என் மலர்
செங்கல்பட்டு
- சிறு வயதில் இருந்தே கடல் அலைச்சறுக்கு மற்றும் ஸ்கேட்டிங் மீது ஆர்வம் இருந்தது.
- தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் மீனவர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி. மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் கமலி (வயது13), மகன் ஷரீஸ் (வயது 9). கமலி 8ம் வகுப்பும், ஷரீஸ் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
அக்காள், தம்பி இருவருக்கும் சிறு வயதில் இருந்தே கடல் அலைச்சறுக்கு மற்றும் ஸ்கேட்டிங் மீது ஆர்வம் இருந்தது. இதனால் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி சோழிங்கநல்லூரில் நடந்தது. இதில் இருவரும் அவர்களின் வயதிற்கான பிரிவில் சேர்ந்து விளையாடினர். இதில் அக்காள், தம்பி இருவரும் தங்கப்பதக்கம் வென்றனர். இதனால் அடுத்த மாதம் பெங்களூருவில் நடக்கவிருக்கும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். தொடர்ந்து சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கு தமிழக அரசு உதவிட வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
- யு.கே.ஜி மாணவன் துரைபாண்டியன் சுமார் 21 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார்.
- அந்த மாணவனுக்கு நிகழ்ச்சியில் பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிங்ஸ் இண்டர்நேஷ்னல் மெடிக்கல் அகாடமி சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது. கிங்ஸ் அகாடமி மற்றும் ட்ரான்ஸ் வோல்டு கல்வி நிறுவன செயலாளர் ஜெசிந்தா டேவிட் கே. பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி. பார்த்திபன், மல்லை. சத்தியா, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
யு.கே.ஜி பயின்றுவரும் துரைபாண்டியன் என்ற பள்ளி மானவன் சிறு வயதிலிருந்து, இதுநாள்வரை சுமார் 21 ஆயிரம் ஆடுதொடா, லவங்கதுளசி, சிரியனங்கை, பெரியனங்கை, நித்தியகல்யாணி, எலும்புஒட்டி, பேய்விரட்டி, வல்லாரை, கருந்துளசி, வெள்ளைதுளசி, சங்குபூ, இன்சுலின், ஆகிய அரியவகை செடி மற்றும் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார். மேலும் வரும் காலங்களில் 1 லட்சம் மரக்கன்றுகளை நடவும் திட்டமிட்டுள்ளார். அந்த மாணவனுக்கு இந்நிகழ்ச்சியில் பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இயக்குனர் இந்திரா கே பிள்ளை. தலைமை ஆட்சி/நிருவாக அலுவலர் காட்வின் கே பிள்ளை மற்றும் தலைவர் டேவிட் கே பிள்ளை ஆகியோர் செய்திருந்தனர்.
- பயிர்கடன் பெறும் விவசாயிகள் அவர்களின் விருப்பத்தின் பேரில் கடிதம் கொடுத்தும், பயிர்கடன் பெறாத விவசாயிகள் தங்களின் விருப்பத்தின் பேரிலும் சேரலாம்.
- தற்போது அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், புயல், வெள்ளத்தினால் பயிர் சேதம் அடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், தயா சங்கர் லால் ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொழிய தொடங்கியுள்ள காரணத்தால் வெவ்வேறு நிலைகளில் உள்ள சம்பா பருவ நெற்பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் வருகிற 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறுங்கள்.
இந்த திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிரான நெல் (சம்பா), பயிரிடும் விவசாயிகள் அனைவரும் இந்த திட்டதில் சேர தகுதி உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகைக்கு பயிர் செய்யும் விவசாயிகள் உட்பட அனைவரும் இந்த திட்டதில் சேர தகுதி உள்ளவர்கள் ஆவர்.
பயிர்கடன் பெறும் விவசாயிகள் அவர்களின் விருப்பத்தின் பேரில் கடிதம் கொடுத்தும், பயிர்கடன் பெறாத விவசாயிகள் தங்களின் விருப்பத்தின் பேரிலும் சேரலாம்.
விதைக்க, நடவு செய்ய இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்து விடுதல், இயற்கை இடர்பாடுகள், இடர் துயர் அபாய நிகழ்வுகள், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. தகவல்களுடன் கூடிய வங்கி புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா நடப்பு சாகுபடி அடங்கல் அல்லது விதைப்பு சான்றிதழ், முன் மொழிவு படிவம் மற்றும் விவசாயி பதிவு படிவம் போன்றவற்றுடன் ரூ.497 பிரீமிய தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தற்போது அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், புயல், வெள்ளத்தினால் பயிர் சேதம் அடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது. ஆகையால், விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விரிவான விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவர்களை தொடர்பு கொண்டும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் பிரீமியம் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பஸ் நிறுத்த நிழற்குடையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது குடித்து விட்டு அங்கே பாட்டில்களை வீசியுள்ளனர்.
- பராமரிப்பின்றி காணப்படும் பஸ் நிறுத்த நிழற்குடையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டிகை:
செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகை அருகே நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்த நிலையில் பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த பஸ் நிறுத்த நிழற்குடையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது குடித்து விட்டு அங்கே பாட்டில்களை வீசியுள்ளனர். இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பஸ் ஏறுவதற்காக வரும்போது மழைக்கு கூட நிழற்குடையில் ஒதுங்கி நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே பராமரிப்பின்றி காணப்படும் பஸ் நிறுத்த நிழற்குடையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.
- டிரைவர் பணியிடத்துக்கு, 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் 108 அவசரகால ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது.
மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி (பிளஸ்-2-க்கு பின் 2 ஆண்டுகள் படிப்பு) அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்.சி ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி) படித்தவர்கள் பங்கேற்கலாம்.
மாத ஊதியம் ரூ.14,966 வழங்கப்படும். டிரைவர் பணியிடத்துக்கு, 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இரு பாலருக்கும் வாய்ப்பு உண்டு. ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும், பேட்ஜ் உரிமம் எடுத்து 2 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். 162.5 சென்டிமீட்டர்., உயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு ரூ.14, 766 ஊதியம் வழங்கப்படும். அசல் சான்றிதழ் உடன் முக கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும்.
- கானத்தூர் ரெட்டிக்குப்பம் மீனவர் பகுதி மக்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
- கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து திருப்போரூர் தாசில்தார் வருவாய்த்துறையினருக்கு ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் வசித்து வரும் மீனவர்களுக்கு மீன் உலர வைப்பதற்கும், பெரிய வலை இழுப்பதற்கும், படகுகளை நிறுத்தி வைப்பதற்கும், தமிழக அரசு கடலோரத்தில் 5.48 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இதனை ஒரு சில நபர்கள் தங்கும் விடுதிகள் அமைத்து அதற்கு பார்க்கிங் வசதி செய்தும் புல் செடி மரம் வளர்த்து அதனை சுற்றி 10 அடி உயரத்தில் கருங்கல்லால் சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தை மீட்டு தரக்கோரி பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
அதனை தொடர்ந்து கானத்தூர் ரெட்டிக்குப்பம் மீனவர் பகுதி மக்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து திருப்போரூர் தாசில்தார் வருவாய்த்துறையினருக்கு ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் கானத்தூர் போலீசார் உதவியுடன் 3 பொக்லைன் எந்திரங்களை கொண்டு தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு கற்கள் கொண்டு மதில் சுவர் எழுப்பிய இடங்களை இடித்து தரைமட்டமாக்கி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தனர் இதன் சந்தை மதிப்பு ரூ.67 கோடியே 9 லட்சத்து 37 ஆயிரத்து 292 என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
- பூஜாவிற்கு 3 கிலோ எடையுடன் அழகான பெண் குழந்தை பிறந்தது.
- தாய்-சேய் இருவரையும் பாதுகாப்பாக திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கி இருந்து வீட்டு வேலை செய்த வடமாநில பெண் பூஜா (வயது 28).
நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று மதியம் திடீரென இடுப்பு வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவைத்து அதில் ஏற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற் சித்தனர்.
ஆம்புலன்ஸ் உள்ளே படுக்கவைக்கப்பட்ட பூஜாவால் வலி தாங்க முடியாமல் கதறினார். இதை கவனித்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஜெயக்குமார் குழந்தை வெளியேறுவதை உறுதி செய்து, டிரைவர் ஸ்டாலின் உதவியுடன் பெண்ணின் உறவினர்கள் மத்தியில் பிரசவம் பார்த்தனர். இதில் பூஜாவிற்கு 3 கிலோ எடையுடன் அழகான பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாய்-சேய் இருவரையும் பாதுகாப்பாக திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரும் நலமுடன் உள்ளனர்.
- நகர வீதிகளில் மழைநீர் தேங்கும் முக்கிய பகுதியில், வடிகால் அடைப்பு ஏற்படாத வகையில் பேரூராட்சி ஊழியர்கள் கண்காணித்து தேங்கும் நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வந்தனர்.
- ரோட்டின் நடுவே அழகிற்காக வைக்கப்பட்டிருந்த அரளி செடிகள் காற்றில் ஒடிந்து சாய்ந்து கிடந்தது. அவைகளை வெட்டி ஒழுங்குப்படுத்தினர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் நேற்று இரவு தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலை மாமல்லபுரம் வந்த வெளி மாநில சுற்றுலா பயணிகள் குழுவினர் திறந்த வெளியில் சமையல் செய்து சாப்பிட முடியாமலும், அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க முடியாமலும் பஸ் உள்ளேயே அமர்ந்து கொண்டு சிரமப்பட்டனர்.
நகர வீதிகளில் மழைநீர் தேங்கும் முக்கிய பகுதியில், வடிகால் அடைப்பு ஏற்படாத வகையில் பேரூராட்சி ஊழியர்கள் கண்காணித்து தேங்கும் நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வந்தனர். ரோட்டின் நடுவே அழகிற்காக வைக்கப்பட்டிருந்த அரளி செடிகள் காற்றில் ஒடிந்து சாய்ந்து கிடந்தது. அவைகளை வெட்டி ஒழுங்குப்படுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்ட அளவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 88.2 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. மாமல்லபுரத்தில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
- மழைநீரோடு கழிவுநீர் கலந்து செங்கல்பட்டில் உள்ள கொளவாய் ஏரியில் சென்று சேருகிறது.
செங்கல்பட்டு:
வங்கக் கடலில் ஏற்பட்டு உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையில் இருந்து வேகமாக மழை பெய்து வருகிறது. இன்று காலை பெய்த மழையில் செங்கல்பட்டு நகரத்தில் உள்ள டாக்டர் வரதராசனார் தெருவில் மழை நீரோடு கழிவுநீர் கலந்து தெருவில் கறுப்பாக ஆறாக ஓடுகிறது.
மழைநீரோடு கழிவுநீர் கலந்து செங்கல்பட்டில் உள்ள கொளவாய் ஏரியில் சென்று சேருகிறது. பின்பு கொளவாய் ஏரியில் இருந்து மதகுவழியாக பாலாற்றில் சென்று கலக்கிறது.
இந்த பாலாற்று நீரை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் மற்றும் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மழைநீர் கழிவுநீரோடு கலந்து செங்கல்பட்டில் உள்ள மிகப்பெரிய ஏரியான கொளவாய் ஏரியில் கலக்கிறது.
இந்த கொளவாய் ஏரி தண்ணீர் மதகு வழியாக பாலாற்றில் சென்று கலப்பதால் பாலாற்று குடிநீர் மாசடைகிறது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 71 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 76 ஏரிகள் 75 சதவீதத்தில் இருந்து 99 சதவீதமாகவும், 235 ஏரிகள் 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாகவும், 280 ஏரிகள் 25 சதவீதத்தில் இருந்து 50சதவீதம் வரை நிரம்பி உள்ளது.
247 ஏரிகள் 25 சதவீதத்துக்கும் கீழ் நிறைந்துள்ளதாக பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் 37.40 மி.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் 29.20 மி.மீ., உத்திரமேரூர் 27 மி.மீ., வாலாஜாபாத் 6.40மி.மீ., செம்பரம்பாக்கம் 31.20மி.மீ., குன்றத்தூர் 40 மி.மீ. மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலி மேடு, நத்தப்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், பரந்தூர், கீழம்பி, தாமல், மகரல், வாலாஜாபாத், உத்திரமேரூர், உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கனமழையின் காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மழைக்கான முன் எச்சரிக்கை நட வடிக்கைகளை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ பெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் கனமழை அறிவிப்பு எதிரொலியை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு நேரத்தில் கன மழை கொட்டித் தீர்த்தது.
இதன்படி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 69 மில்லி மீட்டர் மழையும், சோழவரத்தில் 61 மில்லி மீட்டர் மழையும், செங்குன்றத்தில் 54 மில்லி மீட்டர் மழையும், ஜமீன் கொரட்டூரில் 47 மில்லி மீட்டர் மழையும், ஆவடியில் 45 மில்லி மீட்டர் மழையும். பூந்தமல்லியில் 39 மில்லி மீட்டர் மழையும், திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டையில் 36 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
கும்மிடிப்பூண்டியில் 32 மில்லி மீட்டர் மழையும், பூண்டியில் 31 மில்லி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக திருத்தணியில் 13 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
இந்நிலையில் திருத்தணி மலைக்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பள்ளிப்பட்டு ஆர்.கே. பேட்டை திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், கே.ஜி.கண்டிகை, ஆகிய பகுதிகளில் விடியற் காலையில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது.
- இந்திய இளம் தலைமுறையினர் கல்வி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
- பொது மக்களின் நலனை நோக்கமாகக் கொண்ட சட்டங்களின் தேவை அதிகமாக உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்திய இளம் தலைமுறையினர் கல்வி தொழில்நுட்பத்தில் உலக அளவில் சிறந்து விளங்குகின்றனர். 21ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கானது. 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஊழலுக்கு எதிராகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பொது மக்களின் நலனை நோக்கமாகக் கொண்ட சட்டங்களின் தேவை அதிகமாக உள்ளது. சிறந்த வலுவான இந்தியாவை உருவாக, ஊழல் இல்லாத இந்தியாவை இளைஞர்கள் உருவாக்க வேண்டும். அதற்காக பாடுபட வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவாகி வருகிறது.
நமது நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கு பிரச்சினையான சவால்களுக்கு தீர்வு காணும் திறனைப் நமது தேசம் பெற்றுள்ளது. பருவநிலை மாற்றங்கள், எரிசக்தி உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் வகையில் இந்திய கல்வி நிறுவனங்கள் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்.
- மீன்பிடி வலைகள், மரைன் மிஷின் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வீடுகள் அருகே கொண்டு வந்து வைத்தனர்.
மாமல்லபுரம்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அல்லது நாளை வலுவடைந்து, மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு "ரெட் அலெர்ட்" செங்கல்பட்டு மாவட்டத்திற்கு "மஞ்சள் அலெர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் கடலில் சூறாவளி போன்று பலத்த காற்று வீசியது. அது அதிகாலைவரை நீடித்து மழையும் பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தங்களது மீன்பிடி வலைகள், மரைன் மிஷின் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வீடுகள் அருகே கொண்டு வந்து வைத்தனர். படகுகளையும் கடலோரப்பகுதியில் உயரமான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
- தனிக்கடை வேண்டும் என எடையூர் மக்கள் திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜியிடம் கோரிக்கை வைத்தனர்.
- காஞ்சி மக்கள் அங்காடியின் கீழ் இயங்கும் புதிய ரேஷன் கடையை அங்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி மக்கள் பல ஆண்டுகளாக மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்புருஷம் பகுதி ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்கும் நிலை இருந்து வந்தது. இதனால் தனிக்கடை வேண்டும் என அப்பகுதி மக்கள் திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜியிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், காஞ்சி மக்கள் அங்காடியின் கீழ் இயங்கும் புதிய ரேஷன் கடையை அங்கு திறக்க ஏற்பாடு செய்தது. இதையடுத்து 240 கார்டுதாரர்கள் பயன்படுத்தும் வகையில் அங்கு புதிய ரேஷன்கடையை எம்.எல்.ஏ பாலாஜி திறந்து வைத்து உணவு பொருட்கள் வழங்கினார்.
ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி நடராஜன், துணைத்தலைவர் ராஜாத்தி வெங்கடேன், வார்டு கவுன்சிலர்கள், விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்கள் இ.சி.ஆர் அன்பு, அய்யப்பன், ஊர் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.






