என் மலர்
இந்தியா

பிளாட்பாரத்திற்கும், ரெயிலுக்கும் இடையில் சிக்கிய கல்லூரி மாணவி
- பிளாட்பார காங்கிரீட் இடித்து சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் சசிகலா பத்திரமாக மீட்கப்பட்டார்.
- ராயகடா எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அன்னவரம் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (வயது 20). இவர் விசாகப்பட்டினம் அருகே உள்ள துவ்வாடா எனும் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
தினமும் தனது ஊரில் இருந்து ரெயில் மூலமாக கல்லூரிக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று சசிகலா வழக்கம்போல் குண்டூர்-ராயகடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கல்லூரிக்கு பயணம் செய்தார். அப்போது துவ்வாடா ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றது.
சசிகலா ரெயிலில் இருந்து கீழே இறங்கினார். அந்த நேரத்தில் இவர் கால் தவறி, ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் விழுந்தார்.
இவரது இடுப்பு பகுதி பிளாட்பாரத்துக்கும், ரெயிலுக்கும் இடையில் சிக்கியது.
இதனை கண்ட சக பயணிகள் உடனடியாக அபாய சங்கிலி பிடித்து ரெயிலை நிறுத்தினர். இதனால் மாணவி அதிஷ்டவசமாக உயர் தப்பினார்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மாணவியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் முயற்சி செய்தும் மாணவியை மீட்க முடியவில்லை.
இதையடுத்து பிளாட்பார காங்கிரீட் இடித்து சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் சசிகலா பத்திரமாக மீட்கப்பட்டார். அதன் பின்னர், மாணவி விசாகப்பட்டினம் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனால், ராயகடா எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






