என் மலர்tooltip icon

    அரியலூர்

    • லாரி டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சாலை விபத்து குறித்து நடந்தது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் பெரிய நாகலூர் கிராமத்தில் டிப்பர் லாரி டிரைவர்களுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், கயர்லாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு விபத்து ஏற்படுத்தாமல் வாகனம் ஓட்ட வேண்டும். மது குடித்து விட்டு லாரியை இயக்க கூடாது. வாகனம் இயக்கும் போது செல்போன் பேசக்கூடாது. அதிவேகமாக செல்ல கூடாது. தார்பாய் போட்டு தான் மணல் ஏற்றி செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.

    • மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது
    • அரசு பாலிடெக்னிக் கல்லூரி

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிக்டெக்னிக் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, அக்கல்லூரியின் வேளாண்மை துறை தலைவர் அப்புதீன் தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ் பங்கேற்று, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் செயல்பாடுகள் குறித்தும் மெய் நிகர் கற்றல் இணையதளம், தமிழ்நாடு தனியார் வேலை இணையம் குறித்து எடுத்துரைத்தார்.

    மாவட்ட தொழில் மையத்தின் திட்ட மேலாளர் விக்னேஷ், பெரம்பலூர் விஜய்ஆனந்த், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அலுவலர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, சுயதொழில் , வங்கிக் கடன் குறித்தும், அதே போல் மத்திய மாநில அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ளது , திறன் பயிற்சியின் அவசியம் மற்றும் தனியார் துறை பணியமர்த்தம் குறித்தும் விளக்கினர். இந்நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகல் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • வளர்ச்சித் திட்ட பணிகள் நேரில் ஆய்வு செய்தார்
    • சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.46.90 லட்சம் மதிப்பீட்டில் 95 வீடுகள் பழுது பார்க்கும் பணியையும், ரூ.12.54 லட்சம் மதிப்பீட்டில் 3 வீடுகள் மீண்டும் கட்டும் பணியையும், ரூ.27.06 லட்சம் மதிப்பீட்டில் 14 எண்ணிக்கையிலான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணியையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரம், பணிகள் தொடங்கிய காலம், திட்ட மதிப்பீடு, கட்டுமானப் பொருட்களின் விபரம் மற்றும் தரம், பணிகள் முடிவடையும் காலம் போன்றவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பணிகளை தரமாகவும், சரியான நேரத்தில் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக, அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட கலெக்டர் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசின் திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன், தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுருத்தினார்.

    • உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
    • மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி , உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பொது மக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் இரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிக்கவோ சேமித்து வைக்கவோ ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்திட வேண்டும்.

    பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பாதுகாப்புக்காக எந்நேரமும் ஈரசாக்குகள், தண்ணீர் மற்றும் மணல் வாளிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புகைபிடிக்க கூடாது என்ற அறிவிப்பு பலகையை கடையில் வைப்பதோடு அருகில் யாரையும் புகைப்பிடிக்க அனுமதிக்கக் கூடாது. மின்தடை ஏற்படும் பட்சத்தில் மெழுகுவர்த்தி, எண்ணெய் விளக்குகள், தீக்குச்சிகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. டார்ச், பேட்டரி விளக்குகளை மட்டும் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். கடைகளை மூடும் போது அனைத்து மின் இணைப்புகளையும் துண்டித்த பின்னரே கடையை மூட வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பெயிண்ட், எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளிலோ அல்லது கடைகளின் அருகிலோ சேமித்தல் கூடாது. உரிமம் பெறப்பட்ட கட்டிடத்தில் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். சீன ரக பட்டாசுகளை விற்பனை செய்தல் கூடாது. மேற்கண்ட வழிகாட்டு நடைமுறைகளை மீறுவோர் மற்றும் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிமுறைகளின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கும், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து விருத்தாசலம், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் நடை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 24.10.2022, 25.10.2022 மற்றும் 26.10.2022 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    அரியலூர்,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் 21.10.2022, 22.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களில் அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கும், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து விருத்தாசலம், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் நடை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    24.10.2022 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம், பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம், இடையூ இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு 21.10.2022, 22.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களிலும்,

    மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கு மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 21.10.2022 முதல் 23.10.2022 வரையும்,

    அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து எங்களின் சேவையை முழுமையாக பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

    மேலும் 21.10.2022 முதல் 23.10.2022 வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும்,

    கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மேலும் தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 24.10.2022, 25.10.2022 மற்றும் 26.10.2022 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    21.10.2022, 22.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களில் மேலும் அரியலூர் மாவட்த்தில் அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கு கூடுதல் நடை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து விருத்தாசலம், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு கூடுதல் நடை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்
    • சிறையில் அடைக்கப்பட்டார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஏலாக்குறிச்சி பகுதியில் திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த அதே கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் அரியலூர் ேகார்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    • அன்னங்காரம்பேட்டையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
    • தரைப்பாலம் மூழ்கியதால்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் சிந்தாமணி காட்டாற்று ஓடையில் இருந்தும் வரும் தண்ணீர் குறிச்சி கலிங்கு வழியாக பூவாய் மண்டபம் என்று அழைக்கப்படும் கோடாலி கருப்பூர் 7 கண் மதகு வழியாக கொள்ளிடம் ஆற்றில் கலப்பது வழக்கம். இந்த 7 கண் மதகில் முதல் மதகின் கதவு உடைந்தது. இதனால் நேற்று முன்தினம் காலை முதல் வடிகால் ஓடையில் தண்ணீர் புகுந்தது. சிறிது சிறிதாக வெள்ள நீர் கோடாலிகருப்பூர், அன்னங்காரம்பேட்டை, கீழக்குடி காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெல் வயல்களில் வெள்ள நீர் பாய்ந்து ஓட தொடங்கியது.

    இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் முற்றிலும் மூழ்கின. இதையடுத்து மதகை சரி செய்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல்வேறு வழிகளில் தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனால் அவை தோல்வியில் முடிந்தன.

    புதிதாக கதவு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் கதவு தயாரிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை பழுதடைந்த கதவை அகற்றிய பிறகு பொருத்த முடியும் என்பதால் பழைய உடைந்த கதவை அகற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. வெள்ள நீர் தா.பழூர் ஒன்றியத்தின் தாழ்வான பகுதியாக கருதப்படும் அன்னங்காரம்பேட்டை கிராமத்தை சூழ்ந்துள்ளது.

    தா.பழூரிலிருந்து அன்னங்காரம்பேட்டை செல்லும் சாலையில் உள்ள வட்டார வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் செல்ல தொடங்கி உள்ளது. இதனால் பெட்டாற்றில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் முற்றிலும் மூழ்கி விட்டது. இந்தப்பாலத்தின் வழியாக பஸ் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

    • மூதாட்டியிடம் ரூ.4¼ லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்
    • கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பவானி (வயது 80). அதே பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி (47). இவரது மனைவி சரண்யா (42).

    இவர்கள் 2 பேரும் பவானியின் பேத்தியின் திருமணத்திற்கு வைத்திருந்த ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்த 2019-ம் ஆண்டு முதல் 4 தவணைகளாக கடன் வாங்கியுள்ளனர். ஆனால் அந்த கடனை அவர்கள் திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மூதாட்டி பவானி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, மூதாட்டி தனது பணத்தை திரும்ப கேட்டபோது அந்த தம்பதி வெளியூரில் தங்கிவிட்டதாக தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மூதாட்டி பவானி இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் பணம் வாங்கி மோசடி செய்த சரண்யாவை கைது செய்தார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது கணவர் அருள்ஜோதியை வலைவீசி தேடி வருகிறார்"

    • கிராம வறுமை குறைப்பு திட்ட கூட்டம் நடைபெற்றது.
    • செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம வறுமை குறைப்பு திட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) தமிழரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாழ்வாதார இயக்க செந்துறை வட்டார ஒருங்கிணைப்பாளர் வேம்பு, கிராம வறுமை ஒழிப்பு திட்டம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணியாளர்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் கணக்கெடுப்பு நடத்த வருவார்கள். அவர்கள் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், வடிகால் வாய்க்கால், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்களை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் கேட்பார்கள். அவர்களுக்கு ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார். இந்த கூட்டத்தில் செந்துறை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்."

    • விபத்தில் வியாபாரி படுகாயம் அடைந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 53), மீன் வியாபாரி. இவர், மீன் வாங்குவதற்காக வழக்கம்போல் கல்லாத்தூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சின்னத்தம்பியை அருகே இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

    • மாணவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது
    • மொரீசியஸ் மருத்துவக்கல்லூரி முகவரின் சேவை குறைபாடு

    அரியலூர்:

    கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை காவலர் சாமுவேல். இவரது மகன் ரெனால்ட் ஏசுதாசன் (வயது 21). கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மொரீசியசில் உள்ள அண்ணா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மருத்துவ படிப்பில் சேர சென்னையில் உள்ள அந்த கல்லூரியின் முகவர் மூலம் விண்ணப்பித்து இருந்தார்.

    பின்னர் அசல் மதிப்பெண் சான்றிதழ்களுடன் கல்விக் கட்டணமாக ரூ.11,50,000 ஆயிரம் செலுத்தியுள்ளார். இவ்வாறு மொரிசியஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ரெனால்ட் ஏசுதாசன் ஒரு ஆண்டு காலம் அங்கு படித்து விட்டு இந்த மருத்துவக் கல்லூரி இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் தமிழகத்திற்கு திரும்பி வந்து விட்டார்.

    இதையடுத்து அவர், தாம் செலுத்திய கல்விக் கட்டணத்தையும், சமர்ப்பித்த மதிப்பெண் பட்டியல்களையும் திரும்பத் தருமாறு கல்லூரி நிர்வாகத்தையும் அதன் சென்னை முகவரையும் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் இதுவரை கிடைக்காததால், அந்த மருத்துவக் கல்லூரி மீதும், அதன் சென்னை முகவர் மீதும், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அவர் புகார் அளித்திருந்தார்.

    அதனை அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் விசாரித்தும் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்றம் அவரது புகாரை விசாரிக்குமாறு உத்தரவிட்டதன் காரணமாக அடையார் காவல் நிலைய ஆய்வாளர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மீண்டும் விசாரணை நடத்தினார். அப்போது கல்லூரியின் முகவர் அசல் சான்றிதழ்களை மட்டும் திருப்பி வழங்கியுள்ளார். முதலாம் ஆண்டு படிப்பிற்கான கட்டணத்தைத் தவிர மீதித் தொகையை வழங்கவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் ரெனால்ட் ஏசுதாசன், தாம் செலுத்திய கல்விக் கட்டணம் ரூ.11,50,000 பணத்தை கல்லூரியும், அதன் முகவரும் திரும்ப வழங்க வேண்டும் என்றும், அவர்களது சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

    இந்த வழக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கடந்த ஜூலை மாதம் மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பில், மாணவர் சொந்த விருப்பத்தின் பேரில் கல்லூரியை விட்டு வந்து விட்டார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், மொரீசியசில் உள்ள அண்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறது.

    ஆனால், அந்த கல்லூரியின் சென்னை முகவர், மாணவரின் அசல் சான்றிதழ்களை திரும்ப வழங்குவதற்கு இரண்டு ஆண்டுகள் காலதாமதம் செய்துள்ளார் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் முகவர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே மாணவர் ரெனால்ட் ஏசுதாசனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை நான்கு வாரத்துக்குள் கல்லூரியின் முகவராக செயல்பட்ட சென்னை முகவாண்மை அலுவலக தலைமை நிர்வாக அலுவலர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    • ஏழு கண் மதகில் தடுப்பணை உடைந்து நீர் வெளியேறியது
    • 500 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் சேதம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கருப்பூர் கிராமத்தில் உள்ளது ஏழு கண் மதகு. இந்த மதகானது சிந்தாமணி வடிகால் ஓடையாகும். இந்த ஏழு கண் மதகு உடையார்பாளையம், ஜெயங்கொண்ட பகுதியில் பொழியக்கூடிய மழை நீர் கொள்ளிடத்தில் கலக்கக்கூடிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    சுமார் நூறு ஆண்டுகள் பழமையான இந்த மதக ஆங்கிலேயர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாகும். இந்த தடுப்பணை மதகுகள் பழுதடைந்ததால் இதனை சீரமைக்க கூறி பல முறை மனு அளித்தும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து வரும் உபரி நீர் கொள்ளிடம் கீழணை பகுதியில் சுமார் 2 லட்சம் கன அடிக்கு மேல் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் 7 கண் மதகில் முதல் கதவணையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வெளியேறிய தண்ணீர் வடிகால் வாய்க்கால் வழியாக நுழைந்து விவசாய நிலங்களில் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    தற்பொழுது அன்னங்காரம்பேட்டை, கோடாலி கருப்பூர், உதயநத்தம் கிழக்கு, கண்டியங்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள 25 நாட்களேயான சம்பா நடவு நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. மேலும் இதனை சுற்றியுள்ள கிராமங்களையும் தண்ணீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதற்கிடையே உடைந்த மதகு பகுதிகளை பொதுமக்கள் தாங்களே முன்னின்று சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×