என் மலர்
உள்ளூர் செய்திகள்

உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை
- உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி , உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பொது மக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் இரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிக்கவோ சேமித்து வைக்கவோ ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்திட வேண்டும்.
பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பாதுகாப்புக்காக எந்நேரமும் ஈரசாக்குகள், தண்ணீர் மற்றும் மணல் வாளிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புகைபிடிக்க கூடாது என்ற அறிவிப்பு பலகையை கடையில் வைப்பதோடு அருகில் யாரையும் புகைப்பிடிக்க அனுமதிக்கக் கூடாது. மின்தடை ஏற்படும் பட்சத்தில் மெழுகுவர்த்தி, எண்ணெய் விளக்குகள், தீக்குச்சிகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. டார்ச், பேட்டரி விளக்குகளை மட்டும் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். கடைகளை மூடும் போது அனைத்து மின் இணைப்புகளையும் துண்டித்த பின்னரே கடையை மூட வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பெயிண்ட், எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளிலோ அல்லது கடைகளின் அருகிலோ சேமித்தல் கூடாது. உரிமம் பெறப்பட்ட கட்டிடத்தில் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். சீன ரக பட்டாசுகளை விற்பனை செய்தல் கூடாது. மேற்கண்ட வழிகாட்டு நடைமுறைகளை மீறுவோர் மற்றும் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிமுறைகளின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.






