search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம். பல்லக்கு உற்சவம் நடந்தபோது எடுத்தபடம்.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.
    • இன்று சூரிய, சந்திர பிரபா வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதி கபிலதீர்த்தம் அருகில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் 10 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி பஞ்சமூர்த்திகளான சோமாஸ் கந்தமூர்த்தி, காமாட்சி தாயார், விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி உற்சவர்கள் கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் காலை 8.54 மணிக்கு மீன லக்னத்தில் சைவ சமய நியதிப்படி கங்கணப்பட்டர் உதயசுவாமி தலைமையில் வேதமந்திரங்கள், சங்க நாதங்கள் முழங்க, பக்தர்கள் சிவ.. சிவ.. சங்கரா.. சம்போ மகாதேவா எனப் பக்தி கோஷம் எழுப்ப, வேதபண்டிதர்கள் ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்களை ஓத, அர்ச்சகர்களின் சிவ நாமஸ்மரணங்களுக்கு இடையே சாஸ்திரபூர்வமாகக் கொடியேற்று விழா நடந்தது. சிவப்பு நிறத்தில் நந்தி உருவம் வரையப்பட்ட வெள்ளைநிற கொடியை கொடிமரத்தில் ஏற்றினர்.

    விழாவின் ஒரு பகுதியாக கொடிமரத்துக்கு அபிஷேகம், பலி, யாகம், திருவிளக்கு வழிபாடு, உபசாரம் நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை பிரம்மோற்சவ விழாவையொட்டி கொடியேற்ற நாளில் மட்டும் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    தீபாராதனையின் ஒரு பகுதியாக ரத ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, தீபாராதனை, கும்ப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு சத்திரம், சாமரம், கண்ணாடி, சூரியன் சந்திரன், விசாணக்கரம், கொடி போன்றவற்றை வைத்து உபசாரம் செய்யப்பட்டது.

    பின்னர் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் தனித்தனி பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சூரிய பிரபா வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபா வாகன வீதிஉலா நடக்கிறது.

    Next Story
    ×