என் மலர்
தெலுங்கானா
- விசாரணையில் பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்டவும் கடனை அடைக்கவும் கடத்தி கொலை செய்து எரித்ததாக அதிகாரி தெரிவித்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாரி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்த அவர், பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக ரூ.85 லட்சத்தை இழந்தார்.
பங்கு சந்தையில் ஏற்பட்ட பணத்தை சரி கட்டவும் வாங்கிய கடனை அடைப்பதற்காக தனது பெயரில் 25 வெவ்வேறு திட்டங்களில் ரூ 7.40 கோடி இன்சூரன்ஸ் செய்தார்.
பின்னர் இன்சூரன்ஸ் செய்த பணத்தை பெறுவதற்காக தன்னைப் போன்று அடையாளம் உள்ள ஒருவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்கு உறுதுணையாக மனைவி மற்றும் 2 உறவினர்களை சேர்த்துக் கொண்டார்.
கடந்த 8-ந் தேதி நிஜமாபாத் ரெயில் நிலையத்திற்குச் சென்ற அதிகாரியின் உறவினர்கள் அங்கிருந்த அப்பாவி வாலிபர் ஒருவரை வெங்கடாபூர் புறநகர் பள்ளத்தாக்கிற்கு காரில் கடத்தி வந்தனர். அதிகாரியும் அவரது மனைவியும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் வாலிபருக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடித்தனர். வாலிபருக்கு அதிகாரியின் உடைகளை அணிவித்து காரின் முன் பகுதியில் உட்காரும்படி தெரிவித்தனர். அதற்கு வாலிபர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வாலிபரை கட்டை மற்றும் கோடாரியால் சரமாரியாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து வாலிபரை காரின் முன் சீட்டில் உட்கார வைத்து காரின் உள்ளே வெளியே பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் எரிந்துபோன காரில் ஆண் பிணம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிஜமா பாத் போலீசார் காரின் அருகே இருந்த ஒரு பையை எடுத்து சோதனை செய்தனர்.
அதில் அதிகாரியின் அடையாள அட்டை இருந்தது. அடையாள அட்டையில் இருந்த விலாசத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு வீட்டில் இருந்த அதிகாரி மற்றும் அவரது மனைவியை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்டவும் கடனை அடைக்கவும் தன்னைப் போன்ற ஒருவரை கடத்தி கொலை செய்து எரித்ததாக அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாரி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். அவர்கள் இன்சூரன்ஸ் பணத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னாடியே போலீசார் விரைவாக துப்பு துலக்கி கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் ஷுப்மான் கில் 116 ரன்கள் அடித்திருந்தார்.
- ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஐதராபாத்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஷுப்மான் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 87 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் இரட்டை சதமடித்து 208 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடந்த இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் ஷுப்மான் கில் 116 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதி வேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும், சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷுப்மான் கில் படைத்தார். கில் அதிவேகமாக 1000 ரன்களை 19 இன்னிங்சில் அடித்தார். இதற்கு முன் விராட் கோலியும், ஷிகர் தவானும் 24 இன்னிங்சில் 1000 ரன்களை எட்டியிருந்தனர்
மேலும், மிக குறைந்த வயதில் இரட்டை சதமடித்த வீரர் ஷுப்மான் கில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
+3
- பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும் காங்கிரசின் யாத்திரையைத் தவிர்த்துவிட்டன.
- பாஜக அல்லது காங்கிரசின் ஆதரவின்றி எந்த மூன்றாம் அணியும் இதுவரை வெற்றி பெற்றதில்லை.
ஐதராபாத்:
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னுடைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத ராஷ்டிரிய சமிதி என்று தேசிய கட்சியாக அறிவித்தார். பல்வேறு மாநிலங்களில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில், பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் முதல் பொதுக்கூட்டம் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையில் கம்மத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு பிரமாண்டமாக நடைபெற்றது.
காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வரும் சந்திரசேகர ராவ், அதற்கான முதல் படியாக, கட்சியின் முதல் பொதுக்கூட்டத்தை இன்று நடத்தி உள்ளார். இதில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேசிய அரசியலில் சந்திரசேகர ராவ் கால் பதிப்பதை ஆதரித்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, கர்நாடகாவில் பஞ்சரத்ன ரத யாத்திரை மேற்கொண்டு வருவதால், அவர் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றிருப்பது, தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று சந்திரசேகர ராவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும் காங்கிரசின் யாத்திரையைத் தவிர்த்துவிட்டன.
பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை அமைப்பதற்கான சந்திரசேகர ராவின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா? என்பது விரைவில் தெரியவரும்
அதேசமயம், பாஜக அல்லது காங்கிரசின் ஆதரவின்றி எந்த மூன்றாம் அணியும் இதுவரை வெற்றி பெற்றதில்லை. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிக்கு பா.ஜ.க.வின் ஆதரவு இருந்தது. அவருக்குப் பின் வந்த சந்திரசேகர், தேவகவுடா மற்றும் ஐகே குஜ்ரால் தலைமையிலான அரசுகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
- தேசிய கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது.
- பொது கூட்டத்திற்காக சாலைகள் முழுவதும் பேனர்கள், தோரணங்கள் கட்டப்பட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பதி:
தெலுங்கானா முதல்-அமைமைச்சர் சந்திரசேகர ராவ் தன்னுடைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத ராஷ்டிரிய சமிதி என்று தேசிய கட்சியாக அறிவித்தார்.
இவரது தேசிய கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து சந்திரசேகர ராவ் தனது கட்சி ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேர்தலில் போட்டியிடப் உள்ளதாக அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் பொதுக்கூட்டம் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையில் கம்மத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. பொது கூட்டத்திற்காக சாலைகள் முழுவதும் பேனர்கள், கட்-அவுட்கள், தோரணங்கள் கட்டப்பட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பொது கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கின்றனர். பினராயி விஜயன் விமானம் மூலம் கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கம்மத்திற்கு வருகிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால் விமான மூலம் பேகம் பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கம்மத்திற்கு சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி தேசிய கட்சியாக அறிவித்து பல்வேறு மாநிலங்களில் போட்டியிட போவதாக சந்திரசேகரராவ் அறிவித்த நிலையில் கேரளா மற்றும் டெல்லி முதலமைச்சர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனால் பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கூட்டணி வைத்து தேர்தலில் சந்திரசேகர ராவ் போட்டியிட உள்ளதாக அரசியல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து கேப்டனாக டாம் லாதம் செயல்பட உள்ளார்.
- இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு சான்ட்னர் கேப்டனாக செயல்படுகிறார்.
ஐதராபாத்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லாதமும், டி20 தொடருக்கு சான்ட்னரும் கேப்டனாக செயல்படுகிறார்கள்.
இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இலங்கையை 3-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.
திருவனந்தபுரத்தில் நடந்த 3-வது போட்டியில் 317 ரன் வித்தியாசத்தில் வென்று புதிய உலக சாதனை படைத்தது. விராட் கோலியும் சதத்துடன் பல சாதனைகள் புரிந்தார்.
இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதனால் இந்த தொடரிலும் முத்திரை பதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.
கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின் ஆலன், கான்வே, பெர்குசன், பிலிப்ஸ், மைக்கேல், பிரேஸ்வெல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
நியூசிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.
இரு அணிகளும் இன்று மோதுவது 114-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 113 போட்டியில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 50ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி 'டை' ஆனது. 7 ஆட்டம் முடிவு இல்லை. இன்றைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணி வீரர்களின் விவரம்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷபாஸ் அகமது, முகமது சிராஜ், முகமது ஷமி, உம்ரான் மாலிக், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஸ்ரீகர் பரத்.
நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), பின் ஆலன், பிலிப்ஸ்,ஹென்றி நிக்கோலஸ், கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மேன், டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டபி, பெர்குசன், ஆடம் மில்னே, மிச்சேல் சான்ட்னெர், ஹென்றி ஷிப்லே, சோதி ஹென்றி.
- தம்பதியருக்கு பக்கத்து வீட்டுக்காரரான கோவை அப்பா ராவ் என்பவருடன் நிலத் தகராறு இருந்து வந்தது.
- தம்பதியினர் சூனியம் வைப்பதாக நினைத்து அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் சிந்தூர் மண்டலம் கல்லேறு ஊராட்சி ஸ்டாபோர்ட் பேட்டையை சேர்ந்தவர்கள் மிதியம் லக்ஷ்மய்யா (வயது 54), இவரது மனைவி மிதியம் சிங்கம்மா (52).தம்பதிகள் வசிக்கும் கிராமம் ஆந்திரா-ஒடிசா எல்லைக்கு அருகில் உள்ளது.
அவர்களது வீடும் கிராமத்தில் உள்ள மற்ற வீடுகளில் இருந்து வெகு தொலைவில் தனியாக உள்ளது.
தம்பதியருக்கு பக்கத்து வீட்டுக்காரரான கோவை அப்பா ராவ் என்பவருடன் நிலத் தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் முதியோர் தம்பதி இருவரும் சூனியம் செய்வதாக கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு தம்பதி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் உருட்டு கட்டைகளுடன் சென்று அவர்களுடைய வீட்டு கதவை தட்டினர்.
அவர்கள் கதவை திறந்ததும் உள்ளே சென்ற கும்பல் மிதியம் லக்ஷ்மய்யா மற்றும் அவரது மனைவியை தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆனாலும் கும்பல் தொடர்ந்து தாக்கியதில் அவர்கள் இருவரது உடலும் சிதைந்தன. பின்னர் கும்பல் தப்பி சென்று விட்டனர்.
நேற்று மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது கணவன், மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தம்பதியினர் சூனியம் வைப்பதாக நினைத்து அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செகந்திராபாத், விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
- இந்த சேவை இந்திய ரெயில்வேயால் இயக்கப்படும் 8-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையாகும்.
விசாகப்பட்டினம்:
செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 15-ம் தேதி காணொலி காட்சி வழியாக காலை 10:30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த சேவை, இந்திய ரெயில்வே துறையால் இயக்கப்படும் 8-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையாகும். தெலுங்கு மொழி பேசும் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களை சுமார் 700 கிலோமீட்டர் அளவிற்கு இணைக்கும் முதல் ரெயில் சேவை இது.
இந்த வந்தே பாரத் விரைவு ரெயில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ரெயில் நிலையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பஸ் ஐதராபாத் அடுத்த குக்கட் பள்ளி, ஜே, என்.டி.யூ மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வந்தபோது என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
- பயணிகள் அனைவரும் உயிர் பயத்தில் பஸ்சில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது.
20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர். பஸ் ஐதராபாத் அடுத்த குக்கட் பள்ளி, ஜே, என்.டி.யூ மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வந்தபோது என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
இதனை கண்ட பஸ் டிரைவர் சாலையோரம் பஸ்சை நிறுத்திவிட்டு பயணிகள் அனைவரையும் கீழே இறங்கும்படி தெரிவித்தார்.
இதையடுத்து பயணிகள் அனைவரும் உயிர் பயத்தில் பஸ்சில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர். அதற்குள் பஸ் முழுவதும் தீ மளமளவென பரவ தொடங்கியது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் தீ பிடித்து எரிவதற்கு முன்பாகவே டிரைவர் பயணிகளுக்கு தகவல் தெரிவித்து இறக்கிவிடப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 20 பயணிகள் உயிர் தப்பினர். அதிகாலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்து ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.
- துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், ஹிண்டலகா கிராமத்தை சேர்ந்தவர் ரவி கோகிடகேரா. இவர் ஸ்ரீராம் சேனாவின் மாவட்டத் தலைவராக இருந்து வந்தார்.
நேற்று சனிக்கிழமை மாலை ரவி கோகிடகேரா, டிரைவர் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனம் மீது மற்றொரு வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் திடீரென ரவி கோகிட்கர் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் ரவி கோகிட கேராவின் தாடியில் ஒரு தோட்டா பாய்ந்து டிரைவரின் கையில் பட்டது.
வலியால் அலறிய அவர் உடனே காரை நிறுத்தினார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி பெலகாவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஓட்டுநரின் கையில் தோட்டா கண்டெடுக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்து ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாசவேலையில் ஈடுபட குக்கர் குண்டை ஷாரிக் ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்தது தெரியவந்தது.
- ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து கிரிப்டோ கரன்சி மூலம் பணம் பெற்று வந்ததும் தெரியவந்தது.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த நவம்பர் 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், பயங்கரவாதி ஷாரிக் மற்றும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். நாசவேலையில் ஈடுபட குக்கர் குண்டை ஷாரிக் ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஷாரிக்கிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் ஷாரிக் அளித்த தகவலின்படி பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தற்போது ஷாரிக் பெங்களூர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் ஷாரிக்கின் நண்பர்கள் மாஸ் முனீர், சையது யாசின் ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்திருந்தனர். இவர்கள் மங்களூருவில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்ததும், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் அந்த கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 7 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் மங்களூரு என்ஜினீயரிங் கல்லூரியில் சோதனை நடத்தினர். இதையடுத்து ரிகான் ஷேக் (வயது 23) என்ற மாணவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து பெங்களூருவுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவருக்கும், மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே சிவமொக்கா துங்கா ஆற்றங்கரையோரத்தில் குண்டுவெடிப்பு ஒத்திகையில் ஈடுபட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சிவமொக்கா, தாவணகெரே, உடுப்பி, பெங்களூரு உள்பட 6 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த உடுப்பி பிரம்மாவர் அருகே வரம்பள்ளியை சேர்ந்த ரோஷன் தாஜூதீன் ஷேக் (23), சிவமொக்கா திப்பு சுல்தான் நகரை சேர்ந்த ஹுசர் பர்ஹான் (25) ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவர்கள், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து கிரிப்டோ கரன்சி மூலம் பணம் பெற்று வந்ததும் தெரியவந்தது. கைதாகி சிறையில் உள்ள மாஸ் முனீர் கொடுத்த தகவலின்பேரில் இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரோஷன் தாஜூதீன் ஷேக், மாஸ் முனீரின் நெருங்கிய நண்பர் ஆவார். கைதான 2 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சந்திர சேகர ராவ் பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
- கடந்த ஒரே ஆண்டில் கட்சிக்கு ரூ.193 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது.
சந்திர சேகர ராவ் பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்த கட்சியின் வரவு மற்றம் செலவு கணக்குகளை அவர் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளார். இதன் மூலம் மாநில கட்சிகளில் சந்திர சேகர ராவ் கட்சி அதிக சொத்துக்களுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த கட்சிக்கு தற்போதைய மதிப்பீட்டின் படி ரூ.512 கோடி அளவுக்கு செரத்துக்கள் இருந்தன. வங்கி கணக்குகளில் மட்டும் ரூ.451 கோடி உள்ளது.
கடந்த ஒரே ஆண்டில் இந்த கட்சிக்கு ரூ.193 கோடிக்கு வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
- பிரதீப் தற்கொலை செய்துகொண்ட காரில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூர் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டை சேர்ந்தவர் பிரதீப்(வயது47). இவர் பெங்களூர் கனகபுரா ரோடு ககலிபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு ரிசார்ட் பகுதிக்கு குடும்பத்தினருடன் காரில் வந்தார். குடும்பத்தினர் ரிசார்ட்டுக்கு சென்ற நிலையில் காரில் இருந்த பிரதீப் திடீரென துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காரின் அருகே சென்று பார்த்த போது டிரைவர் இருக்கையில் பிரதீப் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் உடனடியாக ககலிபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரதீப் தற்கொலை செய்துகொண்ட காரில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் மகாதேவ்பூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவலி உள்பட 6 பேரின் பெயர்களை பிரதீப் எழுதி வைத்து இருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பிரதீப் பெங்களூருவில் உள்ள ஒரு கிளப்பில் ரூ 1.2 கோடி வட்டிக்கு கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார். அந்த கிளப்பை பெங்களூருவை சேர்ந்த கோபி, சோமையா ஆகியோர் நடத்தினர். கிளப்பில் பணிபுரியும் சம்பளம் உட்பட ஒவ்வொரு மாதமும் அவருக்கு ரூ.3 லட்சம் திருப்பி தருவதாக கிளப் நிர்வாகத்தினர் உறுதியளித்தனர்.
ஆனால், பணத்தை எடுத்துக் கொண்ட கோபி, சோமையா ஆகிய இருவரும், பல மாதங்களாகியும் பணத்தைத் திருப்பித் தர மறுத்துவிட்டனர். இதனால் அதற்கான வட்டியைத் திருப்பிச் செலுத்த பிரதீப் பல கடன்களை வாங்கியதாகவும், பணம் செலுத்துவதற்காக தனது வீடு மற்றும் விவசாய நிலத்தையும் விற்றுள்ளார்.
இதையடுத்து, பிரதீப், பா.ஜ.க. எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவலியிடம் இந்தப் பிரச்னையை எடுத்துச் சென்றார். பிரதீப்பின் பணத்தைத் திருப்பித் தருமாறு எம்.எல்.ஏ. இருவரிடமும் பேசியதாகவும், ஆனால் அவர்கள் ரூ. 90 லட்சத்தை மட்டுமே திருப்பித் தருவதாகக் கூறியதாகவும் தெரிகிறது.
இதன்காரணமாக ஏற்பட்ட விரக்தியில் பிரதீப் தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் கோபி, சோமையாவுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவலி செயல்பட்டதாக பிரதீப் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் பிரதீப்பின் சகோதரரின் சொத்துக்கு எதிராக சிவில் வழக்குப் பதிவு செய்து, பிரதீப்பை மனரீதியாக சித்திரவதை செய்து துன்புறுத்தியதாக டாக்டர் ஜெயராம் ரெட்டி என்பவர் மீதும் அந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனது சாவுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் தான் காரணம் என்று பிரதீப் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ககலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்தை ராம்நகர எஸ்.பி. சந்தோஷ்பாபு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.






