என் மலர்
ஆந்திர பிரதேசம்
- டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது
- திருப்பதியில் 18-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது.
திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று ேபசினார்.
அவர் பேசியதாவது:-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா வருகிற 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதில் முக்கிய நிகழ்ச்சியாக 24-ந்தேதி கஜ வாகன வீதிஉலா, 25-ந்தேதி கருட வாகன வீதிஉலா, 27-ந்தேதி தேரோட்டம், 28-ந்தேதி பஞ்சமி தீர்த்தம், 29-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது. பஞ்சமி தீர்த்தம் அன்று கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய வாய்ப்புள்ளதால், இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம் தங்கும் விடுதி வளாகம் மற்றும் கோவிந்தராஜசாமி சத்திரம் 2-ல் இந்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதியில் இருந்து இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்களை வழங்க தொடங்கி உள்ளோம்.
சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் 25 ஆயிரம் டோக்கன்களும், மற்ற நாட்களில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் டோக்கன்களும் வழங்கி வருகிறோம். குறிப்பிட்ட ஒதுக்கீடு முடிந்ததும் கவுண்ட்டர்களை மூடுகிறோம். டோக்கன் பெறும் பக்தர் அதே நாளில் தரிசனம் செய்யலாம்.
டோக்கன் இல்லாத பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு வந்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 2-ல் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் அமைதியாக காத்திருக்கலாம். அதற்கான நேரம் வரும்போது தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து தரிசன வரிசையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் விரைவு தரிசனம் வழங்கப்படுகிறது.
டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கும் செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்து டைம் ஸ்லாட் டோக்கன்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிப்போம். ஆதாரை பதிவு செய்து டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கப்படுவதால், பக்தர்கள் தரிசனம் செய்தாலும் இல்லாவிட்டாலும் மாதம் ஒருமுறை மட்டுமே டோக்கன் பெற வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. காலை 8 மணியாக மாற்றி, ஒரு மாத காலம் ஒத்திகை முறையில் தரிசனத்துக்காக பக்தர்களை அனுமதிக்கிறோம்.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இரவில் காத்திருக்கும் சாதாரணப் பக்தர்கள் அதிகாலையில் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்கிறோம். பக்தர்களின் கருத்துகளை பரிசீலனை செய்து உரிய முடிவெடுப்போம்.
டிசம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து திருப்பதியில் உள்ள மாதவம் தங்கும் விடுதியில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு ஆப் லைனில் பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வழங்க உள்ளோம். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்குவது திருமலையில் தங்கும் இடம் வாங்குவது குறையும்.
புனித தெலுங்கு கார்த்திகை மாதத்தில் உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி கடந்த 4-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் விஷ்ணு சம்பந்தப்பட்ட பூஜைகளை நடத்தி வருகிறோம். இந்தப் பூஜை நிகழ்ச்சிகளை ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்புகிறோம்.
திருப்பதியில் 18-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் இருந்து வருகிற 23-ந்தேதி வரை திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோம மஹோற்சவம் நடத்துகிறோம்.
8-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. அதையொட்டி 8-ந்தேதி கோவில் கதவுகள் 11 மணிநேரம் மூடப்படுகிறது. இதனால் கோவிலில் பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம் உள்ளிட்ட சிறப்பு தரிசனங்கள் மற்றும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. கோவில் நடை திறந்ததும் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
9-ந்தேதி தெலுங்கானா மாநிலம் ஓங்கோல், 12-ந்தேதி லண்டன், 13-ந்தேதி ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரத்தில் சீனிவாச கல்யாணம் நடக்கிறது.
முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டியின் அறிவுறுத்தலின்படி திருமலையை மாசு இல்லாத நகரமாக மாற்ற இலவச பஸ்களுக்கு பதிலாக (தர்ம ரதம்) மின்சாரப் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக ஓலக்ட்ரா நிறுவனம் ரூ.15 கோடி மதிப்பிலான 10 மின்சாரப் பஸ்களை வழங்க முன்வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆடுகளை ஓட்டிச் சென்ற சுரேஷ் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
- மாணவர் எடுத்துச்சென்ற செல்போனில் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து சோதனை செய்ததில் வேறு ஒரு வாலிபர் அந்த செல்போனை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனக்கா பள்ளி மாவட்டம் பாடால பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமு இவரது மூத்த மகன் சுரேஷ் (வயது 13). அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த வாரம் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் அங்குள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டி சென்றார். அப்போது அவரது தந்தையின் செல்போனை எடுத்துச் சென்றார்.
மாலை 6 மணிக்கு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வழக்கம் போல் வீட்டிற்கு வந்து விட்டன. ஆனால் ஆடுகளை ஓட்டிச் சென்ற சுரேஷ் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மறுநாள் வனப்பகுதியில் சுரேஷ் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். அவன் எடுத்துச் சென்ற செல்போன் காணாமல் போய் இருந்தது.
இதுகுறித்து அனக்கா பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
மாணவர் எடுத்துச்சென்ற செல்போனில் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து சோதனை செய்ததில் வேறு ஒரு வாலிபர் அந்த செல்போனை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் செல்போனை வைத்திருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் அனக்கா பள்ளியில் உள்ள ஒரு கடையில் செல்போன் வாங்கியதாக தெரிவித்தார். போலீசார் செல்போன் கடைக்கு சென்று விசாரித்தபோது அனக்கா பள்ளி பகுதியை சேர்ந்த வெங்கட சூரியா நாகேஸ்வரராவ் என்பவர் தனது ஆதார் அட்டை, பான் கார்டு எண்களை கொடுத்துவிட்டு செல்போனை விற்று சென்றது தெரிய வந்தது.
நேற்று இரவு திருப்பதி பஸ் நிலையம் அருகே இருந்த வெங்கட சூரிய நாகேஸ்வரராவிடம் விசாரித்தனர். இதில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சுரேசை கொலை செய்துவிட்டு செல்போனை பறித்து சென்றதாக அவர் கூறினார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய பாதைகளில் பக்தர்கள் நடந்து வருவார்கள்.
- ஏ.வி.தர்மாரெட்டி பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.
திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு பதில் அளித்துப் பேசினார். பக்தர்கள் தெரிவித்த குறைகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கிஷோர், காவளி: விரைவில் காலாவதியாகப் போகிற அரசு பாண்டுகள் ரூ.5 ஆயிரம் கோடி டெபாசிட் அரசாங்கத்துக்கு முதலீடு செய்யப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவது உண்மையா?
அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி: தேவஸ்தான வரலாற்றில் எந்த அரசாங்கத்துக்கும் பணம் கொடுத்ததில்லை. எதிர்காலத்திலும் கொடுக்காது. அறங்காவலர் குழு தலைவர் மீதும், தேவஸ்தானம் மீதும் அவதூறு பரப்ப வேண்டாம். தவறான தகவல்களை தருகிறார்கள். அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காலர் குழு உறுப்பினர்கள் இதுவரை எந்தத் தவறும் செய்யவில்லை. இனியும் செய்ய மாட்டார்கள். மாநில அரசுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முதலீடு செய்ததில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தேவஸ்தானம் இதுவரை ரூ.15,938 கோடியை டெபாசிட் செய்துள்ளோம். இனிமேல் அதிக வட்டி தரும் தேசிய வங்கிகளில் டெபாசிட் செய்வோம். தகவறான தகவல்களை நம்ப வேண்டாம், என்று பக்தர்களை கேட்டுக் கொள்கிறேன்.
ஹனுமந்த்பிரசாத், ஐதராபாத், திருமால்ராவ், நல்கொண்டா: எங்கள் காலனியில் உள்ள ராமர் கோவிலில் தூபம், தீபம், பிரசாதம் செய்ய முடியவில்லை. மாநில அரசு வழங்கும் ரூ.5 ஆயிரம் நிதி போதாது. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக நிதி உதவி செய்கிறீர்களா, எங்கள் காலனியில் கல்யாண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்?
அதிகாரி: தேவஸ்தான அதிகாரிகள் அதைப் பார்த்து, ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் உதவி வழங்க முயற்சி செய்வார்கள். கல்யாண மண்டபம் கட்டுவதற்கான விதிகளை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள்.
பென்சலயா, நெல்லூர்: எங்கள் கிராமத்தில் கோவில் கட்ட தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது. பின்னர் ரத்து செய்யப்பட்டுள்ளது, காரணம் என்ன?
அதிகாரி: கோவில் கட்டுவதற்கான விதிகளை பரிசீலனை செய்வோம்.
சுபாஷினி, சென்னை: முதியோர் சாமி தரிசனம் செய்ய வரும்போது, உதவியாளராக வரும் ரத்த சம்பந்தப்பட்ட உறவினர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. முதியோர் கோவிலில் தள்ளப்படுகின்றனர்?
அதிகாரி: ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் மட்டுமே முதியவர்களை அழைத்துச் சென்று தரிசனம் செய்ய நடவடிக்கை எடுப்போம்.
ராம்பாபு, கம்மம்: சாமிக்கு வெள்ளிக் கிரீடம் அணிவிக்க வேண்டும்?
அதிகாரி: ஏழுமலையானுக்கு வெள்ளிக் கிரீடம் அணிவிப்பதில்லை. உங்களிடம் இருந்து வெள்ளிக் கிரீடத்தைக் காணிக்கையாகப் பெற்று அதை ஏழுமலையான் கோவில் துணைக் கோவில்களில் பயன்படுத்துவதை நாங்கள் பரிசீலிப்போம்.
சாம்பையா, வாரங்கல்: வி.ஐ.பி பிரேக் தரிசனங்களுக்கு எப்போது கடிதம் கொடுக்க வேண்டும்?
அதிகாரி: கடிதத்தை முந்தைய நாளிலில் இருந்து 2 மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும். ஆறரை மணி நேரம் கழித்து உங்கள் மொபைலில் ஒரு எஸ்.எம்.எஸ். வரும். பின்னர் தரிசன டிக்கெட்டுகளை பெறலாம்.
பாலாஜி, சென்னை: சென்னையில் இருந்து திருமலைக்கு எலக்ட்ரிக் பைக்கில் வந்தோம். சார்ஜிங் பாயின்ட் இல்லை. திருமலை மற்றும் திருப்பதியில் சார்ஜிங் பாயின்ட்களை அமைக்கலாம்?
அதிகாரி: தற்போது அலிபிரி மற்றும் திருமலையில் தேவஸ்தான சார்ஜிங் பாயின்ட்கள் உள்ளன. பக்தர்கள் தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்ளலாம். விரைவில் அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் எச்.சி.எல். நிறுவனத்துடன் இணைந்து சார்ஜிங் பாயின்ட்களை அமைப்போம்.
அசோக்குமார், சென்னை: அலிபிரி நடைபாதையில் சோதனையின் போது ஊழியர்கள் பக்தர்களை அவமதிக்கிறார்கள்?
அதிகாரி: பாதுகாப்பு காரணங்களுக்காக அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டுவில் சோதனை நடத்தப்படுகிறது. பக்தர்களை அவமானப்படுத்தாமல் இருக்குமாறு நடவடிக்கை எடுப்போம். விஜிலென்ஸ் ஊழியர்கள் உங்களை அவமானப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
தேஜா, பெங்களூரு: முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு நேரடி தரிசனம் கொடுங்கள்?
அதிகாரி: தினமும் ஒரு மணி நேரம் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறு குழந்தைகளின் பெற்றோருக்கு தரிசனம் வழங்குகிறோம். இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து திருமலைக்கு வர வேண்டும்.
ராஜேஸ்வரராவ், கரீம்நகர்: ஸ்ரீவாரி சேவையில் லட்டு பிரசாத சேவை நீக்கப்பட்டது. மீண்டும் சேர்க்கவும்?
அதிகாரி: அனுபவம் உள்ளவர்கள் மற்றும் லட்டு பிரசாத சேவை செய்யக்கூடியவர்களை பரிசீலனை செய்வோம்.
யுவராஜ், திருப்பதி: சீனிவாசம் விடுதி வளாகத்தில் சாலையைக் கடக்க பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அங்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும்?
அதிகாரி: திருப்பதி மாநகராட்சி, கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் தெரிவித்து, பிரச்சினையை தீர்க்க ஏற்பாடு செய்வோம்.
சூர்யநாராயணா, விஜயவாடா, மல்லேஸ்வரராவ், நிர்மல்: திருமலைக்கு அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய பாதைகளில் நடந்து வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது எப்போது, இலவச தரிசனத்தில் செல்லும் டைம் ஸ்லாட் டோக்கன்களை ஆன்லைனில் வெளியிடலாமா?
அதிகாரி: நாங்கள் கடந்த 1-ந்தேதி முதல் அலிபிரியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம், கோவிந்தராஜசாமி சத்திரங்களில் டைம் ஸ்லாட் டோக்கன்களை வழங்குகிறோம்.
ஸ்ரீநாத், கிழக்கு கோதாவரி: ஸ்ரீவாரி சேவா செய்ய விண்ணப்பிக்க ஆப் லைனில் அனுமதிக்கப்படுமா?
அதிகாரி:ஸ்ரீவாரிசேவை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். ஸ்ரீவாரிசேவா செய்கின்ற எந்த சேவகருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்.
சிவகோபால், கர்னூல்: நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருப்பதுபோல் கவுண்ட்டர்களுக்கு வெளியே கொட்டகை அமைத்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்?
அதிகாரி: திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே திருமலை முழுவதும் கொட்டகை அமைக்க முடியாது.
லட்சுமிநாராயணா, ராஜமுந்திரி: பக்தி சேனலில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் சிறப்பாக உள்ளன. ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் இந்த நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறோம். குழந்தைகள் மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் காணிக்கை அளிப்பவர்களுக்கு பிரேக் தரிசனம் அளிக்கலாமா?
அதிகாரி: குழந்தைகள் இருதய மருத்துவமனைக்கு ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் காணிக்கை அளித்தவர்களுக்கு பிரேக் தரிசனம் தருகிறோம். ரூ.10 ஆயிரம் காணிக்கை அளிக்கும் பக்தர்களுக்கு தரிசனம் வழங்க முடியாது.
ஜெயலட்சுமி, கர்னூல்: ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் லக்கி டிப் ஆர்ஜித சேவைகள் கிடப்பதில்லை. நான் ஒரு இசை ஆசிரியர், எனக்கு மேடையில் பாட வாய்ப்பு தர முடியும்?
அதிகாரி: ஸ்ரீவாரி ஆர்ஜித சேவையை ஆன்லைனில் பதிவு செய்யலாம் மற்றும் அதற்கு முந்தைய நாள் திருமலையில் உள்ள மத்திய வரவேற்பு மையத்தில் லக்கி டிப் கவுண்ட்டரில் பங்கேற்கலாம். நீங்கள் பக்தி பாடல்களை பாட வேண்டுமென்றால் நாத நீராஞ்சன மேடையில் பாட வாய்ப்பளிக்கப்படும்.
மேற்கண்டவாறு பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு அதிகாரி பதில் அளித்தார்.
- 2019-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி ரூ.13,025 கோடி ரொக்கம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.
- திருப்பதி கோவில் சொத்து மதிப்பு ரூ.2.3 லட்சம் கோடியாக உள்ளது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் பணம், தங்கத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் செய்கிறது. ஆனால், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் என்ற பெயரில் மாநில அரசிடம் தங்கத்தை அடகு வைப்பதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இதற்கு பதிலளித்த தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மீது யாரோ சிலர் தவறான செய்தியைப் பரப்புவது ஏற்றதல்ல என்று எச்சரித்தார்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தங்கம் மொத்தம் 10,258.37 கிலோ கிராம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் ஏழுமலையானின் ரொக்க டெபாசிட் வெகுவாக அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி ரூ.13,025 கோடி ரொக்கம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. தற்போது ரூ.15,938 கோடி ரொக்கம் டெபாசிட் உள்ளது.
2019-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி தங்கம் கையிருப்பு 7,339.74 கிலோ கிராமாக இருந்தது. ஆனால் இப்போது அது 10,258.37 கிலோ கிராமாக உள்ளது என்றார்.
மேலும், ஏழுமலையானின் தங்க நகைகள் மற்றும் ரொக்கம், அதிக வட்டி தரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. எந்தச் சூழ்நிலையிலும் சாமியின் பணம் மற்றும் தங்க நகைகளை தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்ய மாட்டோம் எனத் தெரிவித்தார்.
- மாணவர் மீது தாக்குதல் நடத்த அயர்ன் பாக்ஸ், கம்பு, பிவிசி குழாய்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
- தனியார் விடுதியில் மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள், விடுதி அறைக்குள் இருந்த மற்றொரு மாணவரை இரக்கமின்றி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த வீடியோவில், மாணவர் ஒருவர் கெஞ்சுவதையும், மன்னிப்பு கேட்பதையும், மாணவரை தொடர்ந்து தாக்குவதையும் காட்டுகிறது. அந்த மாணவரின் சட்டை கிழித்து, சட்டையை கழற்றவும் வற்புறுத்துவது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் எஸ்ஆர்கேஆர் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் அங்கித், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மார்பு மற்றும் கைகளில் பலத்த காயங்களும் உள்ளன.
அங்கித் மீது தாக்குதல் நடத்த அயன் பாக்ஸ், கம்பு, பிவிசி குழாய்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் தனியார் விடுதியில் மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- விஷ்ணு சாளக்கிராம பூஜை, சங்கல்பம் மற்றும் பிரார்த்தனை சூக்தம் தொடங்கியது.
- ஷம மந்திரம் மற்றும் மங்கள ஆரத்தியுடன் விஷ்ணு சாளக்கிராம பூஜை முடிந்தது.
தெலுங்கு கார்த்திகை மாதத்தையொட்டி திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று மாலை 3 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை விஷ்ணு சாளக்கிராம பூஜை நடந்தது. அதற்காக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி வசந்த மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அத்துடன் சாளக்கிராம கற்களும் எடுத்துச் செல்லப்பட்டன.
திருமலை-திருப்பதி தேவஸ்தான வைகானச ஆகம ஆலோசகர் மோகனராங்காச்சாரிலு இந்தப் பூஜையின் பலன்களை தெரிவித்தார். 100 அஸ்வ மேத யாகங்கள் செய்த பலன் கிடைத்து, பிறவியில்லா முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதைத்தொடர்ந்து முதலில் விஷ்ணு சாளக்கிராம பூஜை, சங்கல்பம் மற்றும் பிரார்த்தனை சூக்தம் தொடங்கியது. பின்னர் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓத அர்ச்சகர்கள் சாளக்கிராம கற்களுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். விஷ்ணு அஷ்டோத்திர சதநாமாவளியை பாராயணம் செய்தனர். அதன்பிறகு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கும், சாளக்கிராம கற்களுக்கும் ஆரத்தி எடுத்தனர். அதில் பங்கேற்று தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிறைவாக ஷம மந்திரம் மற்றும் மங்கள ஆரத்தியுடன் விஷ்ணு சாளக்கிராம பூஜை முடிந்தது.
அதில் கோவில் பிரதான அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர், தர்மகிரி வேதப் பள்ளி, தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆந்திர மாநில அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளதால் ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் 1 லட்சம் கடன் உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து 7 தனி படை அமைத்து சந்திரபாபு நாயுடு மீது கல் வீசி தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல்-அமைச்சரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று இரவு என்.டி.ஆர் மாவட்டம், நந்தி கிராமம் அடுத்த ஜக்கைய்யா பேட்டை பகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் விலைவாசி உயர்வு குறித்து திறந்த வேனில் பிரசாரம் செய்தபடி ரோடு ஷோ நடத்தினார்.
அவருடன் சீனிவாஸ் எம்.பி, எம்.எல்.சி சத்திய நாராயண ராஜு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சவுமியா ஸ்ரீராம் தாத்தையா ஆகியோர் உடன் சென்றனர்.
அப்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ஆட்சியில் பெட்ரோல், டீசல், மளிகை பொருட்கள், மணல் உள்ளிட்டவைகளின் விலைவாசியை உயர்த்தி விட்டு வீடு வீடாக பென்ஷன் வழங்கி வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது ஜெகன்மோகன் ரெட்டி ஜெயிலுக்கு செல்வது நிச்சயம்.
அமராவதியில் தலைமைச் செயலகம் கட்ட ரூ. 2 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டது. அந்த பணத்தை ஜெகன்மோகன் வீணடித்துவிட்டு 3 இடங்களில் தலைமையகம் அமைக்க போவதாக கூறி வருகிறார்.
தற்போது ஆந்திர மாநில அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளதால் ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் 1 லட்சம் கடன் உள்ளது. இவ்வாறு அவர் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்குள்ள வீட்டின் மாடியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது. இதனைக் கண்ட அவரது பாதுகாவலர்கள் சந்திரபாபு நாயுடுவின் மீது கல் படாமல் தடுத்தனர். அப்போது மர்ம நபர்கள் வீசிய கற்கள் பாதுகாவலர் முகத்தில் பட்டு ரத்தம் கொட்டியது.
அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கூட்டத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கல் வீசப்பட்ட வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தனர்.
அங்கு யாரும் இல்லை. கல்வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் ஓடி விட்டனர். அப்போது மீண்டும் பேசிய சந்திரபாபு நாயுடு நான் தீவிரவாதிகளைக் கண்டு பயப்பட மாட்டேன். கல்வீசி தாக்கினால் பயந்து விடுவேன் என எண்ணுகிறார்களா? இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என்றார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 7 தனி படை அமைத்து சந்திரபாபு நாயுடு மீது கல் வீசி தாக்கியவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சந்திர கிரகணம் 8-ந்தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை நடைபெறுகிறது.
- அன்னபிரசாத கூடம் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டிருக்கும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு 11 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது.
சந்திர கிரகணம் வருகிற 8-ந்தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை நடைபெறுகிறது.
இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு திறக்கப்படும். 11 மணி நேரம் கோவில் மூடப்படுகிறது.
இதனால் விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான விஐபி தரிசனம் ரூ.300 கட்டண தரிசனம் நேர ஒதுக்கீடு செய்யப்படும் இலவச தரிசன டிக்கெட், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள், வெளிநாட்டு இந்தியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிரகணம் முடிந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே வைகுண்ட வளாகம் 2ல் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமையல் செய்ய மாட்டார்கள். அதனால், அன்னபிரசாத கூடமும் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டிருக்கும்.
இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இதற்கு ஏற்றார் போல் திட்டமிட்டு வருமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
- அறுவடை முடிந்து டிராக்டரில் ஏறி புறப்பட்டபோது விபத்து
- 5 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமராவதி:
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தர்காஹொன்னூர் கிராமத்தில் ஆமணக்கு அறுவடை செய்வதற்காக 8 பெண்கள், 6 ஆண்கள் என 14 தொழிலாளர்கள் டிராக்டரில் சென்றுள்ளனர். மாலையில் வேலை முடிந்து தொழிலாளர்கள் டிராக்டரில் ஏறி புறப்பட்டனர். டிராக்டர் திரும்புவதற்காக பின்னோக்கி சென்றபோது, மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து டிராக்டர் மீது விழுந்துள்ளது.
இதனால் பலத்த மின்தாக்குதலுக்கு ஆளான 4 பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கூலி வேலைக்கு சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த பெண்கள் மின்சார விபத்தில் சிக்கி இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
- திருப்பதி தேவஸ்தானம் அன்னதானம் வழங்குவதற்காக இயற்கை முறையில் விளைவித்த நெல்லை வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
- நெல்லூர் மாவட்டத்தில் சுமார் 1,300 ஹெக்டேரில் இயற்கை விவசாய முறையில் நெல் வகைகளை பயிரிட அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் 3 வேளை உணவு சாப்பிட்டு வருகின்றனர்.
அன்னதானத்திற்கு தேவையான பொருட்களை திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே ஒப்பந்த அடிப்படையில் வாங்கி வருகிறது. மேலும் பக்தர்களும் அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் அன்னதானம் வழங்குவதற்காக இயற்கை முறையில் விளைவித்த நெல்லை வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ஆந்திர மாநில அரசுடன் திருப்பதி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆந்திர மாநில அரசு நெல்லூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து 2640 டன் நெல் கொள்முதல் செய்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்க உள்ளது.
இதேபோல், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து 62 மெட்ரிக் டன் நிலக்கடலையையும் கோவில் அறக்கட்டளை கொள்முதல் செய்கிறது.
இதற்காக நெல்லூர் மாவட்டத்தில் சுமார் 1,300 ஹெக்டேரில் இயற்கை விவசாய முறையில் நெல் வகைகளை பயிரிட அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். சுமார் 870 ஏக்கரில் சாகுபடி தொடங்கியுள்ளது.
இயற்கை விவசாயத்திற்கு சான்றிதழ் வழங்குவதுடன், அதிகாரிகளுக்கு 10 சதவீதம் கூடுதல் விலையும் வழங்கப்படுகிறது.
- 5-ந்தேதி கைசிக துவாதசி துளசி-தாமோதர பூஜை நடக்கிறது.
- 11-ந்தேதி கோபூஜை நடக்கிறது.
தெலுங்கு கார்த்திகை மாத பிறப்பையொட்டி திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் கார்த்திகை மாத மகாவிஷ்ணு பூஜைகளை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கடைப்பிடிக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த மகா விஷ்ணு பூஜைகள் வைகானச ஆகம சாஸ்திரப்படி நடக்கிறது.
அதில் நவம்பர் 4-ந்தேதி மாலை 3 மணியில் இருந்து மாலை 4:30 மணி வரை விஷ்ணு சாளக்ராம பூஜை, 5-ந்தேதி மாலை 3 மணியில் இருந்து மாலை 4:30 மணி வரை கைசிக துவாதசி துளசி-தாமோதர பூஜை, 11-ந்தேதி காலை 8:30 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோபூஜை ஆகியவை அடங்கும்.
21-ந்தேதி காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை தன்வந்திரி ஜெயந்தி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- கடந்த மாதம் பிரம்மோற்சவ விழாவையொட்டி இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
- திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக கடந்த மாதம் 25-ந் தேதி ஒரே நாளில் ரூ.6.31 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு கடந்த 8 மாதங்களாக உண்டியல் வருவாய் ரூ.100 கோடியை தாண்டி வசூலாகி வருகிறது.
கொரோனா தொற்று காலத்தில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்போது குறைந்த அளவாக மாதத்திற்கு ரூ.5 முதல் 6 கோடி வரையே உண்டியலில் வசூலானது.
இந்த நிலையில் தொற்று குறைந்ததால் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதல் தினமும் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த 8 மாதங்களாக உண்டியல் வருவாய் ரூ.100 கோடியை தாண்டி வசூலாகி வருகிறது. இந்த ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுமார் ரூ.1000 கோடியை தாண்டி வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகபட்சமாக கடந்த ஜூலை மாதம் ரூ.139.35 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக கடந்த மாதம் 25-ந் தேதி ஒரே நாளில் ரூ.6.31 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ரூ.122.80 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
கடந்த மாதம் பிரம்மோற்சவ விழாவையொட்டி இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ரூ.300 ஆன்லைன் தரிசனம் மற்றும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை உள்ளிட்ட தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டதால் உண்டியல் வருவாய் குறைந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 72,176 பேர் தரிசனம் செய்தனர். 25,549 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.12 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.






