என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தடுப்புசுவரில் வேன் மோதி சிறுமி உள்பட 3 பேர் பலி
- செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 16 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுராந்தகம்:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள படூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு, சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக படூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 25 பேர் ஒரு வேனில் வேளச்சேரி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். வேனை வந்தவாசியை சேர்ந்த டிரைவர் சுரேஷ் ஓட்டினார். மதுராந்தகம் அடுத்த கருங்குழி என்ற இடத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்ட இருந்தபோது திடீரென பின்பக்க டயர் வெடித்தது.
இதில் வேகமாக வந்து கொண்டு இருந்த வேன் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த படூர் கிராமத்தை சேர்ந்த சிறுமி சபிதா (வயது12), பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கோகுல் ( 14), அஜித் (17) உள்பட சுமார் 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே கோகுலும், அஜித்தும் பலியானார்கள்.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 16 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதில் 3 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. பலியான சிறுமி சபிதா படூர் பகுதியில் உள்ளபள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் தாய் லட்சுமியுடன் திருமண விழாவுக்கு வேனில் வந்த போது விபத்தில் சிக்கி பலியாகி விட்டார். அவரது தாய் லட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
திருமண நிகழ்ச்சிக்கு வந்த போது விபத்தில் சிக்கி சிறுமி உள்பட 3 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






