என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கவர்னர் தமிழிசை, கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.
    • அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 70 பேர் தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அறிவித்தார்.

    அதன்மூலம் ஆண்டு தோறும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக் கல்லுரிகளில் அதிக அளவில் இடங்களை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) படிப்பதற்கு உள் இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

    இதைத்தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். மேலும் முதலமைச்சர் ரங்கசாமியிடமும் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கிடு வழங்க அனுமதிக்குமாறு முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பரிந்துரை செய்து அதற்கான கோப்பை அனுப்பி வைத்துள்ளார்.

    அதே போல் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் இந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த இடஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்தால் இந்த ஆண்டில் இருந்தே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 37 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பிலும், 14 பேர் பல் மருத்துவ படிப்பிலும் சேர்ந்து பயனடையும் வாய்ப்பு உள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 70 பேர் தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
    • ஆஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    புதுச்சேரி:

    2010-ம் ஆண்டு இலங்கை அகதிகள் 15 பேரை புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு மூலம் அனுப்ப சிலர் முயன்றனர்.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீராம்பட்டினத்தை சேர்ந்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர் லோகு.ஐயப்பன், தி.மு.க.வை சேர்ந்த சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதில் 3 பேர் தலைமறைவாகினர். 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். இதற்கிடையே சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதிலிருந்து விடுவிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதினர்.

    இதன்பின் 3 பேரும் அந்த சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், ஆட்கடத்தல் வழக்கு நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.

    வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேவமணி 2021-ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு தோண்டிய குழி
    • மூடாமல் சென்றுவிட்டனர்.

    புதுச்சேரி:காரைக்காலை அடுத்த நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், வடபாதி கிராமம் அருகே, தண்ணீர் குழாயை ஆய்வு செய்யும் பொருட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரிய குழி ஒன்று தோண்டியுள்ளனர். அதன் பின்னர் அந்த குழியை மூடாமல் சென்றுவிட்டனர்.இந்நிலையில், வடபாதி கிராமத்தைச்சேர்ந்த இளங்கோ வன் (37) என்பவர், அந்த குழியின் அருகில் உள்ள மதகு ஒன்றில் தூங்கினார். தூக்கக்கலகத்தில் அந்த குழியில் விழுந்து மயங்கிவிட்டார். இரவு நேரம் என்பதால் யாரும் அவரை பார்க்கவில்லை. சிறிது நேரத்தில் அந்த குழியி லேயே அவர் இறந்துவிட்டார்.

    இளங்கோவனின் உடலை பிரதேச பரிசோதனைக்காக கொன்டு சென்றபோது, இளங்கோவனின் மனைவி மற்றும் உறவினர்கள், பிரதே பரிசோதனை கூடத்தை முற்றுகையிட்டு இளங்கோவனின் இறப்பிற்கு நியாயம் கேட்டு கோஷம் எழுப்பினர். அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்றனர். விபரம் அறிந்த வட்டாச்சியர் மதன்குமார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத கிராமமக்கள், மாவட்ட விடுத்கலைச்சிறுத்தை கட்சி நிர்வாகிகளுடன் சென்று, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களால் தோண்டப்பட்டு, மூடாமல் சென்ற குழியில்தான் இளங்கோவன் விழுந்து பலியாகியுள்ளார். எனவே அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு நீதி வேண்டும் என மனு வழங்கி முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்தாக கலெக்டர் உறுதியளித்தார்.

    • திருமணம் நின்று போனதால் அதனை ஏற்க முடியாமல் பாஸ்கரன் மனவேதனையடைந்தார்.
    • திருமணம் நின்று போனதால் வாலிபர் ரெயில் முன் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மதகடிப்பட்டு:

    வில்லியனூர் அருகே பங்கூர் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது28). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்தனர். மேலும் திருமண நாளும் குறிக்கப்பட்டது.

    இந்த நிலையில் திருமணம் திடீரென நின்று போனதாக கூறப்படுகிறது. இதனால் பாஸ்கரன் மன விரக்தியில் இருந்து வந்தார். அவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    ஆனாலும் திருமணம் நின்று போனதால் அதனை ஏற்க முடியாமல் பாஸ்கரன் மனவேதனையடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த பாஸ்கரன் நேற்று இரவு கண்டமங்கலம் சின்னபாபு சமுத்திரம் அருகே கெண்டியான்குப்பம் ரெயில்வே கேட்டுக்கு சென்றார். அப்போது புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் முன் பாஸ்கரன் பாய்ந்தார். இதில் தூக்கிவீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த பாஸ்கரன் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தி அதே ரெயிலில் பாஸ்கரனை மீட்டு கண்டமங்கலம் ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக பாஸ்கரனை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாஸ்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து புகாரின் பேரில் விழுப்புரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமணம் நின்று போனதால் வாலிபர் ரெயில் முன் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கேரளாவில் ஆடி அமாவாசையை 'கர்கடக வவுபலி' என்று அழைக்கின்றனர்.
    • பூமியில் ஒரு ஆண்டு என்பது முன்னோர்களுக்கு ஒரு நாள்.

    ஆடி அமாவாசையை மிக புனித நாளாக கருதி முன்னோர்களுக்கு புண்ணிய ஸ்தலம், கடற்கரை மற்றும் நதிக்கரையில் சிறப்பு பூஜை செய்து தர்ப்பணம் செய்வது இந்துக்களின் வழக்கம்.

    கேரளாவில் ஆடி அமாவாசையை 'கர்கடக வவுபலி' என்று அழைக்கின்றனர். கேரள மாநிலத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் 'கர்கடக வவுபலி' என்ற பெயரில் புண்ணிய நாளாக கருதுகின்றனர். பூமியில் ஒரு ஆண்டு என்பது முன்னோர்களுக்கு ஒரு நாள். தட்சிணாயனத்தில் பித்ருக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த முதல் அமாவாசை கர்கடகம். அதனால் தான் 'கர்கடக வவுபலி' முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இதனையொட்டி கேரள சமாஜம் சார்பில் ஆடி அமாவாசையான இன்று புதுவை கடற்கரை சுற்றுலா வளர்ச்சி கழகம் விடுதி அருகே சிறப்பு புண்ணிய நாள் கடைபிடிக்கப்பட்டது. கேரள நம்பூதிரிகளை கொண்டு நடந்த பூஜையில் தமிழகம் மற்றும் புதுவையை சார்ந்த 400-க்கும் மேற்பட்ட கேரள மக்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

    ஆண்டுதோறும் புதுவையில் இந்த புண்ணிய நாளை கேரள சமாஜம் கொண்டாடுவதாக புதுச்சேரி கேரள சமாஜம் தலைவர் சங்கர் தெரிவித்தார்.

    இதேபோல இந்துக்களும் புதுவை கடற்கரை சாலையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    • தங்கசாமி படகில் ஓரம் நின்றிருந்த போது தவறி கடலில் விழுந்து விட்டார்.
    • மீனவர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடர்கிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ந்தேதி பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த தங்க சாமி என்பவர், படகில் ஓரம் நின்றிருந்த போது தவறி கடலில் விழுந்து விட்டார்.

    சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து படகில் இருந்தவர்கள் பிற மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக கூடுதல் படகுகளில் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடர்கிறது.

    • விடுதியில் விபசார தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
    • விபசார தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயின்போ நகரில் சமீபத்தில் ஒரு வீட்டை தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு இருந்தது.

    அந்த விடுதிக்கு பெண்களும், ஆண்களும் வந்து போவதுமாக இருந்தனர். இதனால் அந்த விடுதியில் விபச்சாரம் நடக்கலாம் என அப்பகுதி மக்கள் பெரிய கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு அந்த விடுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த விடுதியில் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் இருந்தனர்.

    விடுதி அறைகளில் விபசார தொழிலுக்கு பயன்படுத்தும் காண்டங்களும் இருந்தன. இதனால் அந்த விடுதியில் விபசார தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அங்கிருந்த 2 ஆண்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்களில் ஒருவர் திண்டிவனம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (62) விடுதி மேலாளராகவும் மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண் என்ற அருண்குமார் விபசார புரோக்கராக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் விபசார தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • லட்சுமி மற்றும் கோவிந்தம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேதராப்பட்டு:

    புதுச்சேரி அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி புதுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது.

    இப்பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரம் செய்யும் மீனவ பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து கிராமப் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம்.

    அதுபோல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்கள் அதிகம் விற்பனையாகும் என்பதால் புதுச்சேரிக்கு மீன் வாங்க அதிகாலை புதுக்குப்பம் மீனவ பெண்கள் லட்சுமி(45), கோவிந்தம்மாள்(50) நாயகம், கமலம், கெங்கையம்மாள்,பிரேமா ஆகிய 6 பேர் ஆட்டோவுக்காக கிழக்கு கடற்கரை சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 6 பெண்கள் மீது மோதியது.

    இதில் லட்சுமி மற்றும் கோவிந்தம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மற்ற 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கெங்கையம்மாள் (வயது 45) பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. காயமடைந்த மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் கார் கவிழ்ந்து நொறுங்கியது. காரை ஓட்டிவந்த சென்னையை சேர்ந்த டிரைவர் விக்னேஸ்வரன், மற்றும் காரில் பயணம் செய்த கவுதம், சேது, பிரசாந்த், திரிஷா,ஆகிய 5 பேர் புதுச்சேரி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ஜிப்மரின் மாணவர் சேர்க்கை, 2 ஆண்டுகளுக்கு முன்னர் 62 ஆக உயர்த்த ப்பட்டது.
    • 62 லிருந்து, மத்திய அரசின் மற்ற புதிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல 150 ஆக உயர்த்த ஆவன செய்ய வேண்டும்.

     புதுச்சேரி:

    காரைக்கால் ஜிப்மர் உயர்சிகிச்சை மருத்துவக் கல்லூரிக்கான முன்னாள் ஆலோசகர் மோகன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:-

    2016-ல் சுமார் 50 மாணவர்களுடன் துவ ங்கப்பட்ட காரைக்கால் ஜிப்மரின் மாணவர் சேர்க்கை, 2 ஆண்டுகளுக்கு முன்னர் 62 ஆக உயர்த்த ப்பட்டது. 506 படுக்கைகள் கொண்ட காரைக்கால் மாவட்ட அரசு மருத்துவமனை மாண வர்களின் பயிற்சிக்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ மற்றும் மாணவியர் விடுதிகள் புதுச்சேரி அரசின் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது.

    தற்போது ரூ.460 கோடி செலவில் கல்லூரி மற்றும் நிர்வாக வளாக கட்டிடம், மாணவர் விடுதிகள், மாணவியர் விடுதிகள், டீன், பேராசிரியர்கள், மருத்து வர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கான வீடுகள் மற்றும் குடியிருப்புகள், உணவுக்கூடங்கள் மற்றும் சமையல் கூடங்கள் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு போதுமான அறைகள் கொண்ட மாணவர் விடுதி களும் முழுமையாக உபயோ கப்படுத்தப்பட உள்ளது. காரைக்கால் ஜிப்மரின் மாணவர் சேர்க்கையை எதிர்வரும் கல்வியாண்டிலேயே தற்போதைய 62 லிருந்து, மத்திய அரசின் மற்ற புதிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல 150 ஆக உயர்த்த ஆவன செய்ய வேண்டும். இதன் மூலம் காரைக்கால் உட்பட புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட ப்ப்பட்டுள்ளது.

    • நீச்சல் குளத்தில் குளித்தபோது பிரபாகரனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது.
    • புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வானூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவரது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து புதுவைக்கு சுற்றுலா வந்தார். புதுவையை சுற்றிப்பார்த்துவிட்டு நேற்று இரவு வானூர் அடுத்த மொரட்டாண்டிக்கு வந்து தனியார் விடுதியில் தங்கினர்.

    அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்தபோது பிரபாகரனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் பிரபாகரனை அவரது நண்பர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பிரபாகரன் இறந்து போனார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடற்கரையில் 30 நிமிடம் நடந்த வாண வேடிக்கையை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
    • வாண வெடிகள் குறைந்த உயரத்தில் வெடித்ததால் அதன் தீப்பொறிகள் அருகில் நின்றிருந்த பொது மக்கள் மீது விழுந்தது.

    புதுச்சேரி:

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பிரஞ்சு துணை துாதரகத்தில் தேசிய தின விழா கொண்டாடப்பட்டது.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரிக்கான பிரான்ஸ் துணை துாதர் லீஸ் தல்போ பரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவைத் தொடர்ந்து, இரவு வாண வெடி நிகழ்ச்சி நடந்தது. கடற்கரையில் 30 நிமிடம் நடந்த வாண வேடிக்கையை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    அப்போது, வாண வெடிகள் குறைந்த உயரத்தில் வெடித்ததால் அதன் தீப்பொறிகள் அருகில் நின்றிருந்த பொது மக்கள் மீது விழுந்தது. அதில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் ஓம்கார் (வயது21) பூர்னடா(22) உப்பளம் நேதாஜி நகர் கணபதி(38) மற்றும் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ஆகிய 4 பேர்மீது வாணவெடி தீப்பொறி விழுந்ததில் அவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இச்சம்பவத்தினால், கடற்கரை சாலையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

    • இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஓட்டல் அறையில் சோதனை நடத்தினர்
    • குறிப்பிட்ட இடத்தில் ரகசிய கேமராவுடன் இணைந்த கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை 100 அடி சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியார் ஓட்டலில், மூலக்குளத்தை சேர்ந்த வாலிபர், தனது காதலியுடன் அறை எடுத்து தங்கினார்.

    அப்போது தங்கியிருந்த அறையில் எலக்ட்ரிக்கல் சுவிட்ச் பாக்ஸில், இன்டர்காம் தொலைபேசியை இணைக்கும் பிளக்பாயிண்டில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த ரகசிய கேமராவை கழற்றி எடுத்த ஜோடி, உடனடியாக அறையை காலி செய்தது. இது குறித்து ரெசிடென்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, சரியான பதில் கிடைக்காததால் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

    இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஓட்டல் அறையில் சோதனை நடத்தினர்.

    அப்போது குறிப்பிட்ட இடத்தில் ரகசிய கேமராவுடன் இணைந்த கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில், ஓட்டல் மேலாளர் தேங்காய்த்திட்டு வசந்த்நகரை சேர்ந்த ஆனந்த் (வயது25) மற்றும் ஓட்டல் ஊழியர் அரியாங்குப்பம் ஓடை வெளியை சேர்ந்த ரூம் பாய் ஆப்ரகாம் (22) ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (சி)பெண்களை ஆபாசமாக படம் பிடித்தல், தகவல் தொழில் நுட்ப பிரிவு 66 (இ) ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்தல், கேபிள் மூலம் அனுப்புதல், தடயங்களை மறைத்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் ஓட்டல் அறையில் தங்குபவர்களை ஆபாசமாக வீடியோ எடுக்க கேமரா மறைத்து வைத்துள்ளனரா அல்லது ரகசிய கேமரா காட்சிகளை நேரடியாக இணையதளம் வழியாக கண்டு ரசித்து வந்தனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×