என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • துவார தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
    • வருகிற 11-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடந்து வருகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 11-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடந்து வருகிறது. கோவிலில் வைகுண்ட துவாரத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு திருப்பதியில் 9 மையங்களில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. வைகுண்ட ஏகாதசி, துவாதசி தரிசனம் முடிந்து, பரமபத வாசல் வழியாக சென்று பக்தர்கள் தரிசனம் (துவார தரிசனம்) செய்வது மட்டும் நடந்து வருகிறது. துவார தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

    எனவே இலவச தரிசன டோக்கன்கள் நேற்று (புதன்கிழமை) முதல் திருப்பதி அலிபிரி பூதேவி வளாகம், சீனிவாசம் விடுதி வளாகம், விஷ்ணு நிவாசம் விடுதி வளாகம், கோவிந்தராஜசாமி 2-வது சத்திரம் ஆகிய 4 இடங்களில் மட்டுமே டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இதை பக்தர்கள் கவனிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சீனிவாசன் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தி வந்தார்.
    • இளம்பெண்ணை மீட்டு வாரங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், காசிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). பட்டதாரி வாலிபரான இவர் அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

    படித்துவிட்டு வேலை இல்லாமல் ஊர் சுற்றி வந்ததால் சீனிவாசனின் காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சீனிவாசனுடன் பேசக்கூடாது. பழகக் கூடாது என தடை விதித்தனர்.

    இந்த நிலையில் சீனிவாசன் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தி வந்தார். வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என இளம்பெண் கூறி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சீனிவாசன் திருமணம் செய்தே ஆக வேண்டும் என இளம்பெண்ணை வற்புறுத்தினார்.

    திருமணத்திற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால் நேற்று முன்தினம் இரவு காதலியின் வீட்டிற்கு சென்ற சீனிவாசன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்தார்.

    இளம்பெண்ணின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. அவர் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சீனிவாசன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இளம்பெண்ணை மீட்டு வாரங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியின் கழுத்தை வாலிபர் அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைனில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டுமென ஜானகிராமுக்கு நெருக்கடி அதிகரித்து வந்தது.
    • கடன் கொடுத்தவர்கள் மிரட்டத் தொடங்கினர். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜானகிராம் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பெணுமூரூ, அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஜானகிராம். (வயது 30). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் ஜானகிராம் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். ஆன்லைன் விளையாட்டுக்காக தனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கினார்.

    மேலும் ஆன்லைன் ஆப் மூலம் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கினார். ஆன்லைனில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டுமென ஜானகிராமுக்கு நெருக்கடி அதிகரித்து வந்தது.

    மேலும் கடன் கொடுத்தவர்கள் மிரட்டத் தொடங்கினர். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜானகிராம் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜானகிராம் உடலை மீட்டு அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதத்தை பறிமுதல் செய்தனர்.

    அதில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை அம்மா, அண்ணா, அண்ணி என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமாக எழுதியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த மாநில அரசு தடை விதித்து உள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
    • ஆந்திர மாநிலத்தில் கடலோர பகுதிகளான கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் சேவல் சண்டை புகழ் பெற்றவை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் சேவல் சண்டை பிரபலமான ஒரு விளையாட்டாக நடத்தி வருகின்றனர். இதற்காக வீரியமிக்க சேவல் குஞ்சுகளை வாங்கி வந்து பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட தரமான உணவு அளித்து சண்டை பயிற்சி அளிக்கின்றனர். சுமார் ஐந்து அடி உயரம் வரை வளர்க்கப்படும் இந்த சேவல்களின் கால்களில் கூர்மையான கத்தி கட்டப்பட்டு மற்றொரு சேவலுடன் மோத விடுகின்றனர்.

    சேவல்கள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷத்துடன் உயரே பறந்து சண்டையிடும் காட்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடுவார்கள். சேவல் சண்டை ஆர்வம் உள்ளவர்கள் சண்டையிடும் சேவல்கள் மீது ரூ.1000 முதல் ஒரு லட்சம் வரை பந்தயம் கட்டுவது வழக்கம். பந்தயம் கட்டியவர்களின் சேவல் வெற்றி பெற்றால் 3 மடங்காக பணம் திருப்பி தரப்படும்.

    இந்த நிலையில் ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த மாநில அரசு தடை விதித்து உள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் சேவல் சண்டை அமைப்பாளர்கள் சங்கராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகை அன்று சேவல் சண்டைகளை புத்திசாலித்தனமாக ஆன்லைனில் நடத்த திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக ஜிஇ 5 கி நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக சேவல் சண்டை அமைப்பாளர்கள் வட இந்திய சந்தையை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் கடலோர பகுதிகளான கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் சேவல் சண்டை புகழ் பெற்றவை. அமைப்பாளர்கள் மெசேஜிங், ஆப்ஸ், லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் பேமெண்ட் போர்டல்களுக்கு மாறி உள்ளனர்.

    தற்போது சேவல் சண்டை சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றனர் சண்டையை தொடங்குவதற்கு முன்பு சேவல்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவிடப்படுகின்றன. சூதாட்டத்தில் ஆர்வமுள்ளவர்களை கொண்டு ரகசிய குழுக்களை உருவாக்குகிறார்கள். சூதாட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது பாஸ்வேர்ட் எண்களை சேவலின் பெயர்களுக்கு எதிராக பதிவிடப்படுகிறது.

    உங்களது பதிவு சரி என வந்த பிறகு அமைப்பாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்வது மூலம் சேவல் சண்டையில் சூதாட்டம் நடக்கிறது. வெற்றி பெற்ற சேவல்கள் மீது ஆன்லைனில் பந்தயம் கட்டியவர்களுக்கு அமைப்பாளர்களின் கமிஷன் பிடித்துக் கொண்டு பணம் கட்டியவர்களின் வங்கிக் கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

    சேவல் சண்டைக்கு ரூ.1000 கோடி வரை பந்தயம் கட்ட ஏற்பாடு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆந்திராவை 2-ஆக பிரித்து அநீதி இழைத்து விட்டார்.
    • சந்திரசேகர ராவுக்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    திருப்பதி:

    திருப்பதியில் அமைச்சர் ரோஜா வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

    தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சந்திரசேகர ராவ் தனது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தற்போது பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி என தேசிய கட்சியாக மாற்றி உள்ளார்.

    வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி ஆந்திராவில் 150 இடங்களில் போட்டியிட உள்ளதாக சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    அவரது கட்சியை ஆந்திராவிற்குள் அனுமதிக்க கூடாது. மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆந்திராவை 2-ஆக பிரித்து அநீதி இழைத்து விட்டார்.

    அந்த கட்சி மீண்டும் ஆந்திராவில் காலடி எடுத்து வைக்க நினைப்பது எவ்வளவு அநியாயம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். சந்திரசேகர ராவுக்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய நெடுஞ்சாலைகளில் பேரணி நடத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
    • பொது சாலைகளில் கூட்டங்கள் அனுமதிப்பதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த கந்துகூரில் கடந்த மாதம் 28-ந் தேதி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நெல்லூரிலிருந்து பொதுக்கூட்டம் நடந்த கந்துகூர் வரை உள்ள 11 கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் ரோடு ஷோ நடத்தினார்.

    இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி குறுகிய பகுதியில் பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் குவிந்ததால் நெரிசலில் சிக்கி 8 பேர் பலியானது தெரியவந்தது.

    இதையடுத்து ஆந்திர மாநில முதன்மைச் செயலாளர் ஹரிஷ் குமார் குப்தா நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலைகளில் பேரணி மற்றும் சாலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்தார்.

    தேசிய நெடுஞ்சாலைகளில் பேரணி நடத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

    போக்குவரத்து இடையூறு, பொதுமக்கள் அவசர கால சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் இயக்கம் உள்ளிட்டவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

    பொது சாலைகளில் கூட்டங்கள் அனுமதிப்பதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். அரிதான மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதியை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து பரிசீலிக்க வேண்டும்.

    பொதுக்கூட்டங்கள் மற்றும் சாலை ஓரங்களில் கூட்டம் நடத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது எனவே அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    அரசின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

    • 11-ந்தேதி வரை சொர்க்கவாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி
    • தள்ளு முள்ளு இன்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதையடுத்து ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    வரும் 11-ந் தேதி வரை தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 20 ஆயிரம் பேரும், இலவச தரிசன டிக்கெட்டில் 50 ஆயிரம் பேரும், ஸ்ரீவாணி அறக்கட்டளையின் சார்பில் 2 ஆயிரம் பேர் என மொத்தம் 8 லட்சம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி முதல் நாளான நேற்று இலவச தரிசன டிக்கெட் மற்றும் பல்வேறு சேவை டிக்கெட்களை பெற்ற 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வரவில்லை. 13 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு வராததால் தள்ளு முள்ளு இன்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நேற்று நாடு முழுவதிலிருந்து ஏராளமான முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்ததால் முன்பு எப்போதும் இல்லாத வகையில் திருப்பதி வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் வசூலானது. 69,414 பேர் தரிசனம் செய்தனர். 18,612 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    இதற்கு முன்பு ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.6 கோடிக்கு மேல் உண்டியல் வசூலாகியிருந்தது.

    • தங்கத்தேரை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    • 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. கோவில் உள்ளே அதிகாலை 1.30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதலில் சொர்க்கவாசல் வழியாக சென்று வி.ஐ.பி. பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு காலை 6 மணியளவில் இலவச தரிசன பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அதைத் தொடர்ந்து காலை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்கத்தேரை தேவஸ்தான பெண் ஊழியர்கள், ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    பின்னர் திருமலையில் உள்ள அன்னமயபவனில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வைகுண்ட துவார தரிசனம் செய்ய அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வைகுண்ட துவார தரிசனத்துக்காக 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

    ஸ்ரீவாணி டோக்கன்கள் நேரில் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் 9 இடங்களில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் திருமலையை அடைந்து, அங்குள்ள தரிசன வரிசைக்கு சென்று விட வேண்டும். பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    பக்தர்கள் சிரமமின்றி வைகுண்டம் துவார தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகளும், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களும் சேவை செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினா்ா.

    • தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 1.08 கோடியாகும்.
    • 11 கோடியே 42 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
    • 2 கோடியே 54 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருமலை

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் எதிர்பார்ப்புகளை தாண்டி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது தேவஸ்தான வரலாற்றில் சாதனையாகும். 2022-ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானமாக ரூ1,441.34 கோடி கிடைத்துள்ளது.

    கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக கோவிலில் சாமி தரிசனம் செய்யாமல் இருந்த பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் வருமானம் ஆகும். தேவஸ்தானம் வெளியிட்ட ஆண்டு பட்ஜெட்டில் 2022-ம் ஆண்டு உண்டியல் வருவாய் ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும், எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உண்டியல் வருமானம் கிடைத்திருப்பது சாதனையாகும்.

    2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9 லட்சத்து 96 ஆயிரத்து 93 பக்தர்களும், பிப்ரவரியில் 10 லட்சத்து 95 ஆயிரத்து 724 பக்தர்களும், மார்ச் மாதம் 19 லட்சத்து 72 ஆயிரத்து 741 பக்தர்களும், ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 64 ஆயிரத்து 915 பக்தர்களும், மே மாதம் 22 லட்சத்து 61 ஆயிரத்து 641 பக்தர்களும், ஜூன் மாதம் 23 லட்சத்து 23 ஆயிரத்து 421 பக்தர்களும், ஜூலை மாதம் 23 லட்சத்து 40 ஆயிரத்து 319 பக்தர்களும், ஆகஸ்டு மாதம் 22 லட்சத்து 22 ஆயிரத்து 184 பக்தர்களும், செப்டம்பர் மாதம் 21 லட்சத்து 12 ஆயிரத்து 254 பக்தர்களும், அக்டோபர் மாதம் 22 லட்சத்து 74 ஆயிரத்து 265 பக்தர்களும் நவம்பர் மாதம் 20 லட்சத்து 77 ஆயிரத்து 816 பக்தர்களும், டிசம்பர் மாதம் 18 லட்சத்து 84 ஆயிரத்து 108 பக்தர்களும் (29-ந்தேதி வரை) என மொத்தம் 2 கோடியே 54 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 11 கோடியே 42 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 1.08 கோடியாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.
    • தரிசன டிக்கெட் பெற பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 10 டன் மலர்கள், பல வகையான பழங்கள் கொண்டு கோவில் வெளிப்புறம், உள்புறம் மற்றும் கொடிமரம், பலிபீடம், வைகுண்ட வாசல் உள்ளிட்ட இடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு ஏழுமலையானுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து 12.05 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில் சொர்க்க வாசல் திறக்கப்ட்டது.

    அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், எம்.எல்.சி.கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று தரிசனம் செய்தனர். இதையடுத்து 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் ரூ.10 ஆயிரம் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    6 மணிக்கு மேல் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும்.

    வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.

    தினமும் இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் பக்தர்களும் 300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 20 ஆயிரம் பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 2000 பக்தர்களும் என 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட் வழங்கி உள்ளது.

    தரிசன டிக்கெட் பெறாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் டிக்கெட் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்கு வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 மையங்களில் 90 கவுண்டர்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை திருப்பதியில் உள்ள ராமா நாயுடு அரசு பள்ளி வளாகத்தில் உள்ள கவுண்டரில் அதிகாலை 2.45 மணிக்கு கவுண்டர்கள் திறக்கப்பட்டது.

    அப்போது தரிசன டிக்கெட் பெற பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் போலீசாரால், பக்தர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் கீழே விழுந்ததில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பக்தர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தனர்.

    இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பக்தர்களை ஒழுங்குப்படுத்தி காயமடைந்த பக்தர்கள் மற்றும் போலீசாரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    திருப்பதியில் நேற்று 53,101 பேர் தரிசனம் செய்தனர்.23,843 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.48 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கட்சி நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு, ஏழை பெண்களுக்கு கைத்தறி சேலைகளை வழங்கினார்.
    • கடந்த மாதம் 29ம் தேதி கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்

    குண்டூர்:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு, ஏழை பெண்களுக்கு கைத்தறி சேலைகளை வழங்கினார். விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    சந்திரபாபு நாயுடு சிலருக்கு சேலைகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான பெண்கள் முண்டியடித்து மேடையை நோக்கி சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். இதில் கால்களில் மிதிபட்டு 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

    இதேபோல் கடந்த மாதம் 29ம் தேதி சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பதியில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வி.ஐ.பி.க்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
    • நேரம் ஒதுக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டதால் ஒரு சில வி.ஐ.பி.க்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பதி:

    ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருப்பதியில் கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள், மலர்கள், பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஏழுமலையான் கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவில் கோவில் முன்பு கோலாட்டம் ஆடி பக்தர்கள் அசத்தினர்.

    ஜம்மு-காஷ்மீர் கவர்னர், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சினிமா நடிகர், நடிகைகள் என ஏராளமான வி.ஐ.பி.க்கள் தரிசனத்திற்கு வந்தனர்.

    ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வி.ஐ.பி.க்கள் தரிசனத்திற்கு வந்ததால் தேவஸ்தான அதிகாரிகளால் அவர்களுக்கு உண்டான நேர ஒதுக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

    இதனால் ஒரு சில வி.ஐ.பி.க்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கீடு செய்து அனுப்பியதால் இலவச தரிசன பக்தர்கள் தரிசனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. 

    ×