என் மலர்
செய்திகள்

கைது
ஆண்டிமடம் அருகே டாஸ்மாக் கடையில் போலீஸ்காரர் மீது தாக்குதல்: தந்தை - மகன் கைது
ஆண்டிமடம் அருகே டாஸ்மாக் கடையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகாவில் உள்ள அழகாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை உற்சாகத்துடன் வாங்கிச்சென்றனர். நேற்று அந்த டாஸ்மாக் கடை போலீஸ் பாதுகாப்புடன் காலை 10 மணியளவில் திறக்கப்பட்டு, மது விற்பனை நடைபெற்றது.
மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.மதியம் 3 மணியளவில் அதே ஊரை சேர்ந்த காமராஜ் (வயது 60) என்பவர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் மது பாட்டில் வாங்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் கலைவாணன்(22), காமராஜை தடுத்து நிறுத்தி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து காமராஜுக்கும், கலைவாணனுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காமராஜ், அவருடைய மகன் விவேக்ராஜ்(20), அவரது நண்பர் பிரவீன்ராஜ் (19) ஆகியோர் சேர்ந்து போலீஸ்காரர் கலைவாணனை தலையில் தாக்கியுள்ளனர். இதைக்கண்ட மற்ற போலீசார், அவர்களை தடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கு கூடியிருந்த மதுப்பிரியர்களை கலைந்து போக செய்தனர்.
மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அந்த டாஸ்மாக் கடையை மூட ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் உத்தரவிட்டார். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. மேலும் காமராஜ், விவேக்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பிரவீன்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடையை 5 மணிக்கு முன்பே மூடியதால் மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Next Story






