என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்பட்டு வருகிறது.
    • பக்தர்கள் குறுக்கு வழியில் தரிசனம் செய்வதற்காக புரோக்கர்களிடம் சிக்கி பணத்தை இழந்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பவன்குமார் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் தரிசனம் செய்வதற்காக வந்தார். அவர்களிடம் தரிசன டிக்கெட் இல்லாததால் தேவஸ்தான ஊழியர் நாகபூஷணம் என்பவரை நாடினர்.

    அவரது பரிந்துரை கடிதத்தின் மூலம் புரோக்கர் சுரேஷ் என்பவர் இரண்டு கல்யாண உற்சவ டிக்கெட்டுகளை பெற்று பவன்குமாரிடம் ரூ.28,500க்கு விற்பனை செய்தார்.

    ஆயிரம் ரூபாய் கல்யாண உற்சவ டிக்கெட்டுகளை ரூ.28,500 கொடுத்து ஏமாந்ததை அறிந்த பவன்குமார் இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பத்மநாபனிடம் புகார் செய்தார்.

    இது குறித்து பவன் குமார் மற்றும் விஜிலன்ஸ் அதிகாரி பத்மநாபன் திருமலையில் உள்ள போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள திருப்பதி தேவஸ்தான ஊழியர் நாகபூஷணம் மற்றும் புரோக்கர் சுரேஷை தேடி வருகின்றனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்பட்டு வருகிறது.எனவே பக்தர்கள் யாரும் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் அடிக்கடி அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

    இருப்பினும் பக்தர்கள் குறுக்கு வழியில் தரிசனம் செய்வதற்காக புரோக்கர்களிடம் சிக்கி பணத்தை இழந்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்வதற்காக வரும் 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை தினமும் 1000 பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 7000 தரிசன டிக்கெட்களை தேவஸ்தானம் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிட்டது.

    திருப்பதியில் நேற்று 71,434 பேர் தரிசனம் செய்தனர். 24,212 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.78 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூலி தொழிலாளர்களான தம்பதியர் உழைத்து சம்பாதிக்கும் பணம் முழுவதும் மகளுக்கு சத்தான உணவு மற்றும் மருத்துவத்துக்கு செலவாகிறது.
    • சிறுமிக்கு அரசிடம் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், கோட்டூர் மண்டலம், லிங்க ரெட்டி பாலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசுப்பா ராவ்.

    இவரது மனைவி சுஜாதா தம்பதிக்கு அப்பிகட்லா அலேக்யா (16) என்ற மகள் உள்ளார். இவர் பிறந்தது முதல் உடல் வளர்ச்சி இல்லாமல் எலும்பு கூடாக உள்ளார்.

    கூலி தொழிலாளர்களான தம்பதியர் உழைத்து சம்பாதிக்கும் பணம் முழுவதும் மகளுக்கு சத்தான உணவு மற்றும் மருத்துவத்துக்கு செலவாகிறது.

    மகளின் இந்த விசித்திர நோயை சரி செய்வதற்காக பல்வேறு டாக்டர்களிடம் காண்பித்தும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எழுந்து நடக்க கூட முடியாத நிலையில் உள்ள மகளை அவரது தாய் சிரமப்பட்டு வளர்த்து வருகிறார். தற்போது சிறுமிக்கு அரசிடம் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

    இருப்பினும், நேற்று மச்சிலிப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மகளை தூக்கி வந்த அவரது தாய், சிகிச்சைக்கான செலவைக் கருத்தில் கொண்டு கூடுதலாக உதவி தொகை கேட்டு விண்ணப்பம் அளித்தார்.

    • நாளை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடக்கிறது.
    • 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் 26-ந்தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    முதல் நாளான இன்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் தீவிர பக்தரான கண்ணப்பருக்கே முதல் பூஜை வழக்கப்படும் என்பதைக் குறிக்கும் வகையில் ஸ்ரீகாளஹஸ்தி அருகே கண்ணப்பர் மலை மீதுள்ள கண்ணப்பர் கோவிலில் கண்ணப்பர் கொடியேற்றம் இன்று மாலை 4 மணியளவில் நடக்கிறது. அத்துடன் அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி எதிரில் உள்ள தங்கக் கொடிமரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடக்கிறது.

    15-ந்தேதி காலை 9 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 8 மணியளவில் பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் நான்கு மாட வீதிகளில் உலா.

    16-ந்தேதி காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 9 மணியளவில் ராவணசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதி உலா.

    17-ந்தேதி காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா.

    18-ந்தேதி மகா சிவராத்திரி விழா, காலை 10.30 மணியளவில் இந்திர விமான வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 9.30 மணியளவில் தங்க நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், தங்க சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா.

    19-ந்தேதி காலை 11 மணியளவில் தேரோட்டம், இரவு 8 மணியளவில் நாரதர் புஷ்கரணியில் தெப்போற்சவம்.

    20-ந்தேதி காலை 9 மணியளவில அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 9 மணியளவில் யானை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கோவிலில் இருந்து மணமக்கள் அலங்காரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு நகரி வீதியில் உள்ள கோவில் திருக்கல்யாண மண்டபத்தை அடைகின்றனர்.

    21-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்-ஞானப்பிரசுனாம்பிகை தாயார் திருக்கல்யாண உற்சவம். காலை 11 மணியளவில் புதுமண தம்பதியர் அலங்காரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் அம்பாரி வாகனங்களில் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து கோவில் வரை ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இரவு 7 மணியளவில் நடராஜர் (சபாபதி) திருக்கல்யாண உற்சவம்.

    22-ந்தேதி காலை 8 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் ஊர்வலமாக புறப்பட்டு கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்கிறார்கள். கிரிவலம் நிறைவடைந்ததும் இரவு 9 மணியளவில் குதிரை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா.

    23-ந்தேதி காலை 9 மணியளவில் கேடிக வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா. மதியம் 12 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் வசந்த உற்சவம். கொடியிறக்கம், இரவு 9 மணியளவில் சிம்மாசனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதி உலா.

    24-ந்தேதி இரவு 8 மணியளவில் பல்லக்கு சேவை (3 பல்லக்குகள்)

    25-ந்தேதி இரவு 9 மணியளவில் ஞானப்பிரசுனாம்பிகை மூலவர் சன்னதி எதிரில் உள்ள பள்ளியறையில் ஏகாந்த சேவை.

    26-ந்தேதி காலை 9.30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவமூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம். இத்துடன் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா முடிகிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க எம்.எல்.ஏ. ராஜா சிங் தனக்கு புதிய கார் வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தார்.
    • பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் சட்டசபைக்கு பைக்கில் வந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் பாஜக எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராஜாசிங். முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தன்னுடைய கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு புதிய கார்களை வழங்கினார்.

    ஆனால் தெலுங்கானாவில் எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் குண்டு துளைக்காத பழைய கார்கள் வழங்கப்பட்டது.

    பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட பழைய கார்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாக கூறப்படுகிறது.

    இதனால் பா.ஜ.க எம்.எல்.ஏ. ராஜா சிங் தனக்கு புதிய கார் வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தார்.

    ஆனால் அவரது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா சிங் எம்.எல்.ஏ கடந்த வெள்ளிக்கிழமை தனது பைக்கில் சட்டசபைக்கு சென்றார்.

    பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் சட்டசபைக்கு பைக்கில் வந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 7 நாளைக்கு 1.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.
    • சிறிது நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரத்தில் உள்ள தங்க தகடுகள் பதித்து நீண்ட நாட்கள் ஆனதால் புதியதாக தங்கத் தகடுகள் பதிக்கும் பணிக்காக தேவஸ்தானம் சார்பில் பாலாலயம் நடந்தது. இதனால் இம்மாதம் 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 7 நாட்களுக்கு ரூ.300 ஆன்லைன் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தங்க தகடுகள் பதிக்கும் பணி தாமதமாகும் என கூறப்பட்டதால் சர்வதேச அளவில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு உள்ளது. இதனால் தங்க தகடுகள் பதிக்கும் பணி 6 மாத காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

    இதனால் ஆன்லைன் தரிசனம் ரத்து செய்யப்பட்ட 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    ஒரு நாளைக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 7 நாளைக்கு 1.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

    டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

    இதேபோல் மார்ச் மாதத்திற்கான அங்கப்பிரதட்சனை டிக்கெட்டுகளை இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டது.

    பக்தர்கள் அங்கப்பிரதட்சன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    திருப்பதியில் நேற்று 80,969 பேர் தரிசனம் செய்தனர். 26,777 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • இன்று பூத வாகன வீதிஉலா, சிம்ம வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை உற்சவர் கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் சூரியபிரபை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகனத்துக்கு முன்னால் வீதிகளில் பஜனைகள், கோலாட்டங்கள் நடந்தன. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்திக்கும், காமாட்சி தாயாருக்கும் காலை 10.30 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பழச்சாறு ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. இரவு சந்திர பிரபைவாகன வீதிஉலா நடந்தது. அதில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை பூத வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா நடக்கிறது.

    • இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
    • இன்று இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

    கோவிலில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்ப வைகானச ஆகம விதிப்படி காலை 8.40 மணியில் இருந்து காலை 9 மணிக்குள் மீன லக்னத்தில் பாரம்பரிய கருட கொடியேற்றம், கங்கணப்பட்டர் பாலாஜி ரங்காச்சாரியுலு தலைமையில் நடந்தது.

    முன்னதாக காலை 6.30 மணியில் இருந்து காலை 8.15 மணி வரை திருச்சி உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து, கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கொடி மரம் அருகே வைக்கப்பட்டனர்.

    பிரதான அர்ச்சகர்கள் விஸ்வக்சேனர் வழிபாடு, வாஸ்து ஹோமம், கருட லிங்க ஹோமம், கருட பிரதிஷ்டை, ரக்ஷா பந்தனம் உள்ளிட்டவை நடத்தினர்.

    கொடியேற்றும் விழாவில் பங்கேற்ற திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மோற்சவ விழா வாகனச் சேவைகள் நடக்கின்றன. எனவே விழாவையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. தினமும் காலையில் 8 மணியில் இருந்து காலை 9 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரையிலும் வாகனச் சேவைகள் நடக்கின்றன. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும், என்றார்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, வைகானச ஆகம ஆலோசகர் மோகன ரங்காச்சாரியுலு, உதவி அதிகாரி குருமூர்த்தி, கண்காணிப்பாளர் செங்கல்ராயலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.

    • ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.
    • இன்று சூரிய, சந்திர பிரபா வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதி கபிலதீர்த்தம் அருகில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் 10 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி பஞ்சமூர்த்திகளான சோமாஸ் கந்தமூர்த்தி, காமாட்சி தாயார், விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி உற்சவர்கள் கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் காலை 8.54 மணிக்கு மீன லக்னத்தில் சைவ சமய நியதிப்படி கங்கணப்பட்டர் உதயசுவாமி தலைமையில் வேதமந்திரங்கள், சங்க நாதங்கள் முழங்க, பக்தர்கள் சிவ.. சிவ.. சங்கரா.. சம்போ மகாதேவா எனப் பக்தி கோஷம் எழுப்ப, வேதபண்டிதர்கள் ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்களை ஓத, அர்ச்சகர்களின் சிவ நாமஸ்மரணங்களுக்கு இடையே சாஸ்திரபூர்வமாகக் கொடியேற்று விழா நடந்தது. சிவப்பு நிறத்தில் நந்தி உருவம் வரையப்பட்ட வெள்ளைநிற கொடியை கொடிமரத்தில் ஏற்றினர்.

    விழாவின் ஒரு பகுதியாக கொடிமரத்துக்கு அபிஷேகம், பலி, யாகம், திருவிளக்கு வழிபாடு, உபசாரம் நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை பிரம்மோற்சவ விழாவையொட்டி கொடியேற்ற நாளில் மட்டும் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    தீபாராதனையின் ஒரு பகுதியாக ரத ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, தீபாராதனை, கும்ப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு சத்திரம், சாமரம், கண்ணாடி, சூரியன் சந்திரன், விசாணக்கரம், கொடி போன்றவற்றை வைத்து உபசாரம் செய்யப்பட்டது.

    பின்னர் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் தனித்தனி பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சூரிய பிரபா வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபா வாகன வீதிஉலா நடக்கிறது.

    • கடந்த 70 ஆண்டுகள் உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் பல்வேறு சவால்களையும் ஏற்ற, தாழ்வுகளையும் இந்தியா சந்தித்து உள்ளது.
    • ஜனநாயகம் வலுப்பெற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

    ஐதராபாத்தில் இன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் பயிற்சி முகாம் நடந்தது. இதனை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

    மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி பதவி ஏற்ற 8 ஆண்டு காலத்தில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கணிசமான அளவு பயங்கரவாத செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களில் அரசுக்கு எதிராக இயங்கிய நக்சலைட்டு மற்றும் மாவோயிஸ்டு இயக்கங்களின் செயல்பாடுகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஏஜென்சிகள் மற்றும் நாடு முழுவதும் போலீஸ் படையினர் வெற்றிகரமாக நடத்திய சோதனையில் ஒரே நாளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.

    சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் உலகமே இந்தியாவை வியந்து பார்க்கிறது.

    பயங்கரவாத செயல்கள் முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டது. கடந்த 70 ஆண்டுகள் உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் பல்வேறு சவால்களையும் ஏற்ற, தாழ்வுகளையும் இந்தியா சந்தித்து உள்ளது.

    இதற்காக 36 ஆயிரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் தங்கள் உயிர்களை தியாகம் செய்து உள்ளனர். ஜனநாயகம் வலுப்பெற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    • கொல்லப்பள்ளியில் ஷேக் நகுல் மீரா நடந்து சென்ற ஜோஸ்த்னாவை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார்.
    • மனைவி என்றும் பாராமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், திருவூர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் நகுல் மீரா. கட்டிட மேஸ்திரி. முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதால் தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    அப்போது கட்டிட சித்தாள் வேலை செய்து வந்த ஜோத்ஸ்னா என்பவருடன் காதல் ஏற்பட்டது.

    இதையடுத்து இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகும் ஜோத்ஸ்னா கட்டிட வேலைக்கு சென்று வந்ததால் ஷேக் நகுல் மீராவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனால் ஷேக் நகுல் மீராவுக்கு மனைவியின் மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஷேக் நகுல் மீரா அவரது மனைவி குளிக்கும் போது அவருக்கு தெரியாமல் தனது செல்போனில் நிர்வாண படம் பிடித்தார்.

    மனைவியின் செல்போன் எண்ணுடன் நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் அவரது ரேட் எவ்வளவு என கேட்டு பதிவு செய்தார். இந்த படங்கள் வேகமாக பரவியது.

    சமூக வலைதளத்தில் இளம்பெண்ணின் நிர்வாண படத்தை பார்த்தவர்கள் அவரது செல்போனில் தொடர்பு கொண்டனர். இதனால் அவமானம் அடைந்த ஜோத்ஸ்னா இதுகுறித்து முசுனுர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என ஜோஸ்த்னாவிடம் கேட்டபோது தனது கணவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் நகுல் மீராவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கொல்லப்பள்ளியில் ஷேக் நகுல் மீரா நடந்து சென்ற ஜோஸ்த்னாவை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். மனைவி என்றும் பாராமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

    இதில் ஜோஸ்த்னா ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனை கண்ட அவரது இளைய மகன் ஓடிச் சென்று தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஜோஸ்த்னா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் நகுல் மீராவை தேடி வருகின்றனர்.

    • பிரம்மோற்சவ விழா மார்ச் 30-ந்தேதி தொடங்க உள்ளது.
    • ஏப்ரல் 5-ந்தேதி சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகளை தேவஸ்தான இணை அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (மார்ச்) 30-ந்தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்க உள்ளது. அதையொட்டி முன்னேற்பாடு பணிகளை 2 மாதங்களுக்கு முன்பே திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தொடங்கினர்.

    இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் மற்றும் கல்யாண மண்டபங்களில் நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு துறை அதிகாரிகளுடன் துறை சார்ந்த பணிகளின் நிலவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.

    பின்னர் நிருபர்களிடம் வீரபிரம்மன் கூறுகையில், ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவிலில் நடக்க உள்ள பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் கால அட்டவணைக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஏப்ரல் மாதம் 5-ந்தேதி சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.

    கோவிலின் நுழைவு வாயில்கள், கேலரிகள், அன்னப்பிரசாதம், குடிநீர் ஏற்பாடுகள், நடனம் மற்றும் இசை உள்ளிட்ட ஆன்மிக கலாசார நிகழ்ச்சிகள், மலர் மற்றும் மின் அலங்காரங்கள், பாதுகாப்பு போன்ற ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழா தொடர்பாக தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மா ரெட்டி அனைத்து அதிகாரிகளுடனும் ஆய்வுக்கூட்டத்தை நடத்துவார், எனத் தெரிவித்தார்.

    ஆய்வின்போது என்ஜினீயர்கள் நாகேஸ்வர ராவ், வெங்கடேஸ்வருலு, சுமதி, கோவில் துணை அதிகாரிகள் நடேஷ்பாபு, சுப்பிரமணியம், குணபூஷன்ரெட்டி, சந்திரசேகர், கூடுதல் சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சுனில் குமார், பூங்கா இலாகா அதிகாரி சீனிவாஸ், சிறப்பு கேட்டரிங் அதிகாரி ஜி.எல்.என்.சாஸ்திரி, பப்ளிகேஷன்ஸ் பிரிவு சிறப்பு அதிகாரி ராமராஜு மற்றும் பிற அதிகாரிகள் உடனிருந்தனர்.

    முன்னதாக, ராஜம்பேட்டை மாவட்டத்தில் உள்ள 108 அடி உயரம் அமைக்கப்பட்டுள்ள தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் உருவச்சிலையில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.
    • குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்யலாம்.

    திருப்பதி ஏழுமலையானை வருகிற 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை தரிசிப்பதற்காக ரூ.300 டிக்கெட்டுகள் 13-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதைப் பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்யலாம்.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    ×