என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பூசணி விதைகள் பல நோய்களை குணப்படுத்தும் தன்மையும் கொண்டது. பெண்கள் பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) எனப்படும் கருப்பை நீர்க்கட்டி நோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டீன் ஏஜ் வயது பெண்கள் மற்றும் இளம் பெண்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    கர்ப்பப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் நீர்க்கட்டிகள் தோன்றும் நிலைதான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படுகிறது. இந்த பாதிப்பால் சினைப்பையின் சுவர்கள் தடி மனாகி விடும். நீர்க்கட்டிகளின் பெருக்கத்தால் கருமுட்டைகள் உருவாக முடியாத நிலையும் ஏற்படும்.

    ஹார்மோன் சம நிலையின்மையையும் எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு சிறந்த உணவுப்பொருளாக பூசணி விதை கருதப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் மிகுந்த இந்த விதைகள் நீண்ட காலமாக இயற்கை வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகிறது. பல நோய்களை குணப்படுத்தும் தன்மையும் கொண்டது. பெண்கள் பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    1. முடி உதிர்வை குறைக்கும்

    பூசணி விதைகளில் குக்குர்பிடாசின் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவும் தனித்துவமான அமினோ அமிலமாகும். மேலும் பூசணி விதைகளில் இருக்கும் வைட்டமின் சி, முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பூசணி விதை எண்ணெய்யை உச்சந்தலையில் தேய்த்தும் வரலாம்.

    2. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்

    பூசணி விதைகளில் பல அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை இதய செயல்பாட்டையும், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை. இதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சிறுநீர் பாதை அமைப்பின் சீரான செயல்பாட்டுக்கு உதவக் கூடியவை.

    3. கொழுப்பை குறைக்கும்

    பெண்கள் உடலில் கொழுப்பு அளவு அதிகரித்தால் கர்ப்பப்பை நீர்க்கட்டி பாதிப்பு ஏற்படக்கூடும். பூசணி விதை, கொழுப்பு அளவை குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் உதவும்.

    4. ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும்

    பூசணி விதையில் உள்ள மெக்னீசியம், உடலில் உள்ள மெக்னீசியத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டால் அது கர்ப்பப்பை நீர்க்கட்டி பாதிப்புக்கு வித்திடக்கூடும். பூசணி விதை ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த உதவும்.

    5. ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும்

    உடலில் கால்சியம் சத்து குறையும்போது எலும்புகள் தேய்ந்து, பலவீனமடையும் நிலை ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும். மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயம் இருக்கிறது. பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்தலாம். ஏனெனில் பூசணி விதைகள் எலும்பு உருவாகுவதற்கு உதவக்கூடியது. எலும்புகளை வலுப்படுத்தக்கூடியது. மேலும் பூசணி விதைகளில் இருக்கும் டிரிப்டோபன் ஆழ்ந்த துக்கத்தை வரவழைக்கக்கூடியது.
    டீன் ஏஜ் பெண்கள் செய்யும் சிறுசிறு செயல்கள்கூட பெரிய இடர்பாடுகளை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பதின்பருவத்தில் வரும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் இங்கே...
    * பதின் பருவத்தில்தான் அதிகமான வளர்ச்சிதை மாற்றம் நிகழும்; உடல் மற்றும் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால் டீன் ஏஜ் பெண்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின், மினரல், நல்ல கொழுப்பு, இரும்புச்சத்து, கால்ஷியம் நிறைந்த உணவுகளை சரிவிகித அளவில் உட்கொள்ள வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால், உடல் எடை அதிகமாகிவிடும். இதனால் இறுதிகட்ட பள்ளிப் பருவமும், ஆரம்பகட்ட கல்லூரிப் பருவமும் அவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை தரலாம்.

    * குழந்தைப் பருவத்தில் இருந்து உணராத தன் அழகு மற்றும் உருவத்தோற்றம் குறித்தும், தன் மீது மற்றவர்கள், குறிப்பாக தன் வயதுக்கு இணையான எதிர்பாலினத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் பதின் வயதில் அதிகளவில் நினைக்கத் தோன்றும். அதனால்தான் உடுத்தும் உடை, செய்துகொள்ளும் மேக்கப் உள்ளிட்டவை பொருத்தமாக இருக்குமா, மற்றவர்களுக்குப் பிடிக்குமா, மற்றவர்கள் தன்னை என்ன சொல்வார்கள் என தனக்குள்ளேயே பல கேள்விகளை அடிக்கடி கேட்டுக்கொள்வார்கள். இவையெல்லாம் அப்பருவத்தில் உடல் ரீதியாக ஏற்படும் விஷயங்கள்தான் என்றாலும், உடல், அழகு மீதான அதீத அக்கறையும், ஈடுபாடும் கொள்ள வேண்டாம் என்பதே அவர்களுக்கான அறிவுரை. இதனால் அவர்கள் படிப்பில் சரியான கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.

    * பரு, மரு, முடி உதிர்தல், முகத்தில், கை கால்களில் அதிகம் ரோமம் வளர்தல் பருவப் பெண்களுக்கு கவலையை உண்டாக்கலாம். பெரிய ஹீல்ஸ் கொண்ட செப்பல் பயன்படுத்த, டாட்டூ குத்திக்கொள்ள, மார்டன் உடை அணிய, அடிக்கடி பியூட்டி பார்லர் செல்ல, வித்தியாசமான அக்ஸசரீஸ் பயன்படுத்த அதிக ஈடுபாடு வரும். இதனால் வீட்டில் பெற்றோருடன் பல வாக்குவாதங்களும், சிக்கல்களும் ஏற்படலாம். 'என் தோழி செய்றா, நான் செய்யக்கூடாதா?' என்ற வாதத்தை பருவப் பெண்கள் தவிர்க்க வேண்டும். நீங்கள் செய்யும் விஷயங்கள் உங்கள் குடும்பத்தார் ஏற்றுக்கொள்ளும் வரையறையில் இருப்பதே சரி.

    * மாதவிடாய் வலி, அதிகமான உதிரப்போக்கு, அடிவயிற்றில் விட்டு விட்டு வலி, சீரற்ற மாதவிடாய் போன்ற சிக்கல்களால் பல டீன் ஏஜ் பெண்கள் அடிக்கடி அவதிப்படுவார்கள். இதனால் அச்சப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. இது இயற்கையான ஒரு விஷயம் என்பதை உணர வேண்டும். தங்கள் உடல்நிலையைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு, சீரான இடைவெளியில் மாதவிடாய் நிகழ, தாயின் உதவியுடன் நேர்த்தியான வாழ்க்கை முறையையும், தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனையும் பெற்று, தங்கள் ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.

    * பருவப் பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்ய சோம்பல் படுவார்கள். 'நாம வீட்டு வேலைகளை செய்யணுமா? நெவர்' என்ற எண்ணம் தோன்றும். காலை உணவு உள்பட தினமும் உணவு சாப்பிடவேண்டிய நேரத்துக்குச் சரியாக சாப்பிட மாட்டார்கள். வீட்டில் அம்மா, அப்பா உள்ளிட்ட யாரோ ஒருவர் பல முறை சொன்னால்தான் சாப்பிடுவார்கள். சாப்பிட்ட பின்னர், உடல் உறுப்புகளுக்கு பயிற்சி கொடுக்கும் வகையில் ஏதாவது வேலைகளைச் செய்யாமல் உடல் பருமன் பிரச்னைக்கு ஆளாவார்கள். அதேபோல, காய்கறிகள் தவிர்ப்பது, ஜங்க் ஃபுட் விரும்புவது என உணவு விஷயத்தில் காட்டும் அலட்சியத்தால் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கும் ஆளாவார்கள். எனவே, சரியான நேரத்துக்கு சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதும், வீட்டு வேலைகள், உடற்பயிற்சி, விளையாட்டு என்று உடலுக்கு இயக்கம் கொடுக்க வேண்டியதும் முக்கியம்.
    மாதவிடாய் கால ரத்தப்போக்கு, தூக்கம், பகலில் எந்த அளவுக்கு சோர்வின்றி செயல்படுகிறார்கள் என்பது போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டோம்.
    இரவில் 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்கும் ஆரோக்கியமான நபர்களை விட ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 44 சதவீதம் அதிகம் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    அத்துடன் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு 70 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு முடிவு ‘ஜர்னல் ஆப் ஸ்லீப் ரிசர்ச்’சில் வெளியாகி உள்ளது.

    ஆய்வை மேற்கொண்ட குழுவினர், ‘‘இரவு ஓய்வின் முக்கியத்துவத்தை பலரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நோய் பாதிப்புகள், சிகிச்சை முறைகள் பெண்களை பின்னுக்கு தள்ளுகின்றன. 24 முதல் 40 வயதுக்குட்பட்ட 547 பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தினோம். அவர்களிடம் மாதவிடாய் காலத்தில் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து கேட்கப்பட்டது.

    குறிப்பாக மாதவிடாய் கால ரத்தப்போக்கு, தூக்கம், பகலில் எந்த அளவுக்கு சோர்வின்றி செயல்படுகிறார்கள் என்பது போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டோம்.

    இறுதியில் அதிக அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை அனுபவிப்பவர்கள் தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை கண்டறிந்தோம்.

    மாதவிடாய்க்கு முன்போ அல்லது மாதவிடாய் காலத்திலோ எதிர்கொள்ளும் மனநிலை மாற்றங்கள், தசை பிடிப்புகள், எரிச்சல் மற்றும் சோர்வு காரணமாக அவர்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம்.

    பெண்கள் தூக்கத்தை இழக்கும் போது பதற்றத்தை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் தூங்குவது இன்னும் கடினமாகிறது. ஆண்களை விட பெண்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் அதிகம்’’ என்கிறார்கள்.
    பொதுவாக வயதானவர்கள்தான் மூட்டுவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 60 வயதைக் கடந்த பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு மூட்டு தேய்மானம் முக்கிய காரணமாக அமைகிறது.
    மூட்டு வலியால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது எல்லா வயதினரையும் தாக்குகிறது. பெண்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மூட்டு வலி பாதிப்புகளுக்கு உள்ளாகிறவர்களின் அன்றாட வாழ்க்கை சிரமம் நிறைந்ததாகிவிடுகிறது. பயணிக்க முடியாமலும், வேலைகளை செய்ய முடியாமலும் அவதிப்படுகிறார்கள். அதனால் சரியான வாழ்வியல் முறைகளை பின்பற்றி மூட்டுவலியின்றி வாழ அனைவரும் முயற்சிக்கவேண்டும். மூட்டுவலி ஏற்பட்டாலும், தொடக்கத்திலே விழிப்படைந்து அதற்கு தீர்வுகாணவும் முன்வரவேண்டும். மூட்டுவலி தொடர்புடைய பொதுவான விஷயங்கள் பற்றி பார்ப்போம்!

    மூட்டுவலிக்கு முக்கியமான காரணங்கள்:

    * தசைநார்களிலோ, மூட்டு எலும்பிலோ ஏற்படும் காயங்கள்.

    * மூட்டுகளின் இயக்கத்தை எளிதாக்கும் `ப்ளூயீடு’ நிறைந்திருக்கும் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள்.

    * காலில் தொடை எலும்பில் இருந்து கால் மூட்டிற்கு கீழே உள்ள எலும்புவரை தசைநார் நீண்டிருக்கிறது. ‘ஆன்டிரியர் க்ருஷியேட்டட் லிகமென்ட்’ எனப்படும் அதனை சுருக்கமாக ‘ஏ.சி.எல்’ என்று அழைக்கிறோம். இந்த தசைநாரில் ஏற்படும் காயங்கள் ‘ஏ.சி.எல் இஞ்சுரி’ எனப்படுகிறது. இந்த காயமும் கடுமையான வலியை ஏற்படுத்தும். கால்பந்து, கைப்பந்து விளையாடு பவர்கள் விளையாட்டின்போது இயல்புக்கு மாறாக கால்களை இயக்கும்போது திடீரென்று இந்த வகை காயங்கள் தோன்றும்.

    * மூட்டில் இருக்கும் எலும்புகளிலோ, மூட்டுக் கிண்ணத்திலோ ஏற்படும் லேசான காயங்கள் கூட அதிக வலியை தோற்று விக்கும். நாற்காலியில் ஏறி நின்று வேலை செய்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்தாலும், இருசக்கர வாகன பயணத்தில் கீழே விழுந்தாலும் மூட்டில் காயம் ஏற்படலாம். எலும்பு பலவீனமாக உள்ளவர்கள் நடக்கும்போது கீழே விழுந்துவிட்டால்கூட மூட்டில் காயம் ஏற்பட்டுவிடும்.

    * நாம் பணி செய்யும்போது உடலில் ஏற்படும் அதிர்வுகளை தாங்கும் ‘ஷாக் அப்சர்பர்’ போன்று செயல் படுபவை, மெனிஸ்கஸ் எனப்படும் ஜவ்வு போன்ற திசுக் களாகும். கால்மூட்டுகளின் அதிர்வுகளை தாங்கும் விதத்தில் இவை செயல்படும். எலும்புகள் பாதுகாப்பாக இயங்க உதவும் இந்த மெனிஸ்கஸ் பகுதியில் முறிவு ஏற்பட்டாலும் மூட்டு வலி தோன்றும். நமது முழு உடலையும் மூட்டு தாங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இயல்புக்கு மாறாக இயங்கும் சூழ்நிலை ஏற்படும்போது இந்த மெனிஸ்கஸ் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது.

    * மூட்டுகளின் சிறப்பான இயக்கத்திற்காக சில வகை திரவங்கள் உள்ளன. மூட்டுக்கிண்ணத்தின் கீழ்ப்பகுதியிலும் ஒருவகை திரவம் உள்ளது. அதில் நீர் சேர்ந்தால் மூட்டின் இயல்பான இயக்கம் தடைபடும். அப்போதும் மூட்டு வலி தோன்றும்.

    * இடுப்பு பகுதி முதல் மூட்டு வரை தசை போன்ற பகுதி ஒன்று உள்ளது. அதனை இலியோட்டிபியல் பான்ட் (iliotibial band) என்போம். இந்த தசை முறுக்கிக்கொண்டாலும் மூட்டு வலி தோன்றும். ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுகிறவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப் படுவார்கள்.

    * மூட்டுக் கிண்ணம் இடம்பெயர்ந்து போகுதல், இடுப்பு மற்றும் கால் பாதங்களில் வலி ஏற்படுதல் போன்றவைகளாலும் மூட்டுவலி ஏற்படுவதுண்டு.

    * சிலவகை வாத நோய்களும் மூட்டு வலிக்கு காரணமாக இருக்கிறது. ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ், ரூமட்டோய்ட் ஆர்த்தரைட்டிஸ் போன்றவை இந்த வகை நோய்களாகும்.

    இதுபோல் மூட்டு வலி ஏற்பட இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.

    பொதுவாக வயதானவர்கள்தான் மூட்டுவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 60 வயதைக் கடந்த பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு மூட்டு தேய்மானம் முக்கிய காரணமாக அமைகிறது.

    மூட்டு வலி கொண்டவர்களுக்கு சாதாரணமாக ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. மூட்டு தேய் மானத்தை கண்டறிய எக்ஸ்ரே சோதனை, எலும்பு முறிவை நுட்பமாக அறிய சி.டி.ஸ்கேன் பரிசோதனை, தசைநார்களில் கிழிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிய எம்.ஆர்.ஐ.ஸ்கேன், மூட்டுகளின் உள்பகுதி பாதிப்பை தெரிந்துகொள்ள ஆர்த்ரோஸ்கோப் பரிசோதனை போன்றவை வழக்கத்தில் உள்ளன.

    பரிசோதனை மூலம் காரணத்தை கண்டறிந்த பின்பு அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். வலியை நீக்கும் மருந்து களோடு, சிகிச்சைக்கான மருந்துகளும் தரப்படும். சில பாதிப்புகளுக்கு ஊசிகளும் போடப்படும். மூட்டுகளை பலப்படுத்துவதுதான் வலியை குறைப்பதற்கான சிறந்த தீர்வு. மூட்டை சுற்றியுள்ள தசைகள் பலப் படுத்தப்பட்டால்தான் மூட்டின் இயக்கம் சீராகும். குறிப்பாக தொடைப்பகுதியின் முன்னும், பின்னும் இருக்கும் தசைகள் வலுப் படுத்தப்பட வேண்டும். அதற்கான உடற்பயிற்சிகளும் அவசியமாகும்.

    மருந்து களோ, உடற்பயிற்சிகளோ முழுமையான பலன் தராதபோது அறுவை சிகிச்சை அவசியமாகும். பாதிப்புக்கு ஏற்ப பலவகையான நவீன அறுவை சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆபரேஷனுக்கு முன்பு அது பற்றி முழுமையாக நோயாளிகள் அறிந்துகொள்வது மிக அவசியம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு ஆபரேஷன் தேவைப்படுவதில்லை.

    நம்மை தூக்கி சுமக்கும் எலும்புகளையும், அதற்கு பக்க பலமாக இருக்கும் மூட்டு களையும் சரியாக பராமரித்தால் வலியின்றி நிம்மதியாக வாழலாம்!

    டாக்டர். பி.ராதாகிருஷ்ணன்,

    எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., ஆர்த்தோ, (எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்),

    சென்னை.
    கிராமப்புறங்களில் 60 பெண்களில் ஒருவர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானால் நகர்ப்புறங்களில் 22 பெண்களில் ஒரு பெண்ணுக்கு பாதிப்பு நேர்கிறது.
    புற்றுநோய் பெண்களுக்கு கடும் சவாலாக விளங்கிக்கொண்டிருக்கிறது. பெண்களை தாக்கும் புற்றுநோய்களில் 27 சதவீதம் மார்பக புற்றுநோயாக இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 87 ஆயிரம் பேர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி மரணம் அடைகிறார்கள். கடந்த ஆண்டு 1,62,468 பேர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். உலக அளவில் மார்பக புற்றுநோய்க்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

    அதுபோல் இறப்பும் 14 சதவீதம் உயர்ந்துள்ளது. உலக அளவில் 184 நாடுகளில் 140 நாடுகளை சேர்ந்த பெண்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வாழ்நாளில் 28 பெண்களில் ஒரு பெண் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. நகர்புறங்களில் வசிக்கும் பெண்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    கிராமப்புறங்களில் 60 பெண்களில் ஒருவர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானால் நகர்ப்புறங்களில் 22 பெண்களில் ஒரு பெண்ணுக்கு பாதிப்பு நேர்கிறது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதுதான் சிகிச்சைக்கு உதவிகரமாக இருக்கும். புற்றுநோய் தாக்குதல் பற்றிய அறிகுறிகளை அறிந் திருப்பதும், அதுபற்றிய விழிப்புணர்வு இருப்பதும் அவசியமானது. முதலில் வலியற்ற கட்டிகள் தோன்றும். அதன்பின்பு வீக்கம், வலி ஏற்பட்டு பாதிப்பை அதிகப்படுத்திவிடும். முந்தைய காலகட்டங்களில் 50 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிக அளவில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானார்கள். இப்போது வயது பாகுபாடு இன்றி அனைத்து வயது பெண்களும் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.

    கிராமப்புறங்களில் 90 சதவீத பெண்கள் சுய மார்பக பரி சோதனை செய்து கொள்வது பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலையிலேயே இருக்கிறார்கள். வறுமை, அறியாமை, மூட நம்பிக்கை போன்றவை பெண்களின் ஆரோக்கியத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. அது புற்றுநோய் சிகிச்சையையும் தாமதப்படுத்துகிறது. 50 சதவீத கிராமப்புற பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கு ஒத்துழைப்பதில்லை. நோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தாலும் கூட மார்பகங்களில் எந்த வலியும் இல்லை. அதனால் மருத்துவ பரிசோதனை தேவையற்றது என்று அசட்டையாக இருந்து விடுகிறார்கள்.
    மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு நடக்கும்போதோ, படுத்திருக்கும்போதோ, எழும்போதோ மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அத்தகைய மூச்சுத்திணறலை உணர்ந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
    மாரடைப்பு என்பது உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடியது. பெண்களுக்கு இது எத்தகைய அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்பது குறித்து பார்ப்போம்.

    நெஞ்சு வலி: இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும். ஆனால் பாதிப்பின் தன்மை மாறுபடும். பொதுவாக பெண்கள் மார்பை அழுத்தும் வலியை அனுபவிக்கிறார்கள். மார்பும் இறுக்கமடையும். ஆண்களை பொறுத்தவரை மார்பில் கடும் இறுக்கம் ஏற்படும். மார்பு வலியும் உண்டாகும்.

    ஆனால் சில பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது மார்பு வலி கூட இருக்காது. மார்பு பகுதியில் சிறு அசவுகரியத்தை உணரலாம். அதனை சாதாரண வலியாக இருக்கும் என்று தவறாக கருதக்கூடாது.

    பலவீனம்: மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளை ஒரு வாரத்திற்கு முன்பே அனுபவிக்க நேரிடும். அதனை கருத்தில் கொண்டால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவிடலாம். முதல் அறிகுறியாக உடல் பலவீனமாக இருப்பதை உணரலாம்.

    சில சமயங்களில் திடீர் பலவீனம் காரணமாக உடல் நடுங்கலாம். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மாரடைப்பு வருவதற்கு முன்பு பதற்றம், தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் லேசான தலைச்சுற்றல் போன்றவற்றை உணரலாம். அவற்றை அலட்சியப்படுத்திவிடக்கூடாது.

    மூச்சுத் திணறல்: பெண்களை பொறுத்தவரை மாரடைப்பு ஏற்படப்போவதை உணர்த்தும் தெளிவான அறிகுறி இதுவாகும். சுவாசம் அதிகரிப்பதோடு மார்பு வலியும் உண்டாகும். இதயப்பிரச்சினை அல்லது கடுமையான நோய் பாதிப்பு இருந்தால் மூச்சுத்திணறல் நிகழக்கூடும். அதை கடுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு நடக்கும்போதோ, படுத்திருக்கும்போதோ, எழும்போதோ மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அத்தகைய மூச்சுத்திணறலை உணர்ந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    உடல் வலி: கடுமையான வேலைகளை செய்தாலோ, உடல் சோர்வு அடைந்தாலோ உடல் வலியை உணரலாம். பொதுவாக முதுகின் இரு புறமும் வலி இருந்து கொண்டிருக்கும். ஆனால் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு பெண்களின் உடலின் மேல் பகுதியில் வலியை சந்திக்க நேரிடும்.

    அதாவது முதுகின் மேல் பகுதி, கைகள், கழுத்து, தாடை போன்ற பகுதிகளில் வலி ஏற்படும். மிகவும் அசவுகரியமாகவும், மன அழுத்தமாகவும் இருக்கும். அப்படி உடலின் ஒரு பகுதியில் வலி ஏற்பட தொடங்கி பின்பு மற்ற பகுதிகளுக்கு படிப்படியாக பரவும். அப்படி மேல் பகுதியில் வலி ஏற்படத்தொடங்கும்போதே மருத்துவரை அணுகுவது அவசியமானது.

    அதிகமாக வியர்த்தல்: பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான முக்கிய அறி குறிகளில் ஒன்று அதிகப்படியான வியர்வை வெளிப்படுவதாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாரடைப்பு ஏற்படும்போது ஆண்களுக்கு வியர்வை அதிகமாக வெளியேறுவதில்லை. வேலை செய்யும் போதோ அல்லது படுத்திருக்கும் போதோ திடீரென்று வியர்வை ஏற்படலாம். வியர்வையுடன் திடீர் குளிர்ச்சி அல்லது குளிர் வெப்ப நிலையை உணரலாம். இது மாரடைப்புக்கான தெளிவான அறிகுறியாகும்.

    சோர்வு: பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வியர்வை, உடல் பலவீனம் ஆகியவற்றுடன் சோர்வும் ஏற்படும். இந்த மூன்று அறிகுறிகளும் பெண்களுக்கு மட்டுமே இருக்கும். மாரடைப்பு ஏற்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பெண்கள் கடும் சோர்வுடன் காணப்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற நிலையில் விரைவாக மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது.

    வயிற்று பிரச்சினைகள்: வயிற்றுப் பகுதியில் வலி, அசவுகரியம் மற்றும் அழுத்தத்தை உணரக்கூடும். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு இந்த அறிகுறிகள் பெண்களுக்கு மட்டுமே வெளிப்படும். குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகளும் உண்டாகலாம். வயிற்றில் ஏற்படும் வலி செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உடல் சோர்வு அடைந்துவிடும். எதையும் சாப்பிட முடியாது.

    தூக்கமின்மை: மாரடைப்புக்கு ஆளாகும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தூங்குவதில் சிக்கல் காணப்படும். மாரடைப்பு ஏற்படுவதற்கு சில இரவுகளுக்கு முன் தூக்கத்தில் பிரச்சினைகள் வரலாம். ஒன்று தூங்க முடியாமல் போகலாம் அல்லது நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறாக பல முறை எழுந்திருக்கலாம். அதிக ஓய்வு எடுத்தாலும், போதுமான அளவு தூங்கி இருந்தாலும் உடல் சோர்வாக இருப்பதை உணரலாம். இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
    அதிக உடல் பருமன், ஆரோக்கியமின்மை, ஹார்மோன் சமச்சீரின்மை போன்ற பல விஷயங்கள் மாதவிடாய் விரைவாக நின்றுவிட காரணமாக இருக்கின்றன.
    50 வயதுக்கு முன்பாக மாதவிடாய் சுழற்சி முடிவடைந்து விடும் பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். முன்கூட்டியே மாதவிடாய் காலம் முடிவடையும்போது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    ‘‘மாதவிடாய் முற்றுபெற்றிருக்கும் 60 வயது பெண்களுடன் ஒப்பிடும்போது 40 வயதிலேயே மாதவிடாய் காலத்தை நிறைவு செய்துவிடும் பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் இரு மடங்கு அதிகமாக இருக்கிறது. அதிலும் 40 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் அதிகமாக இருக்கிறது. அதிக உடல் பருமன், ஆரோக்கியமின்மை, ஹார்மோன் சமச்சீரின்மை போன்ற பல விஷயங்கள் மாதவிடாய் விரைவாக நின்றுவிட காரணமாக இருக்கின்றன’’ என்கிறார், பேராசிரியர் கீதா மிஸ்ரா.

    இந்த ஆய்வுக்காக உலகம் முழுவதும் 3 லட்சம் பெண்களின் மருத்துவ அறிக்கைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முன்கூட்டியே மாதவிடாய் நிற்பதற்கும், இதயநோய் ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக யூகிக்கப்பட்டது. தற்போதைய ஆய்வு இதயநோய்க்கான அபாயம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
    தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் தண்ணீர், பழச்சாறு, மோர், பால் போன்வற்றை அடிக்கடி பருக வேண்டும். ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் புகட்டுவதற்கு முன்னரும் தண்ணீர் அருந்த வேண்டும்.
    குழந்தை அழும்போதெல்லாம் தாய்ப்பால் புகட்ட வேண்டும். குழந்தை பிறந்த முதல் 6 மாதங்கள் வரை பகலில் குறைந்தபட்சம் 6 முதல் 7 முறையும், இரவில் 3 முதல் 4 முறையும் தாய்ப்பால் புகட்டுவது அவசியமானதாகும். தாய்ப்பால் புகட்டுவதற்கு முன்னரும், புகட்டிய பின்னரும் மார்பகங்களை சுத்தப்படுத்த வேண்டும்.

    வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பிரெஸ்ட் பம்ப் மூலம் தாய்ப்பாலை சேகரித்து குளிர்பதனப்பெட்டியில் வைத்து பாதுகாக்கலாம். பாலை வெளியே எடுத்து அரை மணி நேரம் கழித்து மீண்டும் அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்த பிறகே குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

    தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் தண்ணீர், பழச்சாறு, மோர், பால் போன்வற்றை அடிக்கடி பருக வேண்டும். ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் புகட்டுவதற்கு முன்னரும் தண்ணீர் அருந்த வேண்டும்.

    அதிக புரதச்சத்து மிதமான மாவுச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். கீரைகள், பேரீச்சை, அவல், கருப்பட்டி, நெல்லிக்காய் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

    தினமும் 7 முதல் 8 மணி நேரம் உறக்கம் அவசியமானது. எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    தாய்ப்பால் புகட்டுவதால் ஹார்மோன் சுரப்பு சீராகும். இதன் காரணமாக தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலையை அடையும். பிரசவத்தினால் ஏற்பட்ட உதிரப்போக்கு நிற்கும்.

    கர்ப்ப காலத்தில் தாய்க்கு அதிகரித்த உடல் எடை குறையும். மார்பகப்புற்றுநோய் ஏற்படாது.
    ஆண்களும் பெண்களும் முப்பதாம் வயதில், எலும்புத் திண்மையின் உச்சத்தை அடைந்த பிறகு, எலும்புத் திண்மையை இழக்கத் தொடங்குகின்றனர்.
    முதிய வயதில், குறிப்பாக பெண்கள் குளியலறை அல்லது வேறு இடங்களில் வழுக்கி விழுந்து விலா எலும்பு பாதிக்கப்படுவது நாம் அடிக்கடி கேள்விப்படும் நிகழ்வு. இந்த நிகழ்வு விபத்தாக கருதப்பட்டு, எலும்பு முறிவுக்கான சிகிச்சையே மேற்கொள்ளப்படுகிறது.

    உண்மை என்னவென்றால், விபத்துகளாகக் கருதப்படும் இந்த நிகழ்வுகளில் பெரும்பாலானவற்றுக்கு எலும்புப்புரை நோயே காரணமாக இருக்கலாம். இதை கவனிக்காவிட்டால், பாதிக்கப்பட்டவருக்கு அந்த ‘விபத்து’ அடிக்கடி ஏற்படத் தொடங்குகிறது. சில நேரம் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது.குழந்தை பருவத்தில் மென்மையாக இருந்து, வயது ஏற ஏற வலுப்பெற்று, பின் மீண்டும் வயது ஏற ஏற தன் வலுவை இழந்து, நொறுங்கும் தன்மை கொண்டதாக மாறும் இயல்பை எலும்புகள் கொண்டுள்ளன. எலும்புகள் நொறுங்கும் தன்மை கொண்டதாக மாறும் நிலையே எலும்புப்புரை.

    இந்த நோய் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயால் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை உணர்வதில்லை. இதுவே இந்த நோயை பெரும் ஆபத்தானதாக மாற்றி விடுகிறது. இது மனிதர்களைப் பலவீனப்படுத்தும் நோய்களில் முக்கியமானது. இந்த நோய் காரணமாக, முதுமையில், எலும்பு பலவீனமடைந்து எலும்பு முறியும் அபாயத்தை எதிர்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சில நேரம் இந்த எலும்பு முறிவால் இறப்புகூட நேரிடலாம். இது நாள்பட்ட நிலை என்பதால், இதற்கு நீண்ட கால சிகிச்சை தேவை. சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மறுவாழ்வு சிகிச்சை தேவைப்படலாம்.

    அதனால் வாழ்க்கைத்தரம் மோசமாக பாதிப்புக்கு உள்ளாகக்கூடும். முன்கூட்டியே கவனிக்காவிட்டால் இந்த நோய்க்கான சிகிச்சை, பாதிப்புக்கு உள்ளானவர்களின் மறுவாழ்வு ஆகியவற்றுக்கான மருத்துவச் செலவு சுமையாக மாறும். பொதுவாக, எலும்புப்புரையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் நின்ற 10 ஆண்டுகளுக்குப் பிறகு மணிக்கட்டு எலும்பு முறிவும், மாதவிடாய் நின்ற 15 முதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதுகெலும்பு முறிவும், 75 வயதுக்குப் பிறகு இடுப்பு எலும்பு முறிவும் ஏற்படலாம்.ஆண்களும் பெண்களும் முப்பதாம் வயதில், எலும்புத் திண்மையின் உச்சத்தை அடைந்த பிறகு, எலும்புத் திண்மையை இழக்கத் தொடங்குகின்றனர். மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்பிருப்பதால், விரைவான எலும்பு திண்மை இழப்பு ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம்.

    மாதவிடாய் நின்ற 5 முதல் 7 ஆண்டுகளில், எலும்புத் திண்மையில் தோராயமாக 12 சதவீதத்தை பெண்கள் இழக்கிறார்கள். மாதவிடாய் நிறுத்தத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்களிடம் தொடங்கும் ஈஸ்ட்ரோஜன் குறைபாடே இதற்கு காரணம் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
    சிறிநீர்ப்பாதை தொற்று என்பது பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தை முதல் நூறு வயதானவர் வரை எல்லோருக்கும் வரும பொதுவான நோய். ஆனால் அதில் பெண்களே அதிகம் பாதிப்புள்ளாகிறார்கள்.
    சிறுநீரகத்தொற்று அதிக எரிச்சலை தருவதுடன் பல பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அதை சரியான முறையில் கண்டறிந்தால் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்கிறார் திருவண்ணாமலை மாவட்டம் மேல் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் ரூபியாபானு அவர் இது பற்றி கூறும் போது

    சிறிநீர்ப்பாதை தொற்று என்பது பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தை முதல் நூறு வயதானவர் வரை எல்லோருக்கும் வரும பொதுவான நோய். ஆனால் அதில் பெண்களே அதிகம் பாதிப்புள்ளாகிறார்கள்.

    அதற்கு முக்கிய காரணம் பெண் உறுப்பின் அமைப்பு. பெண்களின் சிறுநீர் வழி மிகவும் சிறிதாக இருப்பதால் நுண்ணுயிரிகள் சிறுநீர் பாதைக்குள் மிக எளிமையான சென்று விடும். இதனாலேயே சிறுநீர்த்தொற்று பெண்களை மிக எளிதாக தாக்குகிறது. ஈ-கோலை எனும் பாக்டீரியா தான் சிறுநீர் தொற்றை ஏற்படுத்துகிறது.

    யாருக்கெல்லாம் ஏற்படும்?

    * புதிதாக திருமணமாகி இல்லறத்தில் ஈடுபடும் பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை ஹனி சிஸ்டைட்டிஸ் என்பார்கள். கர்ப்பிணிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம்.

    *நோய் எதிர்பு சக்தி குறையும் போது பாதிப்பு வரலாம்

    * நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு சிறுநீர்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
    *
    *சுகாதாரமில்லாத பொது கழிப்பிடத்டித பயன்படுத்தும் போதும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

    எப்படி தவிர்ப்பது?

    நாம் பயன்படுத்தும் கழிப்பிடத்தையும் உடலையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். சுகாதாரம் இல்லாமல் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணியாக உள்ளது. இது தவிர பிறப்பிலேயே சிறுநீர்ப்பிரச்சனைகள், சிறுநீரக அடைப்பு போன்ற பாதிப்பு இருக்கும் பட்சத்தில் இந்த தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதால் சிறுநீர் வரியில் பாதிப்பு ஏற்பட்டு தொற்று ஏற்படலாம்.

    அறிகுறிகள்

    * சிறுநீர் கழிக்கும் பது எரிச்சல் அதிகமாக இருக்கும்

    *சூடான சிறுநீர் செல்லும்

    * சிறுநீர் குறைவாக அடிக்கடி கழிப்பது

    * பெண்களுக்கு அடி வயிற்றில் வலி இருக்கும்.

    *காய்ச்சல், குளிர் ஏற்படும்.

    * சிறுநீர் கழிக்கு போது ரத்தம் வரலாம்.

    எப்படி உறுதி செய்வது?

    சிறுநீர் பரிசோதனை, யூரின் கல்ச்சர் போன்ற சோதனைகளின் மூலம் சிறுநீர் தொற்று இருப்பதை உறுதி செய்யலாம். இதை குணப்படுத்துவதற்கு மருத்துவரின் சரியான ஆலோசனையுடன் மருந்துகள் உட்கொண்டால் போதும். முறையில்லாமல் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு நேரும். கர்ப்பிணிக்பெண்களுக்கு எடை குறைவான குழந்தை பிறப்பு, குறைப்பிரசவம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

    செய்ய வேண்டியவை..

    * தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    *சிறுநீர் பாதையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

    * பொது கழிப்பிடங்களை பயன்படுத்த நேர்ந்தால் சுகாதராத்தில் கவனம் தேவை.

    * நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது கூடாது

    * சுகாதாரமான பழக்க வழக்கங்களுடம் மேற்சொன்ன விஷயங்களை கடைபிடித்து வந்தால் சிறுநீர் தொற்றிலிருந்து நம்மை காத்து கொள்ளலாம், என்றார்.
    உடற்பயிற்சி தூக்கத்தை சீராக்க உதவும் என்பதால், நம் தூங்கும் முறையை சரி செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்கலாம்.
    எடை குறைய உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பலர் முயற்சித்து கொண்டிருக்கையில், ஒழுங்கான தூக்கமும் வேண்டும் என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. முறையான தூக்கம் எப்படி எடையை குறைக்க உதவும் என்பதைப் பார்ப்போம்.

    தூக்கமானது, பசியை தூண்டும் ஹார்மோன் செயல்பாட்டை சீராக்கும். தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட நேரிடும். சரியாகத் தூங்காத பெண்கள், முறையாக தூங்கும் பெண்களை விட 300 கலோரி அதிக உணவு உட்கொள்வதாகவும் ஆராயச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

    தொப்பை வர, கவலையும் மன அழுத்தமும் முக்கிய காரணிகள். சரியாக தூங்கும்போது இவை இரண்டையும் விரட்டலாம்.

    7 முதல் 9 மணி நேரம் வரை தூங்கும் பெண்களை விட குறைவான நேரம் உறங்கும் பெண்களுக்கு எடை வேகமாக கூடுகிறது. 7 மணி நேரத்திற்கு குறைவாகவோ, 9 மணி நேரத்திற்கு அதிகமாகவோ தூங்குபவர்கள், மற்றவர்களைவிட, பருமனாகவும், எடை போடவும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இரவு நன்றாக உறங்கும்போது, அடுத்த ஒரு நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கும். உடற்பயிற்சி தூக்கத்தை சீராக்க உதவும் என்பதால், நம் தூங்கும் முறையை சரி செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்கலாம்.
    குழந்தை இல்லாத தம்பதிகள் சஞ்சலம் அடைய தேவையில்லை. அடுத்தடுத்து செய்ய வேண்டிய சிகிச்சைகளை விடாமல் செய்தால் கட்டாயமாகக நல்ல பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    ஒரு பெண் தாய்மையடையும் போதுதான் தன் பிறவியின் முழுமையை உணர்கிறாள். திருமணமான தம்பதியர் வாழ்க்கையை துவக்கும்போது அழகான, ஆரோக்கியமான ஒரு குழந்தை தங்களுக்குள் உருவாக வேண்டும் என்றுதான் மனதிற்குள் வேண்டுகிறார்கள். ஆனால் இப்போதுள்ள சூழலில் பத்தில் மூன்று பேருக்கு குழந்தையின்மை ஏற்படுகிறது. குழந்தையின்மை எனும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கு பல காரணங்கள் அதில் முக்கியமானவை.

    1. பெண்ணுக்கு (PCOD) கருமுட்டை பையில் நீர்கோத்து கொள்வது, அதிக நேரம் கைப்பேசி, தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை பார்த்துக் கொண்டிருப்பதாலும் தூக்கமின்மையாலும் ஒரு காரணம்.

    2. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிக சோர்வை, கருமுட்டை வளர்ச்சி தடைபடுதல்.

    3. போதிய உடற்பயிற்சி இல்லாததால் எடை கூடுவது.

    4. உணவு முறைகள் (Junk Foods)

    5. வேலை மிகுதியாலும், தவறான உணவு முறையாலும் ஆண்களுக்கும் உயிரணுவின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது.

    டாக்டர்! இதற்கு என்ன தீர்வு? என்ற கேள்விக்கு பதில் “உரிய நேரத்தில் சரியான சிகிச்சை முறைகளை” கடைபிடிப்பதுதான் சரிவிகித உணவு முறைகள், உடற்பயிற்சியும் மிக அவசியம். திருமணமாகி ஆறு மாதங்கள் முயற்சி செய்தும், கரு உண்டாக வில்லை என்றால் மகளிர் சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சைக்கும் ஆலோசனைக்கும் செல்ல வேண்டும்.

    பல நவீன சிகிச்சை முறைகள் இப்போது செய்யப்படுகின்றன. கருமுட்டை உருவாக்குதல், கருப்பையின் உள்ளே விந்தணுவை செயற்கையாக உட்செலுத்துதல் (IUI), சிந்தணுவை கருமுட்டையில் நேரடியாக வைத்தல் (ICST) என்பன போல பல வழிகள் உள்ளன.டெஸ்ட் டியூப் பேபி (IVF-ET) என்பது அடுத்த கட்டமாக கருவை உருவாக்கி கருப்பையில் செயற்கையாக வைத்து... செய்வது.

    எனவே குழந்தை இல்லாத தம்பதிகள் சஞ்சலம் அடைய தேவையில்லை. அடுத்தடுத்து செய்ய வேண்டிய சிகிச்சைகளை விடாமல் செய்தால் கட்டாயமாகக நல்ல பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    ×