என் மலர்tooltip icon

    ஜார்கண்ட்

    • அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    • சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    ராஞ்சி:

    ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் சோரன் கொண்டுவரப்பட்டார்.

    ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இதற்கிடையே, சம்பாய் சோரன் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், கடந்த 18 மணி நேரமாக மாநிலத்தில் அரசு செயல்படவில்லை. நீங்கள் விரைவில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, மாநிலத்தைக் குழப்பத்திலிருந்து விடுவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சம்பாய் சோரன் இன்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அங்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களையும் அளித்தார்.

    • ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
    • அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    ராஞ்சி:

    ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் சோரன் கொண்டுவரப்பட்டார்.

    இதற்கிடையே, ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், சம்பாய் சோரன் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    தற்போது கடந்த 18 மணி நேரமாக மாநிலத்தில் அரசு செயல்படவில்லை. இங்கு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக இருப்பதால் நீங்கள் விரைவில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, மாநிலத்தைக் குழப்பத்திலிருந்து விடுவிப்பீர்கள் என நாங்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில மக்கள் எதிர்பார்க்கிறோம்.

    மேலும், தம்மை ஆதரிக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்று பெரும்பான்மை ஆதரவு இருப்பதை உறுதிசெய்ய முடியும் என தெரிவித்தார்.

    • 2000 மற்றும் 2014-ம் ஆண்டுகளுக்கு இடையில் ஜார்கண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி 3 முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
    • பா.ஜ.க.வின் ரகுபர்தாஸ் மட்டும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவி வகித்து உள்ளார்.

    இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலம் கனிம வளங்கள் நிறைந்த ஒரு மாநிலம் ஆகும். இங்கு ஏராளமான சுரங்கங்கள் உள்ளன. ஜார்கண்ட் சுரங்கங்களின் மாநிலம் என அழைக்கப்படுகிறது.

    இருந்த போதிலும் அரசியலில் இந்த மாநிலம் ஒரு கண்ணி வெடியாக உள்ளது. 23 ஆண்டுகால வரலாற்றில் 12 முதல்- மந்திரிகளையும், 3 முறை ஜனாதிபதி ஆட்சியையும் இந்த மாநிலம் கண்டுள்ளது. ஜார்கண்ட் மாநில முதல் மந்திரிகள் சராசரியாக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்துள்ளனர்.

    சுயேட்சை வேட்பாளரை முதல்-மந்திரியாக கொண்ட மாநிலம் என்ற சிறப்பையும் இதுபெற்று உள்ளது. அந்த முதல்வர் 2 ஆண்டுகள் நீடித்தார்.

    எல்லாவற்றிலும் மிகவும் ஆச்சரியமானது சிபுசோரனின் கதை.

    பீகாரில் இருந்து ஜார்கண்ட் தனிமாநிலம் உருவாக்கப்படுவதில் மிக முக்கியமான தலைவராக கருதப்படுகிறார் சிபு சோரன். முதல்-மந்திரியாக பதவியேற்றவுடன் அந்த நாற்காலியில் 10 நாட்கள் மட்டுமே அவரால் அமர முடிந்தது.

    'குருஜி' என்று குறிப்பிடப்படும் சிபுசோரன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார். இவர் நிலமோசடியில் அமலாக்கத்துறையால் பதவி விலகிய முன்னாள் முதல்- மந்திரி ஹேமந்த் சோரனின் தந்தை ஆவார்.

    அரசியல் ஸ்திரமின்மை மற்றும் ஆட்சி மாற்றங்களால் அடையாளப்படுத்தப்பட்ட மாநிலமான ஜார்கண்ட் தற்போது 12-வது முதல்- மந்திரியை பெற்று உள்ளது.

    2000-ம் ஆண்டு நவம்பர்-15 ல் ஜார்க்கண்ட் மாநில அந்தஸ்தை பெற்றதில் இருந்து பார்த்த அரசியல் ஓட்டத்தின் ஒரு பகுதி ஹேமந்த் சோரன்.

    இவரும் அவரது தந்தை சிபுசோரனைப் போலவே, ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கைது செய்யப்பட்ட 3-வது முதல்- மந்திரி ஆவார்.

    2000 மற்றும் 2014-ம் ஆண்டுகளுக்கு இடையில் ஜார்கண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி 3 முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. பா.ஜ.க.வின் பாபுலால் மராண்டி ஜார்கண்ட் முதல் மந்திரியாக 2 ஆண்டு 3 மாதங்கள் அதிகாரத்தில் இருந்தார்.

    அர்ஜுன் முண்டா, சிபுசோரன், மதுகோடா, ஹேமந்த் சோரன் 2000 மற்றும் 2024-ம் ஆண்டுகளுக்கு இடையில் 15 மாதங்கள் சராசரியாக ஆட்சியில் இருந்தனர்.

    ஜார்கண்ட் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஜனாதிபதி ஆட்சி 3 முறை மொத்தம் 645 நாட்கள் அமலில் இருந்து உள்ளது.

    பா.ஜ.க.வின் ரகுபர்தாஸ் மட்டும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவி வகித்து உள்ளார்.

    2014-க்குப்பிறகு ஜார்கண்ட் நிலையானதாக மாறியது. 2019-ல் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். 2019- சட்டசபை தேர்தலுக்கு பின்னர், பா.ஜ.க.வின் அர்ஜுன் முண்டா மத்திய அரசில் பணிபுரிய டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.

    ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு ஜேஎம்எம், காங்கிரஸ் மற்றும் 3 கட்சிகளால் அமைக்கப்பட்டது.

    ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டு காலத்தை முடிக்க பெரும்பாலான நாட்கள் இருந்தாலும், ஹேமந்த் சோரன் முழு 5 ஆண்டு ஆட்சியை முடிக்க முடியாத முதல்-மந்திரியின் நீண்ட பட்டியலில் இணைந்து உள்ளார்.

    • எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் காவல்துறையினர் ஊழல் வழக்குகளை விசாரிப்பதில்லை.
    • அப்படி விசாரித்திருந்தால் ஊழல் நடைபெற்றதை கண்டு பிடித்திருப்பார்கள்.

    அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவை எதிர்க்கட்சி தலைவர்கள் குறிவைத்து சோதனையில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

    நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று விசாரணைக்கு ஆஜராக சரத் பவார் கட்சியின் எம்.எல்.ஏ.-வும், அவரது உறவினருமான ரோகித் பவாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ரோகித் பவார் ஏற்கனவே அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி பதில் அளித்துள்ளார்.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் நிலை குறித்து பா.ஜனதா எம்.பி. ஜெயந்த் சின்ஹா கூறுகையில் "எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை. உண்மை என்னவென்றால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள காவல்துறையினர் ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதில்லை. அவர்கள் விசாரணை நடத்தியிருந்தால், ஊழல் நடத்திருப்பதை கண்டு பிடித்திருப்பார்கள்" என்றார்.

    • ஏழுமணி நேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.
    • ஹேமந்த் சோரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழு மணி நேர விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். இதற்கிடையில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    நேற்றிரவு கைது செய்யப்பட்டதும் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இது ஒரு பிரேக். வாழ்க்கை ஒரு மிகப்பெரிய போர். ஒவ்வொரு கணமும் நான் போராடினேன். ஒவ்வொரு கணமும் போராடுவேன். ஆனால், சமரசம் செய்ய மண்டியிடமாட்டேன். வெற்றியோ, தோல்வியோ நான் பயப்படமாட்டேன். நான் தோல்வியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • ஏழு மணி நேர விசாரணைக்குப்பின் ஹேமந்த் சோரன் கைது.
    • சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன். நேற்று இவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் ஏழு மணி சோதனைக்குப்பின் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக நேற்றிரவு அவசரமாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்கிறது. பொறுப்பு தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி அனுபா ராவத் சவுத்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்கிறது.

    ஹேமந்த் சோரன் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக ஆளுநர் மாளிகை சென்று, ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரும் ராஜினாமா செய்து கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற தலைவராக சம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சியமைக்க உரிமைக்கோரியும் ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.

    இதனால் சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    • முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
    • சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

    ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் ஹேமந்த் சோரன் கொண்டுவரப்பட்டார். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பாய் சோரன் பற்றிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

    81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி துவங்கப்பட்ட காலத்தில் இருந்து, ஹேமந்த் சோரனின் தந்தை ஷிபு சோரனுடன் கட்சியில் இருந்து வருபவர் சம்பாய் சோரன்.

    தற்போது ஜார்கண்ட் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பழங்குடியினர், பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர், நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். சம்பாய் சோரனின் தந்தை சிமல் சோரன் விவசாயி ஆவார். இவர் சரைகேளா கார்சவான் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

    "எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பா.ஜ.க. அரசு மத்திய அமைப்புகளை கொண்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைக்க நினைக்கிறது. ஆனால், நாங்கள் அதற்கு இடம்கொடுக்க மாட்டோம்," என சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார். 

    • அமலாக்கத்துறை காவலில் இருப்பதாக தகவல்.
    • அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ராஜினாமா கடிதம் கொடுக்க ஆளுநர் மாளிகை சென்றதாக தகவல்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பலமணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று இரவு ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதனால் புதிய முதல்வராக சம்பாய் தேர்வாக உள்ளார்.

    இந்த நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.பி. மஹுவா மஜி "ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் காவலில் (Custody) உள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன்தான் ஹேமந்த் சோர்ன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சென்றார். சாம்பாய் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். எங்களுக்கு போதுமான எண்ணிக்கை உறுப்பினர்கள் உள்ளனர்" என்றார்.

    அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த் சோரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையால் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி.
    • இதனால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வந்தார். இவருக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. 10-வது முறையாக சம்மன் அனுப்பி இன்று அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் அவரது மனைவியை முதல்வராக்கலாம் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி இன்று இரவு ஹேமந்த் சோரன் ஆளுநர் மாளிகை சென்றார். அவருடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்.எல்.ஏ.-க்களும் ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

    இதற்கிடையே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை காங்கிரஸ் கட்சியும் உறுதி செய்துள்ளது. இந்தநிலையில் சம்பாய் சோரன், தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி ஆளுநரிடம் உரிமைக்கோரியுள்ளார். தனக்கு 43 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதற்கான கடிதத்தையும் வழங்கியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து ஆளுநர் அழைப்புவிடுக்கும் நிலையில் புதிய முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • டெல்லியில் நேற்றுமுன்தினம் 13 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
    • சொகுசு கார் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

    ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். பணமுறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. 8 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    9-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டபோது எனது வீட்டில் வைத்து விசாரணை நடத்தப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தார். அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிம் விசாரணை நடத்தினர்.

    அதனைத்தொடர்ந்து ஜனவரி 27-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்குள் ஆஜராகி பதில் அளிக்கும்படி 10-வது முறையாக சம்மன் அனுப்பியது.

    இன்று ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். சுமார் 13 மணி நேரம் சோதனை நீடித்துள்ளது. அப்போது சொகுசு கார் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்துவதாகவும், தனக்கும் தன்னைத் சார்ந்த சமூகத்தினருக்கும் களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக எஸ்.சி./எஸ்.டி. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அமலாக்கத்துறை அதிகாரிகளின் செயல்களால் நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் பெரும் மன உளைச்சல், உளவியல் பாதிப்பை எதிர்கொள்வதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் கைப்பற்றப்பட்ட காரின் உரிமையாளர் நான் இல்லை. அதேபோல் கைப்பற்றதாக கூறப்படும் பணம் என்னுடைய அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

    இன்று ராஞ்சியில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஹேமந்த் சோரன் ஆதரவாளர்கள் மொராபதி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஜார்னா பால் கூறுகையில் "ஹேமந்த் சோரன் குறிவைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் பழங்குடியினர் என்பதால். ஆனால் அவர் எங்களுக்கு கடவுள் போன்றவர். அவருக்காக எந்த எல்லை வரும் செல்வோம். அவர் ஜெயிலுக்கு சென்றால் அவருடன் நாங்களும் சிறைக்குச் செல்வோம்" என்றார்.

    • ஹேமந்த் சோரன் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.
    • 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கூடுதலாக குவிப்பு.

    ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் ராஞ்சி இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்.

    இந்நிலையில், ஹேமந்த் சோரன் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    மேலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் மாநில தலைநகரை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

    ஜார்கண்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ஹேமந்த் சோரனிடம் கடந்த 20-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • 7 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு அதை வீடியோவில் பதிவு செய்தனர்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் நிலம் மோசடி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் பணப்பரி மாற்றத்தைச் செய்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதுதொடர்பாக கடந்த 20-ம் தேதி அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு அதை வீடியோவில் பதிவு செய்தனர்.

    ஹேமந்த் சோரன் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக அவருக்கு அடுத்தடுத்து 8 தடவை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவற்றுக்கு சோரன் பதில் அளிக்கவில்லை.

    விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் ஜனவரி 29-ம் தேதி அல்லது 31-ம் தேதி வீட்டுக்கு விசாரணைக்கு வருவதாக அமலாக்கத் துறையினர் கடிதம் அனுப்பினர். இதற்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விசாரணை என்ற பெயரில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி இருந்தார்.

    இதற்கிடையே, முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த கடந்த சனிக்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார். தெற்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அவர் தங்கியிருந்தார். தகவலறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் சில நிமிடங்களுக்கு முன் ஹேமந்த் சோரன் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதையடுத்து அவரது உதவியாளர்கள் தொலைபேசியிலும் அமலாக்கத் துறையினர் தொடர்பு கொண்டனர். ஆனால் அனைத்து செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன.

    என்றாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிலேயே காத்திருந்தனர். சுமார் 18 மணி நேரம் அவர்கள் காத்திருந்த நிலையில் ஹேமந்த் சோரன் திரும்பி வரவில்லை. அவர் அன்று மாலை டெல்லியில் இருந்து ராஞ்சி திரும்ப விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். விமான நிலையத்துக்கும் அவர் வரவில்லை. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டெல்லி மாநில எல்லைகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டது.

    என்றாலும் ஹேமந்த் சோரன் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவரை தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஹேமந்த் சோரன் காரில் வந்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்துமாறு டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா உள்பட பல்வேறு மாநில போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே டெல்லியில் ஹேமந்த் சோரன் வீட்டில் சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்தக் காரை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். அது யார் கார், அது எப்படி அங்கு வந்தது என்பது பற்றி விசாரணை நடந்துவருகிறது.

    அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணை தொடர்பாக முதல் மந்திரி ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் சட்ட ரீதியாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டது. எனவே அவர் அமலாக்கத்துறை வளையத்துக்குள் செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து தப்பவே ஹேமந்த் சோரன் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

    ஹேமந்த் சோரன் இன்று காலை வரை எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனும் தகவல்களை கேட்டறிந்தார். தன்னை அம லாக்கத் துறையினர் கைது செய்தால் ஹேமந்த் சோரன் தனது மனைவியை முதல் மந்திரியாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அருகே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 100 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ×