என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அடுக்குமாடி குடியிருப்புகளில் செருப்புகளை திருடி பல்லாவரம் சந்தையில் விற்ற 3 பேர் கைது
    X

    செருப்புகளை திருடும் நபர்கள்.


    அடுக்குமாடி குடியிருப்புகளில் செருப்புகளை திருடி பல்லாவரம் சந்தையில் விற்ற 3 பேர் கைது

    • செருப்பு திருடு போனால் யாரும் போலீசில் புகார் செய்யமாட்டார்கள் என்பதால் இதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாக தெரிவித்தனர்.
    • கைதான விகாஸ்குமார் உள்பட 3 பேரை போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து வீட்டு வாசல்களில் விட்டுச் செல்லும் செருப்புகள், ஷுக்கள் மாயமாகி வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஒரு குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் மேல்சட்டை அணியாத வாலிபர் ஒருவர் நள்ளிரவில் படிக்கட்டுகளில் தவழ்ந்து வந்து ஒரு வீட்டின் வெளியே கிடந்த செருப்புகளை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரித்து வந்தனர்.

    இதில் நூதன முறையில் செருப்பு திருட்டில் ஈடுபட்டது, கேம்ப்ரோடு பகுதியில் உள்ள கேக் கடையில் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த விகாஸ் குமார், ரோஹித் குமார், அருள் எப்ரின் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திருடிய செருப்புகள், ஷுக்களுக்கு பாலிஷ் போட்டு புதியது போல் மாற்றி பல்லாவரம் வார சந்தையில் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தனர். மேலும் செருப்பு திருடு போனால் யாரும் போலீசில் புகார் செய்யமாட்டார்கள் என்பதால் இதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாக தெரிவித்தனர். அவர்கள் இதுவரை சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை காட்டி செருப்பு, ஷுக்களை திருடி இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த புதியது போல் மாற்றப்பட்ட 300 செருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான விகாஸ்குமார் உள்பட 3 பேரையும் போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×