என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அரியலூர் பெண்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடல் - திருச்சியில் சாலையில் அரிசியை கொட்டி போராட்டம்

    அரியலூர் மற்றும் திருச்சியில் இன்று பெண்கள் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுபிரியர்கள் கடைகளில் குவிந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர்- திருச்சியில் இன்று பெண்கள் டாஸ்மாக் கடைகளை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கோட்டியால் பாண்டிபஜார் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முதல் இங்கு விற்பனை தொடங்கியுள்ளது. இன்று காலை அங்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் டாஸ்மாக் கடையை திறந்துள்ளதன் மூலம் மேலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் சமூக விரோத செயல்கள் அதிகம் நடைபெறும். எனவே கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்த பிறகு டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும். அதுவரை மூட வேண்டும் என்றனர்.

    பெண்களின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பெண்கள் தங்களது போராட்டத்தை கை விடவில்லை. இதையடுத்து அங்குள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதேபோல் திருச்சி திருவானைக்காவல் சோதனைச் சாவடி அருகே உள்ள டாஸ்மாக் கடையையும் இன்று காலை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கடையை திறக்கக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருச்சி கொள்ளிடம் செக் போஸ்ட் அருகே அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டனர். அவர்கள் தமிழக அரசு இலவசமாக கொடுத்த அரிசியை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×