என் மலர்tooltip icon

    ஜார்கண்ட்

    • இன்றும், நாளையும் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
    • ஜார்க்கண்டில் சுமார் ரூ.7200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    ராஞ்சி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முனைப்புடன் செயலாற்றி வருகிறது. தேர்தலை எதிர்கொள்ளும் முன்பாக பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து புதிய திட்ட ப்பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.

    அதன்படி இன்றும், நாளையும் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று ஜார்க்கண்ட் செல்லும் பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) காலை 9:30 மணிக்கு ராஞ்சியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் லார்ட் பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார். அதன்பிறகு அவர் பிர்சா முண்டா பிரபுவின் பிறந்த இடமான உலிஹட்டு கிராமத்துக்கு செல்கிறார்.

    காலை 11:30 மணியளவில் குந்தியில் 3-வது பழங்குடியின பெருமை தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நிகழ்ச்சியின்போது, பிரதமர் 'விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா' மற்றும் 'பிரதமரின் சிறப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் இயக்கம்' ஆகியவற்றைத் தொடங்குகிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் மோடி சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினருக்கான சிறப்பு திட்டத்தை தொடங்குகிறார். தொடர்ந்து கிசான் திட்டத்தின் கீழ், அவர் 15வது தவணையாக சுமார் 18 கோடி ரூபாயை வழங்குகிறார். இத்திட்டத்தின் கீழ், இதுவரை, 14 தவணைகளில், 2.62 லட்சம் கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஜார்க்கண்டில் சுமார் ரூ. 7200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். முன்னதாக பழங்குடியினரின் பெருமை தினமான நாளை அரசின் முக்கிய திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்திரை பிரசார வேனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில் இருந்து தொடங்கும் இந்த வேன் பயணம் ஜனவரி 25-ந் தேதிக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • எம்.பி.பி.எஸ். முடித்து உள்ள டாக்டர் மதன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
    • கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார்.

    ராஞ்சி:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு மதன்குமார் (வயது 28) என்கிற மகனும், ஜனனிஸ்ரீ (24) என்கிற மகளும் இருந்தனர். ஜனனிஸ்ரீ தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.

    எம்.பி.பி.எஸ். முடித்து உள்ள டாக்டர் மதன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    அவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக்கல்லூரியில் தடயவியல் மருத்துவ மேற்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார். இந்தநிலையில் திடீரென அவர் மாயமானார்.

    சக மாணவர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது விடுதியின் பின்புறம் மதன்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விடுதியின் மாடியில் வைத்து டாக்டர் மதன்குமாரை கொடூரமாக கொலை செய்த மர்மநபர்கள், அவரது உடலை தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் பாதி எரிந்த உடலை கீழே தூக்கி போட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த உடல் விடுதியின் பின்புறத்தில் வந்து விழுந்து கிடந்தது. சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    மேலும் கொலை நடந்த விடுதியை சோதனை செய்த போலீசார், அங்கிருந்து செல்போன் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சில கைரேகைகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    இதுதவிர சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே டாக்டர் மதன்குமார் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, மதன்குமார் இறந்த தகவல் நாமக்கல் அருகே புத்தூரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். உடனடியாக டாக்டரின் உடலை வாங்க விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டு சென்றனர்.

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மருத்துவக்கல்லூரிக்கு மேற்படிப்பு படிக்க சென்ற டாக்டர் ஒருவர் விடுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கார் பாலத்தில் இருந்து சிக்கியா தடுப்பணையில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    • செல்பி எடுப்பதற்காக காரை ஓட்ட தொடங்கிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்துள்ளது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் இன்று காலை பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.

    கார் பாலத்தில் இருந்து சிக்கியா தடுப்பணையில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த குடும்பத்தை சேர்ந்த என்ஜினீயரான ஒருவர் செல்பி எடுப்பதற்காக காரை ஓட்ட தொடங்கிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கார் டிரைவர் காயத்துடன் தப்பினார்.

    • கணவன் ஏற்கனவே செய்த திருமணங்களை மறைத்ததால் மனைவி விவாகரத்து பெற முடிவெடுத்தார்.
    • விவாகரத்து பெற்ற மகளுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுத்த தந்தையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் வசிப்பவர் சாக்ஷி. இவரது கணவர் சச்சின் குமார். கணவர் மற்றும் அவரது பெற்றோரால் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கணவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதையடுத்து, சாக்ஷி தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். வீடு திரும்பும் சாக்ஷியை அவரது தந்தை மிகுந்த கண்ணியத்துடன் வரவேற்க முடிவு செய்தார்.

    திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்யும் பாரத் நிகழ்ச்சி போன்று, மகள் வீடு திரும்பும் நிகழ்ச்சியையும் உறவினர்கள் சூழ, ஆட்டம் பாட்டம், மேள தாளத்துடன் ஏற்பாடு செய்து கொண்டாடினார்.

    இந்நிலையில், ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு சாக்ஷி திரும்பினார். சாக்ஷி பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய வீடியோவை அவரது தந்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அவரது வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

    மேலும், அந்த வீடியோவில், மகள்களை மதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

    விவாகரத்து பெற்ற மகளுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுத்த சாக்ஷியின் தந்தைக்குப் பலரும் தங்களது பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர்.

    • பள்ளி விடுதியில் இரவு மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
    • பாதிக்கப்பட்ட மாணவர்களில் 65 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம், பகுர் மாவட்டம் ஜகாரியாவில் தனியார் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. பள்ளி விடுதியில் இரவு மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராக வயிறு வலிக்கிறது என கூறி உள்ளனர். இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போனது.

    உடனடியாக, பாதிக்கப்பட்ட மாணவர்களில் 65 பேர் மேற்கு வங்காள மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் ராம்பூர்காட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 45 பேர் பகுரியா சுகாதார மையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

    தற்போது மாணவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராஞ்சியில் உள்ளது ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் எனும் பொதுத்துறை நிறுவனம்
    • இட்லி விற்று கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பம் நடத்துகிறார்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியாக, சந்திரயான்-3 எனும் விண்கலனை கடந்த ஜூலை மாதம் 14 அன்று அனுப்பி வைத்தது. திட்டமிட்டபடி அந்த விண்கலன் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தை அடைந்தது.

    சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்கத்தில் பங்கு கொண்டன. அவற்றில் ஒன்று, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் உள்ள ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் (HEC) எனும் பொதுத்துறை நிறுவனம். கனரக இயந்திரங்களின் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்நிறுவனம் செயல்படுகிறது.

    பல வருடங்களாகவே அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சுமார் 18-மாத காலமாக அந்நிறுவனத்தால் சந்திரயான்-3 திட்டத்தில் பங்கெடுத்த அந்நிறுவன ஊழியர்கள் உட்பட தனது 2800 ஊழியர்களுக்கு சம்பளம் தர இயலவில்லை.

    இந்நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களில் ஒரு தொழில்நுட்ப பணியாளர், மத்திய பிரதேச ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா. இவருக்கு மனைவியும், பள்ளிக்கு செல்லும் 2 மகள்களும் உள்ளனர்.

    இவரும் ஏவுதள கட்டுமான வேலைகளில் இஸ்ரோவிற்காக, ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் சார்பில் சந்திரயான்-3 விண்கலனுக்கு மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

    ஆனால், ஹெச்.இ.சி. சம்பளம் தொடர்ந்து கிடைக்காமல் இருந்ததால், நிதி நெருக்கடி அதிகரித்தது. பள்ளியில் மகள்களுக்கு மாதாந்திர கட்டணம் கூட செலுத்த முடியாததால், பள்ளி நிர்வாகம் கெடுபிடி செய்தது. இதனால் மகள்கள் இருவரும் வீட்டிற்கு அழுது கொண்டே வருவார்கள்.

    நெருக்கடி தாங்க முடியாமல் போகவே, ராஞ்சியில் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்டமன்ற கட்டித்திற்கு எதிரே ஒரு சாலையோர உணவகத்தை திறந்து இட்லி விற்பனை செய்கிறார். இதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்துகிறார். காலையில் ஹெச்.இ.சி. நிறுவனத்திற்கு செல்லும் அவர், மாலையில் சாலையோரம் இட்லி விற்று அதில் வரும் வருமானத்தை வீட்டிற்கு கொண்டு செல்கிறார்.

    இந்தியர்கள் நிலவை தொட்டதாக பெருமைப்பட்டு கொள்ளும் அதே வேளையில் அதற்காக பாடுபட்டவர்கள் சாலையோரம் வந்து விட்ட பரிதாப நிலையை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.

    • முன்னாள் முதல்வர் ஷிபு சோரன், 2005 முதல் 2010 வரை மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தார்.
    • எட்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர் தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    79 வயதான ஷிபு சோரனுடன் அவரது மகனும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் மருத்துவமனைக்குச் சென்றார்.

    இதையடுத்து, முதல்வர் ராஞ்சிக்குத் திரும்பினார். அங்கிருந்து ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக ஹசாரிபாக் செல்லவிருந்தார். ஆனால் அவரது ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணம் ரத்தானது.

    கடந் சனிக்கிழமையன்று, ஜி 20 மாநாட்டின்போது ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கிய விருந்தில் முதல்வர் கலந்து கொண்டார். அவருடன் ஷிபு சோரனும் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக சென்றிருந்தார்.

    இந்நிலையில், ஷிபு சோரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜார்க்கண்டு மாநில முதல்வர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறுகையில், " மதிப்பிற்குரிய பாபாவுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் ராஞ்சியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்களின் மேற்பார்வையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    முன்னாள் முதல்வர் ஷிபு சோரன், 2005 முதல் 2010 வரை மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தார். எட்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர் தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.

    • இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை
    • தற்போது 3-வது முறையாக இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

    ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். இவருக்கு அமலாக்கத்துறை நில அபகரிப்புடன் தொடர்புடைய பண மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி 3-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.

    ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி மற்றும் 24-ந்தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது. இரண்டு முறையும் அவர் ஆஜராகவில்லை.

    இதனைத் தொடர்ந்து 3-வது முறையாக இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதற்கிடையே, ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் கலந்த கொள்ளும்படி, ஹேமந்த் சோரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு ஏற்று இன்று இரவு நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் 3-வது முறையாகவும் இன்றும் ஆஜராகமாட்டார் எனத் தெரிகிறது.

    முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஹேமந்த் சோரன், ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் ஜி20 மாநாட்டை முன்னிட்டு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்படுவார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத சுரங்க குற்றச்சாட்டில் கடந்த வரும் நவம்பர் 18-ந்தேதி, அமலாக்கத்துறை, சுமார் 9 மணி நேரம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • ஜேஎம்எம் வேட்பாளர் சுமார் 1,35,480 வாக்குகளையும், என்.டி.ஏ வேட்பாளர் யசோதா தேவி சுமார் 1,18,380 வாக்குகளையும் பெற்றனர்.
    • ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ. இவரது மனைவி பேபி தேவி.

    ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதைதொடர்ந்து இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

    இதில், திரிபுராவில் உள்ள தன்புர், போக்சாநகர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்நிலையில், ஜார்க்கண்டில் உள்ள கிரிதி மாவட்டத்தில் உள்ள தும்ரி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் ஜே.எம்.எம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி) வேட்பாளர் பேபி தேவி 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) வேட்பாளர் யசோதா தேவியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    ஜேஎம்எம் வேட்பாளர் சுமார் 1,35,480 வாக்குகளையும், என்.டி.ஏ வேட்பாளர் யசோதா தேவி சுமார் 1,18,380 வாக்குகளையும் பெற்றதாக தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ. இவர், கடந்த ஏப்ரல் மாதம் இறந்ததை அடுத்து அவரது மனைவி பேபி தேவி, தும்ரி தொகுதியில் போட்டியிட்டார்.

    2004ம் ஆண்டு முதல் அந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய மஹ்தோவுக்கு தனது வெற்றி 'உண்மையான அஞ்சலி' என்று அவர் குறிப்பிட்டார்.

    • மதுபானம் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அதிகாரிகள் சோதனை
    • சில பேருக்கு சொந்தமான மற்ற இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது

    ஜார்க்கண்ட் மாநில நிதி மந்திரியாக இருப்பர் ராமேஷ்வர் ஒராயோன். இவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுபானம் மோசடி தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், சில பேருக்கு சொந்தமான மற்ற இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    ராஞ்சி, தும்கா, தியோகார் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    • ராஞ்சியில் உள்ள 4.55 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளனர்.
    • முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருங்கிய உதவியாளர் என கூறப்படும் அமித் அகர்வால் பயனடைந்துள்ளதாக தகவல்

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில அபகரிப்புடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஆகஸ்ட் 14ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ள மாஃபியாக்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி மாபியாக்கள், அரசு ஊழியர்களுக்கு தொடர்புடைய இடங்கள், ஏழைகள், நலிவடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் நிலத்தை அபகரிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு அதிகாரியுடன் தொடர்புடைய இடங்கள் என 22 இடங்களில் சோதனை நடத்தியது. 

    இதில் ராஞ்சியில் உள்ள 4.55 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருங்கிய உதவியாளர் என கூறப்படும் அமித் அகர்வால் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இந்த பண மோசடி வழக்கில் ஹேமந்த் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. 

    இதேபோல் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், பல்வேறு இடங்களில் நில அபகரிப்பு கும்பலால் பிளாட்டுகள் அபகரிக்கப்பட்டிருப்பது  தெரியவந்தது.

    • வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் விசாரணைக்காக போலீஸ் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
    • சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜார்கண்ட் மாநிலம் மேதினிநகர் மாவட்டத்தில் உள்ள பலமுவில் செயின்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கல்யாண்பூர்-கங்காரி பகுதியில் மொகரம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, மக்கள் ஏந்தப்பட்டு வந்த மூவர்ணக் கொடியில் அசோக சக்கரத்திற்கு பதில் உருது வார்த்தைகளால் மாற்றப்பட்டிருந்தது.

    இதன் வீடியோ சமூக வலைத்த வைரலானது. மேதினிநகர் மாவட்டத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள செயின்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கல்யாண்பூர்-கங்காரி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதற்கு கீழே ஒரு வாள் சின்னம் இருந்தது.

    இந்த காட்சியை வீடியோ எடுத்த மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் விசாரணைக்காக போலீஸ் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காவல்துறை அதிகாரி ரிஷப் கார்க் கூறுகையில், "தேசியக் கொடியை அவமரியாதை செய்வது சட்டப்படி குற்றமாகும். சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    ×