என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • கால்வாய்களில் உள்ள அடைப்புகள் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் ஏற்பாட்டில் முழுவதும் சீரமைக்கப்பட்டது.
    • கனமழை பெய்தாலும் கால்வாயில் தண்ணீர் தடையின்றி செல்ல வழி ஏற்பட்டு உள்ளது.

    கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சியில் மாடம்பாக்கம் கூத்தனூர் தாய் மூகாம்பிகை நகர், வள்ளலார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    நீர்வரத்து கால்வாயை ஊராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம், அம்பாள் நகர் லட்சுமி நாராயணன் நகர் பெரிய தெரு இந்திரா காந்தி தெரு, லலிதா நகர், பெருமாள் கோயில் தெரு, விக்னேஷ் நகர், நிஷா நகர், பிள்ளையார் கோயில் தெரு, பொன்னி அம்மன் கோயில் தெரு வழியாக ஆதனூர் கால்வாயில் சென்று அடையும். இந்த கால்வாய்களில் உள்ள அடைப்புகள் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் ஏற்பாட்டில் முழுவதும் சீரமைக்கப்பட்டது. இதனால் கனமழை பெய்தாலும் கால்வாயில் தண்ணீர் தடையின்றி செல்ல வழி ஏற்பட்டு உள்ளது.

    • அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியாவில் வாழுகின்ற பறவைகள் தவிர அரிய வகை வெளிநாட்டு பறவையினங்களும் சரணாலயத்திற்கு வரும்.
    • சரணாலயத்திற்கு வாத்து இனங்களான சிரவி வாத்து, புள்ளி மூக்கு வாத்து ஆகிய இரண்டு வகை வந்துள்ளன.

    மதுராந்தகம்:

    வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகளை கண்டு ரசிக்க தனி சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவர். இந்த சரணாலயம் வேடந்தாங்கலில் உள்ள ஏரி மற்றும் ஏரியில் உள்ளே நீரில் வளரக்கூடிய மரங்களைக் கொண்டு இயற்கையான சூழலில் அமைந்துள்ளது.

    இந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக 16 அடி உயரமுள்ள வேடந்தாங்கல் ஏரி 15.5 அடி வரையில் நிரம்பி உள்ளது.

    பறவையினங்களுக்கு தேவையான இயற்கையான சூழல், தட்பவெப்ப நிலை, உணவு உள்ளிட்ட ரம்மியமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது வரை சுமார் 5 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன.

    அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியாவில் வாழுகின்ற பறவைகள் தவிர அரிய வகை வெளிநாட்டு பறவையினங்களும் சரணாலயத்திற்கு வரும். தற்போது அக்டோபர் முதல் வாரம் முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருவதால் பறவைகளின் எண்ணிக்கை வருகை உயர்ந்துள்ளது. தற்போது சரணாலயத்தில் 15 வகையான இந்தியாவில் வாழுகின்ற பறவைகள் மற்றும் வெளிநாட்டு அரிய வகை பறவை இனங்கள் வந்துள்ளன. இதில் இந்தியாவில் வாழ்கின்ற குருட்டு கொக்கு, உன்னி கொக்கு, வெள்ளை கொக்கு, சிறிய நீர்காகம் உள்ளிட்ட வெளிநாட்டு அரிய பறவை இனங்களான வெளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தக்குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழை கிடா, கரண்டிவாயன், தட்ட வாயன், பெரிய நீர்க்காகம், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பெரிய நீர் காகம் உள்ளிட்ட பறவை இனங்கள் உள்ளன.

    மேலும் சரணாலயத்திற்கு வாத்து இனங்களான சிரவி வாத்து, புள்ளி மூக்கு வாத்து ஆகிய இரண்டு வகை வந்துள்ளன. இந்த பறவைகள் பாகிஸ்தான், சைபீரியா பர்மா, ஸ்ரீலங்கா, வங்காள தேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வருகை தந்து மீண்டும் குஞ்சு பொறித்து தங்கள் நாடுகளுக்கே திரும்பி சென்று விடும்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு இதுவரை 5 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. தற்போது வந்துள்ள 10-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் ஏரியில் உள்ள மரங்களில் கூடுகட்ட தொடங்கி இருக்கிறது. மீதமுள்ள 5 -க்கும் மேற்பட்ட அரியவகை பறவை இனங்கள் இன்னும் வரும். இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து பார்க்கலாம் என்றார்.

    • நேற்று இரவில் துவங்கிய கன மழை இன்று காலை வரை விடாமல் பெய்தது.
    • பக்கிங்காம் கால்வாயில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையான நிலவரப்படி மாவட்ட அளவில் மாமல்லபுரத்தில் அதிகளவில் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் மொத்தம் மழை அளவு 165.6 செ.மீ,, மாமல்லபுரத்தில் மட்டும் 45செ.மீ மழை பெய்துள்ளது.

    நேற்று இரவில் துவங்கிய கன மழை இன்று காலை வரை விடாமல் பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதியில் இருக்கும் சிற்பக்கூடங்களில் மழைநீர் வெள்ளம் போல் புகுந்தது. இதனால் சிற்பங்கள் செதுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டது.

    பக்கிங்காம் கால்வாயில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரம் குடியிருப்போர், சிற்பக்கூடம் வைத்திப்போர், இறால் பண்ணை தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    • ஒயிட்கோட் வழங்கி, மருத்துவ படிப்பிற்கான உபகரணங்கள் வழங்கும் விழா அகாடமி வளாக அரங்கத்தில் நடைபெற்றது.
    • பாரத் இன்ஸ்டிடியூட் உயர் கல்வி தேர்வு குழு இயக்குனர் டாக்டர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிங்ஸ் இண்டர்நேஷனல் மெடிகல் அகாடமியில் படித்த 131 மாணவ-மாணவிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு டாக்டர் படிப்பிற்காக செல்கிறார்கள். இவர்களுக்கு அகாடமி தலைவர் டாக்டர் டேவிட் கே.பிள்ளை தலைமையில் ஒயிட்கோட் வழங்கி, மருத்துவ படிப்பிற்கான உபகரணங்கள் வழங்கும் விழா அகாடமி வளாக அரங்கத்தில் நடைபெற்றது.

    இதில் பாரத் இன்ஸ்டிடியூட் உயர் கல்வி தேர்வு குழு இயக்குனர் டாக்டர் சந்திரசேகர், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு குறித்து முன்னுரை விளக்கமளித்தார். இந்திரா கே.பிள்ளை, கெவின் கே.பிள்ளை, சி.கே.சி.பால், ஜெசினிதா கே.பிள்ளை, ரபியா பானு ஆகியோர் முன்னிலையில் பிலிப்பைன்ஸ் செல்லும் மருத்துவ படிப்பு மாணவர்கள் அனைவரும் நன்னடத்தை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அகாடமியின் பங்குதாரர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதிகளில் கடந்த 2 நாட்காக நல்ல மழை பெய்து வருகிறது.
    • கடல் மீன்கள் மற்றும் விலாங்கு, கெண்டை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் மீனர்களின் வலையில் சிக்குகின்றன.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதிகளில் கடந்த 2 நாட்காக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    இந்த நிலையில் பக்கிங்காம் கால்வாயில் கொட்டும் மழையில் துடுப்பு படகில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

    கடலின் முகத்துவாரம் பகுதியில் இருந்து வரும் இறால், பாறை, வஞ்சிரம் போன்ற கடல் மீன்கள் மற்றும் விலாங்கு, கெண்டை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் மீனர்களின் வலையில் சிக்குகின்றன.

    இதனை அசைவ பிரியர்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். கிலோ ரூ.500 வரை விற்கப்படுகிறது.

    • நோயாளிகள் மழைநீரை மிகவும் சிரமப் பட்டு கடந்து செல்கின்றனர்.
    • ஆஸ்பத்திரியில் மழை நீர் தேங்காமல் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு மையம், நரம்பியல் சிகிச்சை பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவுகள் உள்ள பகுதியில் மழைநீர் வடியாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது.

    நோயாளிகள் மழைநீரை மிகவும் சிரமப் பட்டு கடந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரியில் மழை நீர் தேங்காமல் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வீட்டின் அருகே தேங்கிய மழை நீரை அகற்றுவது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த பாலாமணி என்பவருடன் மோதல் ஏற்பட்டு வந்தது.
    • பலத்த காயம் அடைந்த பாலாமணிக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம் அடுத்த திருமுக்காடு ஊராட்சி மாரியம்மன் கோவில், 3-வது தெருவில் வசித்து வருபவர் எட்டியான். ஓய்வு பெற்ற நில அளவையாளர். வீட்டின் அருகே தேங்கிய மழை நீரை அகற்றுவது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த பாலாமணி என்பவருடன் மோதல் ஏற்பட்டு வந்தது.

    இதில் ஆத்திரம் அடைந்த எட்டியான், அரிவாளால் பாலாமணியின் கணவர் பொன்னுசாமியை வெட்ட முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலாமணி தடுக்க முயன்றார். இதில் அவரது கையில் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த பாலாமணிக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மழைநீர் சாலையில் தேங்காமல் கால்வாய் வழியாக அடையார் ஆற்றுக்கு செல்கிறது.
    • மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர், அமுதம் காலனி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்யும் போது அந்த பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துவிடுவது வழக்கம்.

    இந்த ஆண்டு மகாலட்சுமி நகர் பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

    தற்போது அந்த பகுதியில் நகராட்சி ஊழியர்கள் முகாமிட்டு மழைநீர் செல்லும் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை கொட்டும் மழையிலும் சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் மழைநீர் சாலையில் தேங்காமல் கால்வாய் வழியாக அடையார் ஆற்றுக்கு செல்கிறது. கொட்டும் மழையிலும் பணி செய்யும் நகராட்சி ஊழியர்களை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

    • திருக்கழுகுன்றத்திற்கு நவீன எரிவாயு தகன மேடை அமைத்து தரும்படி அரசின் பார்வைக்கு பேரூராட்சி தலைவர் யுவராஜ் கொண்டு சென்றார்.
    • 4வது வார்டு இந்திரா நகரில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 1.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் இறப்பவர்களை பழங்காலத்து முறையில் விறகுளால் எரியூட்டப்பட்டு, தகனம் செய்வதால் கால தாமதமும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வந்தது.

    இதுதொடர்பாக திருக்கழுகுன்றத்திற்கு நவீன எரிவாயு தகன மேடை அமைத்து தரும்படி அரசின் பார்வைக்கு பேரூராட்சி தலைவர் யுவராஜ் கொண்டு சென்றார். அதையடுத்து 4வது வார்டு இந்திரா நகரில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 1.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இப்பணிகளை பேரூராட்சி உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் பார்வையிட்டார். திருக்கழுகுன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், தலைவர் யுவராஜ், துணைத்தலைவர் அருள்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • சிங்காரவேலன் தெருவில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல்.
    • கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சிங்காரவேலன் தெருவில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு அதிக விலைக்கு திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்று கொண்டிருந்த காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த நடராஜ் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிழக்கு கடற்கரை சாலை முகத்துவாரம் பகுதிகளான கோவளம், கல்பாக்கம் நகரியம் பகுதிகளில் கால்வாயின் நீர் கடலில் கலந்து வருகிறது.
    • திருக்கழுக்குன்றம் பிரிவு பொதுப்பணித்துறையின் 97 ஏரிகள் நிரம்பியுள்ளது.

    மாமல்லபுரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்து வரும் கன மழையால் பக்கிங்காம் கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து, கால்வாய் கடல்போல் காட்சியளித்து வருகிறது.

    கிழக்கு கடற்கரை சாலை முகத்துவாரம் பகுதிகளான கோவளம், கல்பாக்கம் நகரியம் பகுதிகளில் கால்வாயின் நீர் கடலில் கலந்து வருகிறது.

    கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் 3 நாட்களாக கன மழை பெய்து வருவதால், கோவளம், நெம்மேலி, சூலேரிக்காடு, தேவநேரி, மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, சட்ராஸ், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    திருக்கழுக்குன்றம் பிரிவு பொதுப்பணித்துறையின் 97 ஏரிகள் நிரம்பியுள்ளது. சென்னை சுற்றுப்புற பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது.

    • பீர்க்கன்காரணை ஏரி ஆக்கிரமிப்புகளும் இதுவரை அகற்றப்படவில்லை.
    • செம்பாக்கம் ஏரியின் பெரும்பகுதி ஆக்கிரமிப்புகளாலும், ஆகாயத்தாமரை செடிகளாலும் சூழப்பட்டு உள்ளதால் மழைநீரை தேக்கிவைக்க முடியாமல் வீணாக வெளியேற்றப்பட்டு வருவது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    தாம்பரம்:

    சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளது. நன்மங்கலம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அருள்முருகன் நகர், நந்தவனம் பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. செம்பாக்கம் ஏரியும் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. செம்பாக்கம் ஏரியின் பெரும்பகுதி ஆக்கிரமிப்புகளாலும், ஆகாயத்தாமரை செடிகளாலும் சூழப்பட்டு உள்ளதால் மழைநீரை தேக்கிவைக்க முடியாமல் வீணாக வெளியேற்றப்பட்டு வருவது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    பீர்க்கன்காரணை ஏரி ஆக்கிரமிப்புகளும் இதுவரை அகற்றப்படவில்லை. குரோம்பேட்டை வீரராகவன் ஏரி, பெருங்களத்தூர் குண்டுமேடு ஏரி ஆகியவையும் ஆகாயத்தாமரை செடிகளால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழை பெய்தும் அந்த ஏரிகளில் மழைநீரை தேக்கி வைக்க முடியாமல் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    ×