என் மலர்tooltip icon

    பீகார்

    • முதல் மந்திரி நிதிஷ்குமார் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது.
    • கயா நகரில் நிலவிய மோசமான வானிலையால் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார்.

    அப்போது அப்பகுதியில் திடீரென மோசமான வானிலை ஏற்பட்டது. இதையடுத்து, நிதிஷ்குமாரின் ஹெலிகாப்டர் கயா மாவட்டத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

    முதல் மந்திரியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முதல் மந்திரி நிதிஷ்குமார் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்தார்.
    • அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். இச்சந்திப்பின் போது லாலுவின் மகன்கள் உடனிருந்தனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பா.ஜ.க உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டது. இதையடுத்து, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்தார் அக்கட்சி தலைவரான நிதிஷ்குமார்.

    தொடர்ந்து, பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.

    இதற்கிடையே, டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ் வீடு திரும்பினார்.

    இந்நிலையில், முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார். அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்தச் சந்திப்பின் போது லாலுவின் மகன்கள் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லல்லு பிரசாத் யாதவின் இன்னொரு மகனும், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவின் சகோதரருமான தேஜ்பிரதாப் யாதவும் மந்திரியாக பதவியேற்றார்.
    • பீகார் மந்திரி சபையில் இதுவரை 33 பேர் பொறுப்பு வகித்து வருகிறார்கள்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பா.ஜனதாவுடனான உறவை ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் துண்டித்தார்.

    அவர் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மெகா கூட்டணியுடன் மீண்டும் இணைந்தார். அவர்களுடன் சேர்ந்து நிதிஷ்குமார் பீகாரில் புதிய ஆட்சியை அமைத்தார்.

    ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி அரசு கடந்த 10-ந்தேதி பதவியேற்றது. நிதிஷ் குமார் முதல்-மந்திரியாகவும், தேஜஸ்வியாதவ் துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றனர்.

    இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இந்த மந்திரி சபையில் 36 பேர் வரை மந்திரிகளாக இருக்க உச்சவரம்பு இருக்கிறது. இதில் 31 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றனர். காலை 11.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பகுசவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    லல்லுபிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியினரே மந்திரி சபையில் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். பதவியேற்ற 31 பேரில் 16 மந்திரிகள் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சியில் 2 பேரும், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவை சேர்ந்த ஒருவரும், சுயேட்சையை சேர்ந்த ஒருவரும் மந்திரிகளாக பதவியேற்றனர்.

    இந்த மெகா கூட்டணியில் இடம் பெற்று இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் மந்திரி சபையில் இடம் பெறவில்லை.

    லல்லு பிரசாத் யாதவின் இன்னொரு மகனும், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவின் சகோதரருமான தேஜ்பிரதாப் யாதவும் மந்திரியாக பதவியேற்றார்.

    பீகார் மந்திரி சபையில் இதுவரை 33 பேர் பொறுப்பு வகித்து வருகிறார்கள். புதிய அரசு வருகிற 24-ந்தேதி சட்டசபையில் மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.
    • இந்நிலையில், பீகார் மாநில அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை நடைபெறுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார். ஆளுநர் பஹு சவுகானை நேரில் சந்தித்து தமது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்தது. பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும் மாநில முதல் மந்திரியாகவும் நிதிஷ்குமார் தேர்வானார்.

    இதற்கிடையே, பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.

    இந்நிலையில், பீகார் மாநில அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் பெருமளவு நிதிஷ் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்.

    • பீகார் மக்களுக்கு மட்டும் சேவையாற்ற விரும்புகிறேன்.
    • பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையை உருவாக்க முயற்சி.

    பீகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், காங்கிரஸ் ஆதரவுடன் மெகா கூட்டணியின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. பாட்னாவில் இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரதமர் பதவி மீது ஆசையில்லை என்றும், பீகார் மக்களுக்கு மட்டும் சேவையாற்றவே விரும்புகிறேன் எனவும் கூறினார்.

    எனினும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்க, தமது பங்களிப்பதை செலுத்த ஆவலுடன் இருப்பதாக கூறினார்.இது தொடர்பாக தம்மை பல தலைவர்கள் தொடர்பு கொண்டு வருவதாகவும், வரும் நாட்களில் இதற்கான நடவடிக்கைகளை பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

    பீகாரில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு புதிய ஆட்சியைப் அமைத்துள்ள மெகா கூட்டணிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் மக்கள் அதற்கு பதில் அளிப்பார்கள் என்றும் நிதிஷ்குமார் குறிப்பிட்டார்.

    முன்னதாக நிதிஷ்குமார் துணை ஜனாதிபதியாக விருப்பம் தெரிவித்ததாக, அம்மாநில பாஜக மூத்த தலைவர் சுசில்குமார் மோடி தெரிவத்திருந்தார். இதை மறுத்த நிதிஷ்குமார் அது பொய், தமக்கு அந்த பதவி மீது ஆசையே இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நிதிஷ்குமார், பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.
    • எனக்கு துணை ஜனாதிபதி பதவி மீது ஆசையே இல்லை.

    பாட்னா :

    பீகார் மாநிலத்தில் பா.ஜனதா ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடத்திய நிதிஷ்குமார், பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.

    இதுபற்றி கருத்து தெரிவித்த பீகாரை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி, நிதிஷ்குமார் துணை ஜனாதிபதி ஆக விருப்பம் தெரிவித்ததாகவும், அதை பா.ஜனதா நிறைவேற்றாததால் அவர் கூட்டணியை விட்டு விலகி விட்டதாகவும் கூறினார்.

    இந்நிலையில், நேற்று பாட்னாவில் நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சுஷில்குமார் மோடி பெயரை குறிப்பிடாமல் பதில் அளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    இந்த மனிதர் (சுஷில்குமார் மோடி) நான் துணை ஜனாதிபதி ஆக விருப்பம் தெரிவித்தேன் என்று கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். என்ன ஒரு ஜோக். அது பொய். எனக்கு துணை ஜனாதிபதி பதவி மீது ஆசையே இல்லை.

    ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில் நாங்கள் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களைத்தான் ஆதரித்தோம்.

    அவர் எந்த முக்கியமான பதவியிலும் இல்லாததால், என்னை விமர்சிப்பதன் மூலம் அவருக்கு ஏதாவது கிடைக்கலாம்.

    அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீகாரில் ஆட்சி மாறியும் சபாநாயகர் விஜயகுமார் சின்கா ராஜினாமா செய்யவில்லை.
    • அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 24ம் தேதி ஓட்டெடுப்பு நடைபெறுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார். ஆளுநர் பஹு சவுகானை நேரில் சந்தித்து தமது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்தது. பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும் மாநில முதல் மந்திரியாகவும் நிதிஷ்குமார் தேர்வானார். இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரி, தமது கூட்டணியின் 164 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.

    இதற்கிடையே, பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.

    நிதிஷ்குமார் ஆட்சியில் இருந்தபோது பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜயகுமார் சின்கா சபாநாயகராக நியமிக்கப்பட்டார். தற்போது ஆட்சி மாற்றத்துக்கு பிறகும் விஜயகுமார் சின்கா ராஜினாமா செய்யவில்லை. இதனால் அவரை நீக்குவதற்காக ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர். அதை சட்டசபை செயலகத்தில் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக 24-ம் தேதி சட்டசபை கூடுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தவுடன் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்கும் என தெரிகிறது. ஆளும் கூட்டணிக்கு 164 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் தீர்மானம் எளிதில் நிறைவேறும் என தெரிகிறது.

    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.
    • நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு புத்துயிரூட்டுவேன்.

    8-வது முறையாக பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் நேற்று மீண்டும் பதவியேற்றார். பதவி ஏற்புக்கு பிறகு, கவர்னர் மாளிகையில் நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக விமர்சித்தார்.அவர் கூறியதாவது:-

    எதிர்காலம் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், 2014-ம் ஆண்டு பதவிக்கு வந்தவர் (மோடி), 2024-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார்.

    நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு புத்துயிரூட்டுவேன். எதிர்க்கட்சிகளே இருக்காது என்று சொன்னவர்கள், நிதிஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.

    2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் சேர்ந்து போட்டியிட்டபோது, எங்கள் கட்சியின் பலம் குறைந்தது. ஆனால், 2015-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் சேர்ந்து போட்டியிட்டபோது, எங்கள் பலம் நன்றாக இருந்தது.

    கடந்த இரண்டரை மாதங்களில் நடந்த அரசியல் நிகழ்வுகள் அனைவருக்கும் தெரியும். உரிய நேரத்தில் உண்மைகளை அம்பலப்படுத்துவேன். விரைவில் சட்டசபையை கூட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    • தேஜஸ்வி யாதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் விசாரணை தொடங்கி உள்ளது.

    பீகார் மாநிலத்தில் திடீர் அரசியல் திருப்பமாக பாஜகவுடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 7 கட்சிகள் இணைந்த புதிய மெகா கூட்டணி சார்பில் முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

    துணை முதல்வராக லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். இருவருக்கும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நிதிஷ்குமார் குடியரசு துணைத் தலைவராக விரும்பினார் என்று பாஜக மூத்த தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தமது டூவிட்டர் பதிவில், நிதிஷ்குமாருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று அவரது கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலர் தம்மிடம் வலியுறுத்தி வந்தனர், அவர் குடியரசு துணைத் தலைவர் ஆனால், நீங்கள் பீகார் முதலமைச்சராகலாம் என பேரம் பேசினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கு வங்க முன்னாள் ஆளுனர் ஜக்தீப் தன்கரை இந்த தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்தது. அவர் வெற்றி பெற்றுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். 

    தற்போதைய பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு எதிராக ஊழல் வழக்கில் விசாரணை தொடங்கி உள்ளது. அவருக்கு எதிராக சாட்சியம் உள்ளது. அதன் விளைவாக அவர் சிறைக்கு செல்லலாம் என்றும் சுசில்குமார் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    நிதிஷ்குமார் எங்களுக்கு துரோகம் செய்தது போன்று ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கும் துரோகம் செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

    காங்கிரஸ் அல்லாத அரசியல் என்ற கூறி வந்த நிதிஷ்குமாரின் அரசியல் நிறைவு பெற்று விட்டதா என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி உள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐக்கிய ஜனதா தளம்-பாரதிய ஜனதா இடையே கூட்டணி முடிவுக்கு வந்ததால் முதல்-மந்திரியாக இருந்த நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • பீகார் மாநில துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம்-பாரதிய ஜனதா இடையே கூட்டணி முடிவுக்கு வந்ததால் முதல்-மந்திரியாக இருந்த நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    பாட்னாவில் நடந்த ஐக்கிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பாரதிய ஜனதாவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைதொடர்ந்து நிதிஷ் குமார் தனது பதவியை துறந்து விட்டு மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். அவர் நேராக கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகு சவுகானை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    பின்னர் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரி தேவியின் வீட்டுக்கு சென்று லல்லு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ்வை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவுடன் புதிய மெகா கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த முடிவுக்கு அந்த கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

    பின்னர் நிதிஷ் குமார் வீட்டில் நடந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதாதளம் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதையடுத்து அவர் தேஜஸ்வி யாதவுடன் மீண்டும் கவர்னர் பகு சவுகானை சந்தித்து எதிர்க்கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனக்கு 164 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி அதற்கான கடிதத்தை நிதிஷ்குமார் கவர்னரிடம் அளித்தார்.

    இதை தொடர்ந்து பீகாரில் புதிய ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் 8-வது முறையாக பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் இன்று மீண்டும் பதவியேற்றார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.

    நிதிஷ் குமாருக்கு ஆளுநர் பகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    லாலு பிரசாத் யாதவ் கட்சியின் ஆதரவோடு பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாரதிய ஜனதா தங்கள் கட்சியை அவமதித்து விட்டது.
    • பிரதமர் பதவிக்கும் அவர்கள் குறி வைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தனது பதவியையும் ராஜினாமா செய்து விட்டு பகையை மறந்து எதிர்கட்சிகளுடன் தற்போது கைகோர்த்து உள்ளார். இன்று அவர் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.

    இது குறித்து நிதிஷ்குமார் கூறும் போது, பாரதியஜனதா தங்கள் கட்சியை அவமதித்து விட்டது. ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க அக்கட்சி முயற்சி செய்தது. எனவே கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று தெரிவித்தார்.

    நிதிஷ்குமாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    பாரதிய ஜனதாவை துணிந்து எதிர்த்துள்ளதால் நிதிஷ்குமாரின் செல்வாக்கு அதிகரித்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். பல்வேறு தலைவர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இதனால் வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலின் போது எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் களம் இறக்கப்படலாம் என்ற பேச்சு அடி படத் தொடங்கி உள்ளது.

    ஏற்கனவே பாரதிய ஜனதாவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பதவிக்கும் அவர்கள் குறி வைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர்.

    இப்போது நிதிஷ்குமாரும் மோடிக்கு எதிராக திரும்பி உள்ளதால் அவரையும் பிரதமர் வேட்பாளராக்கும் முயற்சி மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது. பீகாரில் நிதிஷ் குமாருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து உள்ளது. மந்திரி சபையில் இடம் பெறவும் முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் தாரிக்அன்வர் கூறும் போது, நாங்கள் பதவிக்காக ஆசை பட வில்லை. பாரதிய ஜனதா அல்லாத அரசுக்கு நாங்கள் ஆதரவு அளிக்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

    • மெகா கூட்டணியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று பிற்பகல் பதவியேற்பு.
    • ஆதரவு கொடுத்தற்காக சோனியா, ராகுலுக்கு, நிதிஷ்குமார் நன்றி.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக பாஜகவின் சுஷில் குமார் மோடியும் பதவியேற்றனர்.

    அண்மை காலமாக இரு கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலவதாக நேற்று நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர்,  ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.

    இதனையடுத்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மகா பந்தன் எனப்படும் மெகா கூட்டணியை அமைத்தன. பாட்னாவில் நடைபெற்ற இந்த கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், புதிய ஆட்சி அமைக்க 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தையும்  வழங்கினார். இந்நிலையில் இன்று பிற்பகல் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதலமைச்சராக 8-வது முறை பதவியேற்கிறார். 


    துணை முதலமைச்சராக லாலுபிரசாத் யாதவ் மகனும், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருமான தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்கிறார். இதனிடையே, தமக்கு ஆதரவு அளித்ததற்காக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேசிய நிதிஷ்குமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்த பாஜக அல்லாத அரசை ஆதரிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பீகாரில் அரசியலில் ஒரே நாளில் ஏற்பட்ட இந்த மாற்றம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நிதிஷ்குமாரின் முடிவை பாஜக கடுமையாக சாடி உள்ளது. 


    பீகார் மக்கள் பாஜக-ஐக்கிய ஜனதாதள கூட்டணி ஆட்சிக்கே வாக்களித்ததாகவும், ஆனால் மக்களின் ஆணையை நிதீஷ் குமார் மதிக்கவில்லை என்றும், பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

    ஐக்கிய ஜனதாதளத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது என்ற நிதிஷ்குமாரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் அவர் கூறியுள்ளார். பாஜக அவரை பலமுறை பீகார் முதலமைச்சராக்கியதும் என்றும் தெரிவித்தார்.

    பாஜகவுடன் இருந்தபோது நிதிஷ்குமாருக்கு கிடைத்த மரியாதை இனிமேல் ராஷ்டிரிய ஜனதா தளத்திடம் இருந்து கிடைக்காது என பாஜகவை சேர்ந்த சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்.


    பீகாரில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தும், அவரை முதல்வராக்கினோம் என்றும், அவரது கட்சியை உடைக்க நாங்கள் முயன்றதில்லை, எங்களுக்கு துரோகம் செய்தவர்களின் கட்சிகளை மட்டுமே உடைத்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ×