என் மலர்
செங்கல்பட்டு
- சிமெண்ட் சாலை அமைப்பதாக கூறி 7 லட்சம் ரூபாய் செலவு செய்த கணக்கை பொதுமக்கள் கேட்டனர்.
- தகராறு தொடர்பான தகவல் அறிந்து மாமல்லபுரம் போலீசார் சென்று பாதுகாப்பு அளித்தனர்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் நேற்று தலைவர் செங்கேணி தலைமையில், துணைத் தலைவர் பூர்ணிமா சண்முகம் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜன ஜீவன்ராம் நகர், மலைமேடு இருளர் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் சிமெண்ட் சாலை அமைப்பதாக கூறி 7 லட்சம் ரூபாய் செலவு செய்த கணக்கை பொதுமக்கள் கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியதுடன், வாக்குவாதம் ஏற்பட்டது. வரவு-செலவை நீங்களே கூறுங்கள் என்று பொதுமக்களிடமே எதிர்கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.
தகராறு தொடர்பான தகவல் அறிந்து மாமல்லபுரம் போலீசார் அங்கு சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன், சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் குறித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதனால் மணமை ஊராட்சியில் பரபரப்பு நிலவியது.
- செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 16 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுராந்தகம்:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள படூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு, சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக படூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 25 பேர் ஒரு வேனில் வேளச்சேரி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். வேனை வந்தவாசியை சேர்ந்த டிரைவர் சுரேஷ் ஓட்டினார். மதுராந்தகம் அடுத்த கருங்குழி என்ற இடத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்ட இருந்தபோது திடீரென பின்பக்க டயர் வெடித்தது.
இதில் வேகமாக வந்து கொண்டு இருந்த வேன் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த படூர் கிராமத்தை சேர்ந்த சிறுமி சபிதா (வயது12), பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கோகுல் ( 14), அஜித் (17) உள்பட சுமார் 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே கோகுலும், அஜித்தும் பலியானார்கள்.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 16 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதில் 3 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. பலியான சிறுமி சபிதா படூர் பகுதியில் உள்ளபள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் தாய் லட்சுமியுடன் திருமண விழாவுக்கு வேனில் வந்த போது விபத்தில் சிக்கி பலியாகி விட்டார். அவரது தாய் லட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
திருமண நிகழ்ச்சிக்கு வந்த போது விபத்தில் சிக்கி சிறுமி உள்பட 3 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஊரப்பாக்கம் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி தலைவர் பவானி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
- காயரம்பேடு ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகாந்தி தலைமையில் நடந்தது.
ஊரப்பாக்கம் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி தலைவர் பவானி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குப்பைகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும் எனவே அனைத்து பகுதியும் குப்பை இல்லா ஊராட்சியாக விளங்கும் என்றும் தலைவர் பவானி கார்த்திக் தெரிவித்தார்.
வண்டலூர் கிராம சபை கூட்டம் ஓட்டேரி விரிவு பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தலைவர் முத்தமிழ் செல்வி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி 1-வது வார்டு, 2-வது வார்டு பொதுமக்கள் கையில் பதாகையுடன் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காயரம்பேடு ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகாந்தி தலைமையில் நடந்தது. இதில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி மேலாளர் அர்ச்சனா கலந்து கொண்டார். துணைத் தலைவர் திருவாக்கு மற்றும் 4 வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 74-வது குடியரசு தினவிழா தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் தலைமையில் நடைபெற்றது.
- வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி போட்டோவிற்கு அனைத்து வார்டு கவுன்சிலர்களும் மலர்தூவி வணங்கினார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் இன்று காலை 74-வது குடியரசு தினவிழா தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் தலைமையில் நடைபெற்றது. அலுவலக கட்டிடத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி போட்டோவிற்கு அனைத்து வார்டு கவுன்சிலர்களும் மலர்தூவி வணங்கினார்கள்.
பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவரையும் வரவேற்று, இனிப்புகள் வழங்கி கவுரவப்படுத்தினார்.
- பாம்புகளை பிடிப்பதற்கு சர்வதேச அளவில் பயிற்சி அளித்து வருகின்றனர்.
- பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் இருவரும் விஷ மருந்துகள் கண்டறிவதிலும் பங்காற்றி வருகிறார்கள்.
மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்த 26 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் செங்கல்பட்டு மாவட்டம் செந்நேரி கிராமத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்களான இருளர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் இருவரும் மிகவும் அபாயகரமான விஷப்பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்கள் ஆவர். மேலும், பாம்புகளை பிடிப்பதற்கு சர்வதேச அளவில் பயிற்சி அளித்து வருகின்றனர்.
மேலும், அமெரிக்காவின் புளோரிடாவில் மலைப்பாம்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிரபல வன உயிரின நிபுணர் ரோமுலஸ் விட்டேர்கர் தலைமையிலான குழுவில் மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர்.
இந்த குழு ஏராளமான மலைப் பாம்புகளை பிடித்தனர். இதில் வடிவேல் கோபாலும், மாசி சடையனும் பாம்புகளை லாவகமாக பிடித்து அசத்தினர். இதேபோல் அவர்கள் இருவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி நாடுகளில் சென்று பாம்பு பிடித்து உள்ளனர். பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து வடிவேல் கோபால் கூறும்போது, "இந்த விருது பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கு சென்று பாம்பு பிடித்து இருக்கிறோம். அதிக விஷத்தன்மை உள்ள பாம்புகளையும் பிடித்து உள்ளோம். ராஜநாகம் அதிகம் விஷத்தன்மை கொண்டது. எங்கள் தந்தை காலத்தில் இருந்து பாம்பு பிடித்து வருகிறோம். இதுவரை கண்ணாடி விரியன், நல்லபாம்பு உள்ளிட்ட ஏராளமான பாம்புகள் கடித்து இருக்கின்றன. ஆனால் இதற்கான முன் ஏற்பாடுகளுடன் இருப்போம்" என்றார்.
மாசி சடையன் கூறும்போது, "இதுவரை பல பாம்புகளை பிடித்து இருக்கிறோம். இதனை கணக்கில் வைத்துகொள்ள மாட்டோம். பத்மஸ்ரீ விருது பெருவது மகிழ்ச்சி ஆகும்" என்றார்.
மேலும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் இருவரும் விஷ மருந்துகள் கண்டறிவதிலும் பங்காற்றி வருகிறார்கள். பாம்புகளிடம் இருந்து விஷ எதிர்ப்பு மருந்துகளை சேகரிப்பதன் மூலம் இந்திய மருத்துவத் துறைக்கும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.
இதேபோல் பிரபல பரதநாட்டிய கலைஞர் கல்யாண சுந்தரம் பிள்ளை, நூலகரும் சமூக சேவகருமான பாலம் கல்யாண சுந்தரம், பாளையங்கோட்டையை சேர்ந்த கோபால் சாமி, வேலுச்சாமி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு சென்று விட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
- முதியவர் வலது கையில் மீன் போன்றும், இடது கையில் பறவை போன்றும் பச்சை குத்தப்பட்டு இருந்தது.
வண்டலூர்:
ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளி அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு சென்று விட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவரது வலது கையில் மீன் போன்றும், இடது கையில் பறவை போன்றும் பச்சை குத்தப்பட்டு இருந்தது.
இது குறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் நவீன எந்திரங்களைக் கொண்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
- ரெயில் நிலையத்திற்குள் வந்த பயணிகளின் உடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது.
செங்கல்பட்டு:
இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ரெயில் நிலைய வளாகம் முழுவதும் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
இதில் விரைவு மற்றும் மின்சார ரெயில்கள், தண்டவாளங்கள், நடைமேடைகள், பாா்சல் அலுவலகம், பயணிகள் தங்கும் அறை ஆகியவற்றில் வெடிகுண்டு கண்டறியும் நவீன எந்திரங்களைக் கொண்டு நிபுணர்கள் சோதனை செய்தனா். அப்போது, ரெயில் நிலையத்திற்குள் வந்த பயணிகளின் உடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாமல் தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஏராளமானோர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் எஸ்.ஆர் காந்தி பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்
- இந்தியாவில் 3 இடங்களில் இதுபோன்ற பயிற்சி நடத்தப்படுகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் "படைப்பு சிற்பிகள்" சிற்பக் கலைக்கூடத்தில் இன்று பல்வேறு நாடுகளை சேர்ந்த, 15 வெளிநாட்டு கலைஞர்களுக்கு சிலை செதுக்கும் பயிற்சி துவங்கியது. தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் எஸ்.ஆர் காந்தி பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மார்ச் மாதம் வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது.
கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பயிற்சி கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக பயிற்சி நடக்கவில்லை. இந்தியாவில் 3 இடங்களில் இதுபோன்ற பயிற்சி நடத்தப்படுகிறது. அதில் ஒன்று மாமல்லபுரம். இதனால் இங்குள்ள சிற்பிகளுக்கு பெருமையாக உள்ளது என பயிற்சியாளர் சிற்பி பாஸ்கர் தெரிவித்தார். வந்திருந்த வெளிநாட்டினர் ஆர்வத்துடன் அவரவர் கிரியேட்டிவ் சிலைகளை செதுக்கினார்கள்.
- 2012-ம் ஆண்டு பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து மாணவி உயிரிழந்தது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த சேதுமாதவன் பிரியா தம்பதியின் குழந்தை ஸ்ருதி ஜியான் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். 2012-ம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி பள்ளி சென்று வீடு திரும்பும் வழியில் முடிச்சூர் சாலையில் பள்ளி பேருந்தில் ஓட்டையில் விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி ஸ்ருதி உயிரிழந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் பேருந்திற்கு தீ வைத்தனர்.
பேருந்து எப்.சி. முடிந்து ஒரு மாதம் கூட முழுமையாக முடியாத நிலையில் இந்த சம்பவம் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து பள்ளி மாணவி ஸ்ருதி உயிரிழந்த சம்பவத்தில் கைதான அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சென்னையில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது.
- இதில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகின்றனர்.
மாமல்லபுரம்:
ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்னை வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைச் சுற்றிப் பார்க்க உள்ளனர். அப்பகுதியின் அருகில் கல்பாக்கம் அணுமின் நிலையம் இருப்பதால் அதில் இருந்து கதிர்வீச்சு ஏதும் உள்ளதா? இருந்தால் அதன் அளவு என்ன? கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து இன்று தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் கல்பாக்கம் அணு விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அவர்கள் கொண்டு வந்திருந்த கதிர்வீச்சு கண்டறியும் விசேஷ கருவியை வைத்து கடற்கரை கோயில், அர்ச்சுனன்தபசு, ஐந்து ரதம் பகுதியில் சோதனை இட்டனர். அதில் கதிர்வீச்சு அளவு 0.0 என காண்பிக்கப்பட்டதாக கல்பாக்கம் அணு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- பெரிய பையுடன் நின்ற வாலிபரிடம் சோதனை செய்த போது 9 கிலோ கஞ்சா இருந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து செபினை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தாம்பரம்:
பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில், பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெரிய பையுடன் நின்ற வாலிபரிடம் சோதனை செய்த போது 9 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த செபின் (23), என்பதும், ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து சென்னையில் ஒட்டு மொத்தமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து செபினை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- செருப்பு திருடு போனால் யாரும் போலீசில் புகார் செய்யமாட்டார்கள் என்பதால் இதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாக தெரிவித்தனர்.
- கைதான விகாஸ்குமார் உள்பட 3 பேரை போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து வீட்டு வாசல்களில் விட்டுச் செல்லும் செருப்புகள், ஷுக்கள் மாயமாகி வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஒரு குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மேல்சட்டை அணியாத வாலிபர் ஒருவர் நள்ளிரவில் படிக்கட்டுகளில் தவழ்ந்து வந்து ஒரு வீட்டின் வெளியே கிடந்த செருப்புகளை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரித்து வந்தனர்.
இதில் நூதன முறையில் செருப்பு திருட்டில் ஈடுபட்டது, கேம்ப்ரோடு பகுதியில் உள்ள கேக் கடையில் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த விகாஸ் குமார், ரோஹித் குமார், அருள் எப்ரின் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திருடிய செருப்புகள், ஷுக்களுக்கு பாலிஷ் போட்டு புதியது போல் மாற்றி பல்லாவரம் வார சந்தையில் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தனர். மேலும் செருப்பு திருடு போனால் யாரும் போலீசில் புகார் செய்யமாட்டார்கள் என்பதால் இதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாக தெரிவித்தனர். அவர்கள் இதுவரை சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை காட்டி செருப்பு, ஷுக்களை திருடி இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த புதியது போல் மாற்றப்பட்ட 300 செருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான விகாஸ்குமார் உள்பட 3 பேரையும் போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






