என் மலர்
இந்தியா

திருப்பதியில் உண்டியல் பணம் எண்ணுவதற்காக ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று திறந்து வைத்தார்.
திருப்பதியில் பக்தர்கள் காத்திருப்பு அறையில் தங்காமல் நேரடியாக தரிசனம்
- பிரம்மோற்சவ விழாவையொட்டி இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
- திருப்பதியில் நேற்று 51,308 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 18,812 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
முன்னதாக, மகா விஷ்ணுவின் வாகனமான கருட உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடியை மலையப்ப சுவாமி தாயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி ஆகியோர் 4 மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின்னர், கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கருடகொடியை கொடிமரத்தில் ஏற்றினர்.
முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது குடும்பத்தினருடன் பேடி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமிக்கு சமர்ப்பித்தார்.
பின்னர் சுவாமியை தரிசித்த அவர், தேவஸ்தானம் சார்பில் அச்சிடப்பட்ட 2023-ம் ஆண்டுக்கான காலண்டர், டைரிகளை வெளியிட்டார்.
பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு, பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் 4 மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் சாமி ஊர்வலத்தை தரிசனம் செய்தனர்.
பிரமோற்சவத்தின் 2-வது நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதிகளில் வலம் வந்தார்.
சாமி ஊர்வலத்தின் முன்பு கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாட வீதிகளில் குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டபடி ஏழுமலையானை தரிசித்தனர். இன்று இரவு அம்ச வாகனத்தில் ஏழுமலையான் பவனி வருகிறார்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பக்தர்கள் காத்திருப்பு அறையில் தங்கவைக்கப்படாமல் நேரடியாக வரிசையில் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.
நேற்று பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் ½ மணி நேரத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.
திருப்பதியில் நேற்று 51,308 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 18,812 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.3 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதியில் உண்டியல் பணம் எண்ணுவதற்காக ரூ.23 கோடியில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று காலை ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார்.






