என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • மிளகாய்கள் மழையில் நனைந்து கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
    • மழையில் சேதம் அடைந்த விவசாய பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதி:

    மேற்பரப்பு சுழற்சியின் தாக்கத்தால் ஆந்திராவில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    உத்தராந்திரா முதல் ராயலசீமா வரை இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. பலத்த மழையின் காரணமாக விவசாய பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் மழைநீர் தேங்கி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

    இதனால் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம், மிளகாய், உளுந்து, தினை பயிர்கள், வாழை, பப்பாளி, மா உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. பலத்த காற்று காரணமாக சாலையோரம் இருந்த பெரிய மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதம் அடைந்து மின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஏலூர் மாவட்டம் ஜங்காரெட்டிகுடம் பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 38) என்ற பெண் தனது வீட்டின் அருகே சிறிய கொட்டகை அமைத்து கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் பலத்த காற்று வீசியதால் அருகில் இருந்த மரம் ஒன்று கடை மீது விழுந்தது. கடையில் இருந்த சந்தியா மீது மரம் விழுந்ததால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அனந்தபுரத்தில் மின்னல் தாக்கி ஸ்ரீவித்யா (38) என்ற பெண் உயிரிழந்தார். அல்லூர் மண்டலம் மணல்மேட்டில் இடி தாக்கி 4 கால்நடைகள் இறந்தன.

    ஸ்ரீகாகுளம் மற்றும் நெல்லூர் மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள தானியங்களை அரசு கொள்முதல் செய்து கொள்ளும் என்ற நம்பிக்கையில் அதிக அளவில் இருப்பு வைத்தனர்.

    தற்போது பெய்து வரும் மழையால் தானியங்கள் நனைந்து நிறம் மாறிவிடும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பல்நாடு பிரகாசம், என்டிஆர், கர்னூல், அனந்தபூர், அல்லூரி சீதாராமராஜ், ஒய்எஸ்ஆர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பல 100 ஏக்கரில் மிளகாய் அறுவடை செய்து இருப்பு வைத்திருந்தனர்.

    மிளகாய்கள் மழையில் நனைந்து கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    மழையில் சேதம் அடைந்த விவசாய பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உத்தராந்திரா, மத்திய ஆந்திரா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், மீதமுள்ள மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை வரை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் களமிறங்குவார் என தெரிகிறது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

    முதல் ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் களமிறங்குவார் என தெரிகிறது.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வெல்லுமா என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியதிருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு போராடும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.

    ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அப்போட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

    • தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். 17 நிமிடங்களே பேச அனுமதி வழங்கியதால் மீண்டும் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
    • சபை காவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுவதற்காக சபைக்குள் வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டசபை கூட்டத் தொடர் அமராவதியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேச சபாநாயகர் தம்மேனேனி சீதாராம் அனுமதி அளித்தார். அப்போது தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. ஏலூரி சாம்பசிவராவ் பேச முயன்றார். இதனால் அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தொடர்ந்து பேச அனுமதி வழங்க கோரி கோஷமிட்டனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களும் எதிர்கோஷம் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    இதையடுத்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். 17 நிமிடங்களே பேச அனுமதி வழங்கியதால் மீண்டும் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    அப்போது முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நோக்கி தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவியை விட்டு கீழே இறங்கு. எதிர்க்கட்சியின் குரல்வளையை நெறிக்கும் சபாநாயகர் டவுன் டவுன் என கோஷம் எழுப்பினர்.

    அவையின் நடவடிக்கையை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சீர்குலைப்பதாக சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் சபாநாயகரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் அச்சன் நாயுடு, பால வீர ஆஞ்சநேய சாமி, ராம்மோகன், அசோக், சத்ய நாராயண ராஜு, சீன ராஜப்பா கானா பாபு, ஏலூரி சாம்பசிவராவ், வெலகப் புடி ராமகிருஷ்ணா, ஆதிரெட்டி பவானி உள்ளிட்டோர் ஒரு நாள் அவையில் இருந்து சஸ்பெண்டு செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் விவாதத்திற்கு பதில் அளிக்காமல் சஸ்பெண்டு செய்ததை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கோஷமிட்டனர். இதையடுத்து சபை காவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுவதற்காக சபைக்குள் வந்தனர்.

    இதனைக் கண்ட தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து வெளியேறி சென்றனர் இதனால் ஆந்திர சட்டசபையில் பரப்பரப்பு ஏற்பட்டது.

    • பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், குத்து விளக்குகள் தூய்மைப்படுத்தப்பட்டது.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.

    முன்னதாக நேற்று அதிகாலை மூலவரை சுப்ரபாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, சஹஸ்ர நாமர்ச்சனை நடந்தது. அதன் பிறகு மூலவர்கள் மீது பட்டு வஸ்திரம் போர்த்தப்பட்டு காலை 6.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.

    கோவிலின் மூலவர் சன்னதியில் இருந்து மகா துவாரம் வரை அனைத்துச் சன்னதிகளும், தூண்கள், மாடங்கள், சுவர்கள், மேற்கூரைகள் என அனைத்தும் தூய தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், குத்து விளக்குகள் தூய்மைப்படுத்தப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மஞ்சள், குங்குமம், சந்தனம், சீயக்காய், நாமக்கட்டி, பச்சை கற்பூரம், கிச்சிலி கட்டை, கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது போன்ற நறுமணப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சுகந்த திரவியம் மூலவர் கருவறை சுவர்கள், மாடங்கள், மேற்கூரைகள், தூண்கள் ஆகியவற்றில் பூசப்பட்டது. அதன்பின் மூலவர் மீது போர்த்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்புப்பூஜைகள் செய்து, நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தில் கோவில் துணை அதிகாரிகள் நாகரத்தினா, கோவிந்தராஜன், உதவி அதிகாரி மோகன், கோவில் சூப்பிரண்டு ரமேஷ், அர்ச்சகர் ஆனந்தகுமார் தீட்சிதலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலுக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தர் பிரசன்னாரெட்டி மற்றும் திருப்பதியைச் சேர்ந்த பக்தர் மணி ஆகியோர் 4 படுதாக்கள் மற்றும் திரைச்சீலைகளை காணிக்கையாக வழங்கினர்.

    • கோவில் கட்டப்பட்ட போது இருந்த கிராம பஞ்சாயத்து சம்மந்தமான தகவல்கள் தங்கம் மற்றும் செம்பு தகடுகளில் பதிக்கப்பட்டு இருந்தது.
    • வரதராஜ பெருமாள் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    இதனால் நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து வருகின்றனர். காளஹஸ்தி சிவன் கோவிலுடன் இணைந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

    நேற்று புனரமைப்பு பணியின் போது மூலவர் வரதராஜ பெருமாள் சிலை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றினர்.

    அப்போது மூலவர் சிலையின் அடிப்பகுதியில் 37 தங்க தகடுகள், 3 லட்சுமி உருவம் பதித்த தங்க நாணயங்கள், 7 செம்பு தகடுகள் என ஏராளமான நவரத்தின கற்கள் இருந்தன.

    இந்த நவரத்தின கற்கள் விலை உயர்ந்தது என அதிகாரிகள் கூறினர்.

    இதனை கண்டு திடுக்கிட்ட அதிகாரிகள் அவற்றை மீட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவில் கட்டப்பட்ட போது இருந்த கிராம பஞ்சாயத்து சம்மந்தமான தகவல்கள் தங்கம் மற்றும் செம்பு தகடுகளில் பதிக்கப்பட்டு இருந்தது.

    தங்கம், நவரத்தின கற்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    இதையடுத்து மூலவர் வரதராஜ பெருமாளுக்கு பூஜை செய்யப்பட்டு. பாலாலய பிரகாரத்தில் வைக்கப்பட்டது.

    வரதராஜ பெருமாள் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது. பணிகள் முடிந்த பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்தனர்.

    • திருமலையில் உள்ள புண்ணியத் தீர்த்தங்களில் ஒன்று தும்புரு தீர்த்தம்.
    • உத்தர பால்குனி நட்சத்திரத்தன்று தும்புரு தீர்த்த முக்கொடி உற்சவம் நடப்பது வழக்கம்.

    திருமலையில் உள்ள புண்ணியத் தீர்த்தங்களில் ஒன்று தும்புரு தீர்த்தம். இந்தத் தீர்த்தம் ஏழுமலையான் கோவிலில் இருந்து 7½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு பால்குன மாதம் பவுர்ணமி நாளில் உத்தர பால்குனி நட்சத்திரத்தன்று தும்புரு தீர்த்த முக்கொடி உற்சவம் நடப்பது வழக்கம்.

    அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி திருமலை அருகே தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடக்கிறது. அன்று இந்தத் தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினால் சகல பாவங்களும் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் நிரந்தர முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
    • திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் முடி காணிக்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநில இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 610 கோவில்களில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் நிரந்தர முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    அதன் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்களும் மாதம் ரூ.20,000 வரை சம்பளம் பெறும் வகையில் முடி காணிக்கை கட்டணம் ரூ.25 ல் இருந்து 40 ரூபாயாக உயர்த்தி இந்து சமய அறநிலையத்துறை தலைமை செயலாளர் ஹரி ஜவஹர்லால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். முடி காணிக்கை மற்றும் முடி விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை கோவிலில் வேலை செய்யும் பூசாரிகள் மற்றும் முடி காணிக்கை செலுத்துபவர்களுக்கு பிரித்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக மொட்டை அடிக்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முடி காணிக்கைக்கு கட்டணம் வசூலிப்பது போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் கட்டணம் வசூலிக்கப்படுமா என பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • தந்தையும், மகனும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கனகராஜின் மனைவி அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.
    • இருவரையும் மீட்ட அவரது உறவினர்கள் குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 50). இவரது மகன் பாலாஜி (24). அதே பகுதியை சேர்ந்த கனகராஜின் உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் கனகராஜ் மற்றும் அவரது மகன் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் இருவரும் மது குடித்து இறுதி சடங்கில் பங்கேற்றனர். மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்தனர்.

    தந்தையும், மகனும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கனகராஜின் மனைவி அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் விரக்தி அடைந்த தந்தையும், மகனும் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளுபடி மயங்கி விழுந்தனர்.

    இருவரையும் மீட்ட அவரது உறவினர்கள் குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜியும் கனகராஜும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
    • திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் மூலமும் நடைபாதையாகவும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

    ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    வனப்பகுதியில் இருந்து விலங்குகள் அடிக்கடி வழி தவறி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலை பாதைக்கு வரும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதனால் வாகனங்கள் மற்றும் நடைபாதையாக செல்லும் பக்தர்கள் அச்சம் அடைகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலைப்பாதையில் பைக்கில் திருமலைக்கு சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் மற்றும் பக்தர்கள் 2 பேரை மலைப்பாதையில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியது.

    இதையடுத்து வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் மலை பாதைக்கு வராதவாறு தடுப்பு வேலிகள் அமைக்க திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் திருமலையில் இருந்து அலிபிரிக்கு வரும் மலைப்பாதையில் 31வது வளைவில் சிறுத்தை ஒன்று நடமாடிக்கொண்டு இருந்தது. இதனைக் கண்ட வாகனத்தில் வந்த பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சிறுத்தை மீண்டும் வணப்பகுதிக்குள் சென்றது தெரிய வந்தது. மலைப்பாதையில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வனவிலங்குகள் மலைப்பாதைக்கு வராதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமும் சுவாமி, தாயார்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
    • 3-ந்தேதி முதல் 5-ந்தேதி சேவைகள் வரை ரத்து செயயப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி உற்சவம் தொடங்குகிறது. அன்று காலை 7 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு மாடவீதிகளில் வீதி உலா நடக்கிறது. பின்னர் வசந்த மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு அபிஷேகம், நெய்வேத்தியம் செய்யப்பட்டு கோவிலுக்கு திரும்புகின்றனர்.

    இரண்டாம் நாளான 4-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி தங்க ரதத்தில் எழுந்தருளி காலை 8 மணி முதல் 10 மணி வரை மாடவீதிகளில் உலா நடக்கிறது. பின்னர், வசந்த மண்டபத்தில் அர்ச்சகர்கள் வசந்தோற்சவம் நடத்துகின்றனர்.

    கடைசி நாளான 5-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சாமி, சீதாராம லட்சுமணன், ஆஞ்சநேயர், கிருஷ்ணசுவாமி உற்சவமூர்த்திகள், ருக்மணியுடன் வசந்த உற்சவத்தில் பங்கேற்று மாலையில் கோவிலை வலம் வருவார்கள்.

    இதை முன்னிட்டு தினமும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சுவாமி, தாயார்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஆஸ்தானம் நடைபெறும்.

    வசந்த உற்சவத்தை முன்னிட்டு அஷ்டதள பாதபத்மாராதனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதிபாலங்கர சேவைகள் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை ரத்து செயயப்பட்டுள்ளது.

    • 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
    • 24-ந்தேதி கருட சேவை நடக்கிறது.

    திருப்பதி கோதண்டராம சாமி கோவிலில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 20-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. 22-ந் தேதி உகாதி ஆஸ்தானம், 24-ந் தேதி கருட சேவை, 25-ந் தேதி அனுமன் வாகனம் நடக்கிறது.

    31-ந்தேதி சீதாராமர் திருக்கல்யாணம், 30-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி வரை ராமநவமி உற்சவமும், ஏப்ரல் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தெப்போற்சவமும் நடைபெறவுள்ளது.

    கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர், மோர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வருகிற 22-ந்தேதி உகாதி பண்டிகை நடக்கிறது.
    • காலை 6 மணி முதல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை ஆழ்வார் திருமஞ்சனம் என்னும் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 22-ந்தேதி உகாதி பண்டிகை நடக்கிறது. இதனை முன்னிட்டு 21-ந் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. காலை 6 மணி முதல் 11 மணி வரை அர்ச்சகர்களால் இந்த ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

    கோவிலில் உள்ள ஆனந்தநிலையம் முதல் பங்காருவாகிலி வரை கோவிலுக்குள் உள்ள அனைத்து உபகோவில்கள், கோவில் வளாகங்கள், சுவர்கள், மேற்கூரை, பூஜை சாமான்கள் என அனைத்தும் நீரால் சுத்தம் செய்யப்படுகிறது.

    அப்போது சுவாமியின் மூலவிரட்டு முழுவதும் துணியால் மூடப்பட்டிருக்கும். சுத்திகரிப்பு முடிந்ததும், நாமகோபு, ஸ்ரீ சூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டா போன்றவற்றுடன் வாசனை திரவியம் கலந்து கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதன்பின், சுவாமியின் மூலவிரட்டை மறைத்திருந்த துணி அகற்றப்பட்டு, சிறப்பு பூஜைகளை அர்ச்சகர்கள் சாஸ்திர முறையில் நடத்துகின்றனர். மதியம் 12 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    ×