என் மலர்tooltip icon

    அரியலூர்

    • வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவரை கைது செய்தனர்.
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் உடையார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லனம் கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜன்(வயது 45) வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து சவுந்தரராஜனை கைது செய்தனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்
    • ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 46). இவர் உடையார்பாளையம் கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி, ரவியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து உடையாளர் பாளையம் போலீஸ் நிலையத்தில் ரவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுகாம்பூரை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்தனர்.

    • ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை தமிழக அரசு மீட்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் தெரிவித்தார்
    • பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது

    அரியலூா் :

    அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா், முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த 28 -ந் தேதி தொடங்கிய இந்து உரிமை மீட்பு பிரசாரம் வரும் 31-ந் தேதி சென்னையில் முடிவடைகிறது. இந்துக்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்துக்கள் பள்ளி, கல்லூரிகள் ஆரம்பிக்க வேண்டும் என்றால் பல தடைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதே மற்ற மதத்தினருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்றால் அனுமதி கிடைப்பதில்லை. மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு உள்ளது போல், கோயில்களும் இந்துகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை தமிழக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். பேட்டியின் போது மாநில பொறுப்பாளா்கள் பொன்னையா, முருகானந்தம், திருச்சி கோட்ட பொறுப்பாளா் குணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • ம.தி.மு.க. செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது
    • உறுப்பினா் சோ்க்கை குறித்து விளக்கிப் பேசினா்

    அரியலூா்:

    அரியலூரில் அரியலூா் - பெரம்பலூா் மாவட்ட மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. மதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் சகாதேவன் தலைமை வகித்தாா். அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் வரதராஜன், துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் பணி துணைச் செயலா் செந்தில் குமாா், மதிமுக மாவட்டச் செயலரும், அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினருமான கு.சின்னப்பா ஆகியோா், கட்சியின் உறுப்பினா் சோ்க்கை குறித்து விளக்கிப் பேசினா். கூட்டத்தில், நகரச் செயலா் மனோகரன் மற்றும் அரியலூா், பெரம்பலூா் மாவட்ட நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். முன்னதாக அரியலூா் மாவட்ட துணைச் செயலா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

    • பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்

    அரியலூர்:

    முஸ்லிம்களின் தியாக திருநாளாக போற்றப்படும் பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி அரியலூர் நகர ஜூம்மா பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடைகளை அணிந்து தொழுகையில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

    தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரை, ஒருவர் கட்டி தழுவியும், கை கொடுத்தும் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். முஸ்லிம் சிறுவர்-சிறுமிகளும் ஒருவருக்கொருவர் கட்டி தழுவியும், கை கொடுத்தும் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். பிறகு முஸ்லிம்கள் ஆடு, மாடுகளின் இறைச்சிகளை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு குர்பானியாக கொடுத்து மகிழ்ந்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி கீழப்பழூவூர், வெங்கனூர், திருமானூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், விக்கிரமங்கலம், செந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் அவர்கள் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு, ஒருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

    • அரியலூரில் ஒரேநாளில் 25,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    • சிறப்பு முகாம்கள் நடைபெற்றது

    அரியலூர்:

    தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 31-வது சிறப்பு முகாம்களை நேற்று நடத்தியது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 25 ஆயிரத்து 360 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • ரமேஷ் ர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • ரமேஷ் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மகன் ரமேஷ் (வயது23). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் மது குடிக்க தனது மனைவிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுத்ததால் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • . நாகமங்கலம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தினர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு நாகமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரியலூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், நாகமங்கலம் கிராம ஊராட்சி தலைவர் ஆனந்த ஜோதி பூராசாமி ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். நாகமங்கலம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தினர்.

    பேரணி நாகமங்கலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. முடிவில் ஊராட்சி செயலர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

    • தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்தனர்.
    • பள்ளியின் வளர்ச்சிக்கும், பிற துறைகளின் பங்க ளிப்பை உறுதி செய்வேன், கல்வி கற்க உகந்த மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

    அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்தனர்.

    அதில், பள்ளி மேலா ண்மைக் குழு தலைவராக அ. அகிலா, துணைத் தலை வராக ந.ரேவதி, செயலா ளராக தலைமை ஆசிரியர் சின்னதுரை, உறுப்பினர்களாக ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், சுய உதவிக் குழுப்பினர்கள், கல்வி ஆர்வலர்ககள் என 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும், பள்ளியின் வளர்ச்சிக்கும், பிற துறைகளின் பங்க ளிப்பை உறுதி செய்வேன், கல்வி கற்க உகந்த மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மாள் ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புப் பார்வையாளராக காட்டுப்பிரிங்கியம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அரசுமணி கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ்பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

    இதே போல் காட்டுப் பிரிங்கியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கட்டத்தில், தலைவராக மலர், துணைத் தலைவராக மணிமேகலை உள்ளிட்ட 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • தண்ணீர் குடிப்பதற்காக திருச்சி-அரியலூர் சாலையை கடக்க முயன்ற போது, அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் பலத்த காயமடைந்தது.
    • வனத்துறையினர் மானை மீட்டு சிகிச்சைக்காக கீழப்பழுவூர் கால் நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த தவுத்தாய்குளம் அருகேயுள்ள வனப் பகுதியில் இருந்து 3 வயது மதிக்கதக்க புள்ளிமான் ஒன்று அங்குள்ள ஏரியில் தண்ணீர் குடிப்பதற்காக திருச்சி-அரியலூர் சாலையை கடக்க முயன்ற போது, அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் பலத்த காயமடைந்தது.

    இதையறிந்த அப்பகுதி வழியாகச் சென்றவர்கள், இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மானை மீட்டு சிகிச்சைக்காக கீழப்பழுவூர் கால் நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    • முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
    • முகாமில் 75-க்கும் மேற்பட்ட ஆயுதப் படை காவலர்கள், ஊர்க்காவல் படையினரிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனர்.

    அரியலூர்:

    அரியலூரிலுள்ள ஆயுதப் படை வளாகத்தில், காவல் துறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் ரத்தான முகாம் நடைபெற்றது.

    முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்து தொடக்கி வைத்தார். ஆயுதப் படை காவல் கண்காணிப்பாளர் மணவாளன் முன்னிலை வகித்தார். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அவசரகால மருத்துவ அருண்சங்கர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, 75-க்கும் மேற்பட்ட ஆயுதப் படை காவலர்கள், ஊர்க்காவல் படையினரிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனர்.

    ரத்தானம் அளித்தவர்களுக்கு காவல் துறை சார்பில் பாராட்டு சான்றிதழும், ஊட்டச்சத்து பொருள்களும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை ஆய்வாளர் பத்மநாபன், மாவட்ட ஊர்க்காவல் படை ஏரிய கமாண்டர் ஜீவானந்தம் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்.

    • மறைமுக ஏலத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை நடந்தது.
    • பருத்தியை நன்கு வெடிக்க வைத்து எடுக்க வேண்டும்

    அரியலூர்:

    பெரம்பலூர் விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் பருத்தி கொள்முதலுக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த மறைமுக ஏலத்தில் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி, பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருப்பூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்த பருத்தியை நல்ல விலை கோரி கொள்முதல் செய்தனர். இதில் அதிபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 999-க்கு விலை போனது. குறைந்தபட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 689-க்கும், சராசரி போக்கு விலையாக பருத்தி குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 489-க்கும் விலை போனது. மறைமுக ஏலத்தில் மொத்தம் 120.954 குவிண்டால் பருத்தி 623 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

    மறைமுக ஏலம் மூலம் ரூ.1 கோடியே 13 லட்சத்து 69 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு, வேளாண்மை துணை இயக்குனர் சிங்காரம், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார், வேளாண் அலுவலர் ஜோதி, மேற்பார்வையாளர்கள் அழகுதுரை, சுரேஷ் மற்றும் விற்பனைக்கூட பணியாளர்கள் செய்திருந்தனர்.

    மேலும் வியாழக்கிழமைதோறும் இந்த விற்பனை கூடத்தில் பருத்திக்கான மறைமுக ஏலம் நடைபெறும். அதனால் விவசாயிகள் அவசரப்படாமல் தங்களின் பருத்தியை நன்கு வெடிக்க வைத்து எடுக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி பருத்தியை நன்கு உலரவைத்து புதன்கிழமை மாலை 6 மணிக்குள் விற்பனைக்கு எடுத்து வர வேண்டும் என்று விவசாயிகளை விற்பனை கூட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×