என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலையை துண்டித்து எடுத்து சென்ற மந்திரவாதிகள்
- சித்தாமூர் போலீசார் மாணவி கிருத்திகா புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி பார்க்க முடிவு செய்தனர்.
- வருவாய்த்துறை மற்றும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் இடம் தோண்டப்பட்டது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே சித்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கிருத்திகா (வயது12) .அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 5-ந்தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது சாலையில் இருந்த மின் கம்பம் திடீரென முறிந்து மாணவி கிருத்திகா மீது விழுந்தது.
இதில் தலையில் விழுந்து பலத்த காயம் அடைந்த அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 14 -ந்தேதி மாணவி கிருத்திகா இறந்தார்.
இதையடுத்து கடந்த 15-ந்தேதி இறுதி சடங்குகள் செய்யப்பட்டு சித்திரவாடி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவி கிருத்திகாவின் உடல் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை சுடுகாட்டில் மணவி கிருத்திகா புதைக்கப்பட்டிருந்த இடம் தோண்டப்பட்டு இருந்தது. மேலும் அந்த இடத்தில் மஞ்சள், குங்குமம், எலுமிச்சம் பழம், ஒரு டார்ச்லைட், தலைமுடி, கையுறை ஆகியவை கிடந்தன.
இதனை கண்டு அதிர்ச்சிஅடைந்த அப்பகுதி மக்கள் கிருத்திகாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், இது தொடர்பாக சித்தாமூர் போலீசில் புகார் செய்தனர். அதில் தங்களது மகள் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு உள்ளது. உடல் அங்கு உள்ளதா? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து சித்தாமூர் போலீசார் மாணவி கிருத்திகா புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி பார்க்க முடிவு செய்தனர். அதன்படி வருவாய்த்துறை மற்றும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் அந்த இடம் தோண்டப்பட்டது.
அப்போது மாணவி கிருத்திகாவின் உடலில் இருந்த தலை மட்டும் மாயமாகி இருந்தது. அதனை மர்மநபர்கள் வெட்டிஎடுத்து சென்று இருந்தனர்.
இதையடுத்து உடல் சேதப்படுத்தப்பட்டு உள்ளதா? என்பதை கண்டறிய பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி கிருத்திகாவின் உடலில் இருந்த தலையை எடுத்து சென்று இருப்பது மந்திரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பூஜை பொருட்கள் கிடந்தது சந்தேகத்தை மேலும் அதிகரிக்க செய்து உள்ளது.
மாணவி கிருத்திகா அவரது விட்டில் முதல் மகள் ஆவார். எனவே தலைச்சன் பிள்ளை என்பதால் மாந்திரீகத்துக்காக தலையை எடுத்து சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
நேற்று முன்தினம் சூரியகிரகணம் ஆகும். அந்த நாளில் மந்திரவாதிகள் பூஜைகள் செய்ய இந்த செயலில் ஈடுபட்டு உள்னர்.
இது தொடர்பாக மாந்திரீகம் செய்பவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து சித்தாமூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






