என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • பாதயாத்திரைக்கு அனுமதி வழங்கும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக ஷர்மிளா தெரிவித்தார்.
    • ஷர்மிளா உடல் நிலையை காரணம் காட்டி போலீசார் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா. இவர் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி பாதயாத்திரை நடத்தி வந்தார். பாதயாத்திரையின்போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் ஆளும் கட்சியினரை விமர்சனம் செய்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர ராவ் கட்சியினர் கடந்த வாரம் ஷர்மிளா மீது கற்கள் மற்றும் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் ஷர்மிளாவின் பிரசார வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஷர்மிளாவும் கைது செய்யப்பட்டு போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவரது காரை கிரேனில் தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ஷர்மிளாவின் பாதயாத்திரைக்கு தெலுங்கானா போலீசார் தடை விதித்தனர்.

    பாதயாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி ஷர்மிளா ஐதராபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஐதராபாத் ஐகோர்ட் ஷர்மிளாவின் பாதயாத்திரைக்கு அனுமதி வழங்கியது.

    இருப்பினும் தெலுங்கானா போலீசார் ஷர்மிளா பாதயாத்திரையின்போது ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருவதால் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே பாதயாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தனர்.

    பாதயாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஷர்மிளா தனது தாயார் விஜயலட்சுமியுடன் வீட்டின் முன்பாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஷர்மிளாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தால் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

    இருப்பினும் பாதயாத்திரைக்கு அனுமதி வழங்கும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக ஷர்மிளா தெரிவித்தார். அவரது உடல் நிலையை காரணம் காட்டி போலீசார் அவரை இன்று கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 170 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
    • ஆந்திராவின் 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது.

    வங்க கடலில் உருவான மாண்டஸ்' புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வரும் நிலையில், ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதையடுத்து ஆந்திராவின் தென் கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

    6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன. 5 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் 5 மாநில பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர காலங்களில் மக்களை வெளியேற்றவும் தயாராக இருப்பதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 170 கன அடி உபரி நீர் திறக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • ஆந்திராவில் வர உள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க அரசியல் கட்சியினர் பல்வேறு யூகங்களை வகுத்து வருகின்றனர்.
    • ஐதராபாத்தில் பிரத்யேக சுற்றுப்பயண வாகனத்தை தயார் செய்து வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வர உள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க அரசியல் கட்சியினர் பல்வேறு யூகங்களை வகுத்து வருகின்றனர். ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    இழந்த ஆட்சியைப் பிடிக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆளும் கட்சியின் குறைகளை பொதுமக்களிடம் கூறி வருகிறார்.

    அவரது மகன் நாரா லோகேஷ் வரும் ஜனவரி மாதம் பாதயாத்திரியை தொடங்கி மாநிலம் முழுவதும் 400 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இதேபோல் ஆந்திராவில் பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் ஜனவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஐதராபாத்தில் பிரத்யேக சுற்றுப்பயண வாகனத்தை தயார் செய்து வருகிறார்.

    ராணுவ வாகனத்தை போல் தயார் செய்யப்படும் இந்த வாகனம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தை போட்டோ எடுத்த நடிகர் பவன் கல்யாண் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த வாகனத்திற்கு வராஹி என பெயரிட்டுள்ளார்.

    இதனைக் கண்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசகர் ராமகிருஷ்ணா ரெட்டி கூறுகையில்:-

    நடிகர் பவன் கல்யாண் தயார் செய்யப்படும் வாகனம் ராணுவத்தினர் மட்டும் பயன்படுத்தக்கூடிய பிரத்யேக வாகனமாகும்.

    இந்த வாகனத்தை தனி நபர்கள் யாரும் பயன்படுத்தக்கூடாது. நடிகர் பவன் கல்யாண் வேறு வாகனத்தை வேண்டுமானால் பயன்படுத்தலாம். ராணுவத்தினர் பயன்படுத்தக்கூடிய வாகனத்தை அனைவரும் பயன்படுத்தினால் அவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.

    இதனால் நாட்டில் பல்வேறு குழப்பங்கள் நேரிடும். எனவே இந்த பிரசார வாகனத்தை பவன் கல்யாண் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    இதே கருத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்து வருவதால் ஆந்திராவில் பரபரப்பு நிலவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எதிர்பாராத விதமாக கால் தவறி, ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் சசிகலா விழுந்தார்.
    • சசிகலாவை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவரது இடுப்பு எலும்புகள் நொறுங்கி இருப்பது தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அன்னவரம் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (வயது 20). இவர் விசாகப்பட்டினம் அருகே உள்ள துவ்வாடா எனும் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் தினமும் தனது ஊரில் இருந்து ரெயில் மூலமாக கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

    நேற்று முன்தினம் சசிகலா வழக்கம்போல் குண்டூர்-ராயகடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கல்லூரிக்கு சென்று துவ்வாடா ரெயில் நிலையத்தில் மாணவி இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி, ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் விழுந்தார்.

    அவரது இடுப்பு பகுதி பிளாட்பாரத்துக்கும், ரெயிலுக்கும் இடையில் சிக்கியது. இதனால் அவரால் வெளியே வர முடியவில்லை. 2 மணி நேரம் அவர் அங்கு போராடினார்.

    இதையடுத்து பிளாட்பாரத்தை இடித்து சசிகலாவை மீட்டு விசாகப்பட்டினம் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சசிகலாவை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவரது இடுப்பு எலும்புகள் நொறுங்கி இருப்பது தெரியவந்தது.

    அவருக்கு உடனடியாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சசிகலா உடலில் நோய் தொற்று ஏற்பட்டு அபாய நிலைக்கு சென்றார். அவரது கிட்னியில் ரத்த கசிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    டாக்டர்கள் சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
    • திருப்பதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிக அளவில் நிலவுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவிற்கு பிறகு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    பக்தர்கள் தரிசனத்திற்காக 48 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அவதி அடைந்தனர். ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் பெற்றவர்கள் 5 மணி நேரத்தில் சாமியை தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை கொண்டு வரப்பட்டது.

    அலிப்பிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள கோதண்டராமசாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் டைம்ஸ் லாக் டோக்கன் வழங்கி வருகின்றனர்.

    டைம் ஸ்லாட் டோக்கன் வழங்குவதை அறியாத பக்தர்கள் நேராக திருமலைக்கு வந்து பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிக அளவில் நிலவுகிறது. கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.

    இதனால் பக்தர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

    இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்கின்றனர். டோக்கன் வாங்காமல் நேரடியாக செல்லும் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 51,376 பேர் தரிசனம் செய்தனர். 24,878 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • மாவோயிஸ்டுகள் அல்லூரி சீதா ராம ராஜூ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் குமார் முன்னிலையில் படேரு பகுதியில் சரண் அடைந்தனர்.
    • பெண் மாவோயிஸ்டு சிலோ இந்து என்கிற கெம்மேலி பாரதி என்பவரும் சரண் அடைந்தார்.

    விசாகப்பட்டினம்:

    ஆந்திராவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த 35 பேர் சரண் அடைந்துள்ளனர். இவர்கள் அல்லூரி சீதா ராம ராஜூ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் குமார் முன்னிலையில் படேரு பகுதியில் சரண் அடைந்தனர்.

    இவர்களில் பெண் மாவோயிஸ்டு சிலோ இந்து என்கிற கெம்மேலி பாரதி என்பவரும் அடங்குவார். இவர் கொலை, துப்பாக்கி சூடு, போலீசாரை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டவர். இவர்கள் கடந்த 2-ந்தேதி முதல் நேற்று வரை சரண் அடைந்துள்ளனர்.

    • பிளாட்பார காங்கிரீட் இடித்து சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் சசிகலா பத்திரமாக மீட்கப்பட்டார்.
    • ராயகடா எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அன்னவரம் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (வயது 20). இவர் விசாகப்பட்டினம் அருகே உள்ள துவ்வாடா எனும் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    தினமும் தனது ஊரில் இருந்து ரெயில் மூலமாக கல்லூரிக்கு சென்று வருகிறார்.

    இந்நிலையில், நேற்று சசிகலா வழக்கம்போல் குண்டூர்-ராயகடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கல்லூரிக்கு பயணம் செய்தார். அப்போது துவ்வாடா ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றது.

    சசிகலா ரெயிலில் இருந்து கீழே இறங்கினார். அந்த நேரத்தில் இவர் கால் தவறி, ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் விழுந்தார்.

    இவரது இடுப்பு பகுதி பிளாட்பாரத்துக்கும், ரெயிலுக்கும் இடையில் சிக்கியது.

    இதனை கண்ட சக பயணிகள் உடனடியாக அபாய சங்கிலி பிடித்து ரெயிலை நிறுத்தினர். இதனால் மாணவி அதிஷ்டவசமாக உயர் தப்பினார்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மாணவியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் முயற்சி செய்தும் மாணவியை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து பிளாட்பார காங்கிரீட் இடித்து சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் சசிகலா பத்திரமாக மீட்கப்பட்டார். அதன் பின்னர், மாணவி விசாகப்பட்டினம் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதனால், ராயகடா எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பதஸ்வினி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த ஞானேஸ்வர் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்.
    • தன்னை யாராவது பிடிக்க வந்தால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தக்கில பாடு பகுதியை சேர்ந்தவர் பதஸ்வினி (வயது 20). இவர் விஜயவாடாவில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி பல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார்.

    குண்டூர் மாவட்டம் மாணிக்கொண்டாவை சேர்ந்தவர் ஞானேஸ்வர். சாப்ட்வேர் என்ஜினியரான இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்தார். அப்போது பதஸ்வினியுடம், ஞானேஸ்வருக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர்.

    பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் பதஸ்வினியின் பெற்றோருக்கு தெரியவந்தது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதஸ்வினி, ஞானேஸ்வருடன் பழகுவதை தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் இருந்து விடியூரில் உள்ள தனது பெண் நண்பர் வீட்டிற்கு வந்து இருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஞானேஸ்வர் நேற்று இரவு விடியூருக்கு சென்று பதஸ்வினியை சந்தித்து பெற்றோருக்கு தெரியாமல் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தினார். அதற்கு பதஸ்வினி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த ஞானேஸ்வர் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்.

    பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை எடுத்து பதஸ்வினியின் கழுத்தை அறுத்தார். இதனால் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. பதஸ்வினி வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது பதஸ்வினி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஞானேஸ்வரை பிடிக்க முயற்சி செய்தனர். தன்னை யாராவது பிடிக்க வந்தால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.

    இருப்பினும் ஞானேஸ்வரை பிடித்து கொண்டு பதஸ்வினியை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பதஸ்வினி பரிதாபமாக இருந்தார்.

    குண்டூர் போலீசார் ஞானேஸ்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு மறுத்த காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மகா துவாரம் வழியாக தரிசனத்திற்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஜனாதிபதி வருகையையொட்டி திருப்பதி முழுவதும் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பதி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு விசாகப்பட்டினத்தில் இருந்து விமான மூலம் நேற்று இரவு 9 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

    ஆந்திர கவர்னர் விஸ்வ பூஷன் அரிச்சந்திரன் ஆந்திர துணை முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சர் கிருஷ்ணன் ரெட்டி, கலெக்டர் வெங்கட்ரமண ரெட்டி, எஸ்.பி பரமேஸ்வர ரெட்டி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். இதையடுத்து திருப்பதி வந்த ஜனாதிபதி பத்மாவதி கெஸ்ட் ஹவுஸில் தங்கினார்.

    இன்று காலை 9.25 மணிக்கு வராஹ சாமி கோவிலிலும், பின்னர் 9.30 மணிக்கு ஏழுமலையானையும் தரிசனம் செய்தார்.

    மகா துவாரம் வழியாக தரிசனத்திற்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதங்களை வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து அலிப்பிரியில் உள்ள கோசாலையில் நடத்த கோ மந்திர பூஜையில் கலந்து கொண்டார்.

    இதையடுத்து திருப்பதியில் உள்ள மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் உரையாடினார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி திருப்பதி முழுவதும் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • புதிய முயற்சியால் பக்தர்கள் ஒரு நாள் திருமலையில் தங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது.
    • பக்தர்கள் திருமலைக்கு ஒரு நாள் முன்னதாக வர வேண்டிய அவசியமில்லை.

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தலைமை தாங்கி பக்தர்கள் தெரிவித்த மொத்தம் 33 அழைப்புகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.

    முன்னதாக அவர் கூறியதாவது:-

    ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருக்கும் பொதுப் பக்தர்களுக்கு விரைந்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைப்பதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது வி.ஐ.பி. பக்தர்கள் காலை 8 மணிக்கு கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த மாற்றத்தால் பொதுப் பக்தர்களுக்கு 3 மணிநேரம் தரிசன நேரம் கிடைத்துள்ளது. அந்த நேரத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். பக்தர்கள் திருமலைக்கு ஒரு நாள் முன்னதாக வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் இப்போது திருப்பதியில் தங்கி, பிரேக் தரிசன டிக்கெட்டை பெற்று, காலை நேரடியாக திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    புதிய முயற்சியால் பக்தர்கள் ஒரு நாள் திருமலையில் தங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமலையில் தங்குவதற்கான விடுதி அறைக்கான பயன்பாடும் குறைத்தது. வி.ஐ.பி. பிரேக் தரிசன மாற்றம் சோதனை முயற்சியாக ஒரு மாதத்துக்கு செயல்படுத்தப்படும்.

    ஜனவரி மாதம் 2-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 11-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளை போலவே, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தினமும் 25 ஆயிரம் ரூ.300 டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது மற்றும் 10 நாட்களுக்கு மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகளை வெளியிடுகிறது. எந்தப் பகுதியில் இருந்தும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இதேபோல் 10 நாட்களுக்கு தேதி நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டிக்கெட்டுகளும் வழங்கப்படும். அந்த டிக்கெட் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் வீதம் மொத்தம் 5 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் ஒதுக்கப்படும். பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் தேதியின்படி வைகுண்ட துவார தரிசனத்துக்கு வரலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நாளொன்றுக்கு 75 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்தை வழங்க ஏற்பாடு செய்ய ஆலோசனை நடத்தி வருகிறோம். அனைத்துப் பக்தர்களின் வசதிக்காக ரூ.300 டிக்கெட் அல்லது தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்காக திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் திருமலையை அடையலாம். ஆனால் கோவிலுக்குள் சாமி தரிசனம் வழங்கப்பட மாட்டாது.

    வருகிற 16-ந்தேதி மாலை 6.12 மணிக்கு மார்கழி (தனுர் மாதம்) மாதம் பிறக்கிறது. மார்கழி மாத பிறப்பால் ஏழுமலையான் கோவிலில் வருகிற 17-ந்தேதியில் இருந்து 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை அதிகாலையில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பவை சேவை நடக்கிறது.

    ஆனந்த நிலையத்தின் மேற்கூரையில் தங்க முலாம் பூசும் பணி தொடங்கப்பட உள்ளது. தங்க முலாம் பூசும் பணியை 6 மாதம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்காக, பிப்ரவரி மாதம் 23-ந்தேதி பாலாலய நிகழ்ச்சி நடத்தப்படும்.

    இந்தத் திட்டத்துக்காக பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தங்கத்தை தேவஸ்தானம் பயன்படுத்தி கொள்ளும். இந்தக் காலக்கட்டத்தில் ஸ்ரீவாரி தரிசனம் 1957-58ம் ஆண்டு பின்பற்றப்பட்ட நடைமுறையின்படி தொடரும்.

    திருப்பதியில் உள்ள மாதவம் தங்கும் விடுதியில் ஸ்ரீவாணி காணிக்கையாளர்களுக்கு நேரில் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ஸ்ரீவாணி அறக்கட்டளை காணிக்கையாளர்கள் தற்போது கடந்த 1-ந்தேதியில் இருந்து மாதவம் தங்கும் விடுதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளை நேரில் கவுண்ட்டரில் பெறுகிறார்கள். அதே விடுதியில் அவர்களுக்கு அறைகளும் கிடைக்கும்.

    கீதா ஜெயந்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் டிசம்பர் 4-ந்தேதி (அதாவது இன்று) நாத நீராஞ்சனம் மேடையில் பகவத்கீதா அகண்ட பாராயணத்தை ஏற்பாடு செய்கிறது. நிகழ்ச்சி காலை 7 மணியில் இருந்து வேத பண்டிதர்கள் 18 சர்கங்களில் இருந்து 700 ஸ்லோகங்களை இடைவிடாமல் பாராயணம் செய்வார்கள். இந்த நிகழ்ச்சி பக்தி சேனலில் ஒளி பரப்பப்படும்.

    நாளை (அதாவது திங்கட்கிழமை) சக்கர தீர்த்த முக்கொடி உற்சவம் நடக்கிறது. 7-ந்தேதி திருமலையில் கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது. உலக மக்கள் மனித நேயத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக திருமலையில் உள்ள தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் சீனிவாச விஸ்வ சாந்தி ஹோமம் வருகிற 12-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அச்சிட்ட 2023-ம் ஆண்டுக்கான டைரிகள் மற்றும் காலண்டர்கள் மும்பை, பெங்களூரு, சென்னை, புது டெல்லி, ஐதராபாத், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களிலும், திருமலை மற்றும் திருப்பதியில் கிடைக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் இணை அதிகாரிகள் வீரபிரம்மன், சதாபார்கவி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தங்க நகைகள், 570 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் லேப்டாப், 2 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
    • காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பயணிகள் ரெயிலில் சென்று தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்ததாக விஜய் தெரிவித்துள்ளார்.

    திருப்பதி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மலையூரை சேர்ந்தவர் விஜய் (வயது 48). இவர் வேலூர், காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து பயணிகள் ரெயிலில் ஏறி சித்தூர் சென்று சுற்று வட்டார பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார்.

    இவர் சிவா, விஜய், வெங்கடேஷ் என பல்வேறு பெயர்களை வைத்துகொண்டு பூட்டிய வீடுகளை மட்டுமே நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இவர் மீது பாகாலா, முத்தியால்பள்ளி, சந்திரகிரி சித்தூர், ராமச்சந்திராபுரம், திருப்பதி பல்கலைக்கழகம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 80 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாகாலா ரெயில் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது பிளாட்பாரத்தில் இருந்த விஜய் போலீசாரைக் கண்டதும் தண்டவாளத்தில் குதித்து தப்பி ஓடினர். இதனைக் கண்ட போலீசார் விஜயை துரத்தி சென்று மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் ஏற்கனவே கொள்ளை வழக்குகளில் சிக்கி 10 ஆண்டுகள் சிறைக்கு சென்று வந்து மீண்டும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

    அவரிடம் இருந்து 334 கிராம் தங்க நகைகள், 570 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் லேப்டாப், 2 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    திருவண்ணாமலையிலிருந்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பயணிகள் ரெயிலில் சென்று தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்ததாக விஜய் தெரிவித்துள்ளார்.

    • ஏ.டி.எம். மையங்களில் தங்கத்தின் விலை நிலவரங்கள் மற்றும் தங்க காசுகளின் விலை நிலவரம் குறித்து தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது.
    • கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை ஏ.டி.எம். எந்திரத்தில் செலுத்தி தங்களுக்கு தேவையான அளவு தங்கக் காசுகளை எடுத்துக் கொள்ளலாம்.

    திருப்பதி:

    துபாயை சேர்ந்த தங்க நகை வியாபாரியான சையத் தரோஜ் என்பவர் ஆந்திராவில் 5 இடங்களில் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதை போல் தங்க காசு எடுக்கும் ஏ.டி.எம். மையங்களை திறந்துள்ளார்.

    ஆந்திர மாநிலம் பெத்தப்பள்ளி, வாரங்கல், கரீம் நகர், செகந்திராபாத் மற்றும் செகந்திராபாத் பில்டர் ஹவுஸ் என தங்க காசு ஏ.டி.எம். மையங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த ஏ.டி.எம் மையங்களில் 1/2, 1,2,5, 10, 20, 50 கிராம் எடையுள்ள தங்க காசுகள் வைக்கப்பட்டு உள்ளது.

    ஏ.டி.எம். மையங்களில் தங்கத்தின் விலை நிலவரங்கள் மற்றும் தங்க காசுகளின் விலை நிலவரம் குறித்து தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது.

    தங்க காசு வாங்க விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை ஏ.டி.எம். எந்திரத்தில் செலுத்தி தங்களுக்கு தேவையான அளவு தங்கக் காசுகளை எடுத்துக் கொள்ளலாம்.

    செகந்திராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். மையத்தை தெலுங்கானா மகளிர் ஆணைய கமிஷனர் சுனிதா லஷ்மண் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.

    ×