என் மலர்
பீகார்
- ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மெகா கூட்டணி அமைத்தன.
- நிதிஷ்குமார் பீகார் மாநில முதல் மந்திரியாக 8-வது முறையாக நாளை பதவியேற்க உள்ளார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் இன்று அறிவித்தார்.
அதன்பின், ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து தமது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாகவும் கடிதம் கொடுத்தார்.
இதற்கிடையே, ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது.
இதையடுத்து, பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும் மாநில முதல் மந்திரியாகவும் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் தமது கூட்டணியின் 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார்.
இந்நிலையில், பாட்னாவில் நாளை மதியம் 2 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக 8-வது முறையாக பதவியேற்க உள்ளார்.
- பீகார் அரசியலில் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார்.
- ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.
பாட்னா:
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், ஆளுநரைச் சந்தித்து தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
அதே நேரம், 160 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மெகா கூட்டணி மூலம் மீண்டும் பீகாரில் புதிய ஆட்சியை நிதீஷ்குமார் அமைக்க உள்ளார்.
கவர்னருடனான சந்திப்புக்கு பிறகு நிதிஷ் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ளேன். தனது கட்சியின் அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த முடிவு கட்சியின் முடிவு என கூறினார்.
ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.
இதற்கிடையே, பீகாரில் மகாபந்தன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், பீகாரில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரி நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்விஆகியோர் ஆளுநரை சந்தித்தனர்.
160 சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் ஆட்சி அமைப்பதற்கு அழைக்கும்படியான கடிதத்தை அளித்தனர்.
நிதிஷ்குமார் கூட்டணிக்கு ஜித்தன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.
- பீகார் அரசியலில் திடீர் திருப்பமாக முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்.
- இதன்மூலம் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார்.
பாட்னா:
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. இடையிலான உறவு சமீப காலமாக சீராக இல்லை. பீகார் மாநில பா.ஜ.க. தலைவர்கள் அவ்வப்போது நிதிஷ்குமாரை விமர்சித்து வருகிறார்கள்.
மத்திய மந்திரி சபையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அதிக இடங்களை அளிக்க வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலுடன் பீகார் சட்டசபைக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிதிஷ்குமார் வைத்திருந்தார். இதில் மத்திய மந்திரி சபையில் அதிக இடம் என்ற நிதிஷ்குமாரின் கோரிக்கையை பா.ஜ.க. மறுத்துவிட்டது.
இதையடுத்து பா.ஜ.க. தலைமையிலான மந்திரி சபையில் இனி சேரப்போவது இல்லை என ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது. மேலும் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியது.
இதற்கிடையே, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஐக்கிய ஜனதா தளம் அரசை ஆதரிக்கத் தயார் என லல்லுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், பீகார் முதல் மந்திரி பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் பாகு செளகானைச் சந்தித்து வழங்கினார். இதன்மூலம் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார்.
- பீகார் மாநில பா.ஜனதா தலைவர்கள் அவ்வப்போது நிதிஷ் குமாரை விமர்சித்து வருகிறார்கள்.
- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நிதிஷ்குமார் சமீபத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
பாட்னா:
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
பா.ஜனதாவுக்கு 77 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா அதிக இடங்களில் வென்றாலும் தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி நிதிஷ்குமார் முதல்-மந்திரி ஆனார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா இடையிலான உறவு சமீபத்தில் சீராக இல்லை. பீகார் மாநில பா.ஜனதா தலைவர்கள் அவ்வப்போது நிதிஷ் குமாரை விமர்சித்து வருகிறார்கள்.
மத்திய மந்திரிசபையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு அதிக இடங்களை அளிக்க வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலுடன் பீகார் சட்டசபைக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிதிஷ்குமார் வைத்திருந்தார்.
இதில் மத்திய மந்திரி சபையில் அதிக இடம் என்ற நிதிஷ்குமாரின் கோரிக்கையை பா.ஜனதா மறுத்துவிட்டது. இதையடுத்து பா.ஜனதா தலைமையிலான மந்திரி சபையில் இனி சேரப்போவது இல்லை என்று ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது.
மேலும் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி செய்வதாகவும், அதற்காக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆர்.சி.பி. சிங்கை பா.ஜனதா வளைக்க முயற்சிப்பதாகவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் சந்தேகித்தனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.யாக இருந்தனர். சி.பி. சிங்கின் பதவிக்காலம் முடிந்தது. ஆனால் அவருக்கு நிதிஷ்குமார் மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் அவருக்கு கட்சி சார்பில் நோட்டீசும் அனுப்பப்பட்டது. இதனால் ஆர்.சி.பி.சிங் சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அழைத்த 4 கூட்டங்களில் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை. ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழா, புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பதவி ஏற்பு விழா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் உள்ளிட்ட 4 கூட்டங்களை நிதிஷ்குமார் புறக்கணித்தார். இதனால் அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி செல்வதாக கூறப்பட்டது.
ஐக்கிய ஜனதா தளம் பா.ஜனதா இடையே விரிசல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இரு கட்சியினரும் பாட்னாவில் நேற்று முன்தினம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி விரிவான ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அடுத்த 48 மணி நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினையில் தீர்வு காண பீகார் துணை முதல் மந்திரி தர்கிஷோர் பிரசாத் தலைமையில் பா.ஜனதா பிரதிநிதிகள் முதல்-மந்திரி நிதிஷ் குமாரை சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர்.
பீகாரில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகலாம் என்ற பரபரப்பான சூழ்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டத்துக்கு நிதிஷ்குமார் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம் பாட்னாவில் இன்று தொடங்கியது. இதில் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பதா அல்லது விலகுவதா என்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஐக்கிய ஜனதாதளம் அரசை ஆதரிக்க தயார் என்று ஏற்கனவே லல்லுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சிகள் அறிவித்துள்ளன. எனவே பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி லல்லு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நிதிஷ்குமார் சமீபத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. எனவே நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியேறினால் அவருக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இறுதியில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகலாமா என்றும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது. இதனால் பீகாரில் இன்று பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
- பா.ஜனதாவுக்கு எதிராக போராடுவதில் எங்கள் கட்சி உறுதியாக உள்ளது.
- காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏ.க்களும், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சிக்கு 12 எம்.எல்.ஏ.க்களும் உள்ளன.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கட்சிகள் இடையே மோதல் முற்றி உள்ள நிலையில் பா.ஜனதாவுடனான உறவை கைவிட்டால் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்க தயார் என்று லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சி தெரிவித்துள்ளது.
பீகார் சட்ட சபையில் லாலுபிரசாத்துக்கு 80 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனாலும் அங்கு லாலுவின் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. 77 இடங்களை பெற்ற பா.ஜனதா கட்சியின் ஆதரவுடன் 45 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்ட நிதிஷ்குமார் ஆட்சியை பிடித்தார்.
அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏ.க்களும், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சிக்கு 12 எம்.எல்.ஏ.க்களும் உள்ளன. ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பது தொடர்பாக லாலு கட்சியின் துணை தலைவர் சிவானந்த் திவாரி கூறியதாவது:-
பா.ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் தனித்தனியாக தங்கள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதன் மூலம் அந்த கட்சிகளுக்குள் மோதல் இருப்பது தெரிகிறது. பா.ஜனதா கட்சியுடனான உறவை நிதிஷ்குமார் கைவிட்டால் அவரது கட்சியுடன் கூட்டணி அமைக்க ராஷ்டீரிய ஜனதா தளம் தயாராக உள்ளது.
பா.ஜனதாவுக்கு எதிராக போராடுவதில் எங்கள் கட்சி உறுதியாக உள்ளது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எங்களுடன் இணைந்து பா.ஜனதாவுக்கு எதிராக போராட முன் வந்தால் அவரை ஏற்றுக் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் 12 எம்.எல்.ஏ.க்களை கொண்ட மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சியும் ஐக்கிய ஜனதா தளத்தை ஆதரிக்க தயார் என்று தெரிவித்துள்ளது. தற்போது மோதல் நீடித்து வரும் நிலையில் எந்த நேரத்திலும் பா.ஜனதா-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்து ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி ஆட்சி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மத்திய அமைச்சரவையில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் சேராது.
- பாஜகவுடனான ஐக்கிய ஜனதாதள உறவு நன்றாக இருக்கிறது.
பாட்னா:
பீகாரில் ஆளும் கட்சியாக உள்ள நிதிஷ்குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதாதளத்துடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. அம்மாநிலத்தில் வலுவான ஆளும் கட்சி கூட்டணியாக இது கருதப்பட்ட நிலையில், அண்மை காலமாக இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பீகாரில் உச்சநிலையில் இருந்தபோது அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அந்த திட்டத்தை ஆதரித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் என்ற முறையில் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை.
மத்திய அமைச்சரவையில் அக்கட்சியின் சார்பில் இடம் பெற்றிருந்த ஆர்.சி.பி.சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடைந்ததால், தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் மத்திய அமைச்சரவையில் யாரும் இடம் பெறவில்லை.

இந்நிலையில் பாட்னாவில் நேற்று ஐக்கிய ஜனதாதள தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர மாட்டோம். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்திய அமைச்சரவையில் இணைவதில்லை என்று முடிவு செய்தோம். அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மத்திய அமைச்சரவையில் சேரக்கூடாது என்ற முடிவை எங்கள் தலைவர் நிதீஷ் குமார் எடுத்தார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து நீங்கள் முதலமைச்சரிடம் கேட்க வேண்டும். பாஜகவுடனான எங்கள் கட்சியின் உறவு சரியாக உள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஐக்கிய ஜனதாதளம் ஆதரவளித்தது. கூட்டணி தொடர்பான எங்களின் உறுதிப்பாட்டை இதைவிட வலுவாக நிரூபிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் இந்த கள்ளச்சாராய பலிகள் நடந்துள்ளன.
- பீகாரில் 2016-ம் ஆண்டு முதல் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது.
சாப்ரா:
பீகாரில் கடந்த வருடம் நவம்பர் மாதம் கள்ளச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதே போன்று மீண்டும் ஒரு துயர சம்பவம் பீகாரில் அரங்கேறி உள்ளது. கள்ளச்சாராயத்திற்கு 7 பேர் பலியாகி உள்ளனர். மாகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் இந்த கள்ளச்சாராய பலிகள் நடந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் அவர்களது ஊரிலேயே இறந்துள்ளனர். 2 பேர் பாட்னா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இறந்தனர். மேலும் பலர் மோசமாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கண்பார்வை பறிபோய்விட்டது தெரியவந்துள்ளது.
இறந்தவா்கள் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலும், பிரேதபரிசோதனை செய்யாமலும் பலர் இறுதிச்சடங்கு செய்துவிட்டதால் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கையை உறுதிபட தெரிவிக்க முடியவில்லை என்றும் போலீசார் கூறினர். பீகாரில் 2016-ம் ஆண்டு முதல் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அக்னிபாத் போராட்டகாரர்களை அவர் பயங்கரவாதிகள் என கூறியிருந்தார்.
- முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிரான அவரது கருத்து தலைப்புச் செய்தியானது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜகவை சேர்ந்த அமைச்சர் ராம் சூரத் ராயின் சர்ச்சை பேச்சுக்கள் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து வருகின்றன.
கடந்த மாதம், 100 க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு குறித்து முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக அவர் தெரிவித்திருந்த கருத்துகள் அம்மாநில தலைப்புச் செய்திகளாக மாறின. அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ரயில்களுக்கு தீ வைத்தவர்களை, அவர் பயங்கரவாதிகள் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் முசாப்பூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அமைச்சர் ராம் சூரத் ராய், அங்கிருந்தவர்களை பார்த்து, பிரதமர் மோடியால்தான், நீங்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கொரோனா ஏற்படுத்திய பேரழிவை பாருங்கள் என்றும், மோடியின் தடுப்பூசி மற்றும் பொருளாதார பிரச்சினைகளை அவர் திறமையாக கையாண்டதன் மூலம் நாம் அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதல்வர் நிதிஷ் குமாருக்கு இந்த ஆண்டு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது இது இரண்டாவது முறையாகும்.
- அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் நிதிஷ் குமாருக்கு இந்த ஆண்டு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக இந்த ஆண்டு ஜனவரியிலும், கொரோனா தொற்று உறுதியானது.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2-3 நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.
- வெடிவிபத்தில் வீட்டின் ஒரு பகுதி முழுவதும் வெடித்து சிதறியது.
- தடயவியல் குழு மற்றும் வெடிகுண்டு செயலிழக்கப் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள கைரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள குதாய் பாக் கிராமத்தில் பட்டாசு வியாபாரி ஒருவரின் வீட்டில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். படுகாயமடைந்த 8 பேரும் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட தொழிலதிபர் ஷபீர் உசேன் என அடையாளம் காணப்பட்டார். இந்த வெடிவிபத்தில் வீட்டின் ஒரு பகுதி முழுவதும் வெடித்து சிதறியது. மீதமுள்ள பகுதி தீப்பற்றி எரிந்தது.
ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீட்டின் பெரும் பகுதி இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சரண் மாவட்ட போலீஸ் அதிகாரி சந்தோஷ் குமார் கூறியதாவது:-
சாப்ராவில் வெடிப்பொருள் வெடித்து வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் இறந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கப்பட்டனர். வெடிப்புக்கான காரணத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். தடயவியல் குழு மற்றும் வெடிகுண்டு செயலிழக்கப் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.
வெடி சம்பவம் நடந்த வீட்டிற்குள் தயாரிக்கப்படும் பட்டாசுகள் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து வெடிக்கும் சத்தம் கேட்டது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விமானம் புறப்பட இருந்த நிலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்,
- பயணிகள் வெளியேற்றப்பட்ட பின்னர் விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது.
பாட்னா:
இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று நேற்றிரவு 8.20 மணிக்கு, பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார், விமானம் முழுவதையும் சோதனை இடப்பட்டது.

இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில் அது புரளி என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு புரளியை கிளம்பியதாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த விமானம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- குழந்தையை ஆசிரியர் தாக்குவதைப் பார்த்த மற்ற குழந்தைகள் பயத்தில் உறைந்துள்ளனர்.
- வீடியோ வைரலான நிலையில், குழந்தையின் குடும்பத்தினரின் கவனத்திற்கும் சென்றது.
பாட்னா:
பீகார் மாநிலம் தனருவா பகுதியைச் சேர்ந்த அமர் காந்த் என்ற சோட்டு என்பவர் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இவர் தன்னிடம் படித்த 5 வயது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஆசிரியர் கம்பால் குழந்தையை கடுமையாக தாக்குகிறார். கம்பு உடைந்ததும் தலைமுடியைப் பிடித்து இழுத்து கைகளால் சரமாரியாக தாக்குகிறார். தன்னை விட்டுவிடும்படி குழந்தை அழுதுகொண்டே கெஞ்சியும் விடவில்லை. இதைப் பார்த்த மற்ற குழந்தைகள் பயத்தில் உறைந்துள்ளனர். ஆசிரியரைத் தடுக்கவோ, சக மாணவனை விட்டுவிடும்படி கூறவோ அவர்களால் முடியாத நிலை.
இந்த வீடியோ வைரலான நிலையில், குழந்தையின் குடும்பத்தினரின் கவனத்திற்கும் சென்றது. உடனடியாக அவர்கள் பயிற்சி மையத்திற்கு சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர் குழந்தையின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டியூசன் ஆசிரிர் அமர் காந்தை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் அமர் காந்த், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அதிகமாக டென்சன் ஆவார் என கூறப்படுகிறது. அவரது டியூசன் சென்டரில் 45 குழந்தைகள் படித்துவருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.






