என் மலர்tooltip icon

    அரியலூர்

    மீன்சுருட்டி அருகே 155 லிட்டர் சாராயம் ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி புதுத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). இவர் ரெட்டிப்பாளையம் அளவேரி கரையில் மண்பானையில் சுமார் 5 லிட்டர் சாராயம் வைத்து இருப்பதாக மீன்சுருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் அங்கு சென்று, அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

    மேலும் பாஸ்கரை பிடித்து, அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராய ஊறல் போடப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது காவேட்டேரி கிராமத்தில் உள்ள ஒரு வயலில் போடப்பட்டிருந்த சுமார் 150 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, சாராய ஊறல் போட்டதாக குண்டவெளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகரை (வயது 55) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிமடம் அருகே டாஸ்மாக் கடையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகாவில் உள்ள அழகாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை உற்சாகத்துடன் வாங்கிச்சென்றனர். நேற்று அந்த டாஸ்மாக் கடை போலீஸ் பாதுகாப்புடன் காலை 10 மணியளவில் திறக்கப்பட்டு, மது விற்பனை நடைபெற்றது.

    மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.மதியம் 3 மணியளவில் அதே ஊரை சேர்ந்த காமராஜ் (வயது 60) என்பவர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் மது பாட்டில் வாங்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் கலைவாணன்(22), காமராஜை தடுத்து நிறுத்தி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து காமராஜுக்கும், கலைவாணனுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காமராஜ், அவருடைய மகன் விவேக்ராஜ்(20), அவரது நண்பர் பிரவீன்ராஜ் (19) ஆகியோர் சேர்ந்து போலீஸ்காரர் கலைவாணனை தலையில் தாக்கியுள்ளனர். இதைக்கண்ட மற்ற போலீசார், அவர்களை தடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கு கூடியிருந்த மதுப்பிரியர்களை கலைந்து போக செய்தனர்.

    மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அந்த டாஸ்மாக் கடையை மூட ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் உத்தரவிட்டார். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. மேலும் காமராஜ், விவேக்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பிரவீன்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடையை 5 மணிக்கு முன்பே மூடியதால் மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி ராம தேவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் மகன் ராஜ்கமல் ( வயது30). இவர் தனது காரில் வயலில் உள்ள பண்ணைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயமடைந்த ராஜ்கமலை பொதுமக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மற்றும் திருச்சியில் இன்று பெண்கள் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுபிரியர்கள் கடைகளில் குவிந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர்- திருச்சியில் இன்று பெண்கள் டாஸ்மாக் கடைகளை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கோட்டியால் பாண்டிபஜார் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முதல் இங்கு விற்பனை தொடங்கியுள்ளது. இன்று காலை அங்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் டாஸ்மாக் கடையை திறந்துள்ளதன் மூலம் மேலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் சமூக விரோத செயல்கள் அதிகம் நடைபெறும். எனவே கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்த பிறகு டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும். அதுவரை மூட வேண்டும் என்றனர்.

    பெண்களின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பெண்கள் தங்களது போராட்டத்தை கை விடவில்லை. இதையடுத்து அங்குள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதேபோல் திருச்சி திருவானைக்காவல் சோதனைச் சாவடி அருகே உள்ள டாஸ்மாக் கடையையும் இன்று காலை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கடையை திறக்கக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருச்சி கொள்ளிடம் செக் போஸ்ட் அருகே அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டனர். அவர்கள் தமிழக அரசு இலவசமாக கொடுத்த அரிசியை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்தும் அரியலூர் மாவட்டத்துக்கு வந்த 152 பேருக்கு கொரோனா பாதிப்பு.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 4 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும், 152 பேர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்தும் அரியலூர் மாவட்டத்துக்கு வந்தவர்கள் ஆவார்கள். அவ்வாறு வந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களில் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 22 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
    கொரோனா நிவாரண நிதி இசைக்கலைஞர்கள் கீர்த்தனை வாசித்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரியலூர்:

    கொரோனா வைரஸ் ஊரடங்கால் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில் விழாக்கள் மூலம் இசைக்கலைஞர்கள் பலர் பயன்பெற்று வந்தனர்.

    தற்போது விழாக்கள் ரத்தால் அவர்கள் வேலையிழந்து தவித்து வருவதுடன் அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழுர், கோவிந்தபுத்தூர், பெரிய திருக்கோணம், கோடாலிகருப்பூர், கீழப்பழுர் உள்ளிட்ட பகுதிகளில் 100 நாதஸ்வர தவில் கலைஞர்கள் உள்ளனர்.

    ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் மற்றும் பங்குனி, சித்திரை கோவில் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இதனால் இசைக்கலைஞர்கள் குடும்பத்தினர் அத்தியாவசிய தேவைகளுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அரசு அறிவித்த உதவிகள் இதுவரையிலும் கிடைக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    தமிழக அரசு இசைக்கலைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10ஆயிரம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி தா.பழுர் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கங்கா ஜடேஸ்வரர் சிவன் கோவில் அருகே உள்ள அரசு பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து இசைக்கலைஞர்கள் அமர்ந்து கீர்த்தனை வாசித்தனர்.

    ஜெயங்கொண்டத்தில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க வெளியே சென்றதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் கடைவீதியில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் வந்து குவிந்தனர். இதனால் நான்கு ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

    போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்ய முடியாமல் போலீசார் திணறினர். மேலும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியும் பொதுமக்கள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக சென்று வந்தனர். மேலும் பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொருட்களை வாங்கி சென்றனர். 

    ஜெயங்கொண்டத்தில் ஊரடங்கை மீறி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்த எலக்ட்ரிக்கல் கடை, நகை கடை மற்றும் ஜவுளி கடை உள்ளிட்ட கடைகளின் உரிமையாளர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் அமர்நாத் (வயது 22). இவர் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அமர்நாத், முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் 21 வயது பெண்ணை காதலித்ததாகவும், அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டு, அந்த பெண்ணை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்குப்பதிவு செய்து அமர்நாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    செந்துறை அருகே மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்து காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வேன், லாரிகளில் சொந்த ஊர்களுக்கு வந்தனர். இதில் செந்துறை அருகே உள்ள நமங்குணம், சொக்கநாதபுரம், சிறுகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அரியலூர் மாவட்டத்திற்கு முதல் கொரோனா தொற்று சென்னையில் இருந்து வந்த பெண் ஒருவருக்கும், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த நபர் ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சையை தொடர்ந்து அவர்கள் குணமடைந்தனர்.

    இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்த அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பெரியாகுறிச்சி, நத்தகுழி நல்லான் காலனியை சேர்ந்த 2 கூலி தொழிலாளர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அவர்களை சுகாதாரத்துறையினர் நேற்று அதிகாலையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறையினர் அப்பகுதி மக்களிடம் சளி, ரத்த மாதிரிகளை எடுத்து கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் 27 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 2 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர்.
    வெளி மாவட்டங்களிலிருந்து யாராவது வந்திருப்பது தெரிய வந்தால் அவர்களை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையும், பொது மக்களிடம் விழிப்புணர்வும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுடன் வந்தவர்கள் மூலமும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலமும் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், வெளி மாவட்டம், வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள், ஏற்கனவே அவ்வாறு வந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்யவில்லை என்றால், உடனடியாக தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு தாமாக சென்று நோய் தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    வெளி மாவட்டங்களிலிருந்து யாராவது வந்திருப்பதும், அவர்கள் பரிசோதனை செய்யவில்லை என்பதும் தெரிய வந்தால், அருகிலுள்ளவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 04329-228709 என்ற தொலைபேசியிலோ, அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடமோ உடனடியாக தகவல் தெரிவிக்கவும். தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். அரியலூர் மாவட்டம் கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நமங்குணம், சொக்கநாதபுரம், சிறுகளத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து 40-க்கும் மேற்பட்டோர் லாரிகளில் வந்தனர். அவர்களை ஆங்காங்கே சோதனை சாவடிகளில் போலீசார் பிடித்து விசாரணை செய்து கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என்று அறிவித்து, அந்த பகுதிகளுக்கு நுழையும் முக்கிய சாலைகளில் கம்புகளை கொண்டு தடுப்புகளை அமைத்து தடுத்து, அதில் தடை செய்யப்பட்ட பகுதி என்ற பதாகை வைத்தனர். இதையடுத்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட கலெக்டர் ரத்னா மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறார். அதன்படி நேற்று அரியலூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

    அரியலூர் தேரடி வீதியில் போலீசார் தடுப்பு அமைத்திருந்த காட்சி.

    இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முழு ஊரடங்கையொட்டி மாவட்டத்தின் அனைத்து எல்லை பகுதிகளிலும் போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளி மாவட்டத்தினர் அரியலூர் மாவட்டத்தின் உள்ளே வராமல் தடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளியே செல்லாமல் அவர் களையும் தடுத்தனர்.

    இதில் தேவையில்லாமல் இரு, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்ததோடு மட்டுமின்றி, அவர்களை கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். மேலும் போலீசார் ஹெலி கேமராவை பறக்கவிட்டு கண்காணித்தனர்.

    மேலும் முழு ஊரடங்கினால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியதால் அரியலூர், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், செந்துறை உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    வீட்டில் முடங்கிய பொதுமக்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடின்றி தாயம், சீட்டு, கேரம் போர்டு உள்ளிட்டவை விளையாடி மகிழ்ந்தனர். முழு ஊரடங்கில் காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை, மளிகை கடைகள் ஆகியவை மூடப்பட்டிருந்ததால், காய்கறிகள் மட்டும் சரக்கு வேனில் ஆங்காங்கே விற்கப்பட்டது. அதனை பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கி சென்றனர். இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.
    அரியலூர் மாவட்ட மோப்பநாய் பிரிவு போலீஸ்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் நகரில் பணியாற்றும் போலீசாருக்கு கடந்த திங்கட்கிழமை முதல் படிப்படியாக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் மோப்பநாய் பிரிவில் பணியாற்றும் 35 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் உடனடியாக திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

    மேலும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் மோப்பநாய் பிரிவில் பணியாற்றும் 8 போலீசாருக்கும் உடனடியாக சளி மற்றும் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று அரியலூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பின்பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் உள்ள 150 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்படுகிறது.

    அப்பகுதிக்கு நகராட்சி தூய்மை பணியாளர்கள் 3 வாகனங்களில் சென்று வீடு மற்றும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்துள்ளனர். மேலும் அவர் பயிற்சி அளித்த மோப்பநாய்கள் வசிக்கும் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் நகர் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரியலூர் நகரம், எருதுக்காரன்பட்டி, வாலாஜாநகரம், தவுத்தாய்குளம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 20 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 75 ஆயிரம் பேரை சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை கொண்டு வீடுவீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

    ஒவ்வொரு குழுவிலும் தலா ஒரு மருத்துவர், 2 சுகாதார செவிலியர் மற்றும் 4 அங்கன்வாடி பணியாளர்கள் என 50 பேர் கொண்ட குழு தலா 50 வீடுகளை கண்காணிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த மருத்துவக்குழுவினர் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவு உள்ளதா? என்றும், சர்க்கரை நோயாளிகள் உள்ளனரா?, வயதான முதியவர்கள் மட்டும் வசிக்கின்றனரா?, சமீபத்தில் வெளியூரில் இருந்து யாராவது அரியலூருக்கு வந்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு குறிப்புகளை எடுத்து வருகின்றனர். கணக்கெடுப்பின்போது காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் போலீஸ்காரருடன் சேர்த்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்தும், வாசலில் வேப்பிலை தோரணம் கட்டியும் வருகின்றனர்.

    ×