என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மாநிலம் முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமான மலிவு விலை வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
- நிந்திரா மண்டலத்தில் 26 பேருக்கு புதிதாக கட்டப்பட்ட ஜெகன்னா காலனி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
நகரி:
ஆந்திராவில் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்கும் வகையில் ஒய்.எஸ்.ஆர் ஜெகன்னா காலனிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒய்எஸ்ஆர் ஜெகன்னா காலனிகள் திட்டத்தின் கீழ், ஆந்திரப் பிரதேச அரசு மாநிலம் முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமான மலிவு விலை வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வீடுகள் கட்டும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில், நகரி தொகுதியின் நிந்திரா மண்டலத்தில் உள்ள ஆரூரு எஸ்டி காலனியில் கட்டப்பட்ட ஜெகன்னா காலனி வீடுகளை அமைச்சர் ஆர்.கே.ரோஜா திறந்து வைத்தார். அவருடன் சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணா இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிந்திரா மண்டலத்தில் உள்ள அரூர் பஞ்சாயத்து எஸ்டி காலனியை சேர்ந்த 26 பேருக்கு ரூ.46.80 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஜெகன்னா காலனி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.கே.ரோஜா பேசுகையில், 'மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது தன் பொறுப்பு என உணர்ந்த நமது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இன்று பெண்களின் கனவை நிறைவேற்றி வருகிறார். பெண் குழந்தைகளுக்கு கல்வி, வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்துகிறார். வீடுகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெறும் இடமெல்லாம் திருவிழாக் கோலமாக காட்சியளிக்கிறது' என்றார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் லஞ்சம் கொடுக்காமல் வீடுகள் கிடைப்பது மட்டுமின்றி, தங்கள் பகுதிகளின் வளர்ச்சியிலும், மக்கள் பிரதிநிதிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் ரோஜா குறிப்பிட்டார்.
- ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க தேவஸ்தானம் டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடுகிறது.
- பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க தேவஸ்தானம் 16 மற்றும் 31-ந்தேதிகளில் காலை 9 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடுகிறது.
பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 17-ந்தேதியில் இருந்து ஜனவரி 14-ந்தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஜனவரி 2-ம்தேதி வைகுண்ட வாசல் திறக்கப்படுகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு 17-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 16-ந்தேதி மாலை 6.12 மணிக்கு மார்கழி மாதம் தொடங்குகிறது. அன்று மாலை முதலே கோவிலில் மார்கழி மாத கைங்கர்யம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து தினமும் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6 மணி வரை பக்தர்களுக்கு மார்கழி மாத தரிசனம் வழங்கப்படுகிறது. காலை 11 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை நித்ய கல்யாண உற்சவம் நடக்கிறது. மார்கழி மாத வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை மார்கழி மாத கைங்கர்யம், மூலவர்களுக்கு அபிஷேகம், காலை 9.15 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு இலவச தரிசனம் வழங்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி மாதம் 2-ம்தேதி அதிகாலையில் பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக இலவச தரிசன பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் ஆன்மிக மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
- ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும்.
தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏழுமலையான் கோவில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை நேற்று கூட்டம் நடந்தது.
காணொலி வாயிலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தேவஸ்தான அதிகாரி வீரப்பிரம்மம் தலைமை தாங்கினார். வரும் ஜனவரி 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசி அன்றைய தினம் கோவில்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், வழிபாடு முறைகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதி ஆகியவை குறித்து ஆலோசனை நடந்தது.
வைகுண்ட ஏகாதசி அன்று கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடி நீர் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.
வரிசையாக பக்தர்கள் செல்ல போதிய ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சாதாரண பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது வி.ஐ.பி.கள் யாராவது வந்தால் சாதாரண பக்தர்களை தடுத்து நிறுத்தக்கூடாது.
அவர்களை எந்தவொரு தொந்தரவும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும்.
வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சுப்ரபாத சேவை முடிந்தபின் கோவிலின் சொர்க்கவாசல் திறக்கப்படும்.ஜீயர்கள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், நீதிபதிகள், மத்திய மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும்.
அதனை தொடர்ந்து சாதாரண பக்தர்கள் வரிசையில் வைகுண்ட வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இளம்பெண் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து வாங்கி வந்ததாக கூறி டாக்டரிடம் லட்டை கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததாக தெரிகிறது.
- லட்டு சாப்பிட்ட சில நிமிடங்களில் டாக்டர் மயங்கிவிட்டார்.
திருப்பதி:
ஐதராபாத்தை சேர்ந்தவர் ஆயுர்வேத டாக்டர். இவர் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் தரிசனம் செய்வதற்காக பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பஸ்சில் அவருக்கு அருகில் அமர்ந்து பயணித்த இளம்பெண் ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார். இதன் மூலம் இளம்பெண்ணுடன் அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து அந்த பெண் லாட்ஜூக்கு செல்லலாமா? என அழைத்துள்ளார். இதையடுத்து டாக்டரை ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஒரு லாட்ஜூக்கு இளம்பெண் அழைத்து சென்றார்.
அப்போது அந்த இளம்பெண் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து வாங்கி வந்ததாக கூறி டாக்டரிடம் லட்டை கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததாக தெரிகிறது. இதனால் லட்டு சாப்பிட்ட சில நிமிடங்களில் டாக்டர் மயங்கிவிட்டார்.
மயக்கம் தெளிந்து எழுந்தபோது, அவரிடம் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிக்கொண்டு இளம்பெண் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து டாக்டர் ஸ்ரீகாளஹஸ்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட லாட்ஜூல் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த இளம்பெண் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் நகைகளை கொள்ளையடித்து தப்பிய பெண்ணை தேடி வருகின்றனர்.
- பக்தர்களுக்கு நேரடியாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
- இணையதளத்தில் தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யலாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நேரடியாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் லட்டு பிரசாதத்துக்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்ற தகவல் முற்றிலும் தவறாகும். அந்தத் தகவலை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யலாம். லட்டு பிரசாதத்துக்கு ஆன்லைன் பதிவு கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நண்பரின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மகளின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் குண்டூர் போலீஸ் சூப்பிரண்டு ஆரிப் அபீசிடம் புகார் செய்தனர்.
- போலீசார் மாணவியின் செல்போன் எண்ணை வைத்து அவரை கண்டுபிடித்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது முழு விவரத்தையும் மாணவி போலீசாரிடம் தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் குண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
தன்னுடைய தந்தை பீரோவில் வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை தந்தைக்கு தெரியாமலேயே எடுத்து வந்து தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு செலவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தந்தைக்கு தெரியாமல் எடுத்து வந்த பணத்தை மீண்டும் பீரோவில் வைக்க வேண்டும் என்பதற்காக தனது கிட்னியை விற்பனை செய்வதாக ஆன்லைனில் பதிவிட்டு இருந்தார்.
இதனைக் கண்ட பிரவின் ராஜ் என்பவர் தான் அமெரிக்காவில் இருப்பதாகவும், அங்குள்ள ஒருவருக்கு இந்தியாவில் உள்ள ஒருவரின் கிட்னி அவசரமாக தேவைப்படுவதாகவும், சிறுநீரகம் கொடுத்தால்ரூ.7 கோடி தருவதாகவும் மருத்துவமனையின் பெயர், விலாசம், டாக்டரின் போட்டோ மற்றும் வாட்ஸ்அப் எண்ணை பதிவிட்டு இருந்தார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த கல்லூரி மாணவி தனது தந்தையின் வங்கி எண்ணை பிரவீன் ராஜ் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து பிரவீன் ராஜ் மாணவியின் தந்தை வங்கி கணக்கில் ரூ 3.50 கோடி அனுப்பியதாகவும், அதனை செல்போனில் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து மாணவிக்கு அனுப்பி இருந்தார். மேலும் அமெரிக்காவில் இருந்து டாலரில் பணம் அனுப்பி இருப்பதாகவும் அதை இந்தியாவின் ரூபாய் நோட்டுக்களாக மாற்ற வேண்டுமென்றால் ரூ.16 லட்சத்தை அனுப்பி வைக்குமாறு தெரிவித்து இருந்தார்.
இதனை உண்மை என நம்பிய மாணவி தனக்கு தெரிந்தவர்களிடம் ரூ.16 லட்சத்தை கடனாக பெற்று பிரவீன் ராஜ் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து மாணவி அவரது தந்தையின் வங்கி கணக்கை சரிபார்த்த போது பணம் எதுவும் வரவில்லை என தெரிய வந்தது. மீண்டும் மாணவி பிரவீன் ராஜை அணுகி தந்தையின் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை என தெரிவித்தார். அதற்கு அவர் நீ டெல்லிக்கு வந்தால் நேரடியாக பணத்தை தருகிறேன் என்று கூறினார்.
இதையடுத்து மாணவி விமானத்தில் டெல்லிக்குச் சென்று பிரிவின் ராஜ் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அவர் சிறிது நேரத்தில் வருகிறேன் என கூறி கடைசி வரை வராமல் ஏமாற்றி விட்டார்.
வீட்டிற்கு சென்றால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்பார்கள். வாங்கிய பணத்தை எப்படி திருப்பி தருவது என விரக்தி அடைந்த மாணவி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வீட்டிற்கு செல்லாமல் என்.டி.ஆர் மாவட்டம் கன்சிகா சர்லா என்ற ஊருக்கு சென்று விட்டார்.
நண்பரின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மகளின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் குண்டூர் போலீஸ் சூப்பிரண்டு ஆரிப் அபீசிடம் புகார் செய்தனர்.
போலீசார் மாணவியின் செல்போன் எண்ணை வைத்து அவரை கண்டுபிடித்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது முழு விவரத்தையும் மாணவி போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து பட்டாபிபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் பணத்தை ஏமாற்றியவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாண்டஸ் புயல் காரணமாக திருமலைக்கு செல்லும் ஆந்திர மாநில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.
- பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ரூ.35 லட்சம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி:
மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதியில் இருந்து நெல்லூர், விஜயவாடா, குண்டூர், ஐதராபாத் மற்றும் திருமலைக்கு செல்லும் ஆந்திர மாநில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் 101 பஸ்களும், நேற்று 88 பஸ்களும் நிறுத்தப்பட்டது.
இதனால் 66,150 கி.மீ. இயக்கப்பட வேண்டிய பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ரூ.35 லட்சம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- லட்டு தயாரிக்கும் பணியில் 3 ஷிப்ட்டுகளாக 24 மணி நேரமும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- லட்டு வழங்கும் 60 கவுண்டர்களில் 30 கவுண்டர்களில் மட்டுமே ஊழியர்கள் இருந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 நாட்களாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 2½ லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக திருப்பதி வந்து இருந்தனர்.
தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகின்றன. ரூ.50 விலையில் பக்தர்களுக்கு தேவையான அளவு லட்டுக்கள் விற்பனை செய்து வந்தனர்.
தயாரிக்கப்படும் லட்டுக்களை கவுண்டர்களுக்கு கொண்டு செல்லும் பணியை தனியார் ஒருவருக்கு தேவஸ்தானம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி இருந்தது. ஒப்பந்ததாரர் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் வாங்காததால் பணியாளர்கள் பாதி பேர் வேலைக்கு வரவில்லை.
மேலும் லட்டு தயாரிக்கும் பணியில் 3 ஷிப்ட்டுகளாக 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்களால் ஒரு நாளைக்கு 3.50 முதல் 4 லட்சம் லட்டுகள் வரை மட்டுமே தயாரிக்க முடிகிறது.
இந்த நிலையில் வார விடுமுறையான நேற்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா தெலுங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர்.
பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு லட்டு வாங்க கவுண்டர்கள் முன்பாக குவிந்தனர். லட்டு வழங்கும் 60 கவுண்டர்களில் 30 கவுண்டர்களில் மட்டுமே ஊழியர்கள் இருந்தனர். மீதும் உள்ள 30 கவுண்டர்கள் மூடப்பட்டு இருந்தது.
இதையடுத்து தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு லட்டு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு லட்டு வழங்குவது குறித்து முறையான பயிற்சி இல்லாததால் பக்தர்களுக்கு லட்டு வழங்க சிரமப்பட்டனர்.
இதனால் லட்டு கவுண்டர்கள் முன்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து லட்டுக்களை பெற்று சென்றனர்.
பக்தர் ஒருவருக்கு 3 முதல் 4 லட்டுக்கள் வரை மட்டுமே வழங்கப்பட்டது. கூடுதலாக லட்டுக்கள் கேட்டால் இல்லை என ஊழியர்கள் பதில் அளித்தனர். எனவே நவீன எந்திரங்களை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 7 முதல் 7 லட்சம் லட்டுக்கள் தயாரிக்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 72,466 பேர் தரிசனம் செய்தனர் 28,123 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.29 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
- பக்தர்கள் 14-ந்தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை இன்று காலை 10 வெளியிடப்படுகிறது. பக்தர்கள் இன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்யலாம். முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஜனவரி மாதத்துக்கான எலக்ட்ரானிக் டிப் பதிவுகள் (குலுக்கல் முறை) மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. பக்தர்கள் 14-ந்தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேஷாசலம் மலைத்தொடரில் பெய்த பலத்த மழையால் திருமலையில் உள்ள கோகர்பம், பாபவிநாசனம், ஆகாசகங்கை, குமாரதாரா, பசுபுதாரா அணைகளில் நீர் நிரம்பி காணப்படுகிறது.
- திருமலை-திருப்பதி மலைப்பாதையில் 21, 26, 37, 38 ஆகிய கொண்டை ஊசி வளைவுகளில் சிறிய அளவில் அருவிகள் உருவாகி சீராக தண்ணீர் கொட்டுகிறது.
திருப்பதி:
மாண்டஸ் புயல் தாக்கத்தால் திருப்பதி, திருமலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. அதில் திருப்பதியில் 200 மில்லி மீட்டர் மழையும், திருமலையில் 210 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சேஷாசலம் மலைத்தொடரில் பெய்த பலத்த மழையால் திருமலையில் உள்ள கோகர்பம், பாபவிநாசனம், ஆகாசகங்கை, குமாரதாரா, பசுபுதாரா அணைகளில் நீர் நிரம்பி காணப்படுகிறது.
சேஷாசலம் வனப்பகுதியில் பெய்த மழையால் கபில தீர்த்தம் நீர்வீழ்ச்சி, மல்லவாடி குண்டம் நீர்வீழ்ச்சிகளில் செம்மண் நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கபிலத்தீர்த்தம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் அருகில் செல்ல ேவண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி முதலாவது மலைப்பாதை மற்றும் 2-வது மலைப்பாதையில் பகல் நேரத்திலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மாலை, இரவில் பனிமூட்டமும் உள்ளது. இரு மலைப்பாதைகள் ஓரம் பல்வேறு இடங்களில் காட்டருவிகள் உருவாகி அதில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருமலை-திருப்பதி மலைப்பாதையில் 21, 26, 37, 38 ஆகிய கொண்டை ஊசி வளைவுகளில் சிறிய அளவில் அருவிகள் உருவாகி சீராக தண்ணீர் கொட்டுகிறது. அலிபிரி நடைபாதையில் பாதயாத்திரையாக திருமலைக்கு செல்லும் பக்தர்கள் இயற்கை அழகை தங்களின் செல்போன்கள், கேமராக்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.
- முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
- பக்தர்கள் 14-ந்தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை 12-ந்தேதி காலை 10 வெளியிடப்படுகிறது. பக்தர்கள் அன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்யலாம். முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஜனவரி மாதத்துக்கான எலக்ட்ரானிக் டிப் பதிவுகள் (குலுக்கல் முறை) மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 12-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. பக்தர்கள் 14-ந்தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






