என் மலர்
இந்தியா

மீடியா மையத்தை தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திறந்துவைத்தபோது எடுத்த படம்.
வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலையில் மீடியா மையம் திறப்பு
- கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரம்மோற்சவம் தனிமையில் நடத்தப்பட்டன.
- மீடியா மையத்திற்கு கம்ப்யூட்டர், இன்டர்நெட், பேக்ஸ் மற்றும் தொலைபேசி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை, திருமலையில் உள்ள ரம்பாகிச்சா ஓய்வு இல்லத்தில் மீடியா மையம் திறக்கப்பட்டது. இதனை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி ஆகியோர் திறந்துவைத்தனர்.
பின்னர் தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறுகையில், கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரம்மோற்சவம் தனிமையில் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு திரளான பக்தர்களுக்கு சேவை செய்ய அனைத்து துறைகளின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின் போது சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், வாகனச் சேவையுடன் மூலவிரட்டு தரிசனம் வழங்கவும் அனைத்து வகையான தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொடியேற்றத்தையொட்டி, மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, பிரம்மோற்சவத்தில் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் வழங்குகிறார். அதேபோல், நன்கொடையாளர்கள் உதவியுடன் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பரகாமணி பவனை இன்று (புதன்கிழமை) காலை திறந்து வைக்கிறார்.
இந்த மீடியா மையத்திற்கு கம்ப்யூட்டர், இன்டர்நெட், பேக்ஸ் மற்றும் தொலைபேசி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை மீடியா பிரதிநிதிகள் பயன்படுத்தி, பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை உலக மக்களுக்கு காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், நரசிம்ம கிஷோர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.ரவி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நீலிமா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






