என் மலர்
அரியலூர்
- பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது
- முதன்மை கல்வி அதிகாரி பாராட்டு
அரியலூர்:
தமிழ்நாடு நாள் விழா வருகிற 1-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரியலூரில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி துறை மாவட்ட உதவி இயக்குநர் சித்ரா தலைமை தாங்கினார். அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் மான்விழி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில், 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளி மாண, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் 31 பேரும், கட்டுரை போட்டியில் 29 பேரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில், பேச்சு போட்டியில் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி சுஜீதா முதல் இடத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவன் இப்ராஹிம் 3-வது இடத்தையும், பெரியாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி சுகுணா 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
கட்டுரை போட்டியில் கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி அர்ச்சனா முதல் இடத்தையும், கல்லாத்தூர் தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி குணசுந்தரி 2-ம் இடத்தையும், மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி ஜெயதிரிஷா 3-வது இடத்தையும் பிடித்தனர்.
இதில், மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி விரைவில் வழங்கவுள்ளார். இதனிடையே பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
- தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,993 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்
- 4-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 64 இடைநிலை ஆசிரியர்கள், 41 பட்டதாரி ஆசிரியர்கள், 58 முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 163 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நியமனம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து கடந்த 4-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த கல்வி மாவட்ட அலுவலர்கள் மூலமாகவும், நேரிலும், இணையதள முகவரிகள் மூலமாகவும் பெறப்பட்டன.
இதில், 64 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 1,423 பேரும், 41 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 1,441 பேரும், 58 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 1,129 பேரும் என மொத்தமுள்ள 163 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,993 பேர் விண்ணப்பித்துள்ளனர் என மாவட்ட கல்வித்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
- இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் நீண்ட நாட்களாக விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் தனிப்படை அமைத்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜெயங்கொண்டம் அண்ணாநகரில் வசிக்கும் பாஸ்கர் மனைவி சந்திரா (வயது 47) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி 4 முதல் 5 பெண்களும், சில ஆண்களும் வந்து செல்வதாக அப்பகுதியினர் கொடுத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அவரது வீட்டில் சந்திரா உள்பட 5 பெண்கள் சில ஆண்கள் உள்ளே விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது அவர்கள் தொடர்ந்து விபசார தொழில் செய்து வந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் சந்திராவின் வீட்டிற்குள் சென்று சந்திரா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜெயங்கொண்டம் வடக்கு தெருவைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் மகன் ரகுபிரசாத் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட அவருடன் இருந்த மற்றவர்களை போலீசார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்பு பகுதியில் நடந்து வந்த விபசார தொழில் தடுக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
- தொழில்நெறி விழிப்புணர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது
- கலெக்டர் ரமண சரஸ்வதி தகவல்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் அனுசரித்தல் தொடர்பாக அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 11.07.2022 முதல் 15.07.2022 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பாக பல்வேறு சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
11.07.2022 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாலை 2.30 மணியளவில் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடக்கிறது.
12.07.2022 அன்று மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காலை 11.00 மணியளவில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 13.07.2022 அன்று மூன்றாம் பாலினத்தவருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்திலும் நடைபெறுகிறது.
14.07.2022 அன்று அமைப்புசாரா உடலுழைப்புத் தொழிலாளர்களது முன்கற்றல் திறனை அங்கீகரித்தல் மற்றும் பயிற்சியளித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்திலும், 15.07.2022 அன்று அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காலை 11.00 மணியளவில் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் நடைபெறவுள்ளது.
எனவே, மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கடந்த 20-21 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பள்ளி உயர்நிலைப்பள்ளியில் இருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரிதும் வரவேற்றனர்.
- இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 764 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியர் உள்பட 28 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பரணம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளியில் பரணம், பிலாக்குறிச்சி, நாகல்குழி, இரும்புலிக்குறிச்சி, வீரக்கண் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். மாணவர்களின் வருகை மற்றும் தகுதி அடிப்படையில் கடந்த 20-21 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பள்ளி உயர்நிலைப்பள்ளியில் இருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரிதும் வரவேற்றனர்.
பள்ளி தரம் உயர்த்தப்பட்ட போதிலும் அதற்கேற்றவாறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. தற்போது இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 764 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியர் உள்பட 28 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் மாணவர்கள் அமர்வதற்கு போதிய வகுப்பறை கட்டிங்கள் இல்லாததே பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் பெரும்பாலான நேரங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக அங்குள்ள மரத்தடி மற்றும் சைக்கிள் நிறுத்துமிடத்தில் அமர வைக்கப்படுகிறார்கள்.
அதிலும் வெயில் காலங்களில் அதன் தாக்கத்தை அனுபவித்துக்கொண்டு மாணவர்கள் பாடம் படிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் அதனை பயன்படுத்த மாணவ, மாணவிகள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு மாறாக திறந்த வெளியை பயன்படுத்தும் நிலையும் தொடர்கிறது. வேறு வழியின்றி அந்த கழிவறையை பயன்படுத்தும் மாணவிகள் தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலையும் இருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-1 படிக்கும் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் மாணவர்கள் தாங்கள் கற்கும் பாடங்களுக்கு ஏற்றவாறு போதிய ஆய்வுக்கூட வசதியும் இல்லாமல் தவித்து வருகின்றனர். மழை காலங்களில் மாணவர்களை அமர வைக்க இடமில்லாத சூழல் ஏற்படும் போது அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒரே அறையில் தங்க வைக்கும் நெருக்கடியான நிலையும் ஏற்படுகிறது. பல நேரங்களில் இரண்டு பிரிவு மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் அமர வைக்கபடுகிறார்கள். தரையில் அமருவதால் சீருடைகள் அழுக்காகி விடுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் தவித்து வருவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாணவர்களும், பெற்றோர்களும் பல முறை மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளி தரம் உயர்த்தப்படுவதற்கு முன்பு கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளியை சேர்ந்த மாணவர் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதன் தொடர்ச்சியாக பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்களது மற்றும் உறவினர்களின் பிள்ளைகளை இதே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். அப்பேற்பட்ட பள்ளியில் இன்று மாணவர்கள் உட்காரக்கூட இடமின்றி மரத்தடியிலும், சைக்கிள் ஸ்டாண்டிலும் அமர வைக்கப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுபற்றி அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமன் கூறுகையில், இடப்பற்றாக்குறையால் தவித்து வரும் இந்த பள்ளிக்கு விரைவில் உரிய இடம் தேர்வு செய்து விரிவாக்கம் செய்யப்படும். அதற்கான முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை முழுமையாக ஈடுபட்டுள்ளது என்றார்.
- காவலன் செயலி விழிப்புணர்வு
- இந்தச் செயலியை தங்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால் தனியாகச் செல்லும் பெண்கள், முதியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு
அரியலூா் :
அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் மற்றும் மாணவா்களுக்கு காவலன் செயலி குறித்து காவல் துறையினா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். கயா்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோவிந்தசாமி தலைமையிலான காவல் துறையினா், பயணிகளைச் சந்தித்து, காவலன் செயலி குறித்தும், இந்தச் செயலியை தங்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால் தனியாகச் செல்லும் பெண்கள், முதியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அமையும் என்று தெரிவித்தனா்."
- மது விற்ற முதியவா் கைது செய்யப்பட்டாா்
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அரியலூா் :
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளா் ராஜதுரை தலைமையிலான காவல் துறையினா், இரவு அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது இறவாங்குடி கீழத்தெருவைச் சோ்ந்த மாரிமுத்து(71), தனது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
- லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டார்.
- லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்
அரியலூா் :
அரியலூா் மாவட்டம் ெஜயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இளங்கோவன் தலைமையிலான காவல் துறையினா் இரவு மேலக்குடியிருப்பு சாலை தெரு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகத் திரிந்தவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா்(வயது 55) என்பதும், அவா் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விஜயகுமாரை கைது செய்தனா். அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
- 400 ஆடுகளை விவசாயிகள் கொண்டுவந்தனர்
அரியலூர்:
அரியலூர் அருகேயுள்ள கடுகூர் கிராமத்தில் ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெற்றறது. தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்பட்ட முகாமில், கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார்,கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் அடங்கிய கால்நடை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 250 வெள்ளாடுகளுக்கும், 150 செம்மறியாடுகளுக்கும் ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசிகளைச் செலுத்தினர்.
- நெசவாளர்கள் கோரிக்கைகளை அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- அரசு அலுவலக வேலை நாட்களில் சந்திக்கலாம்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட நெசவாளர்கள் தங்களது கோரிக்கைகளை, இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குறைதீர்க்கும் அலுவலரிடம் தெரிவித்து பயனடையலாம் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 23.3.2022 அன்று கைத்தறி துறை ஆணையரகத்தில் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் உருவாக்கப்பட்டு, பிரத்யேக மனுக்களை பரிசீலிக்கும் இணையதளமும் தொடக்கி வைக்கப்பட்டது. இம்மையத்துக்கான முகமை அலுவலர், குறைதீர்க்கும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறை தீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரடியாக சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
இதற்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக இணையதளத்தில் நெசவாளர்கள் தங்கள் குறைகளை பதிவேற்றம் செய்யலாம். 044 25340518 என்ற தொலைப்பேசி மூலம் தெரிவிக்கலாம்.
நெசவாளர் குறை தீர்க்கும் மையம், கைத்தறி ஆணையரகம், குறளகம், 2 ஆம் தளம், சென்னை 600104 என்ற முகவரிக்கு துணை இயக்குநர் (அமலாக்கம்), குறை தீர்க்கும் அலுவலருக்கு முகவரியிட்டு கடிதம் மூலமாக தெரிவிக்கலாம். மேற்கண்ட வாய்ப்பினை நெசவாளர்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காசநோய் கண்டறியும் இலவச நடமாடும் புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
- வாரத்தில் 5 நாட்கள் செயல்படும்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:இந்த வாகனத்தில் மிக துல்லியமாக நோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே, நோய் கண்டறியும் கணினி வசதி, குளிர் சாதனப் பெட்டி போன்ற சாதனங்கள் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் ஆகும். இந்த வாகனம் மூலம் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே மூலம் நோய்கள் கண்டறியப்படும். நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே சளி பரிசோதனை மேற்கொள்ளப்படும்.சளி பரிசோதனையில் காசநோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். மேலும், நோயாளியின் ஆரோக்கியத்திற்காக ஊட்டசத்து நிறைந்த உணவுப் பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும். நோயாளிகளுக்கு நோயின் தன்மை மற்றும் நோய் குணமாகும் வழிமுறைகள், நோய் தடுப்பு முறைகள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்படும்.இவ்வாகனம் வாரத்தில் 5 நாட்கள் செயல்படும். இரண்டு வாரங்களுக்கு தொடர் இருமல், பசியின்மை, தொடர்ச்சியாக எடை குறைதல், சளியுடன் ரத்தம் வருதல் காசநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறியுடையோர் இவ்வாகனத்தை அணுகி சளி பரிசோதனை செய்துகொள்ளலாம். காசநோய் இல்லா அரியலூர் மற்றும் காசநோய் இல்லா தமிழகம் 2025 என்ற இலக்கினை அடைய இந்த வாகனம் உறுதுணையாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் வாகனத்தினை பயன்படுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, கு.சின்னப்பா எம்.எல்.ஏ., காசநோய் பிரிவு துணை இயக்குனர் நெடுஞ்செழியன், நகர் மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் உட்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- இளைஞர்களுக்காக இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்
அரியலூர்:
அரியலூர் செந்துறை சாலையில் எம்.பி. கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழக அரசின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா தலைமையில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் மலர்விழி, மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட திறன் அலுவலர் செல்வம், வக்கீல் சங்க தலைவர் மனோகரன், நகராட்சி தலைவர் சாந்தி, நகராட்சி துணைத் தலைவர் கலியமூர்த்தி, முன்னாள் நகர் மன்ற தலைவர் முருகேசன்,தா.பழுர் ஒன்றிய கவுன்சிலர் எழிலரசன், மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல், ஒன்றிய செயலாளர் சங்கர், மற்றும் பாலச்சந்தர், பிரபு, ஆகாஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சி மையத்தில் இலவச திறன் பயிற்சிகள், கல்வி ஆலோசனை சேவைகள், வேலைவாய்ப்பு ஆலோசனைகள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், ஆளுமை மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவைகள் அளிக்கப்படுகிறது. இதனை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.






