search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுவாஞ்சேரி அருகே அ.தி.மு.க. பிரமுகரை கூலிப்படை ஏவி கொன்ற நிதிநிறுவன அதிபர்-பெண் ஊழியர்
    X

    கூடுவாஞ்சேரி அருகே அ.தி.மு.க. பிரமுகரை கூலிப்படை ஏவி கொன்ற நிதிநிறுவன அதிபர்-பெண் ஊழியர்

    • செந்தில்குமார் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் குடியிருந்த போது தனியார் நிதி நிறுவனத்தில் விஜயலட்சுமி மூலம் அதன் உரிமையாளர் எழிலரசனிடம் ரூ.15 லட்சம் பணத்தை கட்டிஉள்ளார்.
    • செந்தில் குமார் அவர்கள் இருவரிடமும் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் நிதி நிறுவனம் குறித்து சமூகவலைதளத்தில் தகவல்களை பகிர்ந்தார்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூர் பகவதிபுரம், லட்சுமி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). அ.தி.மு.க.வில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக இருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி பெருமாட்டுநல்லூர் கூட்டு ரோட்டில் மர்மகும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    விசாரணையில் நிதி நிறுவனத்தில் கட்டிய ரூ.15 லட்சத்தை கேட்ட தகராறில் செந்தில் குமார் கூலிப்படையை ஏவி வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த நிதிநிறுவன மேலாளர் விஜயலட்சுமி, அதன் உரிமையாளர் ஈரோடு பகுதியை சேர்ந்த எழிலரசன் மற்றும் கூலிப்படையில் உள்ள அயனாவரத்தை சேர்ந்த பிரவீன், இவரது தம்பி பிரசாந்த், கிரண்லால், சுஜைகாந்தி, விக்கி என்ற விக்னேஸ்வரன், ராகுல், கொடுங்கையூரை சேர்ந்த ஆகாஷ், பெரம்பூரை சேர்ந்த முருகேசன் என்ற முகேஷ், அம்பத்துரை சேர்ந்த சரத் என்ற சண்முகம் உள்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட கூலிப்படையினரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    செந்தில்குமார் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் குடியிருந்த போது தனியார் நிதி நிறுவனத்தில் விஜயலட்சுமி மூலம் அதன் உரிமையாளர் எழிலரசனிடம் ரூ.15 லட்சம் பணத்தை கட்டிஉள்ளார். பின்னர் செந்தில் குமார் அவர்கள் இருவரிடமும் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் நிதி நிறுவனம் குறித்து சமூகவலைதளத்தில் தகவல்களை பகிர்ந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த விஜயலட்சுமியும், எழிலரசனும் பணத்தை திருப்பி கேட்டால் தீர்த்து கட்டி விடுவோம் என்று செந்தில் குமாருக்கு மிரட்டல் விடுத்து உள்ளனர். இதில் பயந்து போன செந்தில்குமார் காஞ்சிபுரத்தில் உள்ள வீட்டை காலி செய்து கொண்டு கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்டுநல்லூரில் வீடு கட்டி குடியேறி இருந்தார். இந்த நிலையில் விஜயலட்சுமியும், எழிலரசனும் கூலிப்படையை ஏவி செந்தில்குமாரை தீர்த்து கட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    கொலையாளிகளிடம் இருந்து 5 மோட்டார்சைக்கிள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×