என் மலர்
செய்திகள்

கொரோனா நிவாரண நிதி இசைக்கலைஞர்கள் கீர்த்தனை வாசித்து அரசுக்கு கோரிக்கை
அரியலூர்:
கொரோனா வைரஸ் ஊரடங்கால் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில் விழாக்கள் மூலம் இசைக்கலைஞர்கள் பலர் பயன்பெற்று வந்தனர்.
தற்போது விழாக்கள் ரத்தால் அவர்கள் வேலையிழந்து தவித்து வருவதுடன் அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழுர், கோவிந்தபுத்தூர், பெரிய திருக்கோணம், கோடாலிகருப்பூர், கீழப்பழுர் உள்ளிட்ட பகுதிகளில் 100 நாதஸ்வர தவில் கலைஞர்கள் உள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் மற்றும் பங்குனி, சித்திரை கோவில் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இதனால் இசைக்கலைஞர்கள் குடும்பத்தினர் அத்தியாவசிய தேவைகளுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அரசு அறிவித்த உதவிகள் இதுவரையிலும் கிடைக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசு இசைக்கலைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10ஆயிரம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி தா.பழுர் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கங்கா ஜடேஸ்வரர் சிவன் கோவில் அருகே உள்ள அரசு பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து இசைக்கலைஞர்கள் அமர்ந்து கீர்த்தனை வாசித்தனர்.






