என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை மார்க்கெட், ராதா நகர் நாயுடு ஷாப் சாலையில் செல்போன் கடை நடத்தி வருபவர் ரமேஷ்.நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்றார். இன்று அதிகாலை பூட்டி இருந்த செல்போன் கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கும், சிட்லபாக்கம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.எனினும் கடையில் இருந்து சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
    • கடல் சார்ந்த பகுதிகளான ஓதியூர் மற்றும் முதலியார் குப்பம், கழிவெளி பகுதியில் வாழக் கூடிய பறவைகளை கணக்கெடுத்தனர்.

    மதுராந்தகம்:

    தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நீர் பறவைகள், நிலப்பறைவைகள் என்று 2 கட்டமாக நடைபெற்றது. இதில் வன அதிகாரிகள், பறவை ஆர்வலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

    இதில் மதுராந்தகம், செய்யூர் ஆகிய பகுதிகளில் எடுத்த கணக்கெடுப்பில் நீர், நிலத்தில் வசிக்கும் பறவைகள் மொத்தம் 22 ஆயிரத்து 800 உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    வேடந்தாங்கல் ஏரி, கரிக்கிலி ஏரி, மதுராந்தகம் ஏரி, அண்டவாக்கம் ஏரி, உள்ளிட்ட பல்வேறு நீர்நிலை பகுதிகளில் வசிக்கக் கூடிய பறவைகளின் எண்ணிக்கையை வேடந்தாங்கல் வனசரக அலுவலர் லெஸ்லி தலைமையிலான வனத்துறை குழுவினர் பைனா குலர், தொலை நோக்கி கருவிகளை கொண்டு பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 49 வகையான 9050 பறவைகள் இருந்தது.

    மதுராந்தகம் வனக்கோட்டத்தின் சார்பில் வனகோட்ட அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான வனத்துறை குழுவினர் செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட கடலும், கடல் சார்ந்த பகுதிகளான ஓதியூர் மற்றும் முதலியார் குப்பம், கழிவெளி பகுதியில் வாழக் கூடிய பறவைகளை கணக்கெடுத்தனர். இதில் 40 வகையான 13 ஆயிரத்து 750 பறவைகள் இருப்பது தெரியவந்தது.

    • தாமரை குளக்கரை பகுதியை சுற்றி பேரூராட்சிக்கு சொந்தமான 3 வணிக வளாகங்கள் உள்ளன.
    • பேரூராட்சி நிர்வாகம் கடையின் குத்தகைதாரர்களுக்கு பல முறை நோட்டீஸ் வழங்கினர்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் தாமரை குளக்கரை பகுதியை சுற்றி பேரூராட்சிக்கு சொந்தமான 3 வணிக வளாகங்கள் உள்ளன. இதில் 33 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தாமரை குளம் வணிக வளாகத்தில் 3 கடைகள், பஜாரில் உள்ள பழைய வணிக வளாகத்தில் 7 கடைகள், பேரூராட்சி எதிரே உள்ள புதிய வணிக வளாகத்தில் 9 கடைகளை எடுத்தவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சரிவர வாடகை செலுத்தவில்லை. மொத்தம் 19 கடைகள் ரூ.8.50 லட்சம் வரை வாடகை தொகை நிலுவை வைத்துள்ளனர்.

    இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் கடையின் குத்தகைதாரர்களுக்கு பல முறை நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவர்கள் வாடகை பணத்தை கட்டவில்லை. இந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் உத்தரவுப்படி வாடகை செலுத்தாத 19 கடைகளுக்கு பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக சென்று சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • புராதன சின்னங்கள் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • புராதன சின்னம் அருகே சாலையோர கடைகள் நடத்தவும் அனுமதி இல்லை.

    சென்னையில் ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை ஜி20 கல்வி பணிக்குழு முதல் கூட்டம் நடைபெறுகிறது. அதில் 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

    இவர்கள் அனைவரும் பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பகுதிகளை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.

    இவர்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர், புராதன சின்னம், சோதனை சாவடி, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் வெளி மாவட்ட போலீசார் 1000 க்கும் மேற்பட்டோர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று முதல் மாமல்லபுரம் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பபடுகிறது. ஹோட்டல், ரிசார்ட், விடுதி, ஹோம் ஸ்டேகளில் தங்கியிருக்கும் அனைவரின் விபரங்களும் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    புராதன சின்னங்கள் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிப்ரவரி 1ம் தேதி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.

    புராதன சின்னம் அருகே சாலையோர கடைகள் நடத்தவும் அனுமதி இல்லை. தற்போது மாமல்லபுரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.

    • அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • மாடம்பாக்கம் செல்லும் சாலையை ரூ.13.5 கோடி மதிப்பில் விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளது.

    தாம்பரம்:

    வேளச்சேரி-தாம்பரம் சாலையில் ராஜகீழ்பாக்கம் சந்திப்பில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் ராஜகீழ்பாக்கம் சந்திப்பில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் சாலையை ரூ.13.5 கோடி மதிப்பில் விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த சாலை தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ளது. இதனை 14 மீட்டருக்கு அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிகால்வாயும் அமைக்கப்படுகிறது.

    இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ராஜ கீழ்ப்பாக்கம், மாடம் பாக்கம், கிழக்கு தாம்பரம் வழியாக ஜி.எஸ்.டி. ரோடு இணைக்கப்படும். மாடம்பாக்கம் சாலையை அகலப்படுத்தினால் வாகன ஓட்டிகள் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தி நெரிசல் இல்லாமல் தென் சென்னை பகுதிகளுக்கு செல்ல முடியும் என்றார்.

    • கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து திட்ட வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பயிற்சியுடன் சார்நிலை அலுவலர்களுக்கு புத்துணர்ச்சியுடன் செயல்படுவது மற்றும் யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மண்டலத்தில் கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் சார்நிலை அலுவலர்களுக்கான வருடாந்திர புத்தாக்கப் பயிற்சி செங்கல்பட்டு நகர கூட்டுறவு வங்கியில் செயல்பட்டு வரும் செங்கல்பட்டு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. பயிற்சியை காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் மு.முருகன், கூடுதல் பதிவாளர் மற்றும் செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளர் ம.தமிழ்ச்செல்வி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

    இப்பயிற்சியில் கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து திட்ட வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பயிற்சியுடன் சார்நிலை அலுவலர்களுக்கு புத்துணர்ச்சியுடன் செயல்படுவது மற்றும் யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது. இதில் செங்கல்பட்டு சரக துணைப்பதிவாளர் ம.சுடர்விழி,மதுராந்தகம் சரக துணைப்பதிவாளர் பா.ஜஸ்வர்யா,செங்கல்பட்டு மாவட்ட துணைப்பதிவாளர் (பொதுவிநியோகத் திட்டம்) இரா.சற்குணன், செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் பாலாஜி மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னர் நடைபெறும்.
    • பள்ளிக்கரணை பகுதியிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

    மதுராந்தகம்:

    தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னர் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு நீர்பறவைகள், நிலப்பறவைகள் என இரண்டு பரிவாக நடைபெறுகிறது. இதில் நீர்பறவைகளின் கணக்கெடுப்பு நேற்று (28-ந்தேதி) தொடங்கியது. இது இன்று வரை நடைபெறுகிறது.

    வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், நீர்நிலைப் பகுதிகள் மற்றும் பறவைகள் தங்கக் கூடிய பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

    வன சரக அலுவலர் லெஸ்லி தலைமையில் வேடந்தாங்கல், கரிக்கிலி, மதுராந்தகம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அதிநவீன தொலை நோக்கு கருவிகளைக் கொண்டு பறவைகள் கணக்கிடப்படுகிறது.

    மதுராந்தகம் வன கோட்ட அலுவலர் வெங்கடேசன் தலைமையில் ஓதியூர் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளிலும் வனத்துறை பணியாளர்களைக் கொண்டு பறவைகள் கணக்கிடப்படுகிறது. நேற்று காலை தொடங்கிய பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று மாலை வரை தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் பள்ளிக்கரணை பகுதியிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பள்ளிக்கரணை, காரப்பாக்கம், பெரும்பாக்கம் சதுப்புநிலப் பகுதிகளில் வன அதிகாரிகள் நேற்று முதல் பறைவைகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மட்டும் 9 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் பறவை ஆர்வலர்கள், மாணவர்களும் பங்கேற்று கணக்கெடுத்து வருகின்றனர்.

    நிலப்பறவைகளின் கணக்கெடுப்புபணி மார்ச் மாதம் 4-ந்தேதி மற்றும் 5-ந்தேதிகளில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காலவாக்கத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் மன்னாரு என்பவர் வெல்டிங் கடை நடத்தி வருகிறார்.
    • மர்ம கும்பல் அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள வயர்கள், 2 எந்திரம் உள்ளிட்ட பொருட்களை திருடி தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் மன்னாரு என்பவர் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிச்சென்றார். இன்று கடையின் பக்கவாட்டு சீட்டு உடைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள வயர்கள், 2 எந்திரம் உள்ளிட்ட பொருட்களை திருடி தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. இதே கடையில் இதற்கு முன்பு 3 முறை திருட்டு நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சென்னை வரும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.
    • பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவினர், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப், கலெக்டர் ராகுல்நாத், டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    ஜி-20 உச்சி மாநாட்டிற்கு சென்னை வரும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர், பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.

    இவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அப்பகுதிகளை இன்று மத்திய குழுவினர், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப், கலெக்டர் ராகுல்நாத், டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மற்றும் தொல்லியல் துறை, வருவாய் துறை, தீயணைப்பு படை, கடலோர பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் அப்பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    • மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அவர்கள் செல்லும் பகுதிகள் அனைத்தையும் சுத்தமாக வைக்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.
    • தொல்லியல்துறை சார்பில் புதிதாக புல்வெளி அமைத்தல், புராதன சின்னங்கள் பகுதியில் புதிய மணல் வெளி அமைத்தல்.

    மாமல்லபுரம்:

    சென்னையில் வருகிற 31-ந் தேதி முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை ஜி20 மாநாடு நடை பெறுகிறது.

    இதில் பங்கேற்கும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100-க்கும் மேற்பட்டோர், பிப்ரவரி 1-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்கிறார்கள். மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அவர்கள் செல்லும் பகுதிகள் அனைத்தையும் சுத்தமாக வைக்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. சாலையோர விளக்கு கம்பங்களில் தேசிய கொடியின் வண்ணத்தில் சீரியல் விளக்குகள், சுவரில் தமிழ் கலாச்சார வரைபடங்கள் என அலங்கார பணிகளை தொடங்கி உள்ளனர்.

    தொல்லியல்துறை சார்பில் புதிதாக புல்வெளி அமைத்தல், புராதன சின்னங்கள் பகுதியில் புதிய மணல் வெளி அமைத்தல், இரும்பு கிரில்களுக்கு வண்ணம் தீட்டுதல், இரவு ஒளி விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இதனால் விழாக்கோலம் காண மாமல்லபுரம் தயாராகி வருகிறது.

    • தொழுப்பேடு மேம்பாலம் அருகே முன் பக்கம் டயர் வெடித்து கார் ஒன்று சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது.
    • போக்குவரத்து 2 மணி நேரத்துக்கு மேலாக பாதித்தது.

    மதுராந்தகம்:

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு தொழுப்பேடு மேம்பாலம் அருகே முன் பக்கம் டயர் வெடித்து கார் ஒன்று சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் காரை கடந்து செல்வதற்காக வலது பக்கமாக முன்னோக்கிச் சென்ற லாரியின் மீது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ் மோதியது.

    இந்த சாலை விபத்தால் ஆம்னி பஸ்சின் முன்பக்கம் முழுவதும் சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சாலை விபத்தை தொடர்ந்து சென்னை நோக்கி சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சென்னைக்கு செல்லும் வாகனங்கள் எதிர் திசையில் சென்றதால் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு பக்கமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் மற்றும் போக்குவரத்து ரோந்து போலீசார் விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதனால் போக்குவரத்து 2 மணி நேரத்துக்கு மேலாக பாதித்தது.

    • போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்த போலீஸ்காரர் சம்பந்தப்பட்ட டிரைவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
    • போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மேல் மருவத்தூர் பக்தர்களிடம் சமரச பேச்சு நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஓசூரில் இருந்து மேல் மருவத்தூர் கோவிலுக்கு தனியார் பஸ்சில் பக்தர்கள் வந்துள்ளனர்.

    அப்போது காலையில் ஏற்பட்ட சாலை விபத்தை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், அச்சரப்பாக்கம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக டிரைவர் ஹாரன் அடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்த போலீஸ்காரர் சம்பந்தப்பட்ட டிரைவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    அப்போது போலீஸ்காரர் டிரைவரை தகாத வார்த்தையால் பேசி திட்டியதால் பஸ்சில் வந்த பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏற்கனவே ஆத்தூர் அடுத்துள்ள தொழுப்பேடு பகுதியில் நடைபெற்ற விபத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சாலை மறியலால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் பாதித்தது.

    போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மேல் மருவத்தூர் பக்தர்களிடம் சமரச பேச்சு நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு போக்கு வரத்து பாதித்தது.

    ×