலை அங்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு சென்ற இருசக்கர வாகனங்கள் பாதி வழியில் நின்றது. உடனடியாக அருகில் உள்ள மெக்கானிக் கடையில் வண்டியை சோதனை செய்ததில் பெட்ரோலில் தண்ணீர் உள்ளதாக மெக்கானிக் கூறியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் வாகனத்தை தள்ளிக்கொண்டு அனைவரும் பெட்ரோல் பங்க் சென்று ஊழியரிடம் வாக்குவாதம் செய்து பங்கை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த கல்பாக்கம் போலீசார் விரைந்து சென்று பெட்ரோலை சோதனைக்கு எடுத்துக் கொண்டு, அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் பெட்ரோல் விநியோகத்தை நிறுத்த சொல்லி அங்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வண்டலூர் ஜெய் நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஜெய் நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நாகல்கேணி அருகே வந்த போது கண்டெய்னர் லாரி மீது தாழ்வாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி உரசியது. இதில் மின்கம்பி அறுந்து லாரியின் மீது விழுந்து தீப்பற்றியது.
    • கண்டெய்னர் லாரியில் இருந்த மூலப்பொருட்கள் மளமளவென பற்றி எரிய தொடங்கியது.

    தாம்பரம்:

    ஐதராபாத்தில் இருந்து, பல்லாவரம் அடுத்துள்ள நாகல்கேணியில் உள்ள தனியார் நிறுவன குடோனுக்கு இன்று அதிகாலை கார்களுக்கு பயன்படுத்தும் பெயிண்ட் தயாரிப்பதற்காக 18 டன் மூல பொருட்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி வந்தது.

    லாரியை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இர்பான்(35) என்பவர் ஓட்டிவந்தார். நாகல்கேணி அருகே வந்த போது கண்டெய்னர் லாரி மீது தாழ்வாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி உரசியது. இதில் மின்கம்பி அறுந்து லாரியின் மீது விழுந்து தீப்பற்றியது.

    இதில் கண்டெய்னர் லாரியில் இருந்த மூலப்பொருட்கள் மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் இர்பான் உடனடியாக லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மூல பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    • பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 2.12 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்திருந்தது.
    • ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.30 கோடி மேல் இருக்கும்.

    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம், பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூரில் இருந்து மாமல்லபுரம் வரை 6 வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக கேளம்பாக்கம் அடுத்த படூர் பகுதியில் இருந்து கேளம்பாக்கம் வரை ஒரு புறவழிச்சாலையும், காலவாக்கத்தில் இருந்து திருப்போரூர் வழியாக ஆலத்தூர் வரை மற்றொரு புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது.

    கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 2.12 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்திருந்தது. இந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைப்பதற்காக அந்த இடத்தை கையகப்படுத்த சென்றனர். இதை எதிர்த்து தனியார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை இல்லை என ஐகோர்ட்டு உத்தரவு அளித்தது.

    இதைதொடர்ந்து, திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி தலைமையில், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் சம்பந்தபட்ட தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் இருந்த 2.12 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கி மீட்டனர். ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.30 கோடி மேல் இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.

    பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 2.12 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்திருந்தது.

    • 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு கசாயம் வழங்கப்பட்டது
    • பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

    மாமல்லபுரம்:

    வடகிழக்கு பருவமழையால் ஏ.டி.எஸ். கொசுக்கள் உருவாகி டெங்கு காச்சல் பரவுவதை தடுக்கவும், அதிலிருந்து பள்ளி மாணவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 6முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மாமல்லபுரம் அரசு மருத்துவமனை ஆயுஷ் மருத்துவ பிரிவு சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது.

    பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மருத்துவர் வானதி நாச்சியார், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஜெராக்ஸ் கடையில் தீப்பற்றியது. இதில் சுகன்யா சிக்கி அலறினார்.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேளம்பாக்கம் அருகே உள்ள புதுப்பாக்கம், காஸ்மோசிட்டி பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் சுகன்யா(வயது38). இவரது கணவர் மலேசியாவில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் தஞ்சாவூர் ஆகும்.

    நேற்று காலை வழக்கம் போல் சுகன்யா கடையில் இருந்தார். அப்போது திடீரென ஜெராக்ஸ் கடையில் தீப்பற்றியது. இதில் சுகன்யா சிக்கி அலறினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதே பகுதியை சேர்ந்த அருண், லெனின் ஆகியோர் சுகன்யாவை மீட்க முயன்றனர்.

    இதில் அவர்கள் 3 பேரும் தீயில் கருகினர். பலத்த தீக்காயம் அடைந்த சுகன்யாவை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சுகன்யா பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தீவிபத்துக்கான காரணம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன்-மனைவி இருவரும் பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில் உள்ள உறவினர் சீமந்தம் நிகழ்ச்சியில் பங்கேற்க ரெயிலில் திரிசூலம் வந்தனர்.
    • தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம்:

    காஞ்சிபுரம் அடுத்த மணப்பாக்கம், தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி கலைச்செல்வி (வயது40).கணவன்-மனைவி இருவரும் பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில் உள்ள உறவினர் சீமந்தம் நிகழ்ச்சியில் பங்கேற்க ரெயிலில் திரிசூலம் வந்தனர். பின்னர் அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர்.

    அப்போது கலைச்செல்வி கால் இடறி கீழே விழுந்தார். அவர் சுதாரித்து எழுவதற்குள் அவ்வழியே வந்த ரெயில் மோதியது. இதில் கணவரின் கண்முன்பே கலைச்செல்வி பலியானார். இதனை பார்த்து அவரது கணவர் சம்பத் கதறி துடித்தார். இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருட்டுக்கு பயந்து சிற்ப கூடங்களில் தயார் செய்து வைத்திருக்கும் சிறிய சிலைகளை இரும்பு சங்கிலியால் கட்டி பாதுகாக்கும் நிலை உள்ளது.
    • 2 சிற்ப கூடத்தில் இருந்த விநாயகர், புத்தர் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

    மாமல்லபுரம் கடற்கரை சாலை, பக்கிங்காம் கெனால் சாலை பகுதிகளில் ஏராளமான சிற்ப கூடங்கள் உள்ளன. இப்பகுதிகளில் நள்ளிரவில் வாகனங்களில் வரும் கும்பல் சிற்ப கூடங்களில் விற்பனைக்கு தயார் செய்து வைத்திருக்கும் சிலைகளை அடிக்கடி திருடி சென்று விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 சிற்ப கூடத்தில் இருந்த விநாயகர், புத்தர் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து சிற்பிகள் மகேந்திரன், விஜயகுமார் இருவரும் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து திருட்டுக்கு பயந்து சிற்ப கூடங்களில் தயார் செய்து வைத்திருக்கும் சிறிய சிலைகளை இரும்பு சங்கிலியால் கட்டி பாதுகாக்கும் நிலை உள்ளது.

    • சிறுமி வசித்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ராகஸ்ரீ (வயது6). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சிறுமி ராகஸ்ரீக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக பெற்றோர் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு காய்ச்சல் அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி ராகஸ்ரீ நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். டாக்டர்களின் பரிசோதனையில் சிறுமி ராகஸ்ரீக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து சிறுமி வசித்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். உடல் நிலை பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • தியேட்டரில் உள்ள கடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 4 வாலிபர்கள் பாப்கான் டப்பாவை திருடி சென்று விட்டனர்.
    • பாப்கான் திருடர்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானமாக ஒரு பாப்கான் கொடுக்கப்படும்.

    தாம்பரம்:

    அனகாபுத்தூரில் பிரபல தியேட்டர் உள்ளது. பட இடைவேளையின் போது தியேட்டரில் உள்ள கடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 4 வாலிபர்கள் 'பாப்கான்' டப்பாவை திருடி சென்று விட்டனர்.

    இந்த வீடியோ காட்சியை தியேட்டர் நிர்வாகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.

    மேலும் பாப்கான் திருடர்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானமாக ஒரு பாப்கான் கொடுக்கப்படும் என்று தியேட்டர் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    ×