என் மலர்
உள்ளூர் செய்திகள்

செந்துறை பரணம் அரசு பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் சைக்கிள் ஸ்டாண்டில் மாணவர்களுக்கு பாடம்
- கடந்த 20-21 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பள்ளி உயர்நிலைப்பள்ளியில் இருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரிதும் வரவேற்றனர்.
- இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 764 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியர் உள்பட 28 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பரணம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளியில் பரணம், பிலாக்குறிச்சி, நாகல்குழி, இரும்புலிக்குறிச்சி, வீரக்கண் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். மாணவர்களின் வருகை மற்றும் தகுதி அடிப்படையில் கடந்த 20-21 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பள்ளி உயர்நிலைப்பள்ளியில் இருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரிதும் வரவேற்றனர்.
பள்ளி தரம் உயர்த்தப்பட்ட போதிலும் அதற்கேற்றவாறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. தற்போது இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 764 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியர் உள்பட 28 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் மாணவர்கள் அமர்வதற்கு போதிய வகுப்பறை கட்டிங்கள் இல்லாததே பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் பெரும்பாலான நேரங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக அங்குள்ள மரத்தடி மற்றும் சைக்கிள் நிறுத்துமிடத்தில் அமர வைக்கப்படுகிறார்கள்.
அதிலும் வெயில் காலங்களில் அதன் தாக்கத்தை அனுபவித்துக்கொண்டு மாணவர்கள் பாடம் படிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் அதனை பயன்படுத்த மாணவ, மாணவிகள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு மாறாக திறந்த வெளியை பயன்படுத்தும் நிலையும் தொடர்கிறது. வேறு வழியின்றி அந்த கழிவறையை பயன்படுத்தும் மாணவிகள் தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலையும் இருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-1 படிக்கும் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் மாணவர்கள் தாங்கள் கற்கும் பாடங்களுக்கு ஏற்றவாறு போதிய ஆய்வுக்கூட வசதியும் இல்லாமல் தவித்து வருகின்றனர். மழை காலங்களில் மாணவர்களை அமர வைக்க இடமில்லாத சூழல் ஏற்படும் போது அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒரே அறையில் தங்க வைக்கும் நெருக்கடியான நிலையும் ஏற்படுகிறது. பல நேரங்களில் இரண்டு பிரிவு மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் அமர வைக்கபடுகிறார்கள். தரையில் அமருவதால் சீருடைகள் அழுக்காகி விடுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் தவித்து வருவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாணவர்களும், பெற்றோர்களும் பல முறை மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளி தரம் உயர்த்தப்படுவதற்கு முன்பு கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளியை சேர்ந்த மாணவர் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதன் தொடர்ச்சியாக பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்களது மற்றும் உறவினர்களின் பிள்ளைகளை இதே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். அப்பேற்பட்ட பள்ளியில் இன்று மாணவர்கள் உட்காரக்கூட இடமின்றி மரத்தடியிலும், சைக்கிள் ஸ்டாண்டிலும் அமர வைக்கப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுபற்றி அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமன் கூறுகையில், இடப்பற்றாக்குறையால் தவித்து வரும் இந்த பள்ளிக்கு விரைவில் உரிய இடம் தேர்வு செய்து விரிவாக்கம் செய்யப்படும். அதற்கான முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை முழுமையாக ஈடுபட்டுள்ளது என்றார்.






