என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    • இந்த தேர்தலில் லிங்காயத் சமுதாய மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினர்.
    • பா.ஜனதா மீதான நம்பிக்கையை லிங்காயத் மக்கள் இழந்துவிட்டனர்.

    பெங்களூரு :

    தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகதீஷ் ஷெட்டர். இவர் தனக்கு பா.ஜனதா டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். தார்வார்-உப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய அவர் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் பெங்களூருவில் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    லிங்காயத் தலைவரான எடியூரப்பா கடந்த பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். ஆனால் அவரை வலுக்கட்டாயப்படுத்தி பா.ஜனதா பதவி விலக வைத்தது. மேலும் அவரை அக்கட்சி ஓரங்கட்டியது. எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன் என்பதை உயர்மட்ட குழு கூற வேண்டும்.

    நான் காங்கிரசில் இணைந்ததால் தான் வடகர்நாடகத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இந்த தேர்தலில் லிங்காயத் சமுதாய மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினர். தம்மய்யா, லட்சுமண் சவதி உள்பட பல லிங்காயத் தலைவர்களை பா.ஜனதா மதிக்கவில்லை. அவர்களை யாரும் சமாதானப்படுத்தவில்லை. பா.ஜனதா மீதான நம்பிக்கையை லிங்காயத் மக்கள் இழந்துவிட்டனர். பி.எல்.சந்தோஷ் பா.ஜனதா தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார். இதனால் என்னை ஓரங்கட்டினர். தற்போது என்னை குறிவைத்து பா.ஜனதாவினர் தோற்கடித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜஸ்தானில் சச்சின் பைலட் நிலை எனக்கு வேண்டாம்.
    • தற்போது சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கும் நிலை உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அந்த கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையாவை அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

    அதாவது முதல் 2½ ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே.சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவி வகிக்க காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் டி.கே.சிவக்குமார், கர்நாடகத்தில் கட்சியை நான் தான் வளர்த்துள்ளேன். இந்த தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற நான் தான் காரணம் என கூறி, முதல்-மந்திரி பதவியை தனக்கே வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வருகிறார். இதனால் முதல்-மந்திரி தேர்வில் இழுபறி நீடிக்கிறது.

    கட்சி மேலிட உத்தரவின் பேரில் சித்தராமையா நேற்று முன்தினமே டெல்லி புறப்பட்டு சென்றார்.

    ஆனால் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் கட்சி மேலிட நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் டெல்லி செல்லாமல் புறக்கணித்தார். பின்னர் அவரை மேலிட தலைவர்கள் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பெங்களூருவில் வைத்து டி.கே.சிவக்குமாருடன் நேற்று காலை தனியாக ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் 50-50 பார்முலாவை ஏற்கும்படியும், ராகுல்காந்தி உத்தரவின் பேரில் உங்களுக்கு நிச்சயம் அடுத்த 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். எனவே இதற்கு சம்மதம் தெரிவிக்கும்படி டி.கே.சிவக்குமாரிடம் கூறினார்.

    ஆனால், டி.கே.சிவக்குமார், இவ்வாறு தான் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வழங்குவதாக ராகுல்காந்தி கூறினார்.

    ஆனால் இதுவரை அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியில் இருக்கிறார். ராஜஸ்தானில் சச்சின் பைலட் நிலை எனக்கு வேண்டாம். தற்போது சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கும் நிலை உள்ளது. இதே நிலை எனக்கும் நடக்காது என்பது என்ன உத்தரவாதம் என கேள்வி எழுப்பியதுடன், தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி நிர்வகிக்கும் முறை வேண்டாம். என்னை முதலில் முதல்-மந்திரி ஆக்குங்கள் என திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது.
    • சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது. சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார். தனக்கு கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

    இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "எனக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். என்னாலும் 50 எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து செல்ல முடியும். ஆனால் கட்சி கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். கட்சியின் முடிவை நான் ஏற்பேன். பொதுவாக எங்கள் கட்சியில் மாநில தலைவராக இருப்பவருக்கு தான் முதல்-மந்திரி பதவி வழங்குவது சம்பிரதாயம். இது தான் எனது கருத்து" என்றார்.

    பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் துமகூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பரமேஸ்வர் காங்கிரஸ் மாநில தலைவராக நீண்ட காலம் பணியாற்றியதாகவும், அவர் துணை முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் என்றும் அவர்கள் கூறினர்.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
    • முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் டெல்லி சென்றுள்ள நிலையில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் தனித்தனியாக சந்தித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ராகுல்காந்தி மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டுக்கு வந்தார்.

    அவர் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையாவிடம் முதல்-மந்திரி விவகாரம் குறித்து பேசி ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரிடமும் தனித்தனியாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர். இந்த சந்திப்பு சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. அதையடுத்து ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

    அதையடுத்து கே.சி.வேணுகோபால் ராகுல்காந்தியை அவருடைய இல்லத்தில் தனியாக சந்தித்து கர்நாடக முதல்-மந்திரியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பேசினார். இதற்கிடையே நேற்று இரவு சித்தராமையா திடீரென கே.சி.வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களின் வீடுகளுக்கு மாரத்தான் ஓட்டப்பந்தயம் போல் விறுவிறுவென காரில் சென்று அவர்களை சந்தித்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா நேற்று ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கர்நாடக முதல்-மந்திரி தேர்வில் ஓரளவுக்கு முடிவு எட்டப்பட்டு விட்டதாகவும், இறுதி முடிவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பார்கள் என்றும் கூறினார்.

    • முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்வை சந்தித்து பேசினார்.
    • முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்ற கருத்து டிகே சிவக்குமாரிடம் கேட்கப்பட்டதாக தகவல்.

    கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மாநிலத்தில் ஆட்சியமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வரை காங்கிரஸ் கட்சி மேலிடம் தேர்வு செய்யும் என்று கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று டெல்லி சென்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்வை சந்தித்து பேசினார். இவரைத் தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இன்று (மே 16) டெல்லி புறப்பட்டு சென்றார்.

    இன்று மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை டிகே சிவக்குமார் சந்தித்து பேசினார். இருவரின் பேச்சுவார்த்தையின் போது, கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்று அவரிடம் யாரும் தெரவிக்கவில்லை என்றும், அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்ற கருத்து டிகே சிவக்குமாரிடம் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    'எனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்றால், நான் சாதாரண சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்ற தயார். சித்தராமையா கட்சியில் இணைந்தது முதல், ஒன்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அல்லது முதலமைச்சர் என்று அதிகாரத்திலேயே இருந்து வந்துள்ளார்,' என்று டிகே சிவக்குமார் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை.
    • என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் மாநில தலைவராக ஒரு பொறுப்பை பெற்றிருக்கிறேன்.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து முதல்-மந்திரி பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

    நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன் அடிப்படையில் புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவை ஆதரித்து கருத்து கூறி இருப்பதாகவும், அதனால் சித்தராமையா புதிய முதல்-மந்திரியாக அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, பெரும்பான்மையான லிங்காயது, ஒக்கலிகர் சமூகங்களை சேர்ந்த மடாதிபதிகள் டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றனர்.

    அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார். சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

    இதை தொடர்ந்து டெல்லி மேலிட தலைவர்கள் டி.கே.சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டி.கே.சிவக்குமாரிடம் போனில் பேசிய பிரியங்கா காந்தி பேச்சுவார்த்தைக்காக டெல்லி வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று டி.கே.சிவக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று பிற்பகலில் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

    முன்னதாக பெங்களூரு விமான நிலையத்தில் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி எனக்கு பலத்தை அளித்துள்ளது, மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக உள்ளோம். காங்கிரஸ் என்னும் வீட்டில் நானும் ஒரு பகுதி. யார் முதுகிலும் நான் குத்தமாட்டேன். யாரையும் மிரட்ட மாட்டேன். காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் மாநில தலைவராக ஒரு பொறுப்பை பெற்றிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லியில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரிடமும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன்பின்னர் காங்கிரஸ் மேலிடம் புதிய முதல்-மந்திரியை அறிவித்து, பதவி ஏற்பு விழாவை வருகிற 18-ந் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
    • உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தானது.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

    முதல்-மந்திரி பதவி கேட்டு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என 2 பேரும் பிடிவாதமாக இருப்பதால் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது.

    இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றுள்ளனர்.

    அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் டெல்லி செல்வதாக கூறினார். அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார்.

    சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா டெல்லி சென்ற நிலையில் டி.கே.சிவக்குமார் தனது பயணத்தை ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அடுத்த கர்நாடக முதல்-மந்திரி யார் என்பது குறித்து ஆலோசிக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தான நிலையில் இன்று அவர் டெல்லி செல்கிறார்.

    பிரியங்கா காந்தி டி.கே.சிவகுமாரை டெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.

    • ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை அதிகரித்து வந்தது.
    • மூத்த தலைவர்களின் ஆதரவு டி.கே.சிவக்குமாருக்கு உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 13-ந் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் தான்.

    கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக எழுந்த ஊழல் முறைகேடு, 40 சதவீத கமிஷன் புகார்கள் ஒவ்வொன்றையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் மிக சிறப்பாகவே செயல்பட்டனர். பா.ஜனதா அரசை இக்கட்டான நிலையில் சிக்க வைக்க கிடைத்த எந்த வாய்ப்பையும் அந்த தலைவர்கள் நழுவ விடவில்லை. கடந்த ஓராண்டாகவே பா.ஜனதா அரசுக்கு எதிராக குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏதாவது ஒரு ஊழல் புகார் வெளிவந்தபடியே இருந்தது.

    இப்படி தொடர்ந்து பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை அதிகரித்து வந்தது. இவற்றை சரியான முறையில் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் அறுவடை செய்தனர் என்றே சொல்லலாம். கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக சட்டசபையில் காலியான 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மீதமுள்ள தொகுதியில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையாவும் ராஜினாமா செய்தனர். அதில் தினேஷ் குண்டுராவின் ராஜினாமா ஏற்கப்பட்டது. ஆனால் சித்தராமையாவின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் நீடிக்கும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது.

    அதன் பிறகு கர்நாடக காங்கிரசுக்கு யாரை கட்சி தலைவராக நியமிக்கலாம் என்ற விவாதம் எழுந்தது. அப்போது, டி.கே.சிவக்குமாருக்கு கட்சி தலைவர் பதவி வழங்குவதை சித்தராமையா எதிர்த்தார். தான் முதல்-மந்திரி ஆவதற்கு டி.கே.சிவக்குமார் தடையாக இருப்பார் என்று அவர் கருதினார். ஆனால் சித்தராமையாவின் எதிர்ப்பையும் மீறி கட்சி மேலிடம் டி.கே.சிவக்குமாருக்கு கட்சி தலைவர் பதவியை வழங்கியது.

    அதன் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா முதல்-மந்திரி ஆவார் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்சி கூட்டங்களில் கூறினர். அதற்கு டி.கே.சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் முதல்-மந்திரி பதவி குறித்து யாரும் பேசக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் இரு தரப்புக்கும் கட்டளையிட்டது. அதன் பிறகு முதல்-மந்திரி பதவி குறித்து பேசுவதை இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் தவிர்த்து வந்தனர்.

    கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஒற்றுமையாக கட்சி பணியாற்ற தொடங்கினர். கட்சி மேலிட தலைவர்கள், முதலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்யுங்கள், அதன் பிறகு முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று இரு தரப்புக்கும் உத்தரவிட்டனர். அதே போல் அவர்கள் 2 பேரும் ஒற்றுமையாகவும், பிறகு தனித்தனியாகவும் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

    கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு டெல்லியில் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சித்தராமையா ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முதல்-மந்திரி பதவி குறித்து தனது மனதில் இருந்ததை வெளிப்படுத்திவிட்டார். அதாவது, முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கருத்து அடிப்படையில் தான் காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும் என்று கூறினார். ஏனெனில் எம்.எல்.ஏ.க்கள் தனக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

    ஆனால் டி.கே.சிவக்குமாரோ, முதல்-மந்திரி பதவி யாருக்கு வழங்க வேண்டும் என்பதில் கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது என்று கூறி வருகிறார். இந்த நிலையில் அக்கட்சி தலைவா்கள் நினைத்தபடி காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா ஏற்கனவே 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். ஆட்சியை திறம்பட நடத்திய அனுபவம் அவருக்கு உள்ளது.

    கட்சியை வலுப்படுத்தும் திறன் இருப்பது போல் ஆட்சியை சிறப்பாக நடத்தும் திறனும் டி.கே.சிவக்குமாருக்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியை கர்நாடகத்தில் குறிப்பாக தென் கர்நாடகத்தில் பலமாக இருக்கும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை பலவீனப்படுத்தி காங்கிரசை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டவர் டி.கே.சிவக்குமார். அதனால் தான் இந்த முறை ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கோட்டையை தகர்த்து அங்கு காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

    முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களின் பலம், பலவீனம் என்ன என்பதை பார்ப்போம்.

    குருபா சமூகத்தை சேர்ந்த சித்தராமையா ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் இருந்தார். அவர் குருபா சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், 'அஹிந்தா' (தலித், ஓ.பி.சி., சிறுபான்மையினர்) தலைவராக பார்க்கப்படுகிறார். மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக உள்ள அவருக்கு கர்நாடகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்ற பெயர் எடுத்துள்ள அவர் மீது எந்த விதமான ஊழல் வழக்குகளோ அல்லது சொத்து குவிப்பு வழக்குகளோ கிடையாது.

    அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட அவருக்கு ஆட்சி நிர்வாகத்திலும் அதே அளவுக்கு அனுபவம் உள்ளது. நகைச்சுவை, கேலி, கிண்டல் கலந்த சித்தராமையாவின் பேச்சு மக்களை சுண்டி இழுப்பதாக உள்ளது. சாதி, மதம், கட்சி ஆகியவற்றை தாண்டி பொதுக்கூட்டங்களில் அவரது பேச்சை கேட்பதற்கே பெருங்கூட்டம் கூடுவது வழக்கம். மாற்று கட்சியினரும் அவரது பேச்சை ரசித்து கேட்பது உண்டு. ஆனால் சித்தராமையா கட்சியை பலப்படுத்தும் பணிகளில் அவ்வளவாக தீவிரமாக செயல்பட கூடியவர் இல்லை. கரடு முரடாக பேசும் அவர் பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் மிக கடுமையாக எதிர்த்து பேசக்கூடியவர்.

    சித்தராமையா ஏற்கனவே 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள அனுபவம் கொண்டவர். பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை வலுவாக எதிர்க்கும் திறன் கொண்டவர். அதே நேரத்தில் அவரது பலவீனம் என்னவெனில், நல்லாட்சி வழங்கினாலும் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த தவறியது, காங்கிரசில் இன்னும் சில தலைவர்கள், சித்தராமையா வேறு கட்சியில் இருந்து வந்தவர் என்று சொல்வது, அவருக்கு தற்போது 75 வயது ஆவது போன்றவை அவருக்கு பலவீனமாக உள்ளது.

    மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள டி.கே.சிவக்குமார், 1985-ம் ஆண்டு தனது 25-வது வயதிலேயே முன்னாள் பிரதமர் தேவகவுடாவை எதிர்த்து சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். மாணவர் காங்கிரசில் நிர்வாகியாக இருந்து படிப்படியாக முன்னேறி இன்று அவர் மாநில காங்கிரஸ் தலைவர் என்ற நிலையை அடைந்துள்ளார்.

    கட்சியை வலுப்படுத்துவதிலும், வியூகம் வகுப்பதிலும் சிறந்து விளங்கும் அவர், மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக மெல்ல உருவாகி வருகிறார். தென் கர்நாடகத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு வட கர்நாடகத்தில் அவ்வளவாக இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். காங்கிரசின் "டிரபல் சூட்டர்" என்று சொல்லப்படும் டி.கே.சிவக்குமார், கட்சி மேலிடம் கூறும் பணிகளை அப்படியே அச்சு பிசகாமல் செய்து முடிப்பவர்.

    கடந்த 2017-ம் ஆண்டு குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது குதிரை பேரத்திற்கு பயந்து அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் கர்நாடகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது. அந்த எம்.எல்.ஏ.க்களில் சிலரை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்தபோதும், அது முடியாமல் போனது. அந்த நேரத்தில் டி.கே.சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்ட பலரது மந்திரிசபையில் மந்திரியாக டி.கே.சிவக்குமார் பணியாற்றியுள்ளார். கட்சியை வலுப்படுத்தும் திறன் கொண்ட டி.கே.சிவக்குமாருக்கு மாநிலம் முழுவதும் சம அளவில் மக்கள் செல்வாக்கு இல்லை. ஒக்கலிகர் சமூகத்தின் பலமான தலைவராக கருதப்படும் அவர் பிற சமூகங்களுக்கான தலைவராக மற்றவர்கள் பார்ப்பது இல்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

    டி.கே.சிவக்குமாா் கட்சிக்கு விசுவாசமிக்கவர், சோனியா காந்தி குடும்பத்துடன் நெருக்கமாக பழகக்கூடியவர், ஒக்கலிகர் சமூகம் அவரை ஆதரிப்பது, வயது போன்ற விஷயங்கள் பலமாக அமைந்துள்ளன. மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பதால் அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க வேண்டும். இதற்கு முன்பு எஸ்.எம்.கிருஷ்ணா, வீரேந்திர பட்டீல் போன்ற தலைவர்கள் மாநில தலைவர்களாக இருந்து முதல்-மந்திரி பதவியை அடைந்தவர்கள். கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதரவு டி.கே.சிவக்குமாருக்கு உள்ளது. ஆனால் சித்தராமையாவின் அனுபவம், மக்கள் செல்வாக்கு, அவருக்கு இருக்கும் அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு, வழக்குகள் போன்றவை டி.கே.சிவக்குமாருக்கு தடையாக உள்ளன. அவரது பலவீனம் என்று சொன்னால், டெல்லியில் சிறையில் இருந்தது, பிற சமூகங்களின் ஆதரவு அவருக்கு அதிகமாக இல்லாதது போன்றவை ஆகும்.

    மேலும் டி.கே.சிவக்குமார் மீது வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. அமைப்புகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வரும் நாட்களில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா போல் அந்த வழக்குகளில் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். இவை டி.கே.சிவக்குமாருக்கு பலவீனமாக உள்ளது.

    எதுவாக இருந்தாலும், இருவருமே பலமான, உறுதியான தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நல்ல நாளில் காங்கிரஸ் அரசு அமைக்கப்படும்.
    • காங்கிரஸ் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்.

    பெங்களூரு :

    முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    எனக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்று எனக்கு தெரியாது. எனக்கு கொடுத்த பணியை நான் செய்து முடித்துள்ளேன். முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரு வரியில் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ளோம். நல்ல நாளில் காங்கிரஸ் அரசு அமைக்கப்படும். எனது தலைமையில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    முதல்-மந்திரி யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்வார். எனக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பது முக்கியம் அல்ல.

    கர்நாடகத்தில் நடைபெற்ற இரட்டை என்ஜின் அரசு, ஊழல் அரசு, தவறான ஆட்சி நிர்வாகத்திற்கு எதிராக காங்கிரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. தேர்தலில் காங்கிரஸ் மேற்கொண்ட பிரசாரம், ஒற்றுமையாக பணியாற்றியதை நாடு முழுவதும் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் நேரம் போதவில்லை. உள்ளூர் தலைவர்களின் ஒத்துழைப்பு இன்னும் அதிகமாக கிடைத்திருந்தால், இன்னும் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கும்.

    ஆனால் தற்போது காங்கிரசுக்கு கிடைத்துள்ள வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இன்று (நேற்று) பிறந்த நாள் என்பதால் ஏராளமானோர் வாழ்த்து கூற வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் என்னிடம் எண்ணிக்கை (எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு) இல்லை. 135 எம்.எல்.ஏ.க்களும் ஒரே குரலில் முதல்-மந்திரி யார் என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்கியுள்ளனர். எனது எண்ணிக்கை என்பது 135 எம்.எல்.ஏ.க்களையும் உள்ளடக்கியது.

    காங்கிரஸ் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். முதல்-மந்திரி, மந்திரிகள் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். நான் தனி ஆள். இந்த தனி ஆள் தான் தைரியத்துடன் பெரும்பான்மையை உருவாக்குகிறார். அதை நான் நிரூபித்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை.

    எதிர்காலத்தில் அதை பகிரங்கப்படுத்துவேன். தோற்கும்போது தைரியமான இதயத்துடன் இருக்க வேண்டும் என்றும், வெற்றி பரந்த இதயத்துடன் இருக்க வேண்டும் என்றும் மகாத்மா காந்தி கூறியுள்ளார். கூட்டணி ஆட்சியில் 15 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு விலகி சென்றபோது, நான் தைரியத்தை இழக்கவில்லை. தைரியத்துடன் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றேன்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • கூட்டம் முடிந்து வெளியே வந்த டி.கே.சிவக்குமார் உற்சாகத்துடன் காணப்பட்டார்.
    • சித்தராமையா கொஞ்சம் இறுக்கமாக முகத்தை வைத்திருந்தார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையை கைப்பற்றப்போவது யார் என்று கடந்த 6 மாதங்களாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சிக்கு வந்துவிட்டது. இருப்பினும் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. இதைத்தொடர்ந்து முதல்-மந்திரியை தேர்வு செய்ய நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் நடந்தது.

    இதில் முதல்-மந்திரியை தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் அமைத்த குழுவை சேர்ந்த மராட்டிய முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஜிதேந்திர சிங், தீபக் பபாரியா ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் டி.கே.சிவக்குமார், ஒக்கலிக சமுதாய மக்கள் காங்கிரஸ் கட்சியை இந்த முறை ஆதரித்துள்ளனர். எனவே தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் சித்தராமையா- டி.கே.சிவக்குமாருக்கு தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்தளிக்கும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு அவர் ஆட்சேபனை தெரிவித்தார்.

    அதுபோல் சித்தராமையா, புதியதாக தேர்வான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பவரை முதல்-மந்திரியாக ஆக்கும்படி வலியுறுத்தினார். சட்டசபை தேர்தலில் அதிரடியான வேலைகளை செய்து காங்கிரசின் வெற்றிக்குவித்திட்டவர் டி.கே.சிவக்குமார் என்பதாலும், மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் சித்தராமையா என்பதாலும் யாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவது என்பதில் காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வாக தனித்தனியாக அழைத்து கருத்துக்களை கேட்டனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் பகிரங்கமாக கருத்து கூற விரும்பவில்லை என்றனர். இதையடுத்து அவர்களின் கருத்துக்களை காகிதங்களில் எழுதி ஒரு பெட்டியில் போட்டனர். இந்த ரகசிய ஓட்டெடுப்பால் இந்த கூட்டம் நள்ளிரவை தாண்டி நடந்தது.

    பின்னர் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் கட்சி மேலிடம் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறினர். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள், எம்.எல்.ஏ.க்கள் கூறிய கருத்துக்களை அறிக்கையாக தயாரித்த மேலிட பார்வையாளர்கள், அதனை நேற்று டெல்லிக்கு எடுத்துச் சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி,ராகுல்காந்தியிடம் ஆலோசனை நடத்தி புதிய முதல்-மந்திரியை தேர்வு பற்றி விவாதித்தனர்.

    பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதிகாலை 1.30 மணி அளவில் நிறைவடைந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த டி.கே.சிவக்குமார் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவர் சிரித்த முகத்துடன் புறப்பட்டு சென்றார். சித்தராமையா கொஞ்சம் இறுக்கமாக முகத்தை வைத்திருந்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் எந்த பதிலும் கூறாமல் சித்தராமையா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் சதீஷ் ஜார்கிகோளி கூறுகையில், "முதல்-மந்திரி யார் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. அதுபோல் நானும் எனது கருத்தை மேலிட பார்வையாளர்களிடம் தெரிவித்தேன். முதல்-மந்திரி யார் என்பதை மேலிடம் இறுதி செய்யும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மந்திரி பதவியை எதிர்பார்க்கிறார்கள். அதுபோல் எனக்கும் மந்திரி பதவி மீது ஆசை உள்ளது. கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதுபடி செயல்படுவோம்" என்றார்.

    இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் எம்.எல்.ஏ. கூறுகையில், "முதல்-மந்திரி யார் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கள் மேலிடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்" என்றார்.

    மற்றொரு எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான செலுவராயசாமி நிருபர்களிடம் கூறுகையில், "அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மேலிட பார்வையாளர்களிடம் தங்களது கருத்துக்களை எடுத்து கூறியுள்ளனர். முதல்-மந்திரி யார் என்பது பற்றி மேலிடம் தான் முடிவு செய்ய இருக்கிறது" என்றார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
    • டி.கே.சிவக்குமார் தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. தற்போது முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று டி.கே.சிவக்குமார் தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது வீட்டுக்கு பிரபல ஜோதிடரான விஜயராஜ் குருஜி அதிகாலை 4.15 மணிக்கு வந்தார். அவரிடம் டி.கே.சிவக்குமார் ஆசிபெற்றார்.

    அப்போது எதிர்காலத்தை துல்லியமாக கணிப்பதில் நிபுணரான விஜயராஜ் குருஜி, புதன் மற்றும் ஆதித்ய பஞ்சமயோகம் உங்களுக்கு இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் வியாழக்கிழமை நல்ல நாள். அன்றே நல்ல வேலையை தொடங்குங்கள். (அதாவது முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றுக்கொள்ளுங்கள்) என்று கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்து விஜயராஜ் குருஜி புறப்பட்டு சென்றார். டி.கே.சிவக்குமாருக்கு கட்சி மேலிடம் முதல்-மந்திரி பதவி வழங்கினால், அவர் வியாழக்கிழமை முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • 135 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சுமார் 70 சதவீதம் பேர் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.
    • கர்நாடக புதிய முதல்-மந்திரி தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்பு விழா வருகிற 18-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் முதல்-மந்திரி பதவியை பெறுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இவர்களில் யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து நேற்று பெங்களூரில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். மாலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது.

    5 நட்சத்திர ஓட்டலில் நடந்த அந்த ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் யாரை முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்று எழுத்து பூர்வமாக எழுதி தரும்படி கேட்கப்பட்டது.

    மினி ஓட்டெடுப்பு போன்று இது நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் எழுதி கொடுத்த வாக்குகளுடன் மேலிட தலைவர்கள் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லியில் இன்று எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவாக முடிவு தெரிவித்துள்ளனர் என்பது ஆய்வு செய்யப்படும்.

    அதன்பிறகு புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பார். கார்கேவுக்கு இந்த அதிகாரத்தை வழங்கி நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    135 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சுமார் 70 சதவீதம் பேர் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் மீண்டும் முதல்-மந்திரியாக தேர்வு பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதே சமயத்தில் டி.கே.சிவக்குமாருக்கு மேலிட தலைவர்களின் ஆதரவு இருக்கிறது. எனவே புதிய முதல்-மந்திரி யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதற்கிடையே கர்நாடக புதிய முதல்-மந்திரி தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்பு விழா வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களாக 33 பேர் தேர்வாக வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே தங்களுக்கு துணை முதல்-மந்திரி உள்பட 5 முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மந்திரிகள் பதவி வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் காங்கிரஸ் தலைவருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×