என் மலர்
ஆந்திர பிரதேசம்
- பிரம்மோற்சவ விழாவையொட்டி இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
- திருப்பதியில் நேற்று 51,308 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 18,812 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
முன்னதாக, மகா விஷ்ணுவின் வாகனமான கருட உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடியை மலையப்ப சுவாமி தாயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி ஆகியோர் 4 மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின்னர், கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கருடகொடியை கொடிமரத்தில் ஏற்றினர்.
முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது குடும்பத்தினருடன் பேடி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமிக்கு சமர்ப்பித்தார்.
பின்னர் சுவாமியை தரிசித்த அவர், தேவஸ்தானம் சார்பில் அச்சிடப்பட்ட 2023-ம் ஆண்டுக்கான காலண்டர், டைரிகளை வெளியிட்டார்.
பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு, பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் 4 மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் சாமி ஊர்வலத்தை தரிசனம் செய்தனர்.
பிரமோற்சவத்தின் 2-வது நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதிகளில் வலம் வந்தார்.
சாமி ஊர்வலத்தின் முன்பு கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாட வீதிகளில் குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டபடி ஏழுமலையானை தரிசித்தனர். இன்று இரவு அம்ச வாகனத்தில் ஏழுமலையான் பவனி வருகிறார்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பக்தர்கள் காத்திருப்பு அறையில் தங்கவைக்கப்படாமல் நேரடியாக வரிசையில் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.
நேற்று பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் ½ மணி நேரத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.
திருப்பதியில் நேற்று 51,308 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 18,812 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.3 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதியில் உண்டியல் பணம் எண்ணுவதற்காக ரூ.23 கோடியில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று காலை ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார்.
- 89 நிறுவனங்களை இரண்டாகப் பிரிக்கவும் ஆந்திரப் பிரதேச பிரதிநிதிகள் மத்திய அரசை வலியுறுத்தினர்.
- இரு மாநிலங்களும் ஒருமித்த கருத்துக்கு வரத் தவறியதால், இந்த விஷயத்தில் சட்ட கருத்தைப் பெற முடிவு செய்யப்பட்டது.
திருப்பதி:
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா இடையே நிலுவையில் உள்ள பிரிவினைப் பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் செயலர் அளவிலான கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 14 முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
ஆந்திரா சார்பில், தலைமைச் செயலாளர் சமீர் சர்மா, மூத்த அதிகாரிகள் எம்டி கிருஷ்ண பாபு, கரிகால் வளவன் மற்றும் பிரவீன் பிரகாஷ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர், தெலுங்கானா சார்பில் தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, சிவராமகிருஷ்ணன் கமிட்டியின் பரிந்துரையின்படி தலைநகர் மேம்பாட்டிற்கு ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதால் ரூ.29 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில பிரதிநிதிகள் மத்திய அரசை வலியுறுத்தினர்.
மேலும், ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 இல் உறுதிசெய்யப்பட்டுள்ளபடி பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மானியமாக ரூ.20 ஆயிரம் கோடி கோரப்பட்டது ஷீலா பேடி கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தவும், ஆந்திரப் பிரதேசத்தின் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 89 நிறுவனங்களை இரண்டாகப் பிரிக்கவும் ஆந்திரப் பிரதேச பிரதிநிதிகள் மத்திய அரசை வலியுறுத்தினர்.
மறுசீரமைப்பு சட்டம்இருப்பினும், தெலுங்கானா பிரதிநிதிகள் 53 நிறுவனங்களை மட்டுமே பிரிக்க ஒப்புக்கொண்டனர், அதைத் தொடர்ந்து அதன் ஆட்சேபனைகளுக்கு விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு கேட்டது.
ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களைப் பிரிப்பது தொடர்பான பிரச்சினையில், இரு மாநிலங்களும் ஒருமித்த கருத்துக்கு வரத் தவறியதால், இந்த விஷயத்தில் சட்ட கருத்தைப் பெற முடிவு செய்யப்பட்டது.
இதனால் கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
- கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரம்மோற்சவம் தனிமையில் நடத்தப்பட்டன.
- மீடியா மையத்திற்கு கம்ப்யூட்டர், இன்டர்நெட், பேக்ஸ் மற்றும் தொலைபேசி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை, திருமலையில் உள்ள ரம்பாகிச்சா ஓய்வு இல்லத்தில் மீடியா மையம் திறக்கப்பட்டது. இதனை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி ஆகியோர் திறந்துவைத்தனர்.
பின்னர் தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறுகையில், கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரம்மோற்சவம் தனிமையில் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு திரளான பக்தர்களுக்கு சேவை செய்ய அனைத்து துறைகளின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின் போது சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், வாகனச் சேவையுடன் மூலவிரட்டு தரிசனம் வழங்கவும் அனைத்து வகையான தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொடியேற்றத்தையொட்டி, மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, பிரம்மோற்சவத்தில் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் வழங்குகிறார். அதேபோல், நன்கொடையாளர்கள் உதவியுடன் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பரகாமணி பவனை இன்று (புதன்கிழமை) காலை திறந்து வைக்கிறார்.
இந்த மீடியா மையத்திற்கு கம்ப்யூட்டர், இன்டர்நெட், பேக்ஸ் மற்றும் தொலைபேசி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை மீடியா பிரதிநிதிகள் பயன்படுத்தி, பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை உலக மக்களுக்கு காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், நரசிம்ம கிஷோர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.ரவி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நீலிமா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- விழா இன்று தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
- திருமலை முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வரும் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மாலை அங்குரார் பணம் நடந்தது.
இன்று மாலை தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அதன் பிறகு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாத வீதிகளில் உலா வருகிறார்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி ஏழுமலையான் கோவில் முழுவதும் வண்ண மலர்கள், பழங்கள், மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனால் திருமலை முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.
இன்று மாலை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதிக்கு வந்து ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டு வந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கிறார்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறுகையில்:-
பிரம்மோற்சவ விழாவை காண லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கருட சேவை அன்று கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்பதற்காக அன்று மட்டும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு 3 ஆயிரம் டிரிப்பு பஸ்கள் இயக்கப்படும். மற்ற பிரம்மோற்சவ நாட்களில் 2 ஆயிரம் டிரிப்புகள் பஸ்கள் இயக்கப்படும். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
பக்தர்களுக்கு தங்கு தடை இன்றி லட்டுகள் கிடைப்பதற்காக 9 லட்சம் லட்டுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் தன்னார்வலர்கள் நட்பாக பழகி சேவைகள் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் பக்தர்கள் மனது புண்படும் படியாக நடந்து கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
திருப்பதியில் நேற்று 52,682 பேர் தரிசனம் செய்தனர். 15,805 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.57 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.
- தங்க, வைர ஆபரணங்கள் சேதம் அடைய வாய்ப்புள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி திருமலையில் உள்ள கோகுலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, இரவில் நான்கு மாட வீதிகளில் வாகனச் சேவை நடக்கிறது. உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் தங்கம், வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
அப்போது மாடவீதிகளில் கேலரிகளில் அமர்ந்திருக்கும் பக்தர்கள் உற்சவர் மீது சில்லறை நாணயங்களை வீச வேண்டாம். சில்லறை நாணயங்களை வீசுவதால் வாகனத்தில் அமர்ந்திருக்கும் அர்ச்சகர்களுக்கும், வாகனத்தை சுமந்து செல்லும் ஊழியர்களுக்கும் சிரமம் ஏற்படும். தங்க, வைர ஆபரணங்கள் சேதம் அடைய வாய்ப்புள்ளது.
எனவே பக்தர்கள் உற்சவர் மீது நாணயங்கள் வீசுவதைத் தவிர்க்க வேண்டும். பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்தவர்களில் விராட் கோலி 2வது இடம் பெற்றார்.
- இதன்மூலம் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐதராபாத்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்தியா விராட் கோலி, சூர்யகுமார் யாதவின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார். இதன்மூலம் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்தார்.
இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி, ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுகல்கர் முதல் இடத்தில் உள்ளார்.
இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல் பின்வருமாறு:
சச்சின் டெண்டுல்கர் - 664 போட்டிகள் - 34,357 ரன்கள்
விராட் கோலி - 471 போட்டிகள் - 24,078 ரன்கள்
ராகுல் திராவிட் - 404 போட்டிகள் - 24,064 ரன்கள்
கங்குலி - 421 போட்டிகள் - 18,433 ரன்கள்
எம்.எஸ்.தோனி - 535 போட்டிகள் - 17,092 ரன்கள்
- பிரம்மோற்சவ விழா நாளை தொடங்கி 5-ந்தேதி முடிவடைகிறது.
- நாளை இரவு 7 மணிக்கு தங்க கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கி 5-ந்தேதி முடிவடைகிறது. இதனையொட்டி கோவில் மற்றும் கோவில் வெளிப்புறங்களில் பல்வேறு ண்ண மலர்கள், அரியவகையான பழ வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் திருமலை முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று மாலை அங்குரார்பணம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவிற்கு முன்தினம் அங்குரார் பணம் நடைபெறுவது வழக்கம். இன்று மாலை விஸ்வேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து விழா ஏற்பாடுகளை பார்வையிடுகிறார். பின்னர் வசந்த மண்டபத்தில் விஸ்வகேஸ்வரருக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
இதையடுத்து பல்வேறு புதிய பானைகளில் நவதானியங்கள் விதைக்கப்படுகிறது.
திருமலைக்கு நாளை வரும் ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆஞ்சநேயர் சாமி கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டு வந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கிறார்.
இதையடுத்து இரவு 7 மணிக்கு தங்க கொடி மரத்தில் கருட கொடி ஏற்றப்படுகிறது.
பின்னர் பெரிய சேஷ வாகனத்தில் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராய் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வருகிறார்.
2-வது நாள் காலை சின்ன சேஷ வாகனத்திலும், மாலை அம்ச வாகனத்திலும், 3-வது நாள் காலை சிம்ம வாகனத்திலும், மாலை முத்து பல்லக்கு வாகனத்திலும், 4-வது நாள் கல்ப விருட்ச வாகனத்திலும், மாலை சர்வ பூபால வாகனத்திலும், 5-வது நாள் மோகினி வாகனத்திலும், மாலை தங்க கருட வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.
6-வது நாள் அனுமந்த வாகனமும், மாலை தங்கத்தேர் வாகன சேவை நடைபெறுகிறது. 7-வது நாள் காலை சூரிய பிரபை வாகனமும், மாலை சந்திர பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது. 8-வது நாள் காலை தேர் வீதி உலாவும், மாலை குதிரை வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.
9-வது நாள் காலை அங்குள்ள தெப்பத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 4 மாட வீதியில் சாமி வீதி உலாவை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவைக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 69,650 பேர் தரிசனம் செய்தனர். 20,409 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.51 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
- இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த மழை பாதிப்புக்குள்ளான 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.
இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் முழுவீச்சில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா அணி 12.2 ஓவர் முடிவில் 112 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்துள்ளனர்.
- ரெயிலில் தூங்கிக் கொண்டு இருந்ததால் ரெயில் கிளம்பும்போது தூக்க கலக்கத்தில் ரெயிலில் இருந்து இறங்க முயன்றார்.
- ரெயில்வே ஊழியர்கள் பிளாட்பாரத்தை சம்மட்டியால் அடித்து உடைத்து ரவிகுமாரை மீட்டனர்.
ஆந்திர மாநிலம், நந்தியாலில் இருந்து நேற்று இரவு விஜயவாடாவுக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டு இருந்தது. ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். ரெயிலில் ரவிக்குமார் 30) என்ற வாலிபர் பயணம் செய்தார். அங்குள்ள ரெயில் நிலையத்தில் ரவிக்குமார் இறங்க வேண்டும்.
ஆனால் அவர் ரெயிலில் தூங்கிக் கொண்டு இருந்ததால் ரெயில் கிளம்பும்போது தூக்க கலக்கத்தில் ரெயிலில் இருந்து இறங்க முயன்றார்.
அப்போது நிலை தடுமாறிய ரவிக்குமார் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கினார்.
வலியால் அவர் அலறி துடித்தார். இதனைக் கண்ட பயணிகள் உடனடியாக ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் பிளாட்பாரத்தை சம்மட்டியால் அடித்து உடைத்து ரவிகுமாரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- 27-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.
- தர்ப்பைப் பாய் மற்றும் கயிறு ஆகியவை கொடியேற்றத்துக்கு பயன்படுத்தப்படும்.
- தங்கக்கொடி மரத்தில் தர்ப்பைப் பாயை சுற்றுவார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதற்காக, பயன்படுத்தப்படுகின்ற தர்ப்பைப் பாய் மற்றும் கயிறு ஆகியவை திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை அதிகாரி ஏ.சீனிவாசலு மற்றும் பணியாளர்களால் தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்கு ேநற்று முன்தினம் கொண்டு வரப்பட்டன.
கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உள்ள சேஷ வாகனத்தின் மீது தர்ப்பைப் பாய், கயிறு ஆகியவற்றை வைத்தனர். இதையடுத்து தர்ப்பைப் பாய், கயிறு ஆகியவற்றுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.
தர்ப்பைப் பாய் மற்றும் கயிறு ஆகியவை கொடியேற்றத்துக்கு பயன்படுத்தப்படும். தங்கக்கொடி மரத்தில் தர்ப்பைப் பாயை சுற்றுவார்கள். அதில் சிவ தர்ப்பை, விஷ்ணு தர்ப்பை என 2 வகையான தர்ப்பைகள் உள்ளன. அதில் திருமலையில் விஷ்ணு தர்ப்பை பயன்படுத்தப்படுகிறது.
திருப்பதி மாவட்டம் ஏர்ப்பேடு மண்டலம் செல்லூர் கிராமத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான வனத்துறை ஊழியர்கள் விஷ்ணு தர்ப்பை புற்களை சேகரித்தனர். அந்தப் புற்களை திருமலைக்குக் கொண்டு வந்து ஒரு வாரம் மிதமான வெயிலில் உலர்த்தினர். தர்ப்பை உலர்ந்ததும், நன்றாகச் சுத்தம் செய்து பாய், கயிறு ஆகியவற்றை தயார் செய்தனர். 22 அடி நீளம், 7½ அடி அகலத்தில் தர்ப்பைப் பாய், 200 அடி நீளத்தில் தர்ப்பை கயிறு ஆகியவற்றை தயார் செய்துள்ளனர். அவை 2-ம் 27-ந்தேதி கொடியேற்றம் அன்று பயன்படுத்தப்படுவதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அதிகாலை நேரம் என்பதால் டாக்டர் குடும்பத்தினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். தீ மளமளவென 4-வது மாடி முழுவதும் பரவியது.
- ரேணிகுண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த ரேணிகுண்டா பகத்சிங் காலணியில் டாக்டர் ரவிசங்கர் ரெட்டி என்பவர் புதியதாக 4 மாடிகள் கொண்ட ஆஸ்பத்திரி கட்டியுள்ளார்.
ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் ரவிசங்கர் ரெட்டி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். ஆஸ்பத்திரியில் கட்டுமான பணிகள் முழுவதும் நிறைவடையவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு ஆஸ்பத்திரியின் 4-வது மாடி திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் டாக்டர் குடும்பத்தினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். தீ மளமளவென 4-வது மாடி முழுவதும் பரவியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் தீ விபத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்து அலறி துடித்து காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர்.
அருகில் இருப்பவர்கள் தீ விபத்தை கண்டு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஏணிகள் மூலம் நான்காவது மாடிக்கு சென்று தீயில் சிக்கிய 2 பேரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மேலும் 3 பேரை உடனடியாக மீட்க முடியவில்லை. தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பிறகு வீட்டிற்குள் சிக்கி இருந்த டாக்டர் ரவிசங்கர் ரெட்டி அவரது மகன் சித்தார்த்தரெட்டி மகள் கீர்த்திகா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே 3 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இதுகுறித்து ரேணிகுண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் சிக்கி டாக்டர் மற்றும் அவரது மகன், மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
- 30 முதல் 2-ந்தேதி வரை பைக்கில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
விழாவையொட்டி திருமலை முழுவதும் அலங்கரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் மின்னொளியில் ஜொலிக்கிறது.
பிரம்மோற்சவ விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி, பூதேவி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனை காண்பதற்காக 4 மாட வீதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிவார்கள்.
திருமலையில் 12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டுமே இடவசதி உள்ளது. எனவே பிரம்மோற்சவ விழாவின் போது கார், வேன் உள்ளிட்ட 12 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளது.
கூடுதலாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் திருப்பதியில் நிறுத்திவிட்டு திருமலைக்குச் செல்லும் அரசு பஸ்களில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கருட சேவைக்கு முந்தின நாளான 30-ந் தேதி மதியம் 2 மணி முதல் 2-ந் தேதி இரவு வரை திருமலைக்கு பைக்கில் செல்ல அனுமதி இல்லை. உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பைக்கில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பைக்கை திருப்பதியில் நிறுத்திவிட்டு அரசு பஸ்சில் சென்று சாமியை தரிசனம் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 65,187 பேர் தரிசனம் செய்தனர். 27,877 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.5.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.






