என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • மது போதைக்கு அடிமையான ராஜு மது குடிப்பதற்காக அடிக்கடி கடையில் பணத்தை திருடி வந்தார்.
    • ராஜுவின் தொல்லை எல்லை மீறி போகவே ஆத்திரம் அடைந்த ஸ்ரீனு கடையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ராஜுவின் கழுத்தை அறுத்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனக்கா பள்ளி, பரவாடா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ னு (வயது 48). இவர் கணபர்த்தி என்ற பகுதியில் கசாப்பு கடை நடத்தி வந்தார்.

    இவரது தங்கை மகன் லோவ ராஜூ (30). இவரது பெற்றோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் மாமா ஸ்ரீனு வீட்டில் வசித்து வந்தார். மேலும் கறிக்கடையில் மாமாவுக்கு உதவி செய்து வந்தார்.

    மது போதைக்கு அடிமையான ராஜு மது குடிப்பதற்காக அடிக்கடி கடையில் பணத்தை திருடி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராஜு நர்சி பட்டினத்தில் உள்ள வேறு கறிக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் மாமாவின் கறிக்கடைக்கு வேலைக்கு திரும்பினார்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இருவரும் இறைச்சி கடை அருகே மது அருந்தினர். அப்போது ராஜு மாமாவிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

    ராஜுவின் தொல்லை எல்லை மீறி போகவே ஆத்திரம் அடைந்த ஸ்ரீனு கடையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ராஜுவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

    மேலும் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்தார். அதிகாலை ராஜுவின் வெட்டப்பட்ட உடலை மறைவான இடத்திற்கு எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார்.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீனுவை பிடித்து அவர் வைத்திருந்த உடல் உறுப்புகளை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீனுவை கைது செய்தனர்.

    • சேவல் சண்டைக்கு அரசு தடை விதித்ததால் தற்போது பன்றி சண்டை நடத்தி வருகின்றனர்.
    • பன்றிகள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதை ஏராளமான மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் கடப்பா, கர்னூல், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சேவல் சண்டை பிரபலமாக நடத்தப்படுகிறது. சண்டையில் ஈடுபடும் சேவல்கள் மீது பலர் லட்சக்கணக்கில் பணம் கட்டுவார்கள்.

    வெற்றி பெறும் சேவல் மீது பணத்தைக் கட்டியவர்களுக்கு 2 மடங்காக திருப்பி கொடுப்பது வழக்கம். சண்டை சேவல்களின் கால்களில் கட்டப்படும் கத்தி வேடிக்கை பார்ப்பவர்கள் மீது பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் சேவல் சண்டைக்கு ஆந்திர மாநில அரசு தடை விதித்தது.

    சேவல் சண்டைக்கு அரசு தடை விதித்ததால் தற்போது பன்றி சண்டை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏலூர் மாவட்டம், பாலச்சார்லா ராஜவரம் பகுதியில் நேற்று பன்றி சண்டை நடந்தது. ஏராளமானோர் பன்றிகள் மீது பந்தயம் கட்டினர். பன்றிகள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதை ஏராளமான மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.

    இதுகுறித்து ஜிலகுமில்லி போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பன்றி சண்டை நடத்திய 5 பேரை கைது செய்தனர்.

    மேலும் பந்தயத்தில் ஈடுபடுத்திய 4 பன்றிகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • 3-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை வருடாந்திர தெப்போற்சவம் நடக்கிறது.
    • 22-ந்தேதி உகாதி பண்டிகை நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மார்ச்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    மார்ச் மாதம் 3-ந்தேதி குலசேகர ஆழ்வார் வருட திருநட்சத்திரம், 3-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை 5 நாட்கள் வருடாந்திர தெப்போற்சவம், 7-ந்தேதி குமாரதாரா தீர்த்த முக்கோட்டி உற்சவம், 18-ந்தேதி தாலப்பாக்கம் அன்னமாச்சார்யா நினைவுநாள், 22-ந்தேதி உகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு), உகாதி ஆஸ்தானம், 30-ந்தேதி ராம நவமி ஆஸ்தானம், 31-ந்தேதி ராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம்.

    மேற்கண்டவை நடக்கின்றன.

    • கொலை செய்யப்பட்ட 2 காவலாளிகளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், அமராவதி சாலையில் உள்ள அருண்டல்பேட்டை, டோன்சர் சாலை, பதக்குண்டூர், பழைய ஆந்திரா பேங்க் சாலை, சுத்த பள்ளி, டோங்கா பகுதியில் நேற்று இரவு கொள்ளையர்கள் புகுந்தனர்.

    அமராவதி சாலையில் உள்ள பைக் ஷோரூமில் கிருபாநிதி என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் காவலாளியாக வேலை செய்து வந்தார். அங்கு வந்த கொள்ளை கும்பல் காவலாளியை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர்.

    பின்னர் ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அங்கிருந்த லாக்கர்களை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.

    இதையடுத்து அருண்டல்பேட்டையில் உள்ள மதுபான கடைக்கு சென்று அங்கு இருந்த காவலாளி சாம்பசிவம் என்பவரை அடித்தே கொன்றனர்.

    கடைக்குள் சென்று பணத்தை கொள்ளையடித்தனர் அதே பகுதியில் உள்ள பேக்கரிக்கு சென்று கடையின் ஷட்டரை உடைத்தனர். சத்தம் கேட்டு பக்கத்து செல்போன் கடையில் இருந்த காவலாளி ரத்தின ராஜு தடுக்க ஓடிவந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரையும் சரமாரியாக தாக்கினர். அதே சாலையில் உள்ள நிதி நிறுவன த்தின் ஷட்டரை உடைத்து அதிலிருந்து டிவி, கம்ப்யூட்டர், மானிட்டர், ஆட்டோ செல்ஃப் ஸ்டார்ட் மோட்டார் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    தொடர்ந்து பழைய ஆந்திரா பேங்க் சாலைப்பகுதிக்கு சென்று ஒருவரை தாக்கி அவரது செல்போன் பறித்தனர்.

    இதையடுத்து சுத்த பள்ளி, டோங்கா ஆகிய இடங்களில் கடைகளை உடைத்து கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    காலையில் கடை உரிமையாளர்கள் கடையை திறக்க வந்தபோது ஒரே இரவில் அடுத்தடுத்து 10 கடைகளில் 2 காவலாளிகள் கொலை செய்து கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து அமராவதி போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். டிஐஜி திரிவிக்ரம வர்மா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட 2 காவலாளிகளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையில் ஈடுபட்டது டோங்லீ நகர், கோபால்பேட்டை, பண்டரிபுரம் பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் என தெரிய வந்தது.

    உடனடியாக 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    • புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என புதுமாப்பிள்ளையின் உறவினர்கள் பஞ்சாயத்து கூட்டி பணம் பெற்று தருவதாக கூறி மூடி மறைக்க பார்த்தனர்.
    • புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என புதுமாப்பிள்ளையின் உறவினர்கள் பஞ்சாயத்து கூட்டி பணம் பெற்று தருவதாக கூறி மூடி மறைக்க பார்த்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கோண சீமா மாவட்டம், கத்ரேணி கோனா பகுதியை சேர்ந்தவர் 20 வயது வாலிபர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.

    அன்று இரவு புதுமாப்பிள்ளை பெண்ணுக்கு முதல் இரவு ஏற்பாடு செய்தனர். முதலில் அறைக்கு சென்ற மாப்பிள்ளை தனது மனைவியுடன் தனிமையில் இருக்கும் காட்சிகளை வீடியோ எடுக்க முடிவு செய்தார். இதற்காக தனது செல்போனில் வீடியோ ஆன் செய்து கட்டில் படுக்கை தெளிவாக தெரியும்படி வைத்தார்.

    அன்று இரவு அவர்களுக்கு முதல்இரவு நடந்தது. புதுமாப்பிள்ளை ஏற்கனவே திட்டமிட்டபடி தனது மனைவியுடன் இருந்த முதல் இரவு காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    பின்னர் பதிவு செய்யப்பட்ட முதல் இரவு காட்சிகளை தனது நண்பர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுமியின் தாய் அங்குள்ள மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என புதுமாப்பிள்ளையின் உறவினர்கள் பஞ்சாயத்து கூட்டி பணம் பெற்று தருவதாக கூறி மூடி மறைக்க பார்த்தனர். ஆனால் சிறுமியின் தாய் புகாரை வாபஸ் பெற முடியாது என கூறிவிட்டார்.

    இதையடுத்து போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த முட்டைக்கோஸை மிதித்து நாசப்படுத்தியது.
    • யானைகள் கூட்டமாக பிளிறியபடி சென்றதால் மக்கள் அச்சமடைந்து வீட்டிலேயே முடங்கினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேரில் உள்ள கொளம சானப்பள்ளி ஊராட்சி, கீழ மருமூர், கல்லாடு கிராமம் அருகே உள்ள விவசாய நிலங்களில் நேற்று அதிகாலை 20 யானைகள் கொண்ட கூட்டம் திடீரென விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்தன.

    இதில் வேணுகோபால் ரெட்டி என்பவரின் வாழை தோட்டத்திற்கு புகுந்து வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தின, மேலும் அருகில் இருந்த தென்னந் தோப்புக்குள் புகுந்து அங்கிருந்த தென்னை மரங்களை பிடுங்கி எறிந்தன.

    விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த முட்டைக்கோஸை மிதித்து நாசப்படுத்தியது. பயிர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக பரிக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குழாய்களை துவம்சம் செய்தன.

    யானைகள் கூட்டமாக பிளிறியபடி சென்றதால் மக்கள் அச்சமடைந்து வீட்டிலேயே முடங்கினர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் விவசாய பெயர்களை யானை கூட்டம் நாசம் செய்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்கு சென்றது. யானைகள் சேதப்படுத்திய விவசாய பயிர்களுக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

    மேலும் யானைகள் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகாதவாறு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு 3-வது மாடிக்கு சென்றது.
    • எதிர்பாராதவிதமாக 3-வது மாடியில் இருந்து பாம்பு தவறி கீழே விழுந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கஜுவாக்க போலீஸ் நிலையம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

    நேற்று காலை குடியிருப்புக்குள் நுழைந்த 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு 3-வது மாடிக்கு சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக 3-வது மாடியில் இருந்து பாம்பு தவறி கீழே விழுந்தது.

    இதில் பாம்பு படுகாயம் அடைந்து அங்கிருந்து நகர முடியாமல் கிடந்தது.

    இதனைக் கண்ட அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் இதுகுறித்து பாம்பு பிடிக்கும் கிரண் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடித்து முதல் உதவி சிகிச்சை அளித்தார்.

    இதையடுத்து மல்காபுரம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு பாம்பை கொண்டு சென்றார். அங்கு இருந்த கால்நடை டாக்டர் சுனில் பாம்பின் உடலில் தையல் போட்டு அறுவை சிகிச்சை செய்தார். பாம்பு தற்போது நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர் சுனில் தெரிவித்தார்.

    • போலீசில் புகார் செய்ததால் தந்தை மீது பாரத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
    • வீட்டிற்கு சென்ற பாரத் தனது கள்ளக்காதலிக்கு வீடியோ கால் செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவர் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் பாரத் (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. பாரத் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று வந்தார். இதனை அறிந்த அவரது தந்தை மகனை கடுமையாக கண்டித்தார்.

    இருப்பினும் பாரத் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த டெல்லி பாபு இதுகுறித்து சித்தூர் 2-வது டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாரத்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து கள்ளக்காதலியுடனான தொடர்பை கைவிடுமாறு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

    தன் மீது தந்தை போலீசில் புகார் செய்ததால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டிற்கு சென்ற பாரத் தனது கள்ளக்காதலிக்கு வீடியோ கால் செய்தார்.

    தன்னை போலீசில் புகார் செய்த தந்தையை அடித்து உதைக்க உள்ளதாகவும் வீடியோ காலில் இருக்குமாறு தெரிவித்துவிட்டு தந்தையை இழுத்து வந்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தார். இந்த காட்சிகளை அவரது கள்ளக்காதலி பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார்.

    மேலும் ஆத்திரம் தீராத பாரத் அருகில் இருந்த கட்டையை எடுத்து வந்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டி வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து டெல்லி பாபுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து டெல்லி பாபு சித்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புகை வந்த பெட்டியில் இருந்து தீயை அணைத்தனர்.
    • பயணிகள் ரெயிலில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி நின்றனர்.

    திருப்பதி:

    அகமதாபாத்தில் இருந்து நேற்று மாலை சென்னை நோக்கி நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது.

    தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ள பெட்டியின் அருகில் பிரேக் லைனரில் இருந்து திடீரென புகை வந்தது. ரெயில் பெட்டியில் இருந்து புகை வந்ததை கண்ட பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

    இதனை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் மகபூபாபாத் ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்திவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பயணிகள் ரெயிலில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி நின்றனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புகை வந்த பெட்டியில் இருந்து தீயை அணைத்தனர். மேலும் பிரேக் லைனரில் ஏற்பட்ட பழுதை நீக்கி சரி செய்தனர்.

    இதனால் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு வந்தது.

    இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    • கொரோனா தொற்று பரவல் காரணமாக அவர் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.
    • மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு திட்டங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த ராஜசேகர ரெட்டி மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக வாரத்தில் 2 நாட்கள் கிராமப்புறங்களில் தங்கி இருந்து ஆய்வு நடத்தி வந்தார்.

    அப்போது அவர் கிராமப்புற மக்களிடம் நெருங்கி பழகி ஆட்சியில் உள்ள குறை நிறைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றார் போல் நல திட்டங்களை அறிவித்து நிறைவேற்றிவந்தார். ஹெலிகாப்டரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ராஜசேகர் ரெட்டி இறந்தார்.

    அவரது இறப்பிற்கு பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தங்கை ஷர்மிளா, மனைவி பாரதி, அவரது தாயார் உள்ளிட்டோர் ஆந்திரா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டனர்.

    அப்போது ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் தனது தந்தையைப் போல் வாரத்தில் 2 நாட்கள் கிராமப்புறங்களில் தங்கி அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக அவர் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

    தற்போது ஆந்திராவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஜெகன்மோகன் ஆட்சியின் மீது குற்றம் சாட்டி அவருக்கு எதிராக பிரசாரத்தை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ளதால் மீண்டும் ஆட்சியில் தக்க வைத்துக் கொள்ள தனது தந்தையை போல் கிராமப்புறங்களில் தங்கி ஆய்வு செய்ய ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

    அதன்படி மார்ச் 22-ந் தேதி முதல் புதன், வியாழக்கிழமை என 2 நாள் இரவு கிராமப்புறங்களில் தங்கி மக்களை சந்தித்து தனது ஆட்சியில் உள்ள குறை நிறைகளை கேட்க உள்ளார். மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு திட்டங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார்.

    மற்ற நாட்களில் விசாகப்பட்டினத்தில் உள்ள கோர்ட் டிரஸ்ட் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • 27-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 28-ந்தேதி தீர்த்தவாரி, கொடியிறக்கம் நடக்கிறது.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. மார்ச் மாதம் 17-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி, 19-ந்தேதி இரவு அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    20-ந்தேதி கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை சின்னசேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 22-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 23-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.

    24-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு கருட வாகன வீதிஉலா, 25-ந்தேதி காலை அனுமன் வாகன வீதிஉலா, யானை வாகன வீதிஉலா, 26-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 27-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 28-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    ேமற்கண்ட வாகன வீதிஉலா காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரையிலும் நடக்கிறது. வாகனங்களில் உற்சவர் கோதண்டராமர் தனித்தும், சீதா, லட்சுமணனுடன் இணைந்தும் வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    • தெப்போற்சவம் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடக்கிறது.
    • இந்த விழா 3-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன. 3-ந்தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    4-ந்தேதி இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் கிருஷ்ணர், ருக்மணி எழுந்தருளி 3 சுற்றுகள் வலம் வருகிறார்கள். 5-ந்தேதி மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 6-ந்தேதி நான்காம் நாள் நிகழ்ச்சியில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்றுகள் பவனி வருகிறார்கள். 7-ந்தேதி ஐந்தாவது நாள் நிகழ்ச்சியில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    தெப்போற்சவத்தையொட்டி மார்ச் மாதம் 3 மற்றும் 4-ந்தேதிகளில் சஹஸ்ர தீபலங்கார சேவை, 5 மற்றும் 6-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தோமால சேவை, அர்ச்சனை தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகின்றன. 7-ந்தேதி ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட நாட்களில் தெப்போற்சவம் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடக்கிறது.

    ×