என் மலர்
ஆந்திர பிரதேசம்
- யானைகள் கூட்டம் மொகிலிவாரி பள்ளி கிராமத்திற்கு புகுந்து அங்குள்ள பயிர்களை நாசம் செய்தது.
- யானையின் தந்தம் மின்சார ஒயரில் பட்டு மின்சாரம் தாக்கியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பாங்குராபாலம் அடுத்த மொகிலிவாரிப்பள்ளி ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
வனப்பகுதியில் இருந்து இரை தேடி வெளியே வரும் யானைகள் கூட்டம் அடிக்கடி மொகிலிவாரி பள்ளி கிராமத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யானைகள் கூட்டம் மொகிலிவாரி பள்ளி கிராமத்திற்கு புகுந்து அங்குள்ள பயிர்களை நாசம் செய்தது.
கூட்டத்தில் வந்த ஆண் யானை ஒன்று விவசாய நிலத்தின் அருகே இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் உரசியது. அப்போது யானையின் தந்தம் மின்சார ஒயரில் பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் யானை உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
விவசாய நிலத்திற்கு சென்ற அப்பகுதி மக்கள் யானை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சித்தூர் வனசரக அலுவலர் சிவகுமார் வனவர்கள் சைதன்யா, அனில் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த யானையை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- காணொலிக் காட்சி மூலம் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு செல்கிறார். விஜயவாடாவில் ஆந்திரப்பிரதேச அரசால் வழங்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இன்று மாலை விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை தினக் கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் காணொலிக் காட்சி மூலம், பாதுகாப்பு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, பழங்குடியின விவகாரங்கள் துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் இரவு திருமலையில் தங்கி ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.25 மணிக்கு வராக சுவாமி கோவில், ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதியை அடைகிறார்.
தொடர்ந்து ஸ்ரீ பத்மாவதி மகிளா விஸ்வவித்யாலயத்திற்குச் செல்லும் அவர் மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன், கலந்துரையாட உள்ளார். குடியரசுத் தலைவர் வருகையை யொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக திருப்பதிக்கு வரும் குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கடந்த 2 ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டவும் இல்லை பணம் கட்டியவர்களுக்கு குடியிருப்பு எங்கு உள்ளது என காட்டவும் இல்லை.
- போலீசார் லட்சுமி நாராயணா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் குண்டூர் மங்கள கிரியை சேர்ந்தவர் லட்சமிநாராயணா. இவர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தார்.
இவர் கடந்த 2020-ம் ஆண்டு 23 ஏக்கர் பரப்பளவில் ரூ 38 கோடியில் 10 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக அறிவித்தார்.
3 படுக்கை அறைகள் கொண்ட வீடு சதுர அடி ரூ 500-க்கு விற்பனை செய்துவருவதாகவும், முன்பணம் செலுத்துபவர்களுக்கு சலுகை விலையில் சதுர அடி ரூ.300-க்கு வழங்கப்படடும் என அறிவிப்பு வெளியிட்டார்.
இதனை நம்பி 2,500 பேர் ரூ.900 கோடி லட்சுமி நாராயணாவிடம் முன்பணமாக செலுத்தினர். கடந்த 2 ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டவும் இல்லை பணம் கட்டியவர்களுக்கு குடியிருப்பு எங்கு உள்ளது என காட்டவும் இல்லை.
இதனால் பணம் கட்டியவர்கள் ஐதராபாத்தில் உள்ள டவுன் பிளானிங் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். லட்சுமி நாராயணாவுக்கு ஐதராபாத் அருகே 23 ஏக்கர் நிலம் எதுவும் இல்லை. அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக லட்சுமி நாராயணா எந்த அனுமதியும் பெறவில்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து பணம் கட்டியவர்கள் லட்சுமி நாராயணாவை அணுகி எங்களுக்கு வீடு தேவையில்லை, நாங்கள் கட்டிய பணத்தை திருப்பி தர வேண்டும் என கேட்டனர்.
பணம் கேட்டவர்களுக்கு லட்சுமி நாராயணா காசோலை வழங்கினார். காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது.
பணம் கட்டி ஏமாந்தவர்கள் இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் லட்சுமி நாராயணா ரூ.900 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லட்சுமி நாராயணா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்ததால் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு பதவியை லட்சுமி நாராயணா நேற்று ராஜினாமா செய்தார்.
- திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
- 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
திருப்பதி :
ஜனாதிபதியாக பதவியேற்று திருப்பதி மாவட்டத்துக்கு முதல் முறையாக திரவுபதிமுர்மு நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) என 2 நாட்கள் வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
திருப்பதிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதிமுர்முவுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி தலைமை தாங்கி பேசுகையில், ஜனாதிபதி திருப்பதி வருகிறார். அதற்காக ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.
ஜனாதிபதி விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று புறப்பட்டு இரவு 8:40 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தை அடைகிறார். இரவு 9.25 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு திருமலையை அடைகிறார்.
திருமலையில் தங்கி ஓய்வெடுத்ததும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.25 மணிக்கு வராஹ சுவாமி கோவில், வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதியை அடைகிறார்.
திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டார்
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துணை கலெக்டர் பாலாஜி, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மூலவர் கருவறை தங்க முலாம் பூசும் பணி நடந்து வருகிறது.
- ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 331 கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன.
திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. வைகுண்ட துவார தரிசனத்துக்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் செய்யப்படும்.
வைகுண்ட துவார தரிசனத்துக்காக 10 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். எனவே 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படும். அதற்காக, திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.
ஜனவரி மாதம் 2-ந்தேதி வி.ஐ.பி. பக்தா்களுக்கு (செல்ப் புரோட்டோகால்) மட்டுமே பிரேக் தரிசனம் வழங்கப்படும். ஜனவரி மாதம் 2-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வீதம் 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.
இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுண்ட்டர் ஜனவரி மாதம் 1-ந்தேதி தொடங்கப்படும். திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்கள் இலவச தரிசன டோக்கன்கள் கொடுத்துத் தீரும் வரை திறந்திருக்கும். டோக்கன் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு செல்லலாம். ஆனால் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வைகுண்ட துவார தரிசனத்துக்கு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வீதம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆனந்த நிலையம் (மூலவர் கருவறை) தங்க முலாம் பூசும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகளுக்காக வருகிற பிப்ரவரி மாதம் 23-ந்தேதி பாலாலயம் நடத்தப்பட உள்ளது.
1957, 1958-ம் ஆண்டுகளில் தங்க முலாம் பூசும் பணி நடந்தது. அதேபோல் அடுத்த ஆண்டு தங்க முலாம் பூசும் பணி தொடங்க உள்ளது. பக்தர்கள் தனிப்பட்ட முறையில் தங்கம் காணிக்கை வழங்கியதையும், பிரதான உண்டியலில் தங்கம் காணிக்கையாகப் போட்டதையும் வைத்து ஆனந்த நிலையத்துக்கு தங்க முலாம் பூசப்படும்.
ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 331 கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் 1,100-க்கும் மேற்பட்ட கோவில்களை விரைவாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி-திருமலை 2-வது மலைப்பாதையில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் கட்ட ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
திருமலையில் உள்ளூர் மக்கள் வசிக்கும் பாலாஜி நகரில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.3.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். திருப்பதி தாதய்யகுண்டா கங்கையம்மன் கோவில் வளர்ச்சிக்கு ரூ.3.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அறைகளை நவீனப்படுத்தும் பணிகளுக்கு ரூ.3.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் கூடுதலாக ஆண்கள் விடுதி கட்ட ரூ.3.35 கோடி ஒதுக்கப்படும். நந்தகம் விடுதியில் தளவாடங்கள் வாங்க ரூ.2.95 கோடி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்க ரூ.2.56 கோடியும், அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்க ரூ.36 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களின் ஊதியம் திருத்தப்படாததால், ஒப்பந்தத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் பிற வகைகளின் ஊதிய விகிதங்களை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும். இந்தக் குழு அடுத்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
வழக்கமான நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.14 ஆயிரமும், ஒப்பந்தம், அவுட்சோர்சிங் மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 850-ம் பிரம்மோற்சவ விழா பரிசு வழங்கப்படும்.
லட்டு கவுண்ட்டர்களில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் லட்டுகளை கூடுதல் விலைக்கு பக்தர்களிடம் விற்பனை செய்கிறார்கள். இதுதொடர்பாக பக்தர்களிடம் இருந்து பறக்கும் படை துறை அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வருகின்றன. எனவே லட்டு கவுண்ட்டர்களில் லட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி கார் மற்றும் 2 லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன.
- கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கூலி தொழிலாளர்கள்.
திருப்பதி:
திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் செம்மரம் கடத்தி செல்வதாக திருப்பதி எஸ்.பி.பரமேஸ்வரர் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. ராமராஜூ மேற்பார்வையில் பாக்ராப்பேட்டை இன்ஸ்பெக்டர் துளசிராம், புத்தூர் இன்ஸ்பெக்டர் அசோக் குமார், வடமால பேட்டை ராமாஞ்ச நேயலு, நாராயண வனம் எஸ்.ஐ பரமேஷ் நாயக் உள்ளிட்ட போலீசார் 2 குழுக்களாக பிரிந்து திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி கார் மற்றும் 2 லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. திடீரென போலீசாரை பார்த்ததும் வாகனங்களில் இருந்து சிலர் கீழே குதித்து ஓட முயன்றனர்.
அவர்களை பிடிக்க முயன்ற போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடினர். இருப்பினும் போலீசார் 2 டிரைவர்கள் மற்றும் 42 கூலி தொழிலாளர்களையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் தப்பிச் சென்றனர்.
லாரியில் இருந்து 11 கோடாரிகள், 32 ரம்பம், 2 லாரி, 1 கார், 2.6 டன் எடை கொண்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 81 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது.
தப்பி ஓடிய முக்கிய குற்றவாளிகள் கூலி தொழிலாளர்களை சேஷாசலம் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று செம்மரங்களை வெட்டி சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள பெரிய கடத்தல்காரர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வடமாலைபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான அனைவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ரூ.4.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- திருப்பதியில் 69,640 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், கவர்னர்கள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கு முன்பு முக்கிய பிரமுகர்கள் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை விஐபி பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் வி.ஐ.பி பிரேக் தரிசன நேரத்தை மாற்ற திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல் காலை 8 மணி முதல் 10 மணி வரை பிரேக் தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க நேரம் மாற்றப்பட்டது. அந்த நேரத்தில் இன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்தனர்.
திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூட்டம் நேற்று அன்னம்மையா பவனில் செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமையில் நடந்தது.
அலிப்பிரியில் ஆன்மீக பூங்கா அமைக்க முதல்கட்ட பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் தடுப்பு சுவர் அமைக்க ரூ.9.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பத்மாவதி ஓய்வு இல்ல அறைகளை பராமரிப்பதற்காக ரூ.3.80 கோடியும், தேவஸ்தான ஆஸ்பத்திரி மற்றும் மருந்தகங்களில் மருந்து வாங்க ரூ.2.50 கோடியும், அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்க ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திருப்பதியில் நேற்று 69,640 பேர் தரிசனம் செய்தனர். 28,649 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- நாளை முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும்.
- இந்த தகவலை திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கான டிக்கெட் கவுண்ட்டர் திருப்பதி மாதவம் ஓய்வு இல்லத்தில் தொடங்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும்.
வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் இரவில் காத்திருக்கும் பக்தர்கள், காலையில் விரைவாக தரிசனம் செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் இருந்து தினமும் பக்தர்கள் திருமலைக்கு வந்து வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் திருமலையில் உள்ள அறைகள் வாங்கும் நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த தகவலை திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- 4-ந்தேதி கீதா ஜெயந்தி விழா நடக்கிறது.
- 5-ந்தேதி சக்கரத்தீர்த்த முக்கோடி உற்சவம் நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடக்கும் விழாக்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
4-ந்தேதி கீதா ஜெயந்தி, 5-ந்தேதி சக்கரத்தீர்த்த முக்கோடி உற்சவம், 7-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா, 8-ந்தேதி திருப்பாணாழ்வார் வருட திருநட்சத்திரம், 16-ந்தேதி மாலை 6.12 மணிக்கு மார்கழி மாதம் (தனுர் மாதம்) தொடக்கம், 19-ந்தேதி சர்வ ஏகாதசி, 22-ந்தேதி ஆத்யாயன உற்சவம் தொடக்கம், தொண்டரடிபொடியாழ்வார் வருட திருநட்சத்திரம்.
மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
- தீ விபத்து ஏற்பட்ட எஸ்-6 பெட்டியை கழற்றி விட்டு மற்ற பெட்டிகளுடன் ரெயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றது.
- தீ விபத்து குறித்து திருப்பதி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ், ரெயில், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்காக திருப்பதி, ரேணிகுண்டா, நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வரை திருமலா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
நேற்று இரவு 11 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து கிளம்பிய திருமலா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை திருப்பதி ரெயில் நிலையம் வந்தடைந்தது. திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு காலை 5.30 மணிக்கு திருமலா எக்ஸ்பிரஸ் புறப்படுவது வழக்கம். இன்று அதிகாலை 5 மணிக்கு பயணம் செய்வதற்காக ரெயிலில் பயணிகள் உட்கார்ந்து கொண்டு இருந்தனர்.
அப்போது எஸ்-6 பெட்டியில் உள்ள கழிவறையில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனைக்கண்ட ரெயிலில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினர்.
இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட எஸ்-6 பெட்டியை கழற்றி விட்டு மற்ற பெட்டிகளுடன் ரெயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றது. தீ விபத்து குறித்து திருப்பதி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத நபர் சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் வீசி சென்றதால் தீ விபத்து.
- தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதி ரெயில் நிலையத்தில் பயணிகள் இன்றி நின்றிருந்த ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ மளமளவென ரெயில் பெட்டிகளில் பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்ப வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர் சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் வீசி சென்றதால் தீ விபத்து என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
- ஆந்திர வியாபாரிகள் கழுதைகள் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு, கர்நாடகா, ஒரிசா பகுதியிலிருந்து கழுதைகளை கடத்தி வருகின்றனர்.
- கழுதைகள் சட்ட விரோதமாக அறுத்து விற்பனை செய்யப்படுவதை தடுக்க குண்டூர் ஓங்கோல் பாபட்லா பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் கழுதை இறைச்சிக்கு கடும் கிராக்கி உள்ளது. கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, குண்டூர் மாவட்டங்களில் கழுதை இறைச்சி விரும்பி சாப்பிடப்படுகிறது.
கழுதை இறைச்சியை சமைத்து சாப்பிட்டால், அது ஆண்மைச்சக்தியை அதிகரிக்கும், அது மட்டுமின்றி முதுகுவலி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து நல்லதொரு நிவாரணம் தரும் என மக்கள் நம்புகிறார்கள்.
அங்கு கழுதை இறைச்சி ஒரு கிலோ ரூ.600 என விற்பனை செய்யப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க தற்போது கழுதை இறைச்சி சாப்பிட்டால் மூட்டு வலி குணமாகும் என்ற வதந்தி பரவி வருகிறது. இதனால் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் கழுதை இறைச்சியை வாங்கி சமைத்து சாப்பிடுகின்றனர். இதனால் கழுதை இறைச்சி விற்பனை மேலும் அதிகரித்து உள்ளது.
கழுதைகள் சட்ட விரோதமாக அறுத்து விற்பனை செய்யப்படுவதை தடுக்க குண்டூர் ஓங்கோல் பாபட்லா பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் இந்த பகுதிகளில் 600 கிலோவிற்கு அதிகமான கழுதை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இறைச்சிக்காக வெட்ட கொண்டு செல்லப்பட்ட 78 கழுதைகளை மீட்டனர்.
ஆந்திர வியாபாரிகள் கழுதைகள் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு, கர்நாடகா, ஒரிசா பகுதியிலிருந்து கழுதைகளை கடத்தி வருகின்றனர்.
கழுதையை கொன்று, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வதற்கு தடை உள்ளது. இதுபோன்று கழுதை இறைச்சியை சாப்பிட்டால், அது உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம்-2006-ன்படி குற்றம் ஆகும். இந்த குற்றத்துக்கு 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது கடுமையான அபராதம் அல்லது இரண்டுமேகூட விதிக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






