என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊரப்பாக்கம்-கூடுவாஞ்சேரியில் மழைவெள்ள பாதிப்பு பகுதியில் கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு
- தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது.
- குருவன்மேடு ஊராட்சி சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை வெள்ள நீர் அதிக அளவு வெளியேறுவதை கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வண்டலூர்:
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பு இடங்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆய்வு செய்தார்.
காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் விஞ்சியம்பாக்கம் ஏரியை இணைக்கும் கால்வாயை சீரமைக்கும் பணியினை அவர் பார்வையிட்டார்.
இதை தொடர்ந்து ரெட்டி பாளையம் ஊராட்சி சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட மற்றும் அங்கு பாலம் கட்டும் பணியை விரைந்து செயல் படுத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அந்த பகுதியில் பொதுமக்கள் செல்லாதவாறு எச்சரிக்கை பலகைகள் அமைத்திட அலுவலர்களுக்கு தெரிவித்தார்.
இதே போல் குருவன்மேடு ஊராட்சி சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை வெள்ள நீர் அதிக அளவு வெளியேறுவதை கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட உதயசூரியன் நகரில் மழை வெள்ள நீர் வெளியேறு வதையும், ஊரப்பாக்கம் ஊராட்சி ஜெகதீஷ் நகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட மழை வெள்ள நீர் வடிகால்வாய் வழியாக மழை வெள்ளநீர் வெளியேறுவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் ராகுல்நாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில், ஊரப்பாக்கம், காரணைப் புதுச்சேரி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் சுற்றியுள்ள ஏரிகளின் உபரி நீரானது அடையாறு ஆற்றில் கலக்கும் பகுதி. சென்ற ஆண்டு இந்த பகுதிகளில் மழை வெள்ளநீர் அதிக அளவு தேங்கி இருந்தது.
இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகளில் புதியதாக மழை வெள்ள நீர் வடிகால்வாய்கள் அமைத்து மழைநீர் தேங்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழை வெள்ள நீர் விரைந்து வெளியேறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலையில் சிறு பாலங்கள் அமைத்து மழை நீரை வெளியேற்ற திட்டம் தீட்டி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் இந்த பகுதிகளில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை .
அதே போன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளப்பட்டு மழை வெள்ள நீர் வடிகால்கள் தூர் வாரப்பட்டும், சீரமைக்கப்பட்டும் உள்ளதால் மழை வெள்ள நீர் வடிவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அதற்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு கலெக்டர் ராகுல்நாத் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வ குமார், காட்டாங் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் உதயா கருணாகரன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் எம். கே.டி. கார்த்திக், பொதுப் பணித்துறை நீர்வள ஆதாரங்கள் உதவி செயற் பொறியாளர் வெங்கடேஷ், உதவி பொறியாளர் குஜராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.






